யாரோட கடவுள் ஒசத்தி?

யாரோட கடவுள் ஒசத்தி?

யாரோட கடவுள் ஒசத்தி?

நவம்பர் 14, 2021

எங்க கடவுள் தான் உசத்தின்னு, அறிவு வளராத காலத்துல தான், சண்ட போட்டுகிட்டு இருந்தோம். அறிவியல் உலகத்துல இருக்குற இப்பவும் பச்சப்புள்ளங்க சண்டை எதுக்குங்க?

கடவுள் நம்பிக்கை

மத நம்பிக்கை, மதநூல்கள், கடவுள் அனுபவம், ஆன்மீக அறிவு, பகுத்தறிவு

கடவுள் பத்தின உண்ம எங்க கிட்ட தான் இருக்குங்கிற தேவயில்லாத விதாண்டாவாதம் எதுக்கு? அப்புடி சொன்னா மத்தவனும் அவனுக்குன்னு நேரம் வர்றப்ப சண்ட புடிக்கத்தான செய்வான்? அதுல தப்பு ஒண்ணுமில்லயே?

நாம எல்லாரும் கடவுள் இருக்காருன்னு நம்புறோம். அந்த கடவுள நாம இருக்குற மத நம்பிக்கை பிரகாரம் பாக்குறோம். மத நூல்கள் சொல்லிக் கொடுக்கிறது போல வழிபடுறோம்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. எல்லாருமே கடவுள் இருக்காருன்னு தான நம்புறோம்! இதுல எதுக்குங்க நமக்கு இந்த ஒசத்தி சாதி பிரச்சனை?

கடவுள நம்பாத கொஞ்ச பேரும் கூட, மக்களுக்கு நல்லது நடந்தா சரின்னு நெனக்கிறவங்க தான!

உண்மைய சொல்லனும்னா, கடவுள பத்தி பேசுற அளவுக்கு நம்மள்ள யாருக்கும் புள்ளி அறிவும் கிடையாது, தகுதியும் கிடையாது. ஏன்னா யாருமே கடவுள நோ்ல பாத்தது கெடயாது. பின்ன ஏ நாங்க தா பெருசு பெருசுன்னு பெரிய வீட்டு சண்டை?

நாம எல்லாருமே நம்மளோட வேத புத்தகத்த ஆதாரமா வச்சிகிட்டு, அத பூரா கரச்சுக்குடிச்ச ஞானசூன்யங்க மாதிரி, கடவுள் கிட்டயிருந்து நேரடியா அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டு வந்த மாதிரி, அடுத்தவங்களுக்கு எதிரா வீராப்பா பேசிக்கிட்டு திரியிறோம்?

அடுத்த மதங்கள தரக்குறைவா பேசுறதுக்கு முன்னாடி ஒவ்வொருத்தவரும் அவங்கவங்க மதநூல்கள பத்தின அடிப்படை அறிவ வளத்துக்கிட்டாலே அத்தன பிரச்சனயும் முடிவுக்கு வந்துரும்ங்க!

இந்த ஒலகத்துல ஒவ்வொரு பகுதியில வாழ்ந்த மக்களும், தாங்க வாழ்ந்த எடத்துல, தங்களுக்கு மேல ஒரு சக்தி இருந்ததா உணர்ந்தாங்க. அதுக்கு கடவுள்ன்னு பேரு வச்சாங்க.

அந்த கடவுள் அனுபவத்த, வெவ்வேறு காலக்கட்டத்துல, வாழ்க்கைச்கசூழல் பிண்ணனியில உணர்ந்தத, அனுபவிச்சத, கேட்டத, பிற்கால சந்ததிக்கும் தெரியனும்ங்கிறதுக்காக அவுங்களோட ஆன்மீகவாதிங்க ஏட்டுல எழுதி பாதுகாத்தாங்க.

அவுங்க காலத்துல இருந்த அறிவ வச்சு, அவங்களோட புரிதலுக்கு ஏத்தாப்ல, அவுங்களுக்கு தெரிஞ்ச ஆன்மீக அறிவுப்படி, அந்த புத்தகங்கள எழுதியிருக்காங்க.

உதாரணமா பைபிள்ள இருக்கிற பழைய ஏற்பாடு என்கிற புத்தகம், யூத மக்களோட கடவுள் அனுபவம். அதுல இருந்து பிரிஞ்சு இயேசுவ கடவுளோட மகனா நம்புனவங்க புதிய ஏற்பாட்டுல கிறிஸ்தவங்களா மாறுறாங்க. அரேபியப் பகுதிகள்ல வாழ்ந்த மக்களோட கடவுள் அனுபவம் தான் குர்ஆன்.

நம்ம பாரத மண் இயல்பிலேயே ஒரு ஆன்மீக மண். இங்க வாழ்ந்த பல மகான்கள் பெற்ற கடவுள் அனுபவத்த இந்து மத நூல்கள்ள நாம பார்க்கலாம். அத்தோட ஒட்டுமொத்த அனுவத்த பகவத் கீதையில படிக்கலாம்.

இப்படி ஒவ்வொருத்தரும், அவுங்க அவுங்களோட இறை அனுபவத்த, தங்களோட கலாச்சாரப் பிண்ணனியில, அறிவுல, பண்பாட்டுல ஏடுகளா, எழுதி வச்சிருயிருந்தத தான், மதநூல்கள்ன்னு சொல்றோம்.

மதநூல்கள் எல்லாமே கடவுள் அனுபவத்த கொடுக்கக் கூடியது தான். யாரோட அனுபவமும் யாருக்கும் கொறஞ்சதும் கிடையாது! ஒசந்ததும் கிடையாது. கடவுள் அனுபவத்துலயாவது மக்கள் சமத்துவமா இருந்துட்டு போகட்டுமே! ஏன்னா எல்லாமே கடவுள் அனுபவம் தானங்க.

அவுங்கவுங்க அனுபவம் அவங்களுக்கு புனிதம். அவுங்கவுங்க மதம் அவுங்கவுங்களுக்கு பிரியம். இதுல என்ன வயசான காலத்திலயும் ஒசத்திங்கிற வெட்டி வீராப்பு? எல்லாமே கடவுள் நம்பிக்கய வளக்கிற புனிதமான அனுபவங்க தானங்க! Then,Why This கொலவெறி?