போலி மத போதகர்கள்

போலி மத போதகர்கள்

போலி மத போதகர்கள்

டிசம்பர் 03, 2021

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற புதுமைகள், கிறிஸ்தவ மத போதகர்கள் போதிப்பது போல வரலாற்றில் நடந்த நிகழ்வா? அல்லது வெறும் கற்பனைக் கதைகளா?

ஆன்மீக அரசியல்

கிறிஸ்தவ மத வியாபாரி, கிறிஸ்தவ மத போதகர்கள், சுவிஷேச கூட்டங்கள், Rudolf Bultmann, Gerd Theissen, Hanina Ben Dosa, Berakhot 34b, சமய மொழி, சாத்தானின் ஊழியர்கள், devil's advocate

ஜொ்மானிய லூத்தரன் பைபிள் அறிஞர் Rudolf Bultmann மற்றும் ஜொ்மானிய புரோட்டஸ்டான்ட் பைபிள் அறிஞர் Gerd Theissen இருவரும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற புதுமைகள் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவர்கள்.

யூத சமூகத்திலும், மத்திய கிழக்குப் பகுதியின் (Ancient Near East) நாட்டுப்புறங்களிலும், கிரேக்க-உரோமை புராணங்களிலும் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வந்த கதைகளின் சாயல், இயேசு செய்ததாகச் சொல்லப்படும் புதுமைகளில் படிந்திருந்ததை முதன் முதலில் உறுதிப்படுத்தியவர்கள் இவர்களே.

உதாரணமாக, பைபிளில் சாகக் கிடந்த நூற்றுவர் தலைவரின் பணியாளர் ஒருவரை இயேசு குணப்படுத்தியதாக எழுதப்பட்டிருக்கிற புதுமையும், யூத ராபி Hanina Ben Dosa (20AD-70AD) என்பவர், ரபான் கமாலியேல் என்கிறவரின் மகனை குணப்படுத்திய புதுமையும் (Berakhot 34b)ஒன்றையொன்று ஒத்துப்போவதாக சுட்டிக்காட்டினர்.

இது பைபிளில் சொல்லப்பட்ட புதுமைகள், வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்பதற்கான ஒரு ஆதாரமாக அமைந்தது. இது போன்று பலவற்றைத் தொடர்புபடுத்தி நிரூபித்துக் காட்டினர்.

நடக்காத ஒன்றை, நடக்க முடியாத ஒன்றை, எதற்காக நடந்ததாக எழுத வேண்டும்? என்கிற கேள்வியோடு, மீண்டும் இந்த களத்தில் தங்களது ஆய்வுகளைத் தொடர்ந்தனர். ஆய்வின் முடிவில், புதுமைகள் பற்றிய கதைகள், முதல் நூற்றாண்டில் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமய மொழி வடிவம் என்பதை கண்டுபித்தனர்.

புதுமைக் கதைகளை, ஒரு வரலாற்று மொழியாக தொடக்க கால கிறிஸ்தவர்கள் பார்க்கவில்லை, மாறாக, கடவுள் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சமய மொழி வடிவமாக பார்க்கிற பார்வையையே கொண்டிருந்தனர். இவற்றை இந்த இரண்டு பேருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உறுதிப்படுத்தியது.

ஆக, புதுமைகள் வரலாற்று நிகழ்வுகள் அல்ல. பைபிளும் வரலாற்று பதிவு நூல் அல்ல. அது ஒரு சமய நூல். நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். முதல் தலைமுறை கிறிஸ்தவர்களின் மறைக்கல்வி நூல். அவ்வளவே!

இயேசுவை கிறிஸ்துவாக நம்பியதால், யூத பாரம்பரியத்திலிருந்து வெளியே துரத்தப்பட்ட யூதர்கள், தங்களுடைய புதிய விசுவாசத்திற்கான அடையாளமாக, பழைய ஏற்பாட்டை தழுவி எழுதியதே இந்த நற்செய்தி நூல்கள். உவமைகள், சொற்பொழிவுகள், புதுமைக் கதைகள் என்கிற பல வகையான இலக்கிய மொழி வடிவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டவைகள் அனைத்துமே, அவர்கள் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமய மொழி வடிவம்.

தீமைக்கு எதிரான போராட்டத்தில் கடவுள் துணைநிற்கிறார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வாய்க்காலான இந்த புதுமைக்கதைகளை, அறிவியல் வளர்ந்திருக்கிற இந்த 21 ம் நூற்றாண்டிலும், வரலாற்று உண்மையாக திரித்துப் பேசி, மேஜிக் ஷோக்கள் நடத்தி, காசு பார்க்கும் இந்த கிறிஸ்தவ மத வியாபாரிகளை என்ன சொல்வது?

தனி விமானம் வைத்திருக்கும் இந்த அயோக்கியர்களின் அசுர வளர்ச்சியை கண்கூடாக பார்த்தும், இன்னமும் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் படித்த யோக்கியர்களின் புத்தியை, என்ன மொழி கொண்டு விமர்சிப்பது?

உண்மையில், இந்த போலி கிறிஸ்தவ போதகர்கள் தான், மாற்று மதத்தினரின் கடவுள் நம்பிக்கையை மூட நம்பிக்கையாகவும், அவர்களின் புனித நூல்களை புராணக்கதைகளாகவும் சித்தரித்து, மக்களிடையே வெறுப்பு உணர்வுகளை விதைக்கிற சாத்தானின் ஊழியர்கள்.

ஒருபக்கத்தில் மது ஆலை நடத்தும் வியாபாரிகளுக்கு தோ்தலில் வாக்களிக்க அருள்வாக்கு சொல்வது, மறுபுறத்தில் குடியிலிருந்து குணம் பெற நற்செய்திக்கூட்டங்களும், மறுவாழ்வு மையங்களும் நடத்தி காசு பார்ப்பது.

ஸ்டொ்லைட் ஆலையில் பணம் வாங்கி தேவாலயங்களையும், கட்டிடங்களையும் கட்டிவிட்டு, அங்கேயே புற்று நோயிலிருந்து விடுதலை பெற சுகமளிக்கும் சுவிஷேச கூட்டங்களையும், விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் வெட்கமேயில்லாமல் ஏற்பாடு செய்வது.

இதனை வெறுமனே அறியாமை என்று அவ்வளவு எளிதாக கடந்து போய் விட முடியாது. இதுவும் மூர்க்கத்தனமான, மூடத்தனமான 420 பிராடுத்தனமே!

இந்த போக்கை வளரவிட்டால் தீவிரவாதத்தை விட பல மடங்கு ஆபத்து, நம் பாரத மண்ணில் தோன்றுகிற காலம் வெகுதூரத்தில் இல்லை.

அதற்குள்ளாக, இந்த போலி மந்திரவாதிகளின் தலைக்கனம் சுக்குநூறாக உடைக்கப்பட வேண்டும் என்று வேண்டுவதே, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் வேண்டுதலாக இருக்க முடியும்.