நீட்டும் புரட்டும்

நீட்டும் புரட்டும்

நீட்டும் புரட்டும்

ஜனவரி 23, 2022

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற நீட் தோ்வு தேவையானதா? இது சமூக நீதிக்கு எதிரானதா? ஏழை, எளியவரின் மருத்துவ கனவை இது சிதைக்கிறதா? தமிழக மக்களுக்கு இழைக்கப் படும் அநீதியா?

நாட்டு நடப்புகள்

நீட் தோ்வு, மருத்துவத்தை, மருத்துவர், டாக்டர்,

நீட் தோ்வு வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதம் ஒரு புறத்தில் இருக்கட்டும். தமிழகத்தில் எந்த மாணவன் சேவை செய்வதற்காக மருத்துவத்தை தோ்வு செய்கிறான் என்று சொல்ல முடியுமா? மருத்துவராகி மாடி வீடு கட்டலாம், சொந்த ஹாஸ்பிட்டல் கட்டி கல்லா கட்டலாம் என்பது தானே அத்தனை பேரின் கனவாக இருக்கிறது?

இலவச மருத்துவம் செய்ய வேண்டும், நோயில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்கிற ஒரு மருத்துவர் தமிழகத்தில் உண்டா? அரசு மருத்துவராக வேலை கிடைத்தாலும் தனியாக கிளினீக் வைத்து சம்பாதிக்காத டாக்டர் நம்மிடத்தில் உண்டா?

காய்ச்சலுக்கு போடும் சாதாரண ஊசிக்காக வாங்கும் பணம் எவ்வளவு? கொரோனா நேரத்தில் கூட மருந்தே இல்லாமல் வெறும் குளுக்கோஸ் ஏற்ற இலட்ச ரூபாய் கேட்ட கொடூர உள்ளம் கொண்ட மனைகளை நாம் பார்க்க வில்லையா?

மருத்துவமே மிகச் சிறந்த பிசினஸ் என்கிற உண்மையை மறைக்க முடியுமா? நோயாளியை வாடிக்கையாளராக மாற்ற மெனக்கெடாத மருத்துவ நிறுவனம் இங்கு இருக்கிறதா? சேவையாக எப்போதோ தொடங்கிய கிறிஸ்தவ மருத்துவ நிறுவனத்தில் இப்போது பில் கட்டிய அனுபவம் உண்டா?

ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் செய்வது கோடியில் ஒருவர் தானே? அவர் ஒருவருக்காக நாம் மருத்துவர் தினம் கொண்டாடி மகிழ்வது கேலிக் கூத்தாக தெரிய வில்லையா? மற்றவர்கள் தொழிலாக தானே பார்க்கிறார்கள்?

மருத்துவத்தை தொழிலாக செய்வதற்கு படிக்க ஏன் இந்த தேவை இல்லாத போராட்டம்? இதில் நமக்கு உரிமை இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன? பணம் கொடுத்தால் எங்கேயும் வைத்தியம் செய்ய போகிறார்கள். இதில் வட நாட்டவர், தென் நாட்டவர் என்கிற கேவலமான அரசியல் எதற்கு?

வெளிநாட்டவர் மட்டுமே மருத்துவராக பணிபுரிந்த போது மொழி புரியாத அவர்களிடம் மக்கள் செல்ல வில்லையா? அவர்கள் என்ன தவறான மருந்தையா எழுதி கொடுத்து விட்டார்கள்? இப்போது வட நாட்டு அதிகாரிகள் எவரும் இங்கு வேலை பார்க்க வில்லையா?

இங்குள்ளவர் படித்து டாக்டர் பட்டம் வாங்கினால் மட்டும் இலவசமாகவா வைத்தியம் செய்ய போகிறார்? இல்லை, சலுகை விலை கொடுத்து விட போகிறாரா? வாய்ப்பு கிடைத்தால் இவர்கள் வெளி நாடு செல்ல மாட்டார்களா? பணம் அதிகமாக கிடைத்தால் வெளி மாநிலம் சென்று வைத்தியம் செய்ய மாட்டார்களா?

ஏழை ஒருவர் மருத்துவரானால் மனமிரங்கி இலவச வைத்தியம் செய்ய போகிறாரா என்ன? கார் வாங்க வேண்டும், பங்களா கட்ட வேண்டும் என்பது தானே இலட்சியமாக இருக்க போகிறது? அதற்கு தானே இலட்சங்கள் தேவையாக இருக்கிறது? இதற்கு இவ்வளவு அளப்பரையா?

தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் தவறை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் வைத்து இருப்பான். எல்லாம் பகுத்தறிவு கற்றுக் கொடுத்த தெளிவு. இத்தனை இலட்சம் கடன் எடுத்து படித்து நான் டாக்டராகி இருக்கிறேன். இந்த கடனை அடைக்க வேண்டாமா? என்று ஒரு மருத்துவர் நியாயம் கேட்பார்.

ஓட்டுக்காக பணம் வாங்கும் மக்கள், யார் வந்தால் என்ன? மாற்றம் வரவா போகிறது? என்று நியாயம் பேசுவர். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி, தோ்தலில் வென்று ஊழல் செய்யும் மந்திரி என்று அத்தனை பேருமே நியாயப் படுத்த காரணம் கோடி வைத்து இருப்பார்கள்.

இங்கு எவரும் எப்போதும் நியாயம் பேசுவது கிடையாது. எதையும் நியாயப் படுத்தி பேசியே பழகி விட்டார்கள். இவர்கள் திருந்த போவதும் கிடையாது. சுட்டும், பட்டும் திருந்தாத மக்கள் இனி மேலா திருந்த போகிறார்கள்?

உண்மையில் நீட் தோ்வு போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம் பெற செய்யும் ஏமாற்று அரசியலே. அமைச்சர்கள் பல மருத்துவ கல்லூரி கட்டி லாபம் பார்க்கலாம் தானே? இதற்கு ஆதரவு பேசும் கூத்தாடிகளும் சமூக போராளி என்கிற அவதாரம் எடுத்து தங்கள் படம் ஓட ஓசி விளம்பரம் தேடி கொள்கிறார்கள்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வராமல் எந்த களேபர காட்சியும் மாற போவது இல்லை. போலீசின் மிருகத்தனமோ, லாக்கப் டெத்தோ, துப்பாக்கிச் சூடுகளோ, பேனர் சாவுகளோ, பொய் வழக்கோ, குண்டாசோ, என்கௌண்டரோ, ஊழலோ நீண்டு கொண்டே தான் போக போகிறது.

வருகிற ஐந்து ஆண்டுகள் மக்கள் எவ்வளவு தான் கத்தினாலும், கதறினாலும், கூப்பாடு போட்டாலும் எதுவும் மாறப் போவது கிடையாது. ஐந்து ஆண்டுகள் கழித்து ஆட்சி மாற்றம் நடந்தாலும் மற்றொரு பிரதான திராவிட அடிமை ஆட்சியிலும் இதே காட்சிகளே தொடர போகிறது.

ஒவ்வொரு கொடூர நிகழ்வு நடக்கிற போதும் பொங்கி எழுகிற மக்கள் கூட்டம், தோ்தல் நேரத்தில் மட்டும் பெட்டி பாம்பாக அடங்கி அம்னீசியா நோய் வந்து, திராவிட கொத்தடிமை என்பதை மறக்காது நிரூபித்து விடுவார்கள். அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட மட்டுமே முடியும்.

இப்படி பட்ட கள சூழலில் அரசியல் அறிவோ, திருந்த துளியும் வாய்ப்போ இல்லாத கொத்தடிமை கூடாரமான தமிழகத்தில், மாற்றம் நடக்க விடவே கூடாது என்று, திருடர் கூட்டத்துக்கு வரிந்து கட்டி பக்க வாத்தியம் வாசிக்கும் போலி ஆன்மீக குருமார்களை விரட்டி அடித்து, விரைவில் மக்களின் துயருக்கு முற்றுப் புள்ளி வைப்பார் என்பதே நாங்கள் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிற கடவுள் நம்பிக்கை.