என்கௌண்டர் கொடூரங்கள்

என்கௌண்டர் கொடூரங்கள்

என்கௌண்டர் கொடூரங்கள்

ஜனவரி 11, 2022

ஸ்காட்லாந்து போலீசின் சமீப என்கௌண்டர்களை இணையதள வாசிகள் உச்சி முகர்ந்து கொண்டாடி பதிவிடுகிறார்கள். அந்த இணைய தள குஞ்சுகளுக்கு வரப்போகிற சாபக்கேட்டை விவரிப்பது ஆன்மீகத்தின் கடமை என்பதால் இந்த பதிவு.

நாட்டு நடப்புகள்

என்கௌண்டர், காவல் துறை, தர்மபுரி, பொள்ளாச்சி, சாத்தான்குளத்தில், ஸ்டொ்லைட், தாமிர பரணி

இணைய தள நாட்டாமைகளே! ஸ்காட்லாந்து காவல் துறையை உச்சி முகர்கிறீர்கள். மின்னலினும் விரைந்து தீர்ப்பு எழுதுகிறீர்கள். உங்களுக்கான தீர்ப்பு நாளில், கடவுள் பயம் இல்லாத பகுத்தறிவு பூமியில் பிறந்த உங்களிடம், தர்ம தேவதை கேட்கும் இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல நடுங்கி நிற்கும் காலம் விரைவில் மலரும்.

தாமிர பரணி ஆற்றில், ஒருநாள் கூலி உயர்வு கேட்டு போராடிய கூலி தொழிளார்களை நரக வேட்டையாடியது யார்? அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட தன் கணவருக்காக, இரண்டு வயது கைக்குழந்தையுடன் சென்ற அபலைத் தாயையும், அந்த சேயையும் வெறி பிடிக்க ஆற்றிலே முக்கிக் கொன்றது யார்?

மூழ்கிக் கொண்டு இருந்தவர்களை, பதறிக் கொண்டு காப்பாற்ற சென்ற நல்மனம் கொண்ட சில ஊடக நண்பர்களையும் விரட்டியடித்து, விரைப்பாக நின்ற நோ்மையாளர் யார்?

ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க, தமிழக காவல்துறை ஆடிய வெறியாட்டத்தை பார்த்து, உலகமே காறி துப்பியது. அதனை விட்டுத் தள்ளுவோம். போராட்டம் முடிந்த கையோடு இரவில் ஒவ்வொரு வீடாக திருடனை விட கேவலமாக பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து, ஆண்களையும், பெண்களையும் அடித்து, உதைத்து, காயப்படுத்தி கைது செய்த கொடியவர்கள் யார்?

இவ்வளவு செய்தும் வெறி அடங்காது, அடுத்த நாள், 18 வயது இளைஞனை சுட்டுத் தள்ளி விட்டு, அவன் உயிருக்காக துடித்த போது, நடிக்காதே என்று கண் முன்னால் ஓர் உயிர் போகிறது என்கிற கடுகளவு இரக்கமே இல்லாமல், அரக்கனை விட கேவலமாக காலால் எட்டி உதைத்த நரகாசுரன் யார்?

ஒருமுறை வானை நோக்கிச் சுட்டாலே, சிட்டுக்குருவியாய் பறந்து நாலாபுறம் தெறித்து ஓடும் மனநிலை கொண்ட ஏழைகளை, எளியவர்களை, தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு சித்தரித்து, வன்முறை செய்ததால் குறிபார்த்து சுட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது என்று ஒவ்வொரு முறையும், வெட்கமே இல்லாமல் பொய் அறிக்கையை வாசிக்கிற காளகேயர் யார்?

என்கௌண்டரிலும் சமூக அநீதி தான். இல்லையென்றால், தர்மபுரியில் நெஞ்சமே பதற மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற கட்சிக்காரர்களை என்கௌண்டர் செய்ய எது தடுத்தது? இது ஈவிரக்கம் நிறைந்த கொலையோ?

பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்தவர்களுக்கு என்கௌண்டர் கிடையாதா? இதில் அவ்வளவு கொடூரம் இல்லையா? எளியவர்களை மாவு கட்டோடு அலற விடும் இந்த ஸ்பெசலிஸ்ட்கள், இருபது நாட்கள் தண்ணி காட்டிய முன்னாள் அமைச்சரை தொட்டு பேச வலிமை இருக்கிறதா?

காக்கிகளில் எத்தனை கயவர்கள், கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள். அப்போது எங்கே போனார்கள் இந்த என்கௌண்டர் ஏகாம்பரங்கள்? சாத்தான்குளத்தில் ஒரு தந்தை, மகனின் குதத்தில் லத்தியால் குடைந்தது சாதாரண காரியமா? இதற்கு துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயாதா?

மலையை உடைத்து விற்கிற கயவர்களை போட்டு தள்ள முடியுமா? ஆற்று மணலை இரவில் கடத்தி விற்கிறவர்களை சுட்டுப் பிடிக்க முடியுமா? ஏமாந்தவன், அனாதை, கேட்க நாதியில்லாதவன் இவர்களுக்கு மட்டுந்தான் இதுவரை இவர்களின் துப்பாக்கி வேலை செய்திருக்கிறது.

ஏனென்றால், இந்த என்கொளண்டர்கள் நீதியை நிலை நிறுத்தவோ, ரவுடிகளை ஒழிக்கவோ அல்ல. மாறாக, வெறுமனே அரசியலுக்காக, ஆதாயத்துக்காக, பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவுமே.

அதிகார வர்க்கத்தின் ஏவலாக, ஆட்சியாளர்களை குளிர்வித்து உயர்வு பெறும் கொடூர எண்ணத்தோடு, பதவி வெறி பிடித்த சில அற்பத்தனமான வெள்ளை ஆடுகளை, ஹீரோவாக நம்ப வைத்து காட்டப்படுகிற வெறும் Short Films ரீல்களே இவை. இவர்களுக்குத் தான் சிங்கங்களும், சிறுத்தைகளும் வக்காலத்து வாங்கி நடிக்கிறார்கள்.

கடவுள் பயமும், குற்ற உணர்வும் இல்லாத இந்த வெறி பிடித்த கொடியவர்கள் செய்யும் இரத்தக் கறை படிந்த குற்றப் பழிகளில், வக்காலத்து வாங்கி பதிவிடும் அத்தனை இணைய தள நாட்டாமைகளும், இந்த இரத்தப் பழிகளில் பங்கில்லை என்று சொல்லி, அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது.

என் சுதந்திரம், நான் எது வேண்டுமானாலும் பதிவிடுவேன் என்று ஒருவர் வாதாடலாம். நியாயமான வாதம். ஆனால், ஒருவர் பதிவிடுகிற ஒவ்வொரு வார்த்தையும், தர்ம தேவதையிடம் கணக்கு கொடுக்க வேண்டிவையே! நாங்கள் எழுதுகிற வார்த்தைகளும் இதற்குள் அடக்கம்.

யாரும் இவற்றை சொல்லி தொலைக்க வில்லையே? என்று தர்ம தேவதையின் முன்னால், அழுது புலம்பி நீலிக்கண்ணீர் வடித்து, ஒருவர் பாவக்கணக்கில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காகவே, இதனை பதிவு செய்கிறோம். பகிர சொல்கிறோம்.

கடவுள் படைத்த மனித உயிரை எடுப்பதற்கு இந்த உலகத்தில் எவருக்கும் உரிமையில்லை. ஏன், அந்த கடவுளுக்குமே அது கிடையாது. ஸ்காட்லாந்து போலீசின் என்கௌண்டர்கள் பழிபாவ செயல் மட்டுமல்ல, மாபாதக கொலைக் குற்றம். அந்த கொலைக் குற்றத்தை செய்தவர், அதற்கான வினையை தீர்ப்பு நாளில் அறுத்தே தீருவார்.