சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

சென்னை எதிர்நோக்கும் பேரபாயம்

டிசம்பர் 05, 2021

கடவுள் இந்த உலகத்தை அழிப்பாரா? கடவுள் ஏற்கெனவே உலகத்தை அழித்திருக்கிறாரா? நோவா காலத்து வெள்ளப்பெருக்கு வரலாற்று நிகழ்வா?

நாட்டு நடப்புகள்

நோவா,Gilgamesh,Atrahasis,காடுகளை அழித்து, புராணக்கதையே, மெசபதோமியா, வெள்ளத்தால் பேரழிவு

2000-ல் உலகம் அழியப்போகிறது என்று உலகத்தின் ஒட்டுமொத்த பாஸ்டர்களும் கோரசாக சொன்னார்கள், அது பொய்த்துப் போய்விட்டது.

நாடுகளிடையே ஆங்காங்கு சண்டை நடந்த போதும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அதுவும் பிராடுத்தனமாகி விட்டது. இப்போது கொரோனா நேரத்தில் மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

எப்படியென்றாலும் கடவுள் உலகத்தை வெள்ளத்தால் மட்டும் அழிக்க மாட்டார் என்று, அடித்துச் சொல்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்வதால் தான், நமக்கு பயமே வர ஆரம்பிக்கிறது! உண்மையில், பைபிளில் கடவுள் உலகத்தை அழித்ததாக சொல்லப்படுவது வரலாற்று உண்மையா?

ஆதாம், ஏவாள் புராணக்கதை போன்றே, நோவா காலத்து வெள்ளமும் ஒரு புராணக்கதையே. மெசபதோமியா பகுதிகளில் அறியப்பட்ட கில்கமேஷ் (Gilgamesh) மற்றும் அத்ராஹசிஸ் (Atrahasis) என்கிற புராணக்கதைகளை மூலமாக கொண்டு இது எழுதப்பட்டது.

இந்த இரண்டு கதைகளின் சாராம்சம் இதுதான்: தெய்வங்கள் தங்களுக்கு சேவை செய்வதற்காக மனிதர்களை உருவாக்குகிறார்கள். நாளடைவில் மனிதர்களின் இரைச்சல் தெய்வங்களுக்கு இடையூறாக இருக்கிறது.

தெய்வங்களின் தலைவர் என்லில் (Enlil) எரிச்சலடைந்து, மனிதர்கள் அத்தனை பேரையும் வெள்ளத்தால் அழித்தொழிக்க, தனக்கு கீழ் உள்ள தெய்வங்களுக்கு ஆணை பிறப்பிக்கிறார்.

இந்த சிறு தெய்வங்களுள் ஒன்றான எயா (Ea), தனக்கு பிரியமான மனிதனான அத்ரஹாசிடம் அதைச் சொல்லி எச்சரிக்கிறது.

ஒரு படகை உருவாக்கி, வெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வழிசொல்கிறது. அவனும் படகை உருவாக்கி வெள்ளத்திலிருந்து காப்பாற்றப் படுகிறான்.

இதே போல ஒரு நிகழ்வு, சுமேரியர்களின் ஊருக் (Uruk) என்கிற நகரத்தை, கி.மு 2800 ம் ஆண்டில் ஆண்ட, மன்னர் கில்கமேஷ் காலத்திலும் நடந்ததாக ஆதாரங்கள் சொல்கிறது.

ஆக, நோவா காலத்து வெள்ளப்பெருக்கு, வரலாற்று நிகழ்வாக இருக்க எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, அது ஒரு புராணக்கதை என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கின்றன.

எனவே, பைபிளை சான்றாக வைத்து, கடவுள் இந்த உலகத்தை அழிப்பார் என்று இவர்கள் சொல்வதையும், இனி அழிவை வருவிக்கிற வெள்ளம் வரவே வராது என்று கொடுக்கிற உத்திரவாதத்தையும், குப்பையில் தான் தூக்கி போட வேண்டும்.

தமிழகத்தில் கொட்டுகிற வழக்கமான பருவ மழைக்கே புலம்பியழும் சிங்கார சென்னையைப் பார்க்கிறபோது, இன்னும் சில வருடங்களில் பேரழிவு நிகழ்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் தமிழகத்திற்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இதனைக் கண்டுபிடிக்க அதிமேதாவித்தனம் தேவையில்லை. சாமான்ய சாதாரண அறிவு இருந்தாலே சொல்லி விடலாம்.

குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக, அற்புத விளக்காம் அதிகாரத்தை, தகுதியில்லாத திராவிட திருவாளர்கள் கையில் பொதுமக்கள் தாரை வார்த்திருக்கிறார்கள்.

பணத்திற்காக காடுகளை அழித்து, ஆறு குளங்களை வளைத்துப் போடுகிறவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு, இப்போது பார்க்கிற மிதக்கும் சென்னை வெறும் டிரைலர்.

இயற்கையச் சுரண்டி தின்னுகிறவர்களுக்கு வாக்களித்தால் என்ன ஆகும் என்பதற்கான மெயின் பிக்சர் விளைவுகளை, பொதுமக்கள் அனுபவிக்கிற காலம் விரைவில் நடந்தே தீரும். இதற்கு காரணம் கடவுளா?

வெள்ளத்தை உருவாக்கி அனுப்புகிறவரும் கடவுள் கிடையாது. வெள்ளம் வந்தால் மேஜிக் செய்து காப்பாற்றுவதும் கடவுளால் முடியாது.

பேரழிவு வருவதற்கு முன்னரே கணித்து, இயல்பாக நடந்தேறும் அருங்குறிகள் வழியாக, ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவது மட்டுமே கடவுளால் செய்ய முடிகிற செயல். அதனையும் உதாசீனப்படுத்தினால் நடப்பது நடந்தே தீரும்.

விரைந்து செயல்படுகிற சான்றோர்களையோ, காலத்தைக் கணித்து சொல்லி, மக்களைக் காப்பாற்றுகிற ஆன்மீகவாதிகளையோ, இந்த தீயவர் பாசறை என்றைக்குமே விட்டு வைப்பது கிடையாது. தவறி இருந்தாலும் நிம்மதியாக இருக்க விடுவதும் கிடையாது.

இது போன்ற தகுதியற்ற ஆட்சியாளர்களைத் தொடர்ந்து தோ்ந்தெடுக்கும் நம் காலத்தவர் அனைவரும், இந்த பேரழிவுக்குத் தகுதியானவர்களே! கடவுளை கை நீட்டிப் பேச துளியும் அருகதை இல்லாதவர்களே!