பகல் கொள்ளையர்கள்

பகல் கொள்ளையர்கள்

பகல் கொள்ளையர்கள்

மார்ச் 06, 2022

மனிதர்கள் 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தது சாத்தியமா? கடவுள் காட்டிய வழியில் நடந்த ஒரு சிலர் அறிவியலுக்கு முரணாக நம்ப முடியாத ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இது உண்மையாக இருக்க முடியுமா?

கடவுள் நம்பிக்கை

ஏமாளிகள், அடையாள மொழி, பைபிள், மத நூல்

பைபிளில் இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் தேவ தூதர்களை வைத்து எழுதி வானத்திலிருந்து போட்டது என்பதாக நம்பும் மனநிலை உடைய பாஸ்டர்கள் விடுகிற கதையையும் நம்பி பக்கெட்டுக்களில் காசுகளையும், தங்க நகைகளையும் கழட்டி போடுகிற ஏமாளிகள் இருக்கிற வரை ஏமாற்றுக் காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

பைபிளில் ‘கதிரவனே நில்’ என்று வாசிக்கிறோம். ஆனால் இன்றைக்கு சூரியன் நகராது, பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்று அறிவியல் நிரூபித்து இருக்கிறது. அடுத்து பூமி தட்டையானது என்று பைபிள் சொல்கிறது. ஆனால் பூமி உருண்டை வடிவம் கொண்டது என்று அறிவியல் நிரூபித்தது. இதற்கு இந்த புனித போதகர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? கலிலியோவிற்கு நடந்த கொடுமைக்கு பதில்?

பைபிளில் சொல்லப் பட்டிருக்கிற அத்தனையும் பழங்கால புராணக் கதைகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது என்பதைச் சொல்ல இதனை விட வேறு சான்றுகள் ஏதேனும் வேண்டுமோ? அதனை அப்படியே ஏதோ வரலாற்று மொழி போல படித்து போதிப்பது முட்டாள் தனம் என்று சொல்ல வேறு ஆதாரம் தேவைப் படுமோ?

பழங்காலத்தில் ஒருவரின் வயதை எழுத பல முறைகள் இருந்தது. உதாரணமாக சுமேரிய மக்களிடையே மன்னர்களின் வயதை மற்றவர் வயதோடு பெருக்கி எழுதுகிற வழக்கம் இருந்தது. மெசபடோமிய நாகரிக பகுதியில் உள்ள எரிதுக் என்கிற நாட்டில் அலுலிம் என்பவர் 28,800 ஆண்டுகள் வாழ்ந்ததாக குறிப்பு இருக்கிறது. உண்மையில் இது வாழ்ந்த வயது அல்ல, அடையாளமாக குறிப்பிடும் வயது.

வயதை எழுதுகிறபோது ஒரு சில அடையாள மொழியை (Symbolic Language) பயன்படுத்தி எழுதும் பழக்கம் மத்திய கிழக்கு பகுதிகளின் இலக்கிய மொழி நடையாக இருந்தது. குறிப்பாக வயதோடு 21 என்கிற எண்ணால் பெருக்கி எழுதுவது, 7 என்கிற எண்ணால் பெருக்கி எழுதுவது போன்ற முறைகளைக் கடைப்பிடித்தனர். அதனையே இலக்கிய நூல்களைப் படைக்கிற போதும் பயன்படுத்தினர்.

ஆரோக்யமாக வாழும் எகிப்தியரின் அதிகபட்ச வாழ்நாள் 110 ஆண்டுகள். எனவே எகிப்திய இலக்கியத்தில் சிறந்த மனிதர்களின் வரலாறு எழுதுகிறபோது அவர்களின் வயது 110 என குறிப்பிட்டால் அவர் மிகச்சிறப்பாக வாழ்ந்திருக்கிறார் என்பது பொருள். அத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்தார் என்பது பொருளல்ல. மாறாக வெறும் அடையாள மொழியே. எகிப்தில் வாழ்ந்த யோசேப்பு 110 வயது வரை வாழ்ந்தார் என்று பைபிள் சொல்வதை இதற்கான உதாரணமாக சொல்லலாம்.

இஸ்ரயேல் நாட்டில் 70 முதல் 80 வயது நீண்ட ஆயுளாக பார்க்கப் பட்டது. “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே: வலிமை மிகுந்தோர்க்கு எண்பது” என்கிற 90:10 சங்கீத வார்த்தை இந்த நம்பிக்கையின் படி இலக்கிய வடிவத்தில் எழுதப்பட்ட ஒன்றே. இந்த அடிப்படை தெரியாமல் இந்த பாஸ்டர்கள் எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள்?

மத நூல்களைப் பற்றிய புரிதலோ அதனை எப்படி வாசிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவோ இல்லாத இந்த அதி மேதாவிகள் உலகத்தையே கரைத்துக் குடித்த அறிவாளி போல படித்த, பாமர மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்து மிகப்பெரிய லாபம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். சொற்ப வயதில் ஒருவர் நோயால் இறந்து போனால் அவருக்கு பாவி பட்டம் கட்டி எளியவர்களை பயம் காட்டும் குரளி வித்தை காட்டி காசு பார்க்கிறார்கள்.

கை நீட்டினால் எதிரில் நிற்கிறவர் மயங்கி கீழே விழுவது போலவும், சி.டியை தொட்டாலே எலக்ட்ரிக் ஷாக் அடிப்பதாகவும், தொட்டாலே கேன்சர் கட்டியே கரைந்து விடுவது போலவும் புளுகித் தள்ளி பாமர மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள்.

இந்த யுகத்திலும் இந்த பகல் கொள்ளைக் காரர்களிடம் பர்சுகளை பறிகொடுக்கும் தாய்மார்களை என்ன செய்வது? எப்படி புரிய வைப்பது? தெரியவில்லை.

இப்படி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது. இவர்களில் முதலாமவர் பல்கலைக் கழக அதிபதி. பிள்ளைகளை வெளிநாட்டில் செட்டில் செய்கிற அளவுக்கு வளர்ந்து விட்ட கார்பரேட் முதலாளி.

அடுத்தது சலங்கை கிடைக்காத வருத்தத்தில் வெளியேறிய அங்கி அணிந்த மான் ஒன்று சி.டிக்கள் விற்றே பணத் தோட்டம் ஒன்று எழுப்பி விட்டது. இந்த வரிசையில் உள்ள சின்ன தம்பி சமீப காலமாக சுட சுட சினிமா கிசு கிசு செய்திகளை அன்றாட சத்தியமாக ஒளிபரப்பு செய்து நாலு மாடி வீடு எழுப்பி விட்டார்.

இவர்களை திராவிட அரசுகள் கண்டு கொள்ளாது. ஏனென்றால் இவர்களும் அரசியல் செய்ய தேவையே. மக்களை இப்படி ஆன்மீக மயக்கத்தில் வைத்து கடவுளை மந்திரவாதியாக கற்றுக் கொடுத்தால் தானே அவர்கள் அடிக்கிற கொள்ளை, ஊழல்கள் பற்றி இந்த பக்தாள்ஸ் கவலைப்படாது இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள்?

இது போன்ற பொய் விதைகளை விதைத்து கடவுளை கைதட்டி புகழ்ந்தால் அள்ளி அள்ளி கொடுப்பார், நடனமாடி ஆர்ப்பரித்தால் பக்கெட் நிறைய KFC சிக்கன் கொடுப்பார் என்று நம்பி கத்தி கூப்பாடு போடும் பைத்தியக்கார சனங்களுக்கு இவர்களின் சுய உருவத்தை காட்டிக் கொடுத்தாலும் உரைக்காது தான்.

ஆனால் செய்ய முடிவதை நம் தளத்தில் நம் காலத்தில் செய்வது நம் அடிப்படை கடமை தானே? மற்றவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்புவதும் கடவுள் நம்பிக்கை தானே?

இது போன்று பொய், புரட்டுகளை கற்பிக்கிற பாஸ்டர்களை நம்புவதும் பணம் கொடுப்பதும் தனி மனித சுதந்திரம். ஆனால் ஒன்று உண்மை. இவர்கள் போதிப்பது கடவுளுடைய வார்த்தை அல்ல. இவர்களே கற்பனையாக உருவாக்குகிற அந்தி கிறிஸ்துவின் வார்த்தைகள். உலக முடிவு நெருங்கி விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் இவர்களின் முடிவுக் காலம் நெருங்கி விட்டது என்றே நடக்கிற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கிற போது தெரிகிறது. அந்த நாள் மலர்ந்தால் அதை விட மகிழ்ச்சி இல்லை.