நெறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம்
டிசம்பர் 21, 2021
ஆள்வதற்கு எள்ளளவும் தகுதியில்லாதவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினால், அதன் விளைவுகள் எவ்வளவு கோரமாக, கேவலமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் தான், இப்போதைய தமிழ்நாடு.
நாட்டு நடப்புகள்
கருத்துச் சுதந்திரம், சமூக நீதி, பாசிச மூர்க்கத்தனம், விடியல் அரசு, திராவிட மணியாட்டிகள்
அம்பேத்கார் போன்ற மாமேதைகளின் உழைப்பாலும், உன்னதமான அர்ப்பணிப்பாலும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சாசனம், தன் குடிமக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமை இந்த கருத்துச் சுதந்திரம்.
அந்த கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையைத்தான் நெறித்துக் கொண்டிருக்கிறது ஆளும் பாசிச விடியல் அரசு. கருத்துச் சுதந்திரம் திராவிட ஆட்சியில் படும்பாடு அருவெறுப்பை மட்டுமல்ல, மக்களாட்சியின் மாண்பையே கேவலப்படுத்துவதாக உள்ளது. சர்வாதிகாரி என்கிற பெயரெடுக்க மெனக்கெடுகிறார்கள் போலும்!
அதிகாரத்தின் மேன்மை புரியாதவர்களிடம், அந்த அதிகாரம் சிக்கிச் சின்னாபின்னாமாவதைப் பார்க்கிற உணர்வு, வேதனையின் உச்சம். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை, பாசிச மூர்க்கத்தனம் கொண்டு நெறிப்பது இந்த திருவாளர்களின் ஆட்சியில் நடந்தேறுவது ஒன்றும் புதிதல்ல தான்.
அதுவும் திராவிட குடும்ப ஆட்சியில், இது போன்ற களேபரங்கள் நடந்தேறவில்லை என்றால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். லாக்கப் மரணம், பாய்சன் டெத், வெள்ள பேரழிவு, நிர்வாகச் சீரழிவு - என அத்தனை பிரச்சனைகளையும் மூடி மறைக்க, அல்வா கடைக்காரர்கள் போட்டுக் கொடுப்பது தான் இந்த புது உருட்டல். திசை திருப்பும் அரசியல் சாணக்கியத்தனம் செய்கிறார்களாம்! நாமும் நம்பி பழையதை கடந்து போய் விட வேண்டுமாம்.
தம்பி வா! தலைமையேற்க வா! என்று கைப்புள்ளயை ராகம் பாட வைத்து, தலைவர் பதவியைத் தூக்கிக் கொடுக்கும் மெகா பிளானுக்கான ரீலாகக் கூட இருக்கலாம்! விரைவில் ஜீனியரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்.
நட்ட நடு இரவில், வயது மூப்பைப் பாராமல், எங்கள் தானைத்தலைவரை கைது செய்து விட்டார்கள் என்று, குய்யோ முய்யோ பிலிம் காட்டியவர்களுக்கு, இப்போது கண்கள் குருடாகி விட்டது போலும்!
பேசுவதற்கு என்ன, எழுதுவதற்கே பயமாகத்தான் இருக்கிறது. சில நாட்டாமைகள் வேறு, முத்தமிழின் வாரிசை விமர்சனம் செய்யக்கூடாது என்று சொம்பு தூக்கிக்கொண்டு, கருத்து கந்தசாமிக்களாக முச்சந்தியில் நிற்கிறார்களே!
சமூக நீதி பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை கூப்பாடு போடும் இவர்களது சமூக நீதி, இவர்களது குடும்பத்திற்கு மட்டுமே. அந்த இலக்கை என்றைக்கோ அடைந்து விட்டார்கள். குடும்பத்தில் அத்தனை பேருக்கும் பதவி. இட ஒதுக்கீட்டுப் பங்கீடும் உள் குடும்ப ஒதுக்கீடாக அரங்கேறுவது மிகச்சிறப்பு!
இவர்கள் செய்கிற அயோக்கியத்தனங்களை இத்தனை காலம் பார்த்தும், அனுபவித்தும் இன்னமும் இவர்களுக்கே தவறாது வாக்குச் செலுத்தும் படித்த வாக்காளர்களை, என்ன வாா்த்தைகளைக் கொண்டு விமர்சிப்பது?
தொடாமலேயே சட்டையைக் கிழித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து அல்ப விளம்பரம் தேடிய இந்த கூட்டம் தான், ஸ்காட்லாந்து போலீசை ஏவி நினைத்ததைச் சாதித்துக் கொண்டு, வெட்கமில்லாமல் சூராதி சூரர் என மார்தட்டிக்கொள்கிறது.
இவர்கள் கட்சியினர் பேசுகிற பேச்சுகளுக்கெல்லாம் காதுகளுக்குள் சவ்வு மிட்டாயை வைத்து அடைத்துக் கொள்வார்கள். ஆனால், அடுத்தவர்கள் பேச வேண்டும் என்று நினைத்தாலே பொங்கிவிடுவார்கள் இந்த திராவிடகள்.
பேசினாலே வழக்கு. விமர்சித்தாலே சிறை. இதை விட கேவலமான அரசியலை தமிழகம் இன்னமும் சந்திக்கத்தான் போகிறது. இவர்கள் ஆட்சி செய்கிற காலத்தில் நாம் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டுமாம். மீறினால் அனைவருக்கும் இதே கதி என்று பயமுறுத்துகிறாம் இவர்களுக்கு விளக்குப்பிடிக்கிற மேற்கத்திய மிஸ்டர் நோ்மை.
இப்போது எங்கே போய்விட்டது இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய புனித பேரவை! புனிதர் பட்ட வேலைகளிலும், பிறந்த நாள் கொண்டாட்டத்திலும், பிசியாக இருக்கிறார்கள் போலும் அந்த வெள்ளை நிற குள்ளநரிகள்!
சரக்கை ஊற்றிக்கொடுத்து சாமான்ய குடும்பங்களைச் சீரழிப்பதையே குலத்தொழிலாகவும், படங்களைப் பார்க்க வைத்து, இளையோரை சிந்திக்க விடாமல் சிறை வைத்திருப்பதையே வியாபாரமாகவும் கொண்டிருக்கிற இந்த ஒழுக்க சீலர்களுக்கு, வக்காலத்து வாங்குகிறவர்கள் அல்லவா அந்த திராவிட போராளிகள்!
தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரத்தில், "பாசிச பாஜக ஒழிக" என்று கோஷமிட்ட இந்த உத்தம புத்திரர் தான், இப்போது மணிக்கொரு முறை தன்னை மங்குனி அமைச்சராக நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இவர்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி. இது தான் இவர்களுடைய அறிவு.
இவர்கள் தான், நாளைய தமிழக வரலாற்று பாடப்புத்தக நூல்களில் மாவீரர்களாக வலம் வர இருக்கிற தெய்வ பிறவிகள். நாளையே இவரை வணங்க வேண்டும் என்று இந்த சீனியர் உத்தரவு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வணங்க மறுத்தால் ஜீனியர் காலத்தில் சிறை என்கிற அவல நிலைக்கும், தமிழகம் தயாராக இருக்கட்டும் .