கடவுள் – ஒரு வரலாற்று கைதி
டிசம்பர் 29, 2021
கடவுளை வரலாற்றிலேயே கட்டிப்போட்டு, சாமான்யர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கிற புனிதமான எண்ணம் கொண்டிருப்பதில் முதலிடம், தமிழ்நாட்டில் இருக்கிற மத நிறுவனங்களின் தலைகளுக்கே!
ஆன்மீக அரசியல்
வரலாற்று மதம், இரக்கச் செயல்கள், மாய வித்தை,
கடவுளைச் செயல்பட விடாமல் இரக்கச்செயல்கள் கொண்டு தடுப்பதும், பூஜை காரியங்களைச் செய்து, சாமான்யர்கள் திராவிடத்திற்கு எதிராக திமிறி எழுந்து விடாமல், ஆன்மீகப்படுத்தி, அமைதிப்படுத்தி காலத்திற்கும் கட்டிப்போடுவதுமே, இவர்களது நற்செய்தி அறிவிப்பு.
கடவுளைப் போதிக்கிறோம் என்கிற பெயரில், இவர்களின் அறிவுச்செருக்கிலிருந்து உதிக்கும் ஆன்மீகச் சிந்தனைகள், யதார்த்த வாழ்வில் உப்பு சப்புக்குக்கூட ஒப்பேறாதவை. போதிக்கிற இவர்களே கடைப்பிடிக்காதவை. வறியவர்களை காலத்திற்கும் ஏமாற்றுவதற்கு சொல்லப்படுபவை.
மன்னியுங்கள் என்று போதிக்கிற இவர்கள் தான், அனைத்து பாவ காரியங்களையும், குற்ற உணர்ச்சியே இல்லாது முன்னின்று நடத்துகிற புனித பூஜாரிகள். குற்றமேதும் செய்யாத சாமான்யர்களை பாவிகளாக்கி, குற்ற உணர்வை ஏற்படுத்தி, பிழைப்பு நடத்துவதே இவர்களது குலத்தொழில்.
இதோ வருகிறார், உன்னைத் தொடுகிறார், தொட்டு விட்டார், புற்றுநோயில் ஆவியை இறக்கிவிட்டார், கட்டியை உடைத்து விட்டார் – என்றெல்லாம் புரூடா விடும் இந்த போலி சாமிகளின் எண்ணிக்கையும், அதனை ஆமோதிக்கும் ஆமாசாமிக்களின் பொய் நம்பிக்கையும், நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவது போலி ஆன்மீகத்தின உச்சகட்டம்.
சாமான்யர்களை எப்படியெல்லாம் தகிடுதத்தங்கள் செய்து ஏமாற்றலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போலும்! இந்த 21 ம் அறிவியல் நூற்றாண்டிலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை சாமான்யர்கள் மத்தியில் விதைத்து நல்ல இலாபம் பார்ப்பதில் இவர்களை மிஞ்ச, அரசியல்வாதிகள் கூட கிடையாது.
வரலாற்று மதம் என்கிற உருட்டலோடு இவர்கள் செய்கிற தகிடுத்தத்தங்களை யாராவது எதிர்த்துக் கேட்டால், அமைதி அணிவகுப்பை ஒட்டுமொத்தமாக நடத்தி கூப்பாடு போட்டுவிடுவார்கள். பேயோட்டுகிறோம் என்கிறார்கள், இல்லாத பேய்களை எதற்காக ஓட்ட வேண்டும்?
அனைத்து நாசகார திட்டங்களுக்கும் கூட இருந்து ஓ.கே சொல்லி விட்டு, இவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, புதிய புதிய நோய்களை உருவாக்க காரணமாக இருந்து விட்டு, குணமளிக்கும் ஆராதனை என்கிற பெயரில், மந்திரவித்தையைக் காட்டி மாயவித்தைச் செய்கிறார்கள் இந்த தந்திரவாதிகள்.
ஒருபுறத்தில் ஆய்வுக்குழந்தைகளை மருத்துவ உலகில் கட்டணம் கொடுத்து உருவாக்குகிறார்கள். இவர்களோ ஆன்மீக உலகில், காணிக்கையை பக்கெட்டில் பெற்று, ஆவிக்குழந்தைகளை உருவாக்குகிறோம் என்று உதார் விடுகிறார்கள். பணம், பதவி, அதிகாரம். இதுவே இவர்களின் தன்னிறைவவடைந்த ஆன்மீகம்.
வியாதியிலிருந்து குணப்படுத்துகிறோம் என்று சொல்லி, இரவு முழுக்க முழிக்க வைத்து கத்தச் சொல்லி விட்டு, காலையில் முதல் வேலையாக இவர்கள் மட்டும் சுகர் டெஸ்ட் எடுக்க, அப்போலாவில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்து இருப்பார்கள்.
இவர்களுக்கு சிறு தலைவலி என்றாலும் ஒட்டுமொத்த ஸ்கேன் எடுத்து பரிசோதனை. ஆனால், சாமான்யர்களுக்கு புற்றுநோய் என்றாலும் தொட்டே குணப்படுத்தி விடுகிற மந்திரச்சக்தி வல்லமை. எப்படி புளுகுகிறார்கள் இந்த புனிதவான்கள்.
காணிக்கை என்ற பெயரில் குவித்து வைத்திருக்கும் தங்க நகைகள், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிக் கட்டும் வானளவிய ஆலயங்கள், காலத்திற்கும் ஏழைகளை அடிமைகளாக, கையேந்திகளாக வைக்க உதவும் தொண்டு நிறுவனங்கள். இவை அத்தனையும் கடவுளின் பார்வையில், நம்பிக்கையை மூலதனமாக வைத்துச் சாமான்யர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வியாபாரமே.
தன் வீட்டில் நிரம்பி வழிகிற சாதிச் சண்டைகளுக்கு தீர்வு காண வக்கற்றவர்கள் தான், நாட்டை திருத்த போராடுகிற போராளிகள். பிரசங்க மேடைகளில் சமத்துவ போதனை நடத்தும் புனிதவான்கள்.
என் சாதி மக்கள் அதிகம், எனவே எங்கள் சாதித் தலைவரை எங்களுக்குத் தாருங்கள் என்று இட ஒதுக்கீடு கேட்டுப்போராடுகிற காலத்தையும், அதனையும் கத்தாத செம்மறியாக ஏற்றுக்கொள்கிற மேல் வர்க்கத்தின் ராஜாங்க தந்திரத்தையும், கலிகாலம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
கூலாங்கல்லைக் கொண்டு மலையைச் சாய்த்தான், மரத்தை வீழ்த்தினான் என்று கலர் கலராக புரூடா விட்டு விட்டு, எத்தனை புதியவர்கள் இருந்தாலும், மறக்காமல் திருடர்களோடு கரம்கோர்ப்பது தான் இவர்களுக்கே உரித்தான பகுத்தறிவு நம்பிக்கை. கடவுளாவது? நம்பிக்கையாவது? இது தான் இவர்களின் ஒரிஜினல் சுயரூபம்.
இவ்வளவு அநீதிகள் செய்கிற இவர்களைப் பார்த்தும், இன்னமும் இவர்களுக்கு பரிந்து பேசுகிற, இவர்களைப் பாதுகாக்க நினைக்கிற, இவர்கள் சொல்வதைக் கேட்டு திருடர்களுக்கு வாக்களிக்கிற சாமான்யர்களுக்கு, இன்னமும் நிறைய வியாதிகள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது.