சூழ்நிலையும், கைதியும்

சூழ்நிலையும், கைதியும்

சூழ்நிலையும், கைதியும்

ஜனவரி 10, 2022

இவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும், இவள் குற்றவாளி, இவள் விபச்சாரி, இவளை எல்லாம் தூக்கிலிட வேண்டும், இவளை என்கவுண்டர் செய்ய வேண்டும், இவளை குண்டாசில் கைது செய்ய வேண்டும்...

நாட்டு நடப்புகள்

ஆபாச வீடியோ, வக்கிரம், சூழ்நிலை, Rowdy Baby

கடந்த வாரத்தில் ஆபாச வீடியோ, ஆபாச பேச்சு, தனிநபர் மிரட்டலுக்காக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட Rowdy Baby என்கிற அடைமொழி கொடுக்கப்பட்ட, ஒரு பெண்ணைப் பற்றி பகிரப்பட்ட, எண்ண முடியாத யூ டியூப் கமெண்ட்கள் தான் இவை.

இந்த கண்டன பதிவுக்கு அந்த பெண் தகுதியா? அவள் குற்றவாளியா? என்பதல்ல கேள்வி. யார் கேட்க வேண்டும்? இவள் செய்தது தவறென்றால், இவளை விட மோசமாக தவறு செய்த மற்ற குற்றவாளிகள் எங்கே? அவர்களை எல்லாம் இவர்கள் ஏன் கேட்கவில்லை? என்பதே நாம் எழுப்புகிற கேள்வி.

அவள் ஆபாசம் பேசினாள், சரி. சினிமாவில் இல்லாத ரெட்டை அர்த்த வசனங்களா? பேசாத கெட்டை வார்த்தைகளா? கேட்காத ஆபாச பேச்சுக்களா? ஆடையில்லாமல் தெரியும் அருவருப்பு இல்லாத காட்சிகளா?

Two Piece ஆடையில் நடிகைகள் வலம் வந்ததே கிடையாதா? ஆண்கள் சிக்ஸ் பேக் உடம்மை காட்டியதே கிடையாதா? கற்பழிப்பை கொடூரமாக வில்லன்கள் அரங்கேற்றியதே கிடையாதா? சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சீன்களே இல்லையா? இதில் எந்த காட்சியும் இவர்களை முகம் சுளிக்க வைத்ததே கிடையாதா?

ஆனால், அதையெல்லாம் பார்க்க தியேட்டரில் பணம் கொடுத்து குழந்தைகளை அழைத்து போகிறார்கள். இப்போது குழந்தைகள் கெட்டுப் போக மாட்டார்களா? இந்த ஒரு பெண் தான், தமிழ் ஒழுக்கத்திற்கே களங்கமும், கற்புக்கே தப்பான இலக்கணமாய் அமைந்து விட்டவளா?

பிக் பாஸ் என்கிற விபச்சார திருவிழாவில் பாத் ரூமிற்குள் உச்சா போவதையும் கூட கண் சிமிட்டாமல் பார்க்கிற இந்த வக்கிரம் பிடித்த தமிழ் குடுமிகள் தான், வெட்கம், மானம், ரோசம் பற்றி, இந்த பெண்ணுக்கு அறவியல் பாடம் நடத்துகிறார்கள்.

Living Together என்கிற வார்த்தையை தமிழகத்தில் இதுவரை யாருமே கேட்டதே கிடையாதா? மனைவி, துணைவி, இணைவியரோடு வாழ்ந்த பேரறிஞர்களைப் பற்றி படித்தது கூட கிடையாதா?

கவர்ச்சி நடன அழகியரை, பழைய திரைப்படங்களில் கூட பார்த்தது கிடையாதா? தோ்தல் நேரத்தில் எவ்வளவு வக்கிரம் நிறைந்த பேச்சுக்கள் பேசப்படுகின்றன. மேடைகளில் அழகியர் நடனம் ஏற்பாடாகிறது.

சினிமா தொடர்பு உடையவர்கள், யூ ட்யூப்பில் சமைப்பதை, உடற்பயிற்சி செய்வதை, கொஞ்சுவதை வெளியிடுகிற போது, அவர்களிடம், கோடி, கோடியாய் சம்பாதிக்கிறீர்கள், இப்படிப்பட்ட பிழைப்பு எதற்கு? என்று கேட்டிருக்கலாமே? அங்கேயில்லாம், மேடம் சோ க்யூட், சோ நைஸ், கீப் இட் அப் என்று கமெண்ட்ஸ்.

ஆனால், தன் சூழ்நிலையால் வாழ்வை தொலைத்தவள், கொரோனா முடக்கம் நடந்த நேரத்தில் கஞ்சிக்கு வழியில்லாமல், என்ன செய்வதென்று புரியாமல், கிடைப்பது எதையாவது வைத்து, சோற்றுக்காக, பிழைப்புக்காக ஏதாவது செய்து வயிற்றை நிரப்ப வேண்டும் என்று செய்தால், விபச்சாரி பட்டம்.

அவள் விபச்சாரியாகவே இருந்தாலும், ஆபாசமாக பேசினாலும், கேட்க வேண்டியது யார்? கேட்பதற்கு அரசுக்கு தகுதி இருக்கிறதா? கொரோனா பொது முடக்கம் போட்டால் யார் சோறு போடுவார்கள்? மெடிக்கலுக்கு யார் பில் கட்டுவார்கள்? இவர்களில் அரசு மருத்துவமனையில் படுப்பவர் யார்? தன் பிள்ளையை அரசு பள்ளியில் சோ்ப்பவர் யார்?

இவர்களை விட்டு விட்டு, ஒற்றை பெண்ணை நோண்டினால், புகார் கொடுத்தால் அவள் ரோசமெடுத்து ஆடத்தான் செய்வாள். கண்டதையும் பேச தான் செய்வாள். இவர்கள் செய்வது நியாயம் என்றால், அவளுடைய பார்வையில் அவள் செய்வதும் நியாயம் தானே?

பணத்திற்காக கண்டதையும் விளம்பரமாக போடும் ஊடக விபச்சாரத்தை தட்டி கேட்க முடியுமா? கல்லா கட்ட எந்த விளம்பரத்திலும் நடிக்கிற நடிகையை, நடிகரை விமர்சனம் செய்யும் துணிவு இருக்கிறதா? இப்போது பொது நல மனு புழுக்கள் எங்கே போனது? கேட்டால் அத்தனை பேரையும் கேட்க வேண்டும். திராணியில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு கிடக்க வேண்டும்.

எளியவன், அபலை, கேட்க நாதியற்றவர் என்றால் ஏறி மிதிப்பது. அதிகாரம் உள்ளவனைப் பார்த்தால் நவ துவாரத்தையும் மூடிக்கொள்வது. வீரக்குடிகள் நிறைந்த கூட்டமல்ல தமிழகம், மொடாக் குடிகாரர்கள் வாழும் கேடு கெட்ட கூடாரம். இந்த இனத்தில் பிறப்பதே ஒரு சாபக்கேடு தான்.

ஒருவருடைய வாழ்க்கையை எப்படியும் வாழ கடவுள் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. இங்கு தனி நபரை குற்றவாளி என தீர்ப்பிடுவதற்கு எவருக்கும் இம்மியளவும் யோக்கியதை இல்லை.

தன் குடிகளை குற்றப்படுத்துவதற்கு முன்னால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஓர் அரசு உறுதி செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாத எந்த தறுதலை அரசும், அநியாயமாக எளியவர்களை சிறைப்படுத்துவது அறத்திற்கும், தர்மத்திற்கும் எதிரானது.

குடிமக்களை பசியாலும், பட்டினியாலும், சித்ரவதை செய்கிற சர்வாதிகாரியின் காலமே, புராணத்தில் கொடூர காலம். அத்தகைய காலத்தில், தன் பிள்ளைகளின் துயரம் உணர்ந்து, இயலாமையால் விம்மி அழுகிற இயற்கை அன்னையின் கண்ணீருக்கு, அந்த அரக்க மனம் படைத்த ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.