நடிகர்களே! ஒரு நிமிடம்

நடிகர்களே! ஒரு நிமிடம்

நடிகர்களே! ஒரு நிமிடம்

நவம்பர் 19, 2021

சமூக நீதி பேசி நடித்து, கோடிகளில் புரளும் கூத்தாடி கலைஞர்களிடம் கேட்பதற்கு, நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன. வாருங்கள் கேட்கலாம்.

நாட்டு நடப்புகள்

சினிமாத்துறை, வெள்ளித்திரையில், கலைக்கூத்தாடிகள், நடிகர்கள், சமூக நீதி

சினிமாத்துறையைப் பயன்படுத்தி குள்ளநரித்தனத்தோடு என்றைக்கு, திராவிடம் தமிழக அரசியல் களத்தில் நுழைந்ததோ, அன்றைக்குப் பிடித்த தரித்திரம் இன்றைக்கும் தமிழகத்தை விட்டு அகன்றபாடில்லை.

நடிகர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு மட்டும் வெயிட்டேஜ் முறையில் சமூக அநீதியாக மதிப்பெண் வழங்குவது ஊடகங்களுக்கு மட்டுமல்ல, கடைக்கோடி பாமரனுக்கும் கைவந்த கலை. அந்த அறிக்கை நடிகர்களிடம் நாம் கேட்கிற கேள்விகள், இதோ!

நடிகர்களே! இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்ததை அரைகுறையாகச் செய்தாலும், இன்றைய தொழில்நுட்ப சாத்தியத்தால் வெள்ளித்திரையில் சிங்கங்களாக வலம் வந்து, பாமர ஆடுகளை எளிதாக கவ்விக் கொண்டு போய்விடுகிறீர்கள்.

இன்றைக்கு சமூக அக்கறையோடு எளியவர்களுக்காக பேசுகிற நீங்கள் தான், சில காலங்களுக்கு முன்னதாக, வெளிநாட்டு குளிர்பான விளம்பரங்களில் நடித்து கோடிகளைச் சம்பாதித்தவர்கள்.

கல்வி உதவித்தொகை கொடுக்கிறீர்கள். கல்வி கொடுப்பது உங்கள் வேலையா? அது அரசின் கடமை அல்லவா? அதற்காகத்தானே பொதுமக்கள் நாங்கள் வரிப்பணம் செலுத்துகிறோம்?

எதற்காக நீங்கள் ஏழைகளுக்கு இரக்கம் என்கிற பெயரில் பிச்சை வழங்க ஆசைப்படுகிறீர்கள்? திராவிட அரசின் 70 ஆண்டு தகிடு தத்த ஓட்டைகள் தெரியாமல் மறைப்பதற்காகவா?

காலத்திற்கும் ஏழைகளை இருக்கச்செய்து, நீங்கள் செய்கிற பாவங்களிலிருந்து புண்ணியம் தேடிக்கொள்வதற்காகவா?

அத்தனை பேருக்கும் கல்வி கொடுப்பது நடிகர்கள் உங்கள் கவலையல்லவே! அது மக்கள் வாக்களித்து தோ்ந்தெடுக்கிற அரசாங்கத்தின் அடிப்படை கடமையாயிற்றே?

கொரோனாவிற்கு பொதுமக்களிடம் நிதி கேட்கிற திராவிட ஆட்சியாளர்கள், அரசு விழாக்களுக்கு கண்டபடி செலவழிக்கிற வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தினாலே, ஏழ்மையும், பசியும் கட்டுக்குள் வந்துவிடும். இவற்றை அறிக்கையாக எழுதி, அரசுக்கு எதிராக வெளியிட உங்களுக்கு திராணியிருக்கிறதா?

பொதுவாழ்க்கைக்காக அர்ப்பணித்தோம் என்று மார்தட்டுகிற இவர்களிடம் இல்லாத பணமா?

உங்கள் வயிறு நிரம்பியதால் செவிக்குணவு கேட்கலாம், ஆனால், வயிற்றுக்கு உணவு இல்லாதவனுக்கு? – இந்த கேள்வியை அறிக்கையாக வெளியிட முடியுமா?

முன்னாள் முதல்வர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் கடற்கரையில் கோடிகளில் கோட்டை கட்டுவது ஏன்? என்று எதிர்த்து At least திரைப்படங்களில் வசனமாவது பேச முடியுமா?

உயிர்களைப் பறித்த கொடூர துப்பாக்கிச்சூடுகளை நிறைவேற்றிய, அய்யாக்களையும், அம்மாக்களையும் உங்கள் வீட்டு குடும்ப விழாக்களுக்கு வெத்திலை, பாக்கு வைத்து அழைக்கிறபோது உங்கள் சமூக நீதிக்கான கோபம் எங்கே போயிற்று?

உங்கள் சங்க மேடைகளில், திராவிட முதல்வர்களை அமர வைத்து, கூனிக்குனிந்து வணக்கம் வைத்து, பாராட்டு மழைகளைப் பொழிகிறீர்களே? இவ்வளவு தான் யதார்த்த வாழ்க்கையில் உங்கள் ஹீரோயிச வீர சாகசமா?

அறத்தோடு நின்று திரைப்படத்தில் ஆயிரம் பக்க வசனம் பேசி நடிக்கலாம், ஆனால் நடப்பு வாழ்வில் தமிழகத்தின் அத்தனை இன்னல்களுக்கும் காரணமான இந்த திராவிட திருடர்களை எதிர்த்து, ஒரு வார்த்தை உங்களால் பேச முடியாது என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஏனென்றால், அவர்கள் நினைத்தால் உங்கள் ஆட்டம் ஒரே நாளில் குளோஸ் என்பதற்கு சான்றாக பல பிக்பாஸ்கள் மையத்தில் இருக்கிறார்கள்.

பணமென்றால், ஓர் இனத்தையே பிணமாக்கியவன் அழைத்தான் என்றாலும் நடிக்க தயார் என்று சொல்கிற துணிவு, உங்களைப் போன்ற மக்கள் செல்வர்களாலேயே முடியும்.

எனவே, உங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, சினிமாத்துறையின் எல்லைக்குள், நடிப்பு வழியாக இந்த சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியுமோ, அதையாவது உருப்படியாக செய்ய முயற்சி எடுங்கள்.

இல்லையென்றால் கிழட்டு வயது வரை பேத்திகளோடு டூயட் ஆடிக்கொண்டு, கல்லா கட்டுகிற கதையைக் பாருங்கள்.

உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எப்போதாவது எழுந்தால், திருப்பித்தர முடியாத நிலையிலிருக்கிற அனாதைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவுங்கள். ரசிகர்களை பலிகடா ஆக்காதீர்கள்.

இன்னும் உங்கள் கலைத்துறை நண்பர்களின் குடும்பங்களே, மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் உயிரை இழந்திருக்கிறார்களே? அப்போதெல்லாம் உங்களுக்கு இரக்கம் வரவில்லையா?

ஊரடங்கு காலத்தில் மதுவிற்கு எதிராக வெகுண்டெழுந்தவர்கள், அதிகாரம் கிடைத்தவுடன் அர்த்த ராத்திரியில் எப்படி மாறிப்போனவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அரசியல் அறிவோ, எதிர்த்து நிற்கிற அறமோ அர்த்த ராத்திரியில் வாய்க்கப்பெறுவது அல்ல.

கண்முன் பார்க்கிற கோர நிகழ்வுகளைத் தட்டிக் கேட்க முடியாது அடக்கி வைத்திருந்து, ரத்த நாளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்புற வலி மிகுந்த உணர்வு அது.

அவர்களின் கொத்தடிமை உறவுகளாக இருக்கிற உங்களுக்கு, அது சூடு போட்டாலும் வராது!

உண்மையில், கலைக்கூத்தாடிகள் உங்களிடமிருந்து அறிக்கைகள் வந்தால், கிராமத்தான்கள் நாங்கள் வாசிக்காமலேயே ரேட்டிங் சொல்லி விடுவோம்: 0/10