ஜல்லிக்கட்டு நோஞ்சான்கள்

ஜல்லிக்கட்டு நோஞ்சான்கள்

ஜல்லிக்கட்டு நோஞ்சான்கள்

ஜனவரி 16, 2022

தமிழகத்தில் அடுத்த வேளை உணவே, பலருக்கு இன்னமும் நிரந்தரம் இல்லை. அடிப்படை வசதியும் இல்லை. ஆனாலும் வீர தீரர் கூட்டம் என்று, மார் தட்டி சொல்கிற வெட்டிப் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லை, மங்குனி தமிழ் குடிகளுக்கு.

நாட்டு நடப்புகள்

மெரீனா புரட்சி, ஜல்லிக்கட்டு, ஸ்டொ்லைட், அணு உலை

காட்டுமிராண்டி என்று பெரியாரால் கொடுக்கப்பட்ட அடைமொழிக்கு முழுக்க முழுக்க தகுதியான கூட்டமே இந்த வீர மடையர்கள் கூட்டம்.

வரலாற்றில் வீரத்திற்கும், விவேகத்திற்கும் பெயர் போனவர்களாம், எனவே தான் நிகழ் காலத்திலும் மூர்க்கத்தனமான காளைகளை வளர்த்து, மிருகத்தனமாக அவைகள் மீது பாய்ந்து, நாகரீக காலத்திலும் அதனை வீரம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.

ஊழல் செய்கிற அரசியல் வியாதிகளை தட்டிக் கேட்க துப்பில்லை. துணிந்து தட்டிக் கேட்கிற தனி மனிதர்களை, அரச பயங்கர வாதம் கொண்டு குண்டாசு போடுவதை தடுக்கவும் துணிவில்லை. அப்பாவி மாடுகள் மீது வீரத்தைக் காட்டி கொக்கரிக்கிறது, இந்த மூடர் கூடம்.

ஜல்லிக் கட்டுக்காக மெரீனா புரட்சி செய்தவர்களாம் இந்த சிங்கார சென்னை காளையர் கூட்டம். இவர்களே கதை, வசனம், வரலாறு எழுதி பாராட்டி கொள்கிறார்கள்.

தென் தமிழகத்தின் கடலோர கிராமத்தில் அணு உலைக்கு எதிராக, தங்கள் வாழ்வையும், வாழ்விற்கான ஆதாரத்தையும் காப்பாற்ற பட்டினி கிடந்து, கிராம மக்கள் போராடிய போது, 'எல்லாரும் இப்படி போராடினால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?' என்று வம்பளந்தது இங்கு வாழ்ந்த பெரும்பான்மை கூட்டம்.

மின்சார தட்டுப்பாடு நேரத்தில், கிராமங்களில் 12 மணி நேர மின்வெட்டு என்றால், இந்த சிங்கார வன வாசிகளுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் தான். இல்லை என்றால் இணைய தளத்தில் அலப்பறை செய்து, கவர்மண்டையே களேபரம் செய்து விடுவார்கள். ஐ.டியில் வேலை செய்கிற கூட்டம் என்று நிரூபித்து, அரசிற்கு பயம் காட்டுகிறார்களாம்! இவர்களை பகைத்து கொள்ள கூடாதாம்!

மின்சாரமே இல்லை என்றாலும், தோ்வு நேரமாக இருந்தாலும், வெளி மாநிலத்தில் கடன் வாங்கியாவது ஐபில் போட்டியை நடத்தி விட வேண்டும். அது எந்த திராவிட அரசாக இருந்தாலும் உடனே உச்சி முகர்ந்து விடுவார்கள்.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக எளியவர்கள் வெயிலில் பட்டினி கிடந்து போராடிய போது, துப்பாக்கி சூடு நடக்கிற வரை, கம்மென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கூட்டமும் இதே காளையர் கூட்டம் தான். கரெண்ட் கம்பிக்கு காப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமாம். பகுத்தறிவு கொடுத்த புனித சிந்தனைகளில் இதுவும் ஒன்று போலும்!

உழைப்பாளி மக்களின் உயிரையும், கோரமான சாலை விபத்தையும், ஏழை வீட்டு பெண்களின் தாலிகளையும் பறிக்கிற சாராயக் கடைகளை அகற்ற வேண்டும் என்கிற போராட்ட எண்ணம் எல்லாம், இவர்களை அண்டுவதே இல்லை. இல்லை என்றால் வாழ்க்கையை எப்படி என்ஜாய் செய்வது?

மனித உயிர்களை விட, மக்களின் வாழ்வாதார பிரச்சனையை விட, உதவாக்கரை ஜல்லிக் கட்டுக்கே பொங்கி எழுவார்கள். இந்த கூவையர் கூட்டம் பொங்கி விட்டால், கலை கூத்தாடிகள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். முண்டியடித்து ட்வீட் செய்வார்கள், ஏன் களத்திற்கே வந்து சினிமா டயலாக்கை அடித்து விடுவார்கள். பறக்கும் விசில், தியேட்டரை விட காதுகளை கிழிக்க வைக்கும்.

தியேட்டரில் நாளைக்கு ரசிக குஞ்சுகளின் வரத்து குறைந்து விடக்கூடாது என்கிற சமூக அக்கறை தான், இவர்களின் உடன் வருகைக்கு காரணம். வேறென்ன? இன்னொரு புறத்தில், மகுடி வாசிக்கிற ஊடகங்களும் பின்னி படமெடுத்து, தமிழகத்திலே இது தான் தலையாய பிரச்சனை என்று பிலீம் ரோல்களை அள்ளி தெறித்து விடுவார்கள்.

50 ஆண்டு ஆட்சி செய்தும், இன்னமும் மக்கள் நாற்றமெடுக்கும் ரேசன் அரிசியை சாப்பிடும் அவல நிலையைக் கண்டு சினம் எழ வில்லை, ஒருவேளை சோறு பொங்கி சாப்பிடுகிற பொங்கல் கொண்டாடவே, இவர்களை அண்டிப் பிழைக்கிற பொழைப்பு அவமானமாக படவில்லை.

சாராயக் கடைகளை கண்ட இடங்களிலும் திறந்து வைத்து, பெண்களையும் குடிக்க வைத்து, அடுத்த தலை முறையை சீரழித்த திராவிட சாராய வியாபாரிகளுக்கு எதிராக சீற்றம் வரவில்லை. இரண்டு பேரும் குடிப்பது, பெரியார் சொல்லிக் கொடுத்த சமத்துவம் போலும்!

குடையப்படுகிற மலைகளோ, அள்ளப்படுகிற ஆற்று மணலோ, வெட்டப்படுகிற மரங்களோ, இடிந்து விழுகிற கட்டிடங்களோ, புளியில் இருக்கிற பல்லியோ, பேருந்து நிற்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவே அநியாயமாக கொடுக்க வேண்டிய, ஐந்து ரூபாய் கொள்ளை கட்டணமோ, இவர்களின் கண்களை உறுத்தவில்லை.

வெற்று விளம்பரத்திற்காக, தேவையில்லாத செலவுகளுக்காக, முன்னாள் முதல்வர்களின் பில்டப் கல்லறைக்காக, நெற்றி வியர்வை சிந்தி உழைத்த மக்களின் வரிப்பணம் வீணாக போகிற வருத்தம் இல்லை. ஆனால், ஜல்லிக் கட்டு மட்டுந்தான் பிரதானம். சினிமாவே வாழ்க்கை. மானத் தமிழன் என்று தங்கள் இனத்தை நிலைநாட்டி விட்டார்கள்.

புத்தாண்டு சித்திரையா? தையா? வள்ளுவர் கிறிஸ்தவரா? தமிழரா? முதல் நாகரீக கோமாளிகள் யார்? மூத்தக்குடிகள் யார்? என்கிற உதவாக்கரை பேச்சுக்களை பேசி மட்டுமே இறுமாப்பில் அலைகிற இந்த கூட்டத்தை வைத்து, கோமாளி கூட்டமா? ஏமாளிக் கூட்டமா? என்கிற பட்டிமன்றமே நடத்தலாம்.

“உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகள படுத்துறாங்க” என்கிற வடிவேலுவின் காமெடி, யாருக்கு பொருந்துமோ இல்லையோ, நம் காலத்தில் “மெரினா புரூடா” சாகசம் செய்த இந்த ஜல்லிக் கட்டு நோஞ்சான்களுக்கு, அச்சு அசலாக பொருந்தும்.