துன்பத்திற்கு காரணம் யார்?

துன்பத்திற்கு காரணம் யார்?

துன்பத்திற்கு காரணம் யார்?

நவம்பர் 18, 2021

தமிழகத்தில் அப்பாவிகள் தண்டனை அனுபவிப்பதேன்? நோ்மையாளர்கள் துன்பப்படுவதேன்? தவறு செய்யாதவர்கள் வாழ்க்கையில் கஸ்டப்படுவதேன்?

நாட்டு நடப்புகள்

திராவிட நயவஞ்சகர்கள், அதிகாரமே, குற்ற உணர்வே, திருடர்களுக்கு வாக்களிப்பது

கடவுளுக்காக தங்களது வாழ்வையே முழுமையாக அர்ப்பணித்தவர்களும் கூட, தொற்றுநோயாலும், புற்றுநோயாலும் அவலமாக வதைப்பட்டு மரணிப்பது ஏன்? மழை, வெள்ளத்தின் கோரத்தாக்குதலுக்கு ஏழை மக்கள் இரையாவதேன்?

பெரியாரிடத்தில், தமிழக மக்களின் துன்பத்திற்கு காரணம் யார்? என்று கேட்டிருந்தால், பகுத்தறிவோடு பதில் சொல்லியிருப்பார்: எள்ளளவும் தகுதியில்லாத தத்திகளை, ஆட்சி நடத்த வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும், வாக்கு செலுத்தாமல் வம்பு பேசியவனும் தான் என்று.

உணவு, நீர், காற்று என்று இயற்கை அன்னை வழங்குகிற அட்சயபாத்திரத்தை, அடகு வைத்து பணம் சம்பாதித்த திராவிட ஆட்சியாளர்களும், அவர்களுக்கே திரும்ப திரும்ப வாக்களிக்கும் வாக்காளன் தான், துன்பத்திற்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

துன்பம் வருகிறபோது கடவுளைக் கேள்வி கேட்கிறவர்கள், வட நாட்டினரால் புறந்தள்ளப்பட்ட அத்தனை நாசகார தொழிற்சாலைகளையும் திராவிட ஆட்சியாளர்கள் தமிழகத்தில் காலூன்ற வைத்தபோது, சமூக ஆர்வலர்கள் வழியாக கடவுள் எச்சரித்தாரே? அன்றைக்கு என்ன செய்தார்கள்?

உண்மையைச் சொன்னவர்களைக் கல்லால் எறிந்து விரட்டியடித்தார்கள். கேலி பேசினார்கள். தமிழகம் வளர்வது எப்போது? என்று பேசி வம்பளந்தார்கள். போராட்டங்களில் போலீசை வைத்து தங்களை ஓட ஓட விரட்டியவர்களுக்கே, தோ்தல் நேரத்தில் வாக்கும் செலுத்தினார்கள்.

இன்றைக்கு ஜெய்பீம் படம் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் திராவிட நயவஞ்சகர்கள், எத்தனை அப்பாவிகள் மீதும், சமூக ஆர்வலர்கள் மீதும் பொய்க்குற்றச்சாட்டுக்களையும், பொய் வழக்குகளையும் புனைந்திருப்பார்கள்!

சுட்டுக்கொன்று விட்டு அரசு வேலை கொடுத்தாலே புனிதராகிவிடும் அற்புதம், பகுத்தறிவு பூமியில் மட்டுமே நடக்க முடியும்.

போராட வேண்டாம், போர்க்களம் செல்ல வேண்டாம், பொது நலனுக்காக உழைக்க வேண்டாம். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களாட்சி முறை தருகிற ஒற்றை வாக்கையாவது மாற்றிச் செலுத்தி பரிசோதித்துப் பார்க்கலாமே?

ஒற்றை வாக்கைக்கூட உருப்படியாக போடத் தெரியாத எவரும், எக்காலத்திலும் கடவுளைக் கேள்வி கேட்கும் தகுதி இல்லாதவர்களே! அத்தனை துன்பங்களையும் அனுபவிக்க தகுதியானவர்களே!

வலி வருகிற நேரம் மட்டும் கத்தி கூப்பாடு போடுவதும், தோ்தல் வந்தால் திராவிட திருடர்களுக்கே ஓட்டுப்போடுவதும், கடவுள் மந்திரம் போட்டுக் காப்பாற்றுவார் என்று போதிப்பதும், மூடநம்பிக்கையின் உச்சகட்டம்.

ஒருவேளை திராவிடத்திற்கு வாக்களிக்காதவர்கள் துன்பத்தை அனுபவிக்க நோ்ந்தால், அதற்கான பாவப்பழிகளையும் திராவிடத்திற்கு வாக்களித்த வாக்காளனே, தன் பாவக்கணக்கில் சுமக்க வேண்டும். அதுவே தர்மம்.

கடவுள் அல்ல, மக்கள் வாக்களித்து தோ்ந்தெடுக்கிற அதிகாரமே தமிழகத்தில் அத்தனையையும் தீர்மானிக்கிறது என்பதை இவர்கள் எப்போது தான் உணரப் போகிறார்களோ?

ஒருபுறத்தில், ஒப்பாரி வைத்து கடவுளிடம் வேண்டுவது? மறுபுறத்தில் குற்ற உணர்வே இல்லாமல் திருடர்களுக்கு வாக்களிப்பது? என்ன கடவுள் நம்பிக்கை இது?

கடவுள் தேவையில்லை, ஒரு நோ்மையான அரசு அமைந்தாலே, இங்கிருக்கிற பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும். நோய்களும் மறைந்து போகும்.

கொரோனா நேரத்தில் பல இறப்புக்களை தடுத்திருக்க முடியாது, ஆனால் கண்டிப்பாக பல உயிரிழப்புக்களை தவிர்த்திருக்க முடியும். இந்த பாவங்களையும், இன்னமும் திருந்தாது, திராவிடத்திற்கே ஒற்றை தலைமுறையாக வாக்களித்துக்கொண்டிருக்கும் வாக்காளனே சுமக்க வேண்டும்.

மாற்றத்திற்கான தீர்வாக மாற்று அரசியல் பேசுகிற மனிதர்கள், இன்றைக்கும் நம் நடுவில் தீர்வுகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கிப்பார்க்கலாமே?

A Known Devil is better than Unknown Angel என்று வாதாடுகிறார்கள். வெட்ட வெளியில், அத்தனை ஊடகங்கள் நடுவில், அறவழியில் போராடிய சொந்த மக்களையே காக்கா, குருவி போல சுட்டுத்தள்ளுகிற நிகழ்கால அரக்கர்களை விடவா, ஒரு கேவலமானவன் இனிமேல் வந்து விட போகிறான்?

பட்டாலும், சுட்டாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் நமக்கே வாக்களிப்பார்கள் என்பதை உணரும் திருடர்கள் திருந்துவது சாத்தியமா? இதில் கடவுளைக் குற்றப்படுத்துவது நியாயமா?

இந்த களத்திற்குள்ளாக இன்னமும் நம்பிக்கை இழக்காது, சோர்ந்து போகாது, அடக்குமுறைக்கு அஞ்சாது, தனி மனிதர்களாய் உறுதி குலையாது போராடும் ஒரு சில சமூக ஆர்வலர்கள் இருப்பது ஆச்சரியமே!

உண்மையில் ஆன்மீகவாதிகள் அல்ல, இவர்கள் தான் கடவுளின் வலக்கரங்கள். என்றைக்குமான கடவுளின் கருவிகள். கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள்.