மழுப்பலும், உருட்டலும்

மழுப்பலும், உருட்டலும்

மழுப்பலும், உருட்டலும்

டிசம்பர் 27, 2021

கடவுள் ரொம்ப நல்லவரா? நாம என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சிருவாரா? அவரு கிட்ட உருக்கமா அழுது புலம்புனா பரிதாபப்பட்டு ஏத்துக்கிடுவாரா? தண்டனை தர மாட்டாரா?

கடவுள் நம்பிக்கை

மன்னிப்பு, மன்னிக்காதீங்க, வாழ்க்கைத் தத்துவம், மனமாற்றம், பரிகார பூஜ

கடவுள் நல்லவரு தான். ஆனா, அவரு நியாயமானவரும் ஆச்சே! அவரு நீதி வழங்குறவரும் ஆச்சே! இயற்கை விதிங்களுக்கு கட்டுப்பட்டவரும் ஆச்சே? அப்படின்னா, எப்படிங்க அவரால தன் இஸ்டத்துக்கு மத்தவங்கள மன்னிக்க முடியும்? அவருக்கே மன்னிக்கிற அதிகாரம் இருக்காதே? இருந்தா தானே மன்னிப்பாரு?

தப்பு செய்யுறது மனுசனோட இயல்புன்னு நீங்க வக்காலத்து வாங்கலாம். தப்பு செய்யாத மனுசங்க தான், இந்த ஒலகத்துல யாரு?ன்னு தர்க்கமும் செய்யலாம். தப்பு செய்யாத ஒருத்தன் கிடையவே கிடையாதுன்னு நீங்க எப்படிங்க உத்திரவாதம் கொடுக்க முடியும்?

லஞ்சம் வாங்குறதெல்லாம் சகஜமப்பா. அதெல்லாம் தவிர்க்க முடியாதுன்னு நீங்க சொல்லிக்கிடலாம். இந்த ஒலகத்துல யாரு தான் நோ்மைன்னு, ஒங்க தப்ப நியாயப்படுத்தி நீங்க வாக்குவாதமும் செய்யலாம். ஆனா, நோ்மையா வாழ்றவனே கிடையாதுன்னு நீங்க உத்திரவாதம் தர முடியாதுங்க.

பொழைக்கத் தெரியாதவன்ங்கிற பட்டம், சனங்களோட கேவலமான பார்வ – இது அத்தனையையும் தாண்டி வாழ்ற நாணயமானவங்க, நம்ம தமிழ்நாட்டுல கண்டிப்பா இருப்பாங்க. இப்ப Proof கொடுங்கன்னு கேப்பீங்கல்ல?

Proof கொடுக்க முடியலங்கிறதுக்காக நீங்க சொல்றது உண்மை ஆகிடாதுங்க. நாங்க சொல்றது பொய்யும் ஆயிடாது. ஆனா, நாங்க சொல்ற வாதத்துல இருக்குற உண்மை ஒங்களுக்கும் தெரியும், எல்லாருக்கும் புரியும். அந்த Proof இல்லா புரிதல் தாங்க ஆன்மீகம். அது தான் எங்களோட கடவுள் நம்பிக்கையும்!

நீதி, நோ்மை, கடவுள் பயம்ன்னு வாழ்றவங்களுக்கு, அந்த கடவுள் நியாயமா இருக்கனுமில்ல? ஒங்க கடவுள் என்ன பாவிய தான் நேசிப்பாரா? அப்ப நோ்மையா வாழ்ந்தவென்னலாம் வெட்டுறதுக்காகவே நேந்து விட்ட கோழிங்களா?

நீங்க ஏன் எல்லாத்தயுமே பொதுவுடைமைப்படுத்தி பூசி மொழுகுறீங்க? ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்கிறது சோத்துக்கு பொருந்தும்ங்க. வாழ்க்கைக்கு பொருந்தாது. ஏட்டில் சுரைக்காய்ன்னு எழுதலாங்க, அதுக்காக எழுதுனதயே கறியா சமைச்சு சாப்பிட முடியாதுங்க.

வாழ்க்க வேற, தத்துவம் வேறங்க. வாழ்க்கைத்தத்துவம்னு ரெண்டையும் சேத்து போட்டு குழம்பாதீங்க. அடுத்தவங்களயும் குழப்பாதீங்க. ஒவ்வொண்ணும் புது பிரச்சனை. அதுக்கு பொது தீர்வ கொடுக்கனும் நினைக்கிறது முட்டாள்தனம் மட்டுமில்ல, கடைஞ்செடுத்த அயோக்கியத்தனமும் கூட.

கடவுள் முன்னால தப்புன்னா தப்பு தாங்க. அதுல ஆன்னா, ஆவன்னா போடுறது ஒங்களோட சுதந்திரமா இருக்கலாம், ஆனா அதயே கோடி பேரும் பேசறதுனால நியாயமாகிருமா? கோடி பேரும் செய்றதுனால நியாயப்படுத்திற முடியுமா?

நீங்க தப்பு செஞ்சு உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தா, அதுக்கு தண்டனையா என்ன கொடுத்தாலும் ஏத்துப்பீங்க! நழுவ பாக்க மாட்டீங்க! தப்பி ஓட நெனைக்க மாட்டீங்க! ஒங்கள நியாயப்படுத்திக்க நெனைக்க மாட்டீங்க! காப்பாத்திக்க பரிகார பூஜ செய்ய மாட்டீங்க!

ஆமா, நா தப்பு பண்ணிட்டேன். நா செஞ்சது தப்பு தா! இதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்னு, தண்டனய அனுபவிக்க தயாரா இருப்பீங்க! தண்டன அனுபவிச்ச பிறகு பேசவே மாட்டீங்க. காலத்துக்கும் ஊமையாத்தான் இருப்பீங்க! அதானங்க மனமாற்றம்.

ஆனா இப்பவெல்லாம், மன்னிப்பு கேக்குறதே Fashion ஆயிட்டே! மன்னிக்கலன்னா நீங்க தாங்க பெரிய பாவி ஆயிடுவீங்க. அப்பேற்பட்ட ஆளுங்க பின்னாடி தாங்க அதிகாரமே வளஞ்சி, நெழிஞ்சி, குனிஞ்சி கிடக்கும்.

இவ்வளவு பெரிய தப்ப செஞ்சிட்டோமேன்னு கொஞ்சங்கூட வருத்தமே இல்லாம, நீலிக்கண்ணீர் வடிச்சாலே பல பேரு புண்ணியவாளன் ஆயிடுறானுங்களே! அடுத்தவங்களுக்கு சாபமும் போட ஆரம்பிச்சிடுறாங்களே? ஆனா, குத்த உணர்வுல செத்துப்போனவன் மட்டும் என்னைக்குமே உலக மகா பாவி!

பண்ணுற மொள்ளமாரித்தனத்த மறைக்கிற அரசியலுக்காக, எவனோ எப்பவோ சொன்ன "மறப்போம், மன்னிப்போம்"-ங்கிற பகுத்தறிவு வார்த்தைங்களுக்கு, ஆன்மீக சாயத்த பூசி, புனிதமான ஆன்மீகத்த அசிங்கப்படுத்தாதீங்க!

ஒங்களுக்கு எதிரா யாராவது தப்பு செஞ்சு, நீங்க மன்னிக்க முடியாம இருந்தா, நீங்க பெரிய பாவியும் கெடயாது. ஒங்கள கடவுள் தண்டிக்கப்போறதும் கிடையாது. இயல்பா, இயற்கையா ஒங்க மனசு நெனைச்சா மன்னியுங்க. தப்புக்கு தண்டனை உண்டு, அது கடவுள் கொடுக்கிறது கிடையாது, எடைக்கு எடைன்னு அத நிர்ணயிக்கிற இயற்கை விதிங்க ஏற்கெனவே இருக்கு! கடவுளே எவனயும் காப்பாத்த முடியாது.

சாமிக்குத்தமாயிருமோன்னு மன்னிக்காதீங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. ஒங்களுக்கு எதிரா தப்பு செஞ்சவங்கள மன்னிக்க மனசு வரலன்னா, மன்னிக்காதீங்க. நீங்க என்னமோ குற்றம் செஞ்சம் மாதிரி பதறுறீங்க. தப்பு செஞ்சவனே ஜம்முன்னு இருக்கான்.

மன்னிக்கிறது இயல்பா வரணுங்க. வலிஞ்சி நீங்க ஒங்க மேலயே திணிச்சி வரக்கூடாது. செயற்கையா வாழ முயற்சி பண்ணாதீங்க. இயல்பா இருங்க. ஒங்க உணர்வுகளுக்கு மொதல்ல மதிப்பு குடுங்க.