அறமில்லா தமிழ் ஊடகங்கள்

அறமில்லா தமிழ் ஊடகங்கள்

அறமில்லா தமிழ் ஊடகங்கள்

மார்ச் 03, 2022

நாட்டு நடப்புகள்

ரஸ்ய – உக்ரைன் போரில் தமிழக ஊடகங்கள் வெளியிடுகிற செய்தியின் மூலப் பத்திரம் யார்? உக்ரைனுக்கு செல்லாமலேயே ஏசி அறைகளில் இருந்து கொண்டு உடனுக்குடன் சுட சுட செய்திகள் வாசிக்கும் இவர்களுக்கு இந்த சூடான ஊசிப் போன வடைகளை சுட்டுக் கொடுக்கும் மாஸ்டர்கள் யார்?

மேற்கு ஊடகங்கள், பத்திரிக்கை அறம், முன்களப்ஸ், மாற்று அரசியல்

மேற்கத்திய ஊது குழுல் ஊடகங்கள் கொடுக்கிற ஒரு தலைபட்ச செய்தியை உளறல் ரிப்போர்ட்டர்களை வைத்து பாட வைத்து, இதுவே வேதவாக்கு என்று 24 மணி நேரமும் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர்களையும், இடையிடையே தவறாது வரும் அல்மா, புல்மா விளம்பரங்களையும் பார்த்தாலே தமிழ் ஊடக தராதரம் கணத்தில் புரிந்து விடும். பணமே இவர்களது இலக்கு, மக்களின் சார்பாக நின்று ஒலிக்கும் மனச்சான்று அல்ல இவர்களது குரல்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டத்திற்கு வழி சொல்கிற கதையே தமிழகத்தின் அத்தனை செய்தி ஊடகங்களும். பட்ட பகலில் வெட்ட வெளியில் தன் மக்களை வெறி பிடிக்க சுட்டுக் கொன்ற அரசுகளை, அடக்குமுறை கொண்டு வேட்டையாடிய ஏவலர்களை குறைந்த பட்ச பத்திரிக்கை தர்மத்தோடு கூட விமர்சிக்க தைரியம் இல்லாது, சுட்டுக் கொன்ற அரசுகளே வெளியிடும் வெற்று அறிக்கைகளை உண்மையாக கிளிப்பிள்ளையாய் ஒப்பிக்கும் மேதாவிகளே தமிழ் ஊடகங்கள்.

உக்ரைன் மக்களை ‘துப்பாக்கி எடுங்கள், சண்டை இடுங்கள்’ என்று கோமாளி போல உதார் விடுகிறார் அந்த நாட்டின் அதிபர். அதை மேற்கத்திய ஊடகங்கள் தேசப் பற்று என்று புரூடா விடுகிறார்கள். அதையே காப்பியடித்து காட்சிப் படுத்தி இந்த பேரழிவு நிகழ்வின் நடுவிலும் நிமிசத்துக்கு ஒரு விளம்பரம் போடும் இவர்கள் என்ன நடுநிலை செய்தி தந்து விட போகிறார்கள்?

ரஸ்ய வீரர்களுக்கு எதிராக பொது மக்கள் பெட்ரோல் குண்டுகள் செய்வதை படம் பிடித்து வீரம், தீரம் என்று புளுகித் தள்ளும் இந்த மேற்கு ஊடகங்கள் ஈரான், ஈராக்கில் அமெரிக்காவும், நேட்டோவும் போர் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த தருணத்தில் அவர்களை எதிர்த்து அந்த மக்கள் போராடிய போது அவர்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சித்தரித்ததில் கூடவா மேற்கத்திய ஊடகங்களின் பொய் முகம் கண்டுபிடிக்க முடியவில்லை?

முஸ்லீம் நாடுகள் செய்தால் தீவிரவாதம், கிறிஸ்தவ நாட்டு மக்கள் செய்தால் தேசப்பற்றா? இது தான் அண்டப் புளுகனும், ஆகாசப் புளுகனும் கதை போலும்! இலங்கையில் அப்பாவி மக்களை பொளத்த சமய துறவிகள் வெறி கொண்டு கொலை செய்த போது அத்தனை உயிர்களும் போகிற வரை அமைதி காத்து சரணம் பாடிய கச்சாமிகள் அல்லவா இந்த திராவிட ஆதரவு ஊடகங்கள்! அதனால் தான் மேற்கத்தியர்களுக்கு பக்குவமாக பக்க வாத்தியம் வாசிக்கிற புனிதப் பணியை சிறுபான்மையினர் நலன் காக்க செய்கிறார்கள்.

சிந்திக்கிற திறனோ, அறிவோ, ஆற்றலோ இல்லாத இங்கிருக்கிற ஊடக ஞான சூன்யங்கள் பலருக்கும் தாய் மொழி தமிழையே சரியாக வாசிக்க தெரியவில்லை. நாலு வார்த்தை உளறிக் கொட்டாமல் ரிப்போர்ட்டிங் கூட செய்ய தெரியவில்லை. தொலைக்காட்சி ரிப்போர்ட்டர்களில் யார் அதிக உளறல்களைக் கொட்டுவது? என்பது பற்றி பட்டி மன்றமே நடத்தலாம். இதில் முன்களப்ஸ் என்கிற சலுகை வேறு.

செய்தி சேகரிக்க செல்கிற இடங்களில் கவர் வாங்குவதே இவர்களது முதல் இலக்கு. கிடைக்கிற சலுகைகள் அத்தனையையும் பயன்படுத்தி சாமான்யர்களை ஏமாற்றுவதே இவர்களது பத்திரிக்கை அறம். இந்த கைக் கடக்கமான கலர் கலர் ஊடகங்களை வைத்துக் கொண்டு தான் திராவிட திருவாளர்கள் பொது மக்களின் வாக்குகளை வேட்டையாடி விடுகிறார்கள்.

யார் புதிதாக தோ்தல் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை தங்கள் ஊடகங்களை விட்டு கோமாளிகளாக சித்தரிக்கச் செய்வது, மாற்று அரசியல் பேசினாலே பிஜேபியின் பி டீம் என்று புளுகுவது, கோபால புரத்து புருஷர்களை கடவுள் வாழும் புனித தலமாக பிம்பப்படுத்திக் காட்டுவது, உலகமே போர்க்காலம் பூண்டிருந்தாலும் ஒட்டுமொத்த பப்பு குட்டிகளையும் தலைநகர் அழைத்து வந்து புத்தக வெளியிட்டு விழா நடத்துவது என்கிற கேவலங்களைச் செய்யவும் தைரியம் வேண்டும் தானே?

துண்டுச் சீட்டைப் பார்த்தே நாலு வார்த்தை பேசத் தெரியாத இவர்கள் நானூறு பக்க புத்தகத்தை எழுதினார்கள் என்பதையும் நம்பி மெனக்கெட்டு நீண்ட தூரம் புறப்பட்டு வருகிறவர்கள் அப்பாவி குழந்தைகள் தானே? இந்த இளவரசர் குடும்பத்தின் அதால பாதாள சறுக்கல் அரசியலுக்கு இப்போது காரணம் புரிகிறது.

தானைத் தலைவர் டீ குடித்தார், கம்பு சுற்றினார், குழந்தைகளைக் கொஞ்சினார், வெற்றுக் காலில் நடந்தார், சைக்கிள் மிதித்தார், உடற்பயிற்சியில் 100 கிலோ குண்டு தூக்கினார், திரைப்படம் பார்த்து சொம்பு நிறைய கண்ணீர் வடித்தார் என்று விளம்பர காசுக்காக எந்த எல்லைக்கும் கீழ் இறங்கிச் சென்று செய்தி வாசிக்கும் கேவலமே தமிழக ஊடகங்கள்.

பாகுபலியின் முதுகில் குத்துகிற கட்டப்பாக்கள் திரையில் மட்டுமல்ல நிஜத்திலேயும் அதே பெயரோடு இந்த ஊடக வெளிச்சத்தில் ஒய்யாரமாக வலம் வருகிறார்கள். அது படமல்ல, அவர்களின் வாழ்க்கைப் பிம்பமே திரையில் தெரிகிறது. ஸ்டொ்லைட்டில் சுட்டுக் கொன்றால் அழுது வீடியோ போட்டு மூக்கு சீந்தி விட்டு அந்த அநீதிக்கு காரணமான மூலப் பத்திரங்களை மறுபுறத்தில் பொது மேடையில் உச்சி முகர்கிற புரட்சி தமிழர்களே இந்த கூத்தாடிகள். மாமா எவ்வழியோ அவ்வழியிலே மருமகன்கள். அச்சுப் பிறழாமல் தங்கள் பட விளம்பரங்களுக்காக அறிக்கைப் புரட்சி செய்கிற மற்றுமொரு குளிர் பான சூர்ய வம்சத்தினர்.

கர்ணன் படத்தில் அநீதிக்கு எதிராக கிளர்ந்து சமூக நீதி பேசி விட்டு அடுத்த படத்தில் அதே அநீதியின் மறு பிம்பமாம் தமிழக சேகுவாராவுடன் கரம் கோர்த்து கல்லா கட்ட துடிக்கும் மாரீசன்கள் நம் காலத்திய தோற்றம் மாறும் வித்தை கற்றவர்கள். கலை என்கிற இயற்கை அன்னையின் பொக்கிஷத்தை காசுக்கு விற்று லாபம் பார்த்து வெட்டி வீராப்பு பேசும் சுயநல சமூகத்தின் அடையாளங்களே இந்த நீல கலர் விஷமிகள்.

தங்கள் எஜமானர்களின் அரசியல் ஆதாயத்துக்காக கட்சி அரசியலுக்காக பத்திரிக்கை தர்மத்தை மறந்து பதவிக்காக பணத்துக்காக அறமில்லாத செய்திகளுக்கு கண், காது, மூக்கு வைத்து திரைக்கதை எழுதி வாசிக்கும் அத்தனை வாசிப்பாளர்களும், நிரூபர்களும் தாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் வாசிக்கிற செய்திகளுக்கும் பொறுப்பு ஏற்றே ஆக வேண்டும்.

தங்கள் பொறுப்பை ஒரு வரியில் விளம்பரமாக போட்டு அவ்வளவு எளிதாக துறந்து விட முடியாது. நாங்கள் வெறும் கூலிக்கு மாறடிக்கிறவர்கள் என்று தப்பித்துக் கொள்ளவும் முடியாது. தமிழகத்தில் மறைக்கப் படும் அத்தனை படுபாதக செயல்களுக்கும் மக்களை திசை திருப்புகிற குற்றப் பழிக்கும் ஏழைகள் வடிக்கும் இரத்தக் கண்ணீருக்கும் அத்தனை வகை ஊடகங்களும் பொறுப்பு.

மாயக் கட்டுக்களையும் பொய்க்காட்சிகளையும் புணரமைத்து எளியவர்களை நம்ப வைத்து அதற்கு ராகம், தாளம், சுருதி சோ்த்து அதிகாரம் தவறானவர்களின் கைக்கு போகும் வேலை செய்ய துணைபோகும் இந்த ஊடக கூலிகள் அத்தனை பேரும் தங்கள் வினைப் பயனை அறுக்கும் காலம் விரைவில் மலரும் என்பதே எங்கள் கடவுள் நம்பிக்கை.