கடவுளும் ஒரு ஜோசியர் தான்
அக்டோபர் 08, 2021
கடவுள் நம்பிக்கை
நாளைக்கு என்ன நடக்கும்ங்கிறது நமக்குத் “தெரியாததாவே” இருக்கட்டும். ஆனா, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ங்கிறது, கடவுளுக்கே தெரியாதுன்னு சொல்றேன். நீங்க நம்புவீங்களா?
அது எப்படிங்க நம்ப முடியும்? கடவுளுக்குத் தா, எல்லா சக்தியும் உண்டேன்னு! யாரோ சொல்லிக்கொடுத்த பதில, கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றதுக்கு ஒங்களுக்கு முழு உரிமை இருக்குன்னா, நா கேக்குற கேள்விங்களுக்கு, பதில் சொல்ற பொறுப்பும் ஒங்களுக்கு இருக்குதுங்க!
எங்க சொல்லுங்க பாப்போம்?
- நீங்க சொல்ற கடவுளுக்கு சக்தி இருந்தா, சுனாமிய ஏன் அவரு தடுத்து நிறுத்தல?
- அப்பாவிங்க ஏங்க கஷ்டப்படுறாங்க? நல்லவங்க ஏங்க அநியாயமா செத்துப்போறாங்க?
- அநியாயம் செய்றவங்க எல்லாம் எப்படிங்க சந்தோசமா "ஆயுளோட" சாகுறாங்க?
- நடக்கிறது எல்லாமே அவரோட திருவிளையாடல்னா, "நாம என்ன அவரோட கையில வெச்சு வௌயாடுற பொம்மைங்களாங்க?"
- சொர்க்கம் தான் நெரந்தர ஒலகம்ன்னா, இந்த ஒலகத்த ஏங்க கடவுள் படைக்கனும்?
- கொரோனா நோய வரவுட்டுட்டு அந்த கடவுள் எங்க போயிட்டாரு?
- At least பரப்புனவங்கள தான், ஒங்க மன்னிக்கிற கடவுள் செஞ்சத மறந்து உடனே மன்னிச்சிட்டாரு, ஆனா பரப்புனவனுங்க பத்திரமா இருக்க, அப்பாவி பக்தர்கள எதுக்காகங்க சாக விட்டாரு?...( இன்னும் நெறய ஒங்களுக்கும் இருக்கும். இப்போதைக்கு இது போதும்) .
நா கேக்குறது சரியா? தப்பா?
இப்ப நா கேட்ட அத்தன கேள்விங்களுக்கும் மதத்த போதிக்கிற குருமாருங்க, "ஒரு ஆன்மீகமான பதில" கண்டுபிடிச்சி வச்சிருப்பாங்க.
என்னதுன்னா, "துன்பம் என்பது மறைபொருள்...அதுக்குநெரந்தர தீர்வேகெடயாது", பாவிகள் மனந்திரும்ப ஒறுத்தல் செய்யனும், ஒப்புக்கொடுத்து மன்றாடனும், ஏழைங்களுக்க ஒதவுங்க!.
இதையே நீங்களும் சொல்லுவீங்கன்னு தெரியும். இந்த பதில்கள்ல ஒங்களுக்கு திருப்தி இல்லன்னாலும், காட்டிக்க மாட்டீங்க! அவங்கள காட்டியும் கொடுக்க மாட்டீங்க! ஏன்னா அது சாமிக்குத்தமாயிருமோன்னு பயப்படுவீங்க!
இப்படிக் கேள்வி கேக்குறதுனால, ஒடனே என்னய ‘நாத்திகன்’னு சந்தேகப்படாதீங்க! நானும் கடவுளை முழுமையா நம்புறவன் தான்.
"அடுத்த நிமிசம் என்ன நடக்கும்னு கடவுளுக்கேதெரியாது"ங்கிற என்னோட ‘ஊகமான பதில’, அறிவியல்பூர்வமா என்னால நிரூபிக்க முடியாம இருக்கலாம். ஆனா, உறுதியா "ஆன்மீகப்பூர்வமா" விளக்க முடியும்.
நா பாக்குற பார்வய நம்ப சொல்லல! நம்புனா எப்புடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்க சொல்றேன். இத நா ஒங்கள உண்மையா ஏத்துக்க சொல்லல. ஆனா, ஒரு Hypothesis –ஆ (ஊகம்) வச்சு, பாக்கச் சொல்றேன். “ஊகங்களோட அடிப்படையில தாங்க, அறிவியல் விதிகளே உருவாக்கப்படுது!”.
இப்ப நாம சொல்ற அறிவியல் விதி எல்லாமே உண்மை இல்லீங்க! வெறும் ஊகம் (Hypothesis) மட்டுந்தான். அந்த ஊகத்த, ஆதாரத்தோட ஒடைக்காத வர அதுதாங்க விதி, அதாவது அது ஒரு லாஜிக்கல் பார்முலா. ஆனா அது எதிர்காலத்துல அந்த விதி ஒடையாதுன்னு எந்த அறிவியல் அறிஞர்களாலயும் ‘கேரண்டி’கொடுக்க முடியாதுங்க.
சூரியன் கெழக்கே தான் உதிக்கும்ங்கிறது உண்மை இல்லீங்க. அதுவும் ஒரு லாஜிக்கல் பார்முலா தான். நாளைக்கும் அது கெழக்குல தான் உதிக்கும்ன்னு யாரும் கேரண்டி கொடுக்க முடியாதுங்க. ஒருவேள நாளைக்கு அது மேக்க உதிச்சா, இன்னென்ன காரணத்துனால, சூரியன் இன்னைக்கி மேக்கில உதிச்சதுன்னு அறிவியல் விளக்கம் மட்டுந்தான் சொல்ல முடியும்! உதிக்காதுங்கிறதுக்கு 100 விழுக்காடு கொடுக்க முடியாது. வேணும்னா 99.9 விழுக்காடு கேரண்டி கொடுக்கலாம்.
இன்னும் .1 விழுக்காடு "மேக்கில உதிக்க வாய்ப்பு இருக்குது" பாருங்க, அதான், அறிவியலோட ‘எல்ல’ ! இதான் ‘ஆன்மீகத்தோட’ தொடக்கம்.
மறுபடியும் நா சொல்றேன், அடுத்த நிமிசம் என்ன நடக்கும்னு கடவுளுக்கே தெரியாது! இத கற்பனையா ஒரே ஒரு முறை நம்பிப் பாருங்க, ஒங்க மனசுக்குள்ள இருக்குற அத்தன கேள்விங்களுக்கும் பதில் கெடைக்கும்!