அறிக்கையும் கேள்விகளும்
ஜனவரி 25, 2022
தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தோலிக்க பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த மாணவியின் மரணம் தொடர்பான விளக்க அறிக்கை ஒன்று கத்தோலிக்க ஆயர் பெயரில் வெளி வந்திருக்கிறது. அதில் எழும் கேள்விகள் பல.
ஆன்மீக அரசியல்
தமிழக ஆயர், பொது நிலையினர், மதவெறி, திராவிட மூடர், பலி ஆடுகளாக
இந்த அறிக்கை யாருக்கு? எந்த தெளிவும் இல்லை. அரசுக்கா? பொது மக்களுக்கா? ஊடகங்களுக்கா? கத்தோலிக்க மந்தைகளுக்கா? ஒட்டு மொத்த கிறிஸ்தவ மக்களுக்கா? புரியாத மறை பொருளாகவே முடிந்து போகிறது.
“அரசின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம்” என்று உறுதி கூறுவதிலிருந்து இவர் ஆதரவுக் கரம் நீட்டிய முத்தமிழ் அறிஞரின் வாரிசுக்கு எழுதியிருக்கலாம் என்று ஊகிப்போம். அதையும் நேரடியாக அவருக்கே அனுப்பாமல் அத்தனை பேரும் படிக்க பொதுவெளியில் வெளியிட்டு பரிதாபம் தேட வேண்டிய அவசியம் என்ன? இது தான் ஆன்மீக அரசியல் போலும்.
அறிக்கையை எழுதியவர் மதுரை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட ஆயர் என்பதை அவரது கையொப்பம் உறுதிப் படுத்துகிறது. அவர் தற்போதைய தமிழக ஆயர் பேரவையின் தலைவர் என்பது கீழே இணைப்பாக ஒப்புக்கு தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த அறிக்கை அவருடைய தனிப்பட்ட கடித முகவரியில் எழுதப் பட்டிருக்கிறது.
ஆக, தனி நபராகவே கடிதம் எழுதியிருக்கிறார் என்பதும், அந்த கடிதம் தமிழக ஆயர் பேரவை குழு சார்பில் எழுதப்பட வில்லை என்பதும் தெளிவு. ஆனால் கடிதத்தின் முதல் பகுதியின் அத்தனை வரிகளிலும் "வருந்துகிறோம், தெரிவித்துக் கொள்கிறோம், பாராட்டுகிறோம், மதிக்கிறோம், வரவேற்கிறோம்" என்று பொத்தாம் பொதுவாக ஒருமையில் அல்லாமல் பன்மையில் குறிப்பிடப் படுவதே நம்மை விமர்சனம் செய்ய தூண்டுகிறது.
இது தனிநபர் அறிக்கை என்றால் வார்த்தைகளில் எதற்கு இந்த பொது உடைமை? இலக்கணப் பிழை என்றால் கடந்து போகலாம், ஆனால் பொருளே பிழையாக அல்லவா இருக்கிறது. நீங்கள் கிறிஸ்தவர்களை பகடையாய் வைத்து ஆள்வதற்கு விசுவாசம் தொடர்பான அறிக்கை அல்ல இது, மாறாக தங்களின் அப்பட்டமான தந்திர அரசியல்.
தோ்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு? என்கிற முடிவு எடுக்கிற போதெல்லாம் கருத்து கேட்பு என்கிற கண்துடைப்பு நாடகத்தை ஒப்புக்கு நடத்துகிறீர்கள். கடைசியில் ஞானியராய் வலம் வரும் திராவிட கைக்கூலிகள் எழுதிக் கொடுக்கும் திராவிட ஆதரவு அறிக்கையை ஏற்க சர்வாதிகாரம் செய்கிறீர்கள். எதிர்க்கிற ஒரு சிலரையும் விடாது விசாரணை செய்து சித்ரவதை செய்கிறீர்கள்.
ஆனால் பிரச்சனை வருகிற போது மட்டும் ஒட்டு மொத்த கிறிஸ்த பொது நிலையினரை Sacrifice செய்யும் கேவலமான அரசியல் எதற்கு? இறைவாக்கினர் போல இப்போதும் தனி நபராக அதிகாரத்தோடு உங்கள் குரலில் ஓங்கி ஒலிக்கலாமே?
“மதவாத அரசியல் சக்திகள் பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார்கள்” என்று நீங்களே அடுத்தவருக்கு மத சாயம் பூசும் வெறுப்பு அரசியலை போதிப்பது ஏன்? ஒவ்வொரு தோ்தலிலும் மதவெறி கொண்டு மற்றவருக்கு மதச்சாயம் பூசினால் அவரும் தக்க நேரத்தில் உங்களுக்கு மதச்சாயம் பூசத்தானே செய்வார்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமலா தோ்தல் காலங்களில் திராவிடர்களுக்கு ஆதரவு வழங்கினீர்கள்?
நீங்கள் நடுநாயகம் என்றால் எதற்காக “மத சிறுபான்மையினர், மத பெரும்பான்மையினர்” என்கிற பிரித்தாளும் அரசியல் செய்கிறீர்கள்? உங்களை நம்பும் ஏமாளி கிறிஸ்தவர்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டி விட்டு, அவர்களை பலி ஆடுகளாக காவு கொடுக்க துணிவது தான் நீங்கள் கட்டி எழுப்ப முயலும் இறையாட்சி கனவா?
நடந்ததைப் பற்றிய அத்தனையும் நீங்கள் அறிந்திருந்தால் பத்திரிக்கை நிரூபர்களை அழைத்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் கொடுக்க துணியலாமே? உங்கள் ஆதாயத்துக்கு மக்களை சந்தியில் இழுத்து விட்டு அவர்கள் தலைகளை மட்டும் ஏன் காவு கொடுக்க ஆசைப் படுகிறீர்கள்? அவர்கள் பிற மத மக்களோடு நல்லுறவோடு வாழ்வது உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு பொறுக்க வில்லையா?
திராவிடத்துக்கு ஓட்டு போட சொன்னீர்கள், விருப்பம் இல்லை என்றாலும் பலர் உங்களுக்காக வாக்களித்தார்கள். மதுக் கடைகளுக்கு எதிராக போராடிய உங்கள் ஆசீ பெற்ற புண்ணியவான்கள் அர்த்த ராத்திரியில் அதிகாரம் வந்த உடன் மாறிய போது உங்களிடமிருந்து ஒரு எதிர்ப்பும் வரவில்லையே?
பொது முடக்க நேரத்தில் மக்களைப் பற்றி கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா? எப்படி மக்கள் சாப்பிடுவர் என்கிற எண்ணமாவது நீங்கள் நிம்மதியாக சாப்பிடும் நேரத்தில் வந்ததா? பொங்கல் கொண்டாடவே ரேசனில் பிச்சை எடுக்க நின்ற போதும், வெல்லத்தில் பல்லி இளித்த போதும் ஒரு வார்த்தை நியாயம் பேசினீர்களா?
லாக்கப் டெத் நடந்தது, வேடிக்கை பார்த்தீர்கள், சட்டக் கல்லூரி மாணவன் முகம் கிழிக்கப் பட்டது, நீங்கள் ஆதரவு வழங்கிய உங்கள் முத்தமிழ் அறிஞரின் வாரிசு தானே அந்த துறையின் பொறுப்பு? உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றித் திரியும் உங்களுக்கு சென்னை சென்று ஒரு புகாராக கொடுக்க கூட துணிவு இல்லையா? புனிதர் பட்டத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க மட்டும் வரிசை கட்டி நின்றீர்களே?
மக்கள் பசியால் பட்டினியால் நோயால் சாகிறபோதும், ஊழலும் நிர்வாக சீரழிவும் ஆட்சியில் தலையெடுக்கிற போதும் வாயை மூடி மௌனியாய் பரம சாதுக்களாய் கிடப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று என்றால் மட்டும் மக்களை இழுத்து போட்டு மகுடி வாசிப்பீர்கள், அவர்கள் படமெடுத்து உடனே ஆடி விட வேண்டும். இது தான் அவர்களை வழிநடத்தும் பணியா?
கொரோனா நோய் நேரத்தில் ஏதாவது அவசரத்திற்கு அழைத்தால் கூட மக்களே, குருக்களும் மனிதர்கள் தானே என்கிற சோக இசையை வாசித்து பரிதாபம் தேடி Don’t Disturb என்று கதவை சாத்தி விடுவீர்கள். அவர்கள் மட்டும் 24 மணி நேரமும் உங்களுக்கு சேவை செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் பணி புரிய வந்தீர்களா? அவர்களை பலி கடாவாக காவு கொடுக்க வந்தீர்களா?
பிஜேபி செய்வதை கேவலம் என்று சொல்லும் நீங்கள் திராவிட கட்சியினர் செய்யும் ஒன்றைக் கூட தட்டிக் கேட்க மறுக்கும் Diplomacy ரகசியம் என்னவோ? அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்லும் ஆன்மீகத்தை மட்டும் செய்து கொண்டிருந்தால் இப்படி பொத்தாம் பொதுவாக பரிதாபம் தேடி கெஞ்சி கூத்தாடும் கேவலம் எதற்கு?
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் ஆதரவுக் கரம் நீட்டும் திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றில் சோ்ந்து அரசியல் செய்யுங்கள். தயவு செய்து புனிதமான ஆன்மீகத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மக்களையும் காவு கொடுக்கும் அருவருப்பு அரசியலை இனியாவது செய்யாமல் இருங்கள்.
மாணவியின் மரணம் தொடர்பான மதுரை பேராயரின் அறிக்கை