கடவுள் சோதிப்பாரா?

கடவுள் சோதிப்பாரா?

கடவுள் சோதிப்பாரா?

நவம்பர் 13, 2021

கடவுள் கிட்ட எப்போதும் நாம கேக்குற கேள்வி: ஏன் நல்லவங்கள மட்டும் சோதிக்கிற? ஏன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுக்குற?

கடவுள் நம்பிக்கை

மனுச சுதந்திரம், கடவுள் தாய், சோதிக்கிறதோ கடவுள், முடிவு, நல்லவங்களா வாழ்றது,

முதல்ல ரெண்டு கேள்வியுமே தப்புங்க! நல்லவங்களா வாழ்றதும், கெட்டவங்களா வாழ்றதும் தனிப்பட்ட மனுசங்களோட சுதந்திரம்.

இந்த ஒலகத்துல வாழ்றப்ப நல்லவங்களா இருந்தா நல்லது தான் நடக்கனும், கெட்டவங்களா இருந்தா அவுங்க எல்லாம் சீரழிஞ்சி போகனும்னு எந்த விதியும் கடவுள் உருவாக்கினது கிடையாதுங்க. வாழ்க்கை ஒங்களுடையது. எப்புடியும் வாழ ஒங்களுக்கு முழு உரிமை இருக்கு.

இதயும் ஒங்களால ஏத்துக்க முடியாதுன்னு தெரியும். அப்படின்னா என்னோட கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க.

அடுத்தவங்கள ஏமாத்துனவனுங்க, அடுத்தவனோட சொத்துக்கள ஆட்டய போட்டவனுங்க, அடுத்தவங்க குடிய கெடுத்தே உசரத்துக்கு போனவனுங்க, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுனவங்க, சுயநலத்துக்காக பலரோட உசுரகள காவு வாங்குனவனுங்க, கொல பண்ணுனவனுங்க, கொள்ளையடிச்சவனுங்க. இவனுங்க எல்லாருமே கிழ வயசு வர கம்பா வாழ்ந்துட்டு தானங்க போயிருக்கானுங்க?

கடவுள் இவனுங்கள தண்டிச்சிட்டாருன்னு சொல்றதுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்க பாப்போம்? நீங்களா Connect பண்ணக் கூடாதுங்க. அப்படியெல்லாம் கடவுள் செய்ய முடியாதுங்க. தண்டிக்கவும் மாட்டாரு. ஏன்னா, நம்மோட சுதந்திரத்துல அவரு தலயிட முடியாதுங்க.

பிரச்சனைய கொடுக்கிறதோ, சோதிக்கிறதோ கடவுள் கிடையாதுங்க. நாம தான் பிரச்சனைகள உருவாக்குறோம். அல்லது நாமே வலிய வந்து பிரச்சனைக்குள்ள மாட்டிக்கிறோம்.

பிரச்சனை வர்றதுக்கு முன்னாடியே எச்சரிச்சி நம்மள காப்பாத்த கடவுள் எவ்வளவு தான் கத்துனாலும் நம்மளோட ரெண்டு காதுக்குமே கேக்காது. அதுக்கு பேரு தான் பகுத்தறிவு திமிருங்கிறது.

ஒத்துக்கிறேன், பல பிரச்சனைகளுக்கு சூழ்நிலைங்கிற சிறைக்குள்ள காலத்துக்கும் கைதியா சிக்கிக்கிட்டோம்ன்னு. ஆனா அதுக்கும் கடவுள் காரணமில்லயே?

நாம நினைச்சா இந்த நிமிசம் வரைக்கும் அத ஒடைச்சிட்டு வர முடியுமே? ஒங்க வாழ்க்கைக்கு இன்னமும் நீங்க தானங்க எஜமான்? பத்தாததுக்கு பகுத்தறிவு விடியிற ஆட்சியல வேற வாழ்றீங்க. இதுலயும் நீங்க காலத்துக்கும் கைதியாவே இருக்கனும்னு நினைச்சா, கடவுள் என்னங்க பண்ண முடியும்?

கடவுள் ஒங்களோட ஒத்த பிரச்சனைக்குக் கூட காரணமில்லன்னாலும், ஒங்களோட அம்புட்டு பிரச்சனைக்கும் ஒரு தீர்வ ஒங்க முன்னால வச்சிருப்பாருங்க. அத நீங்க தா தேடனும். ஒங்க சூழ்நிலையில இருந்து பாக்கனும். ஏன்னா சரியான முடிவ ஒங்க ஒருத்தரால மட்டுந்தாங்க எடுக்க முடியும்.

வாழ்க்க ஒங்களோடது. வலின்னு வந்தா யாராவது கூட இருக்கலாம். ஆனா ஒங்க வலியில வேற யாரும் ஒங்க கூட பங்கு போட முடியாதுங்க. அவனவன் வலிய அவனவன் அனுபவிச்சி தாங்க ஆகனும்.

ஒங்கள பத்தி இந்த ஒலகத்துல சுயநலமில்லாம நினைக்கிறது ஒங்க தாய் மட்டுந்தான். வேற யாருமே கிடையாது. ஒங்க தாய பத்தி இந்த ஒலகத்துல நினைக்கிறது கடவுள் மட்டுந்தாங்க. பெத்த பிள்ளைங்க கூட கிடையாது.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைங்க. அதுக்கான பொது தீர்வு எப்போதுமே கிடையாதுங்க. ரெண்டாவது, மூணாவது ஆளு யாரும் ஒங்க பிரச்சனைக்கு தீர்வும் எப்பவும் கொடுக்க முடியாது.

ஒங்க பிரச்சனைய நீங்க பத்து வருசமா தொடர்ந்து அடுத்தவங்க கிட்ட சொன்னாலும் அவுங்களால புரிஞ்சிக்க முடியாது. இன்னும் பத்து வருசம் எடுத்துக்கிட்டாலும் அவங்களுக்கு புரிய வைக்க முடியாது.

ஒங்க பிரச்சனைய ஒங்கள தவிர வேற யாராலயும் புரிஞ்சிக்க முடியாதுங்கிற உண்மைய புரிஞ்சிக்கிடுங்க. ஒங்க பிரச்சனைக்கான தீர்வயும் ஒங்கள தவிர வேற யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னும் தெரிஞ்சிக்கிடுங்க.

கண்டிப்பா கடவுள் ஒங்களுக்கான பல வழிகள ஒவ்வொரு நிமிசமும் காட்டிக்கிட்டே இருப்பாருங்க. நீங்க தாங்க பாக்கனும். நீங்க தா முடிவு எடுக்கனும். இது ஒங்களோட வாழ்க்கங்க.

நீங்க எடுக்குற முடிவுல சரி தவறுன்னு எதுவுமே கெடயாதுங்க! நீங்க நோ்மையா எடுக்குற அத்தனை முடிவுகளும் சரி தாங்க.

தவறுங்கிறதே இந்த உலகம் கத்துக்கொடுத்த தவறான வார்த்தங்க. அதனால நீங்க எடுத்த முடிவு தப்பாவே அமைஞ்சுட்டாலும் எப்பவும் குத்த உணர்ச்சி ஒங்களுக்கு தேவையே இல்லங்க!