நோட்டாவும் வேஸ்டாவும்

நோட்டாவும் வேஸ்டாவும்

நோட்டாவும் வேஸ்டாவும்

பிப்ரவரி 17, 2022

எதுக்கு ஓட்டு போடனும்? எலக்சன்ல நிக்குற எல்லாரும் அயோக்கியங்களா இருக்காங்க. இதுல யாருக்கு ஓட்டு போட்டு என்ன மாத்தம் வந்திர போகுது. பேசாம நோட்டாவுக்கு நம்ம ஓட்ட போட்டிரலாமே? அல்லது ஓட்டு போட போகாமலே இருந்திரலாமே? அல்லது சுயேட்சை யாருக்காவது போடலாமே?

நாட்டு நடப்புகள்

வாக்கு வங்கி, மக்களாட்சி, ஜனநாயகம், இயக்க அரசியல், தோ்தல் அரசியல்

ஒருபுறத்தில் பாமர வாக்காள பெருங்குடி மக்கள் ஒரே சின்னத்திற்கு ஓட்டு போட்டு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள் என்றால் மறுபுறத்தில் மெத்த படித்த மேதாவிகளின் இது போன்ற தோ்தல் நிலைப்பாடுகள் ஜனநாயகத்தையே கேலி கூத்து ஆக்குவதாக அமைகிறது.

நோட்டாவுக்கு ஓட்டு போட்டு என்ன புரட்சி செய்ய போகிறார்கள்? இதுவரை என்ன சாதித்து இருக்கிறார்கள்? மீண்டும் திருடர்கள் ஆட்சியை பிடிக்க வாக்குகளை வீணடித்து வாய்ப்பு ஏற்படுத்தி மட்டுமே தந்து இருக்கிறார்கள். சரி, ஒரு தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் நோட்டாவுக்கே போட்டு விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். என்ன மாற்றம் இங்கே வந்து விட போகிறது?

மிஞ்சி போனால் கொஞ்ச காலம் தள்ளி மீண்டும் அந்த தொகுதிக்கு மறு தோ்தல் நடக்க போகிறது. வரிப்பணம் வீணாக போகிறது. இப்படி செய்வது தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிற முட்டாள்தன செயல் என்பதை கடந்த கால தோ்தலில் பட்டும் திருத்திக் கொள்ள வில்லை என்றால் எப்படி சொல்லி உரைக்க வைப்பது?

மன்னராட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி – இதில் சிறந்த ஆட்சி எதுவென்ற கேள்வி எழுந்தால் எல்லாமே ஒரே முறை தான் என்பதே பதில். ஏனென்றால் அத்தனை ஆட்சி முறையிலும் தலைக்கு வருகிற அந்த ஒற்றை மனிதன் தான் ஆட்சி நடத்தும் அதிகாரமான அற்புத விளக்கை பெற்று கொள்கிறான்.

தோ்ந்தெடுக்கும் முறையில் மட்டுமே மக்களாட்சி மற்றவற்றில் இருந்து வேறுபடுகிறது. அதிகாரம் பெற்ற அந்த ஒற்றை மனிதனே ஆட்சியில் நடக்கிற அத்தனை காட்சிகளுக்கும் பொறுப்பாளன்.

இங்கே பொறுப்பில் உள்ள அத்தனை பேரும் நோ்மையாக இருப்பது என்பது நடக்க முடியாத காரியம். ஆனால் அந்த ஒற்றை மனிதன் நோ்மையாக இருந்தால் அந்த சிஸ்டம் முழுவதும் நோ்மையாக இயங்கும். நோ்மை இல்லாதவர்களும் பயத்தின் காரணமாக நோ்மையாக இருக்க நிர்பந்திக்க படுவார்கள். ஏனென்றால் தவறு நடந்தால் தட்டிக் கேட்டு தண்டனை கொடுக்கிற அதிகாரம் ஒற்றை மனிதனிடம் இருக்கிறதே?

மக்களாட்சியின் சிறப்பு என்பதே தோ்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருப்பது தான். மற்றவற்றில் அது கிடையாது. அதற்கு கால எல்லையும் நிர்ணயிக்க முடியாது. மற்ற ஆட்சி முறைகளில் தலைமையேற்று நடத்துகிறவர் சரியில்லை என்றால் அவருடைய முடிவு வரை காத்திருக்க வேண்டும். அடுத்து வருகிறவரும் நல்லவராக இருக்க உத்திரவாதம் கிடையாது.

மக்களாட்சியில் அப்படி இல்லை. அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. ஒருமுறை தவறானவரை தோ்ந்தெடுத்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரத்தை பிடுங்கி எறிந்து விட முடியும். இந்த பொன்னான வாய்ப்பை எப்படி இந்த அறிவாளிகளுக்கு நோட்டா என்கிற குப்பைத் தொட்டியில் போட்டு வீணடிக்க மனம் வருகிறது?

தோ்தல் அரசியலில் வாக்கை வீணடித்து வெட்டி விளம்பரம் தேடும் மற்றொரு வீணான கூட்டம் இயக்க அரசியல் பேசுகிற கூட்டம். தோ்தல் அரசியல் என்பதே மக்களை ஏமாற்றுகிற வேலை என்பது இவர்களது வாதம்.

இவர்கள் ஓட்டுப் போட செல்லவே மாட்டார்கள். புறக்கணிக்க அழைப்பு விடுப்பார்கள். புறக்கணிப்பு செய்து என்ன சாதிக்க முடியும்? சரி இதற்கு மாற்றாக எதை முன்மொழிகிறீர்கள்? என்று கேட்டால் பதில் வராது. ஒன்று யாருக்காவது வாக்களிக்க வேண்டும், இல்லையேல் மாற்றாக அவர்களே நிற்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இந்த வெட்டிப் பேச்சு பேசி ஏமாற்றும் வேலை எதற்கு? இந்த ஆட்சி முறையில் சுயேட்சைக்கு ஓட்டு போடுவதும் ஓட்டை வீணடிக்கிற செயலே.

மக்களாட்சி முறை என்பது அண்ணல் அம்பேத்கார் பார்த்து பார்த்து உருவாக்கிய எல்லா வசதிகளையும் கொண்ட அற்புத வாகனம். இந்த வாகனத்தின் தலைவரே ஒரு முதல்வர். அவருக்கு வாகனம் ஓட்ட, ஆலோசனை சொல்ல, ஏவலுக்கு காத்திருக்கிற அறிவுசார் சமூகம் கூடவே இருக்கிறது. அத்தனை பாதுகாப்பும் அவருக்கு உறுதி செய்யப்படுகிறது. வாகனத்தின் அதிகாரம் அவரது கையில். இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு முதல்வருக்கு?

உண்மையில் முதல்வர் பதவி என்பது நோகாமல் நொங்கு தின்கிற பதவி மட்டுமே. வாயை மூடி அமைதியாக இருந்தாலே அந்த கார் செல்ல வேண்டிய பயண வழியில் அருமையாக சென்று கொண்டிருக்கும். இந்த வேலையை கூட 50 ஆண்டுகளாக அதிகாரம் செய்து கொண்டிருக்கும் கூடாரத்தால் உருப்படியாக செய்ய முடியவில்லையே?

தோ்தல் அரசியலில் முதல்வர் வேட்பாளரே வாக்கை யாருக்கு போட வேண்டும் என்பதை தீர்மானிக்கிற காரணி. நோ்மை என்கிற ஒற்றை அளவுகோலே அவரை வாக்களிக்க தேவைப்படும் தகுதி. அறிவு, திறமை, ஆளுமை எதுவுமே தேவையில்லை. இந்த ஒருவரை தோ்ந்தெடுப்பதை கூட இவர்களால் செய்ய முடியாதா? இவர்கள் விரும்புகிறபடி யாருமில்லை என்றால், பழையவரை நம்பவில்லை என்றால், புதியவர் ஒருவருக்கு வாக்களிக்க முயற்சி செய்யலாமே?

இந்த இயக்க வியாதிகள் வீண் புரட்சி பேசுவார்கள், மேடை ஏறி முழக்கம் இடுவார்கள். பாமர மக்களை போராட வைத்து ஒரே இரவில் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆகி விடுவார்கள். போராடி தோற்றுப் போன பிறகு இல்லாத பொல்லாத பல வழங்குகளை சாமான்யர்கள் மேல் கட்டி விட்டு கட்டு மரம் ஏறி கரை ஒதுங்கி விடுவார்கள். கூடன்குளம் அணு உலை போராளிகளை பார்த்த பின்புமா இவர்களை பின்பற்றுகிறவர்களுக்கு புத்தி வரவில்லை?

உண்மையில் இவர்கள் அத்தனை பேரும் இல்லாத ஊருக்கு வழி சொல்கிற பைத்தியக்கார கூட்டங்கள். வாக்கு வங்கி அரசியல் எப்படி மக்களாட்சி முறை தோ்தலில் சாபக்கேடோ, அதே போல இவர்களும் ஜனநாயகத்தை நாசகமாக்கி செல்லாக்காசாக ஆக்குகிற மற்றொரு உருப்படி இல்லாத வகையறாக்கள்.