கடவுள் செஞ்ச தப்பு

கடவுள் செஞ்ச தப்பு

கடவுள் செஞ்ச தப்பு

அக்டோபர் 15, 2021

கடவுள் நம்பிக்கை

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு கடவுளுக்கே தெரியாதுன்னா, அவரு எப்படி "கடவுளா" இருக்க முடியும்? இதானே இப்போதைக்கு உங்க கேள்வி. அதே கேள்விய மாத்திக் கேட்டுப் பாப்போமே?

அடுத்த நிமிஷம், இது தான் நடக்கும்னு தெரிஞ்சிருந்தும், ஒன்னுமே செய்யாம, அத தடுக்காம, வேடிக்கைப் பாத்தா, அவர எப்படி கடவுளா ஏத்துக்க முடியும்? கரெக்டான வாதம் தானே?

இது கூட தெரியாதவரையா, நாம "கடவுளே என்னய காப்பாத்து"ன்னு இத்தனை தலைமுறையா வேண்டிகிட்டு இருக்கோம்?ன்னு, உங்களுக்கு இப்ப சந்தேகம் வரும்.

இப்ப, இந்த இடத்துல கடவுள இன்னும் கொஞ்சம் “மாத்திப் பாக்க” சொல்றேன்: கடவுளுக்கு இப்படித்தான் நடக்கும்னு உறுதியா தெரியாது, ஆனா, இப்படி நடக்க வாய்ப்பிருக்குன்னு, அவரால கணிக்க முடியும்....

ஜோசியர்னா யாருங்க? எதிர்காலத்தில் நடக்கப்போறதை முன்கூட்டியே கணிக்கத் தெரிந்தவர். சரியா? அப்ப உண்மையிலேயே, ஜோசியம் நிஜம் தானா? இருக்கலாம்!

ஆனா, நம்ம காலத்துல நம்ம கிட்ட இதுவர யாருமே நம்புற மாதிரி ஜோசியமே சொன்னதில்லங்கிறது நிஜம்ங்க!

நாம வாழ்ற காலத்துல இருக்கிற ஜோசியக்காரங்க, பாஸ்டருங்க, எல்லாரும் கூட்டமா ஒண்ணு சோ்ந்து, 2020 ம் வருசம் எப்படி இருக்கும்னு, கோரசா கணிச்சாங்க. எப்படி தெரியுமா? "2020 ம் வருஷம் சுபிட்சமா இருக்கும்". கொரோனாவுல எப்படி "சுபிட்சமா" இருக்கோம்னு வாழ்ந்துட்டு தானங்க இருக்கோம்?. இத விட இவங்க "போலிங்க"ங்கிறதுக்கு நமக்கு என்னங்க வேணும் ஆதாரம்?.

ஆனா, நடக்கிற நிகழ்வுகள வச்சு எதிர்காலத்துல நடக்கப்போற நிகழ்வுகள கச்சிதமா கணிச்ச ஜோசியக்காரங்க, நம்ம பாரத மண்ணுல வாழ்ந்திருக்காங்க. இப்ப யாருமே இல்லங்கிறது நாம கண்கூடா பாக்கிறோம்.

கடவுளாள மட்டும் எப்படி சரியா கணிக்க முடியும்? ஆனா, “நடக்கப் போறத”, கடவுளாளயே கூட, ஏன் "உறுதியா" சொல்ல முடியாது? இதானே உங்க அடுத்த கேள்வி. (பாத்தீங்களா! நான் எப்படி ஒங்க கேள்விய, கரெக்டா கணிச்சேன்னு!!!)

இந்த இடத்துல தான், கடவுளுடைய பலமும் இருக்கு. கடவுள் செஞ்ச ஒரு பெரிய தப்பும் இருக்கு. என்னது, கடவுள் தப்பு செஞ்சாரா?

ஆமாங்க, கடவுள் செய்யக்கூடாத ஒரு பெரிய ‘தப்ப’ செஞ்சிட்டாருங்க.

ஒடனே நீங்க, "மனுசன படைச்சது தான், கடவுள் செஞ்ச பெரிய தப்புன்னு", வழக்கம்போல “வியாக்கியானம்” பேச ஆரம்பிச்சிருப்பீங்களே? அது இல்லீங்க!

கடவுள் செஞ்ச தப்பு என்னான்னு தெரியுமாங்க? ஒலகத்துல எல்லாத்தையும் படைச்சிட்டு, அதுங்களுக்கு எல்லாம், "நீ இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் இயங்கனும்னு விதிய போட்டுட்டு (Programmed), நம்ம மனுசனுக்கு மட்டும், எந்த ரூல்ஸ்-சும் போடாம, “இவிங்க தான் என் வாரிசுங்கன்னு” கொஞ்சியெடுத்து, கொடுத்திருக்கக் கூடாத ‘சுதந்திரத்த’ கொடுத்தது தான், அவரு செஞ்ச ‘பெரிய’ தப்பு. (Programmed + Freedom).

ஆனா...., தன்னோட அன்புல பிறந்த இந்த மனுசனுங்க ‘இப்படி’ மாறுவாங்கன்னு, அந்த கடவுள், கனவுல கூடநினைச்சிருக்க மாட்டாரு.... அந்த ஒரு இடத்துல தாங்க, கடவுள் சறுக்கிட்டாரு....

சுதந்திரத்த கொடுத்த பிறகு என்னதாங்க செய்ய முடியும் ? « வரம் கொடுத்தா, திருப்பிப் பெற முடியாதே ? » கொடுத்தது கொடுத்தது தானங்க!

கொடுத்த வரத்த புடுங்குறது தர்மம் இல்லயே? அதுக்காக, அந்த வரத்த வச்சி, மத்தவங்கள ஆட்டிப்படைக்கனும்னு நினைச்சா, பாத்துட்டு சும்மாவும் இருக்க முடியாதே? மெள்ளவும் முடியாம, சொல்லவும் முடியாம – ங்கிற, உணர்வு எப்போவாது அனுபவிச்சிருக்கீங்களா? அது தாங்க, கடவுளோடு உணர்வும்.

மரம் இருந்தா தான், மழை பெய்யுங்கிறது, அவர் வகுத்த இயற்கை விதிங்க!!! இயற்கை விதிங்கள கடவுளே எப்பவும் மீற மாட்டாருங்க! மீற முடியாதுங்க! மீறுனா அவரு கடவுள் கெடயாதுங்க!

நாம எல்லா அட்டூழியத்தையும் பண்ணுவோம். ஆனா கடவுள் நமக்கு மேஜிக் செஞ்சு, சிலேட்டில அழிச்சி எழுதுற மாதிரி, எப்பல்லாம் நாம தப்பு செய்றோமோ, அப்பல்லாம் அழிச்சி, அழிச்சி இந்த உலகத்த மாத்தி எழுதுனும்னு நெனக்கிறது, பகுத்தறிவும் கெடயாது, சரியான ஆன்மீகமும் கெடயாதுங்க.

எல்லாத்தயும் "மேல இருக்கிறவன் பாத்துப்பான், மேல இருக்கிறவன் பாத்துப்பான்னா", கீழ இருக்கிற நீங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? ன்னு, கடவுள் மனுசங்கள கேட்டா, நம்மால பதில் சொல்ல முடியுமா?

கடவுள் இல்லன்னு நெனைக்கிற அந்த தைரியம் தாங்க, மனுசன தப்புக்கு மேல தப்ப, மனசாட்சியே இல்லாம பண்ணச் செய்யுது...