போர் அரசியல்

போர் அரசியல்

போர் அரசியல்

பிப்ரவரி 27, 2022

போர் காட்டு மிராண்டித்தனம். பேச்சு வார்த்தையே தீர்வுக்கான வழி என்று ரஸ்யாவை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் கொட்டுகிற பொதுப் பார்வை சரி தானா? கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? அநியாயமாக சாகிற இந்த மக்களைக் காப்பாற்ற வர மாட்டாயா? என்கிற கேள்வி நியாயம் தானா?

உலக நிகழ்வுகள்

போர், நேட்டோ, உக்ரைன், ரஸ்யா, ஐரோப்பிய நாடு

போரை நிறுத்துங்கள் என்று தலைவர்கள் கூவுகிறார்கள். இன்றைக்கு போர் நடக்கவில்லை என்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் உக்ரைனில் அத்தனை மேற்கத்திய நாடுகளும், நேட்டோ படைகளும் தங்கள் ஆதிக்கத்தை நிறுவும். கம்யூனிசம் உலகத்தின் எதிரி என்று போப்பாண்டவர் அறிக்கை விடுவார். போர் மூளும். இன்னும் பல மடங்கு உயிர்கள் பலியாகும். அது நடப்பதை நியாயம் பேசுகிற அத்தனை பேரும் விரும்புகிறார்களா?

உண்மையில் நியாயம் பேச எந்த நாடும் யோக்கியவானும் கிடையாது. ஆதரித்துப் பேச இரண்டில் ஒருவரோ வேடிக்கை பார்க்கும் அத்தனை பேருமோ புனிதர்களும் கிடையாது.

இலங்கையில் புகுந்து இந்தியாவை சின்னா பின்னமாக்க தருணம் எதிர்பார்க்கும் சீனாவைப் பார்த்துமா உலக அரசியல் புரியவில்லை? ஐரோப்பியராக ஒன்றுபடுவோம், நம் வலிமையைக் காட்டுவோம் என்கிற நாசிச சிந்தனையை மறைவாக திணித்து மெல்ல மெல்ல வளர்ந்து வரும் யூனியனைப் பார்த்துமா அறிவு வளரவில்லை? எங்கே எவன் கிடைப்பான், எப்படி அவனை சுரண்டித் தின்னலாம் என்று வெறிபிடித்து அலையும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் செய்யும் உலக அரசியலைப் பட்டுமா பாடம் படிக்கவில்லை?

போர் மனித குலத்தையே அழிக்கும் நாசக்கார செயல் என்று இன்று ஒழுக்க பாடம் நடத்தும் மேற்கத்திய தலைவர்களுக்கு இரண்டு உலகப் போர்களிலும், ஈராக், ஆப்கானிஸ்தான் போரிலும் ஈடுபட்ட போது இது உரைக்க வில்லையா? இவர்கள் போர் செய்தால் அது நியாயம், தர்மம், தவிர்க்க முடியாதது. ஆனால் அடுத்தவன் போர் செய்தால் நமக்கு Ethics போதிப்பார்களா?

இன்றைக்கு இந்தியா தலையிட வேண்டும் என்று கண்ணீர் வடிக்கிறார் உக்ரைன் தூதர். ஆனால் சீனா, பாகிஸ்தான், இலங்கை தொடர்பான அத்தனை பிரச்சனைகளிலும் இந்தியாவிற்கு எதிராக ஐநாவில் தொடர்ந்து வன்மத்தோடு வாக்களித்து வருவது இந்த உக்ரைன். நமக்கு தொடர் ஆதரவை ஐரோப்பிய நாடுகளை எதிர்த்து வழங்குவது ரஸ்யா. இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்?

உக்ரைன் தூதரின் கோரிக்கையை இந்தியா தட்டிக் கழிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. ஆனாலும் பெருந்தன்மையோடு அந்த நாட்டிற்காக ரஸ்யாவிடம் பேசுவதற்கு முன்வருகிறது. இது தான் இந்த பாரத மண்ணின் பெருமை. நூற்றாண்டு காலமும் மாறாத நம் மண்ணின் பாரம்பரியம். ஐரோப்பிய தலைகளைப் போல அணி திரட்டிக் கொண்டு அடுத்தவரைச் சுரண்டி தின்ன ஆசைப்படாத நல்லுள்ளம்.

சாதி, மதம், இனம், நிறம், எல்லை கடந்து சாதாரண மக்கள் நல்லவர்களே. வன்மம் இல்லாதவர்களே. அப்பாவிகளே. அதனாலேயே தலைவர்களின் அதிகார வெறி, செருக்கு, தற்பெருமைக்கு தொடர்ந்து பலியாகிறார்கள். வியாபார ஊடகங்களின் சூட்சுமத்திற்கு இரையாகிறார்கள்.

அடங்கா தனிநபர் அதிகார வெறி ஆசைக்காக ஒட்டு மொத்த உலக நாட்டு மக்களையும் அடகு வைக்கிற கீழ்த்தரமான அரசியல் உலகம் தோன்றியது முதலே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் வடிவம் தான் வேறு வேறு.

நிலைப்பாடு என்பது தனிநபர் சுதந்திரம். ஆனால் ஒரு நிலைப்பாடு எடுக்கிறபோது அதன் கடந்த கால வரலாறு, எதிர்கால கணிப்பு, நடப்பு நிகழ்வுகள், உலக அரசியல் அத்தனையும் பற்றிய குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா? ஒருவன் பலவீனனாக இருந்தால் அவன் புனிதனா? பலமுள்ளவன் தான் குற்றவாளியா? இது என்ன அற்பத்தனமான பொதுவுடைமைச் சிந்தனை?

இங்கு எது நியாயம்? என்று எவருமே பேசுவதில்லை. நியாயப் படுத்தியே நியாயம் பேசுகிறார்கள். எது உண்மை? என்பதை அல்ல, வலிமையானவர் பேசுவதையே உண்மை என்று நம்புகிறார்கள். அண்டை நாடுகளிடையே உள்ள பிரச்சனையில் அடுத்தவர் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே தீர்வு கிடைத்து விடுமே? சண்டை நடக்க மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதே இவர்கள் தானே? என்ன செய்வது, போர் நடந்தால் தானே ஆயுதம் விற்று அவர்களும் நாலு காசு சம்பாதிக்க முடியும்? அடுத்தவர் வளங்களை கொள்ளை அடிக்க முடியும்?

காலனியாதிக்கம் முடிந்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களை ஆதிக்கம் செய்ய வேண்டும், ஏழை நாடுகளில் இயற்கை வளங்களை சுரண்டித் தின்ன வேண்டும் என்கிற மேற்கத்திய நாடுகளின் காட்டு மிராண்டித்தனம் இன்னமும் அடங்கவில்லை என்பதே இது போன்ற போர்கள் சொல்லும் அறிகுறிகள்.

பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக உட்கார்ந்து கொண்டு பாமர மக்களை உசுப்பேற்றி விடுகிற வேலையை செய்கிறவனா தலைவன்? ஒரு உயிரும் முக்கியமல்லவா? எதிர்த்து நிற்பது தன் மக்களின் உயிரைக் காவு கொல்லும் என்று அறிந்தும் சண்டித்தன முடிவு எடுக்கிறவன் என்ன ஒரு தலைவன்? இவர் மட்டும் தன் குடும்பத்தோடு பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வார், மற்றவர் நாட்டிற்காக குண்டு பட்டு வீர மரணம் அடைய வேண்டுமா?

இது தான் நடக்கும், இப்படித் தான் போகும் என்று ஒரு தலைவன் கணிக்க தெரிந்தால் சமாதானத்தை எப்போதோ நாடியிருக்க மாட்டானா? இலட்சம் உயிர்கள் இழந்த பின்பு தான் சரணடையும் புத்தி வேலை செய்யுமா?

பலி கொடுத்த பிறகு வீர தீர பட்டம் கொடுத்தால் இழந்த உயிர்கள் திரும்பி வந்து விடுமா? ஒரு உயிர் இழப்பின் வலியை அந்த குடும்பத்திற்கு சென்மத்திற்கும் மறக்க முடியுமா? உலகத்திற்கு அது ஏதோ ஒரு உயிராக இருக்கலாம், ஆனால் அந்த குடும்பத்திற்கு அந்த ஒற்றை உயிர் தானே உலகமே?

கடவுள் இதில் செய்ய என்ன இருக்கிறது? என்ன செய்ய முடியும்? நடப்பதை வேடிக்கை தான் பார்க்க முடியும். கடவுள் வருவார், மேஜிக் செய்வார் என்று கடவுளைப் பற்றி கற்றுக் கொடுத்த அத்தனையும் பிராடு என்பதற்கு இது போன்ற போர்களே ஆதாரங்கள். கடவுள் பெயரை வைத்து நூற்றாண்டு காலமாக நடக்கும் கேவல அரசியலுக்கான சாட்சிகள். சோவியத் ரஷ்யாவை உடைத்த புனிதரை அறியாதவர்களா நாம்? கிளிப்பிள்ளையாக கீழ்ப்படிதலாக சோவியத்தை கடவுள் உடைக்க வேண்டாத தலைமுறையா நாம்?

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்கிற முரட்டு பக்தாள்ஸ்களுக்கான பதில்: சிலுவைப் போர்கள் என்கிற பெயரில் எண்ணற்ற அப்பாவி உயிர்களை கிறிஸ்தவ தலைவர்கள் வாளால், ஈட்டியால் வெட்டி படுகொலை செய்து கொண்டிருந்தபோது கடவுள் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்.

காலனி ஆதிக்கம் என்கிற பெயரில் ஏழை, எளிய நாடுகளை அடிமைப்படுத்தி, அவர்களின் அத்தனை இயற்கை வளங்களையும் சுரண்டித் தின்று மதமாற்றம் என்கிற பெயரில் சித்ரவதை கொடுமைகளையும், உயிரோடு எரித்துக் கொன்ற மாபதகங்களையும் செய்து கொண்டிருந்த போது கடவுள் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்.

சுய நலத்துக்காக, தாங்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பனை செய்ய எரிபொருளை கொள்ளையடிக்க, தீவிரவாதத்தை மேற்கத்திய நாடுகள் வளர்த்து விட்டு, அமைதியைச் குலைக்கிற வேலையைச் செய்த போது கடவுள் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார். இதையும் கடந்து, விடாது அடங்காது ஒறுத்தல் இருந்து போரை நிறுத்த செபிக்கிற கடைக்கோடி பக்த கோடிகளுக்கு:

“இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். ஒரு வேளை அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்: அவர் விழித்தெழ வேண்டியிருக்கும்.”