அநியாய மரணங்களும், கடவுளும்
ஜனவரி 17, 2022
பாதிரியாராகி ஆறே மாதங்கள் ஆனவர், புத்தாண்டு வழிபாடு நிகழ்த்திவிட்டு திரும்புகிற வேலையில், விழுப்புரம் சாலை விபத்தில் பலி. புதுக்கோட்டையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பட்டு சாவு. இவர்களின் அகால இறப்பிற்கு யார் காரணம்?
ஆன்மீக அரசியல்
குற்ற உணர்வு, அநியாய சாவை, கொத்தடிமை, வாக்காளன்
கடவுளுக்காக தன் வாழ்வை கொடுத்தவரை கடவுள் காப்பாற்ற கூடாதா? கடவுளுக்காக வேலை செய்ய போயிருக்க வில்லை என்றால், இந்த கோரம் நடக்காமல் போயிருக்குமே? மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாரே? கடவுள் ஏன் இவரை கைவிட்டார்?
இன்னும் வாழ வேண்டிய வயதே வராத அந்த குழந்தையின் உயிரைப் பிடுங்க, அந்த கடவுளுக்கு எப்படி மனம் வந்தது? அந்த பெற்றோரின் மனம் எவ்வளவு பாடுபடும்? கடவுள் எப்படியாவது தடுத்திருக்க கூடாதா? அந்த கடவுளுக்கு கண் இல்லையா?
தவறுகள் அத்தனையையும் நம்மிடம் வைத்துக் கொண்டு, குற்ற உணர்வே இல்லாமல் நடப்பது அத்தனைக்கும் கடவுளைக் கைநீட்டிப் பேசுகிற மூடநம்பிக்கை கடவுள் பக்தியை, தமிழக பகுத்தறிவு கொத்தடிமைகள் என்றைக்கு தான் தூக்கி எறிவார்களோ? தெரியவில்லை.
சிறு துரும்பையும் நகர்த்த முயலாமல், ஒட்டுமொத்த பாறாங்கல் பாரத்தையும் கடவுள் ஒருவர் மீதே தூக்கிப் போடுகிற இந்த முரட்டு பக்தாள்களின் ஆன்மீகத்தை, எப்படித்தான் மாற்றி தொலைப்பது என்பதும் புரியவில்லை.
எதற்கும் கடவுள் மீது பழிபோடவும், அத்தனைக்கும் ஆன்மீக சாயம் பூசவும் இங்குள்ள ஆன்மீக வியாபாரிகள் நன்றாகவே பழகி இருக்கிறார்கள். சாவு என்பது புரிந்து கொள்ள முடியாத மறைபொருள் என்கிற போலி ஆன்மீகத்தை போதித்து, சாமான்யர்களை அழகாக ஏமாற்றி வைத்து இருக்கிறார்கள்.
விபத்திற்கு காரணம், அடிபட்டவரோ, விபத்தை ஏற்படுத்தியவரோ, யாருடைய தவறாக இருந்தாலும், அடிபட்டு ஒருவர் உயிருக்குப் போராடுகிற போது, போலீசுக்கும், விசாரணைக்கும் பயந்து, நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு காப்பாற்றாமல் இழந்த உயிர்கள் எத்தனை? இதற்கு கடவுளா காரணம்?
குடியினால் எத்தனை உயிர்கள் விபத்தில் அப்பாவி தனமாக போயிருக்கிறது? மதுவிலக்கு சாத்தியமான குஜராத் இல்லையா? அப்படி என்றால், செத்த உயிர்களுக்கு, இந்த திராவிட சாராய வியாபாரிகள் தானே பொறுப்பு? சாராயத்தை விற்பதை நிறுத்தி இருந்தால், எத்தனை உயிர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்கும்?
ஆகவே, நடக்கிற அநியாய விபத்துக்களுக்கு, சாராயத்தை விற்கிற இவர்களுக்கு வாக்களிக்க சொன்ன தமிழக ஆயர் பேரவையும் பொறுப்பே! இந்த பாதிரியாரின் இரத்தப் பழியில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று ஆயர் பேரவை கை கழுவி தப்பிக்க முடியாது.
விபத்து நடப்பது தவிர்க்க முடியாது, சரி. ஆனால், அநியாய விபத்து? நோ்மையான அரசு அமைந்து இருந்தால், அநியாய விபத்துக்களும், அநியாய மரணங்களும் தவிர்க்கப்பட்டு இருக்குமே? இறந்த பிறகு அவர்களுக்கு நீதியாவது கிடைத்திருக்குமே? மற்றவர்களுக்கு சிறு பயமாவது வந்திருக்குமே?
அரசியல்வாதி என்றாலும், குடிமகன் என்றாலும் விபத்து ஏற்படுத்தினால் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற நியதி இங்கு இருக்கிறது என்று மனசாட்சி உள்ளவர்கள் சொல்வார்களா? டிராபிக்கில் லஞ்சம் நடப்பதில்லை என்று வக்காலத்து வாங்க யாராவது வர முடியுமா? அதனால் ஏற்படுகிற கோர விளைவுகளை யோசித்து பார்த்தது உண்டா?
உண்மையை அறத்தின் பால் நின்று விமர்சிப்பதை விட, தவறை தவறு என்று சொல்கிற திராணி இருக்கிறவனை விட, இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்று முட்டுக் கொடுத்து, நடக்கிற அனைத்திற்கும் சப்பைக்கட்டு கட்டுகிற யோக்கியர்களே, தமிழகத்தில் அதிகம்.
எத்தனை விபத்துக்களை ஏற்படுத்தினாலும், பணம் கொடுத்தால் தப்பி விடலாம். சுட்டது போலீசாக இருந்தால், அரசே நின்று பாதுகாத்துக் கொள்ளும், பணம் கொடுத்தால் மக்கள் மௌனி ஆவார்கள் என்கிற மனநிலை இருந்தால், இது போன்ற சாவுகள் இன்னும் பல தொடரத்தானே செய்யும்?
எத்தனை விபத்துகள், கொலைகள் வெளியில் வராமலேயே அதிகாரத்தால் மூடி மறைக்கப் படுகின்றன. திட்டமிட்டு எத்தனை என்கவுண்டர்கள்? என்கவுண்டர் செய்கிறவர், இங்கே இருக்கிற அரசியல்வாதியின் பிள்ளை கேடுகெட்டவன் என்றால் சுட்டுத்தள்ளுவாரா? இருக்கிறவனுக்கு ஒரு நீதி. இல்லாதவனுக்கு ஒரு நீதி. இது தான் நோ்மையா? இதற்கும் கடவுள் காரணமா?
நடந்த இறப்புக்களுக்கு கடவுள் காரணம் அல்ல. எந்த இறப்பையும் தடுக்க முடிகிறவரும் கடவுள் அல்ல. சாவு கடவுளின் திட்டமுமல்ல. அது ஒருபோதும் மறை பொருளும் அல்ல. தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில், அநியாய சாவைக் கொண்டு வருவது ஆட்சியாளனின் அயோக்கியத்தனம், நிர்வகிக்க தெரியாத தத்தித்தனம், ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக ஆயர் பேரவையின் கோமாளித்தனம். அவ்வளவே!
நடக்கிற, நடத்துகிற அத்தனை அநியாய சாவுகளுக்கும், நடந்தது நடந்து விட்டது என்று சொல்லி, பணம் கொடுத்தால் போதும், மக்களின் வாயை மூடிவிடலாம் என்கிற ஆளும் திராவிட திருடர்களின் 60 வருட அரசியல் கணக்கு, தமிழக ஆயர்களுக்கு அருவருப்பாக படவில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், இன்னும் நஷ்ட தொகையை அதிகமாக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் வழக்கமாக பாடும் பல்லவியும், வாக்காளனுக்கு அசிங்கமாக தெரியவில்லை. ஆனால் கடவுள் அநியாயமானவராக தெரிகிறார்.
விபத்தில் எவரையும் கடவுள் காப்பாற்ற முடியாது என்பதற்கு, கடவுளை தேடி சென்று பாத யாத்திரையில் பலியான அத்தனை பக்தர்களும் சாட்சிகள், சுனாமியில் வேளாங்கண்ணியில் உயிரிழந்த விசுவாசிகள் சாட்சிகள், வாகன விபத்துக்களில் பலியான அத்தனை சாமியார்களும், ஆயர்களும் சாட்சிகள். கடவுள் எந்த விபத்தையும் தடுக்க இயலாதவரே! அதற்கு பொறுப்பும் இல்லாதவரே.
எனவே, இந்த ஐந்து ஆண்டில் நடக்கிற அநியாய மரணங்களுக்கு, முத்தமிழர் வாரிசின் கேடு கெட்ட ஆட்சியும், ஆள்வதற்கு தகுதியில்லாத இவரை, ஆட்சிக்கட்டிலில் ஏற்ற ஆதரவளித்த ஆயர் பேரவையும், இவருக்கு வாக்களித்த ஒவ்வொரு திராவிட கொத்தடிமை வாக்காளனும் தான் காரணம். கடவுள் அல்ல.
ஒருமுறை அறியாமையில் தவறு செய்யலாம். ஆனால், இந்த கும்பல், விஞ்ஞான திருடர்கள், நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிப் பேசும் பச்சோந்திகள் என்பதை, வீடியோ பதிவுகளாக, ஆதாரங்களாக பச்சையாக வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் வாக்களித்தவர், ஆதரவுக்கரம் நீட்டியவர், பழி பாவத்தைச் செய்த குற்றவாளியே!
நல்லவர்களே இல்லை என்று விதாண்டாவாதம் செய்வது இருக்கட்டும், மாற்று அரசியலை யாருமே பேசவில்லையா? நோ்மையாளராக வாழ்ந்தவர் யாருமே தோ்தலில் போட்டியிட வில்லையா? முயற்சித்துப் பார்ப்பது தானே மக்களாட்சி? அது தானே கடவுள் மீதான நம்பிக்கை?
சர்வாதிகாரியின் ஆட்சியில், கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று புலம்பி அழலாம். மன்னராட்சியில் ஆண்டவா! நீ இருக்கிறாயா? என்று கண்ணீர் வடிக்கலாம். ஆனால் மக்களாட்சியில் இந்த பழிபாவத்தை, இந்த ஐந்து ஆண்டுகளும், திராவிடத்துக்கு ஓட்டு வழங்கிய ஒவ்வொரு வாக்காளனும், ஆதரவு நீட்டிய ஆயர் பேரவையும் சுமந்தே ஆக வேண்டும்.
சட்டப்படி இவர்கள் குற்றவாளி அல்ல, ஆனால் தர்மப்படி, இங்கே இந்த ஐந்து ஆண்டில் நடக்கிற அநியாய விபத்து, லாக்கப் டெத், துப்பாக்கிச்சூடுகளில் பலியாகும் அனைத்து ஆன்மாக்களுக்கும், இவர்கள் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும். பாவ பரிகார பூஜைகள் எதுவும் செல்லுபடி ஆகாது.