உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

உக்ரைன் போரில் கடவுள் எங்கே?

மார்ச் 09, 2022

உக்ரைன்-ரஸ்ய போரில் கடவுள் எங்கே இருக்கிறார்? போரில் இறந்து கொண்டிருப்பது அப்பாவி மக்கள் தானே? கடவுள் வந்து தடுக்க முடியாதா? செபத்திற்கும், தவத்திற்கும், ஒறுத்தலுக்கும் என்ன பலன்? போரில் இறக்கும் அப்பாவி உயிர்களுக்கு யார் பொறுப்பாளி?

உலக நிகழ்வுகள்

ரஸ்யா, ஐரோப்பிய யூனியன், நேட்டோ, குற்றப்பழி

கடவுளால் இந்த உலகத்தில் நடக்கிற எதையும் மேஜிக் செய்து தடுக்க முடியாது என்பதற்கும், நடக்கிற கொலை, கொள்ளை, போர்களை கடவுளால் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்பதற்கும் ரஸ்யா – உக்ரைன் போர் நம் காலத்திய சிறந்த ஆதாரம். அடுத்த நிமிடம் என்ன நடக்கும்? என்பதை நிர்ணம் செய்வது கடவுள் அல்ல, அதிகாரத்தில் உள்ள மனிதனே. கடவுளால் ஒரு புள்ளியை கூட அசைக்க முடியாது. எதையும் அசைக்க கூட இயலாதவரே கடவுள்.

செபமோ, தவமோ, ஒறுத்தலோ – எது செய்தாலும் ஏதோ நம்மால் இயன்றதைச் செய்தோம் என்கிற திருப்தி கிடைக்குமே தவிர உப்பு சப்புக்கும் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது. ஐரோப்பிய தலைவர்கள் போடுகிற அத்தனை மேற்கத்திய தாளங்களுக்கும் தவறாது கிரகோரிய பக்கவாத்தியம் வாசிக்கும் வாடிகன் சிட்டியின் கற்பனையில் உதித்த சவலைக் குழந்தைகளே இந்த செப, தவ, ஒறுத்தல் என்கிற புனித நாடகம்.

ரஸ்ய - உக்ரைன் போருக்கு முதல் குற்றப் பழி ஏற்க வேண்டியவர் உக்ரைன் அதிபரே. அவரே இந்த போருக்கு காரணம். அவரே செத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு உயிருக்கும் காரணம். அரிதாரம் பூசி அத்தனை பேரையும் ஏமாற்றும் வசியம் தெரிந்த கூத்தாடிகளிடம் மயங்கி தகுதிக்கு மேலான இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் ஒரு நாட்டில் என்ன நடக்குமோ அதே தான் உக்ரைனிலும் நடந்திருக்கிறது.

“ஓர் அரசரோடு போர் தொடுக்கப் போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில் அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?"

யார் பக்கம் நீதி? எது நியாயம்? யார் முதலில் இந்த போரை தொடங்கியது? என்பதல்ல இங்கு கேட்க வேண்டிய கேள்வி. போரில் ஈடுபட்டாலோ அல்லது போரைத் தவிர்த்தாலோ ஏற்படுகிற சாதக, பாதகங்கள் என்ன? என்பதே ஒரு தலைவன் தனக்குள்ளே கேட்க வேண்டிய முதன்மையான கேள்வி.

மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ள படையோடு மோதினால் தனக்கு தோல்வி என்பதை அறிவாளியாக இருக்கிற தலைவன் முதலிலேயே உணர்ந்து தவிர்த்திருக்க மாட்டானா? இப்போது நடக்கிற இத்தனை சுற்று சமாதான பேச்சு வார்த்தையை, இறங்கி வருகிற போக்கை போருக்கு முன்னாலே செய்வதற்கு எந்த ஈகோ தடுத்தது? போரிலே இறந்து போன வீரர்கள், அப்பாவி மக்கள், அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி இதற்கெல்லாம் இவர் ஒருவர் தானே பொறுப்பு? விலை மதிப்பு இல்லாத ஒற்றை உயிரைக் காவு கொடுக்க துணியும் இவர் எப்படி தகுதி உடைய தலைவராக இருக்க முடியும்?

இப்போது இறங்கி வருகிற தொனியில் பேசுகிற இவர் இதனை பத்து நாட்களுக்கு முன்னதாக செய்திருந்தால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப் பட்டு இருக்கும்? இப்படித் தான் போரின் முடிவு இருக்கும் என்று சாமான்யன் கூட இந்த போரின் முதல்நாளில் தீர்க்க தரிசனம் சொன்ன போது, இவ்வளவு மக்களின் தலைவராக இருக்கிற இவருடைய சிறு மூளைக்குக் கூடவா இது உரைக்காமல் போய் விட்டதா?

இந்த போரை தவிர்த்து இருந்தால் அவருக்கு என்ன குறை வந்திருக்கும்? ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் சேராது இருந்திருப்பார். அமொிக்க, ஐரோப்பாவின் அடிமையாக மாறி விடத்தான் ரஸ்யாவிலிருந்து பிரிந்து செல்லும் சுதந்திரம் தேவைப்பட்டதா? இப்படி அடுத்தவரின் ஏவலாக இருக்கத்தான் பலர் சுதந்திரத்திற்காக உக்ரைனில் உயிர் துறந்தார்களா?

அவர் பக்கம் நியாயமே இருக்கட்டும், ஆனால் யதார்த்தம் அவருக்கு சாதகமாக இல்லையே? களமும், காலமும் அவருக்கு ஆதரவாக இல்லையே? யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அப்படி என்ன ஈகோ? முடிவெடுக்க அறிவோ, பகுத்தறிவோ தேவை அல்ல. ஆராய்ந்து அறிந்து தோ்ந்து தெளிகிற ஞானம் வேண்டும். அது இவரிடத்தில் துளியும் இல்லையே?

தாவீது கூலாங்கல்லால் கோலியாத்தை வீழ்த்திய புருடா கதையை நம்பி இஸ்ரயேலின் கடவுள் ரஸ்யாவை வீழ்த்த வல்லமை கொடுப்பார் என்று இந்த பீரங்கிகளை எடுத்தாரா? அல்லது போப்பாண்டவரே நம் பக்கம், பாத்திமாவில் மாதா வந்து காட்சி கொடுத்து ரஸ்யாவை உடைத்தெறியும் மந்திர ரகசியத்தை சொல்லிக் கொடுத்தது போல நம் காலத்திலும் மூன்றாம் பவுல் வந்து இந்த காட்சியை நடத்துவார் என்று விசுவசித்து களத்தில் இறங்கினாரா? தெரியவில்லை.

சோ்ந்தே ஆக வேண்டும் என்கிற மதியீன முடிவு எதற்கு? நேட்டோவில் இப்போது இணைய முடியவில்லை என்றால் இனி எப்போதுமே இணைய முடியாதா? இப்போது இல்லை என்றால் இனி எப்போதுமே ஐரோப்பிய யூனியனோடு சேர முடியாத நிர்பந்தமா எழுந்தது? அப்படி என்ன போர் செய்து வீரம் நிரூபிக்க எழும் தலைக்கனம்?

காலம் கனிய காத்திருக்கலாமே? சுதந்திர நாடு தானே? கப்பம் கட்டும் சூழ்நிலை இல்லையே? நாளைக்கு சூழ்நிலைகள் மாறலாமே? எதிர்காலம் புதிய தீர்வுகளைத் தரலாமே? ரஸ்யாவில் அரசியல் மாற்றம் வரலாம் தானே? அப்படி என்ன உடனே முண்டியடிக்கும் சண்டித்தனம்? இப்போது இல்லை என்றால் இன்னொருவர் ஆட்சிக் காலத்தில். அதுவரை பொறுத்து இருக்க முடியாதா?

போரைத் தவிர்த்து இருந்தாலும் சரணாகதி அடையவோ, அடிமையாக இருக்கவோ நிர்பந்தம் எதுவும் இல்லையே? யாரோடும் சேராதீர்கள் என்று சொல்வதைக் கேட்டு தற் சமயத்திற்கு வாயை மூடிக்கொண்டு கூட ஒரு தலைவனால் இருக்க முடியாதா? வெற்றுப் பேச்சுக்களை உணர்ச்சி பொங்க பேசி வீடியோ வெளியிட்டால் ஐரோப்பிய தலைவர்களின் கைத்தட்டு கிடைக்கும். ஆனால் இழந்த உயிர்கள் திரும்ப வருமா? மக்கள் உயிரைக் காக்க கோழை என்கிற பட்டத்தைக் கூட பெற வலிக்கிறதா?

கடவுள் அவரவர் சூழ்நிலையில் முடிவெடுக்க வசதியாக பல தெரிவுகளை (Options) மட்டுமே கொடுக்க முடியும், நமக்கான முடிவுகளை அவர் எடுக்க முடியாது. அது நம் சுதந்திரம். கடவுள் வந்து விண்ணக தூதர்களோடு வந்து சண்டை போட மாட்டார். அம்புலி மாமா கதை போல் புயல், மழை, கடல் சீற்றங்களை அனுப்பி போரை தடுக்க மாட்டார். நம் உடலில் ஆவியைப் புகுத்தி இயக்கவும் மாட்டார். அவரால் நம் அறிவுக்கேற்ப பல வழிகளை மட்டுமே காட்ட முடியும், நாம் தான் நமக்கான வழியைத் தோ்ந்தெடுத்து முன் செல்ல வேண்டும். எந்த வழியிலும் முன் நடந்து எவரையும் கடவுள் வழிநடத்த முடியாது.

ஆளுகிறவன் அயோக்கியனே என்றாலும், அவன் ஒருவனே என்றாலும் கடவுளால் அவனைக் கொல்ல முடியாது. அடிமையாக இருக்கிறவர் பலர் என்றாலும், அவர்கள் யோக்கியர்களே என்றாலும், கடவுளால் அவர்களைக் காப்பாற்றவும் முடியாது. காப்பாற்றுவதும், கொல்வதும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிற ஆட்சியாளர்களே. கடவுள் அல்ல. அவர் இயலாமையின் கடவுள். ஒன்றுமே செய்ய இயலாதவர். அதற்கு இந்த போரே சாட்சி.

பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தலைவர்களிடையே சண்டை மூட்டி விட்டு குளிர் காய்வதையும், அநீதியை குற்ற உணர்வே இல்லாமல் நியாய படுத்துவதை வழக்கமான பழக்கமாகவும் மாற்றி விட்ட மேற்கத்திய தலைவர்கள் நடுவில் நம் சார்பு நியாயத்தை பேச நினைப்பதே வீணான காரியம். இவர்கள் சொல்வது மட்டுமே உண்மை, இவர்கள் பேசுவது மட்டுமே லாஜிக், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவர்கள் பரிணாம வளர்ச்சி அடைய போவதில்லை. இவர்களின் ஆதிக்க மூர்க்கம் மறைய போவதும் இல்லை. ஏனென்றால் அது இவர்களின் ஜீன்களில் ஊறிப் போயிருக்கிறது.

கடவுளைப் பற்றிய அத்தனை கட்டுக் கதைகளையும் உருவாக்கி அது ஒன்றே உண்மை, அது மட்டுமே உண்மை என்கிற Uniformity மற்றும் வர்ணாஸ்ர தர்மத்தை அறிவியல் வளர்ந்திருக்கிற இந்த நவீன காலத்திலும் இறுமாப்பு கொண்டு நியாயப் படுத்துகிற இவர்களுக்கு ஏழை நாடுகளை எக்காலத்திற்கும் கொத்தடிமையாக வைத்திருப்பதே இறையாட்சி கனவு.

நாசகார ஆயுதங்களை உருவாக்கியது ஏழை நாடுகள் அல்ல, இந்த மேற்கத்திய நாடுகளின் தலைவர்களே. அணு ஆயுதத்தை உருவாக்கி மனித குலத்தை நாசம் செய்ய அவற்றை விற்பதும் இந்த உத்தமர்களே. அத்தனை கேடுகளையும் செய்கிறவர்களும் இவர்களே, செய்யக் கூடாது என்று ஒழுக்கப் பாடங்களை நடத்துகிறவர்களும் இவர்களே.

இவர்கள் செய்தால் அது JUST WAR.மற்றவர்கள் செய்தால் அது சமாதானத்தை குலைக்கும் நாசக்கார செயல். ஏனென்றால் ஒழுக்கவியல், அறவியல், தர்மவியல், பேசி நியாயப்படுத்த பல அறிவார்ந்த ஒழுக்க சீல புனிதர்கள் இவர்கள் பக்கம் நின்று தீர்ப்பு எழுத விண்ணகத்தையும் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்து இருக்கிறார்கள். கடவுளே இவர்கள் சொல்வதை கேட்டுத்தான் நடக்க வேண்டிய கேடு கெட்ட நிலையில் இருக்கிறார். அவரே இவர்களிடத்தில் விடுபட முடியாத கொத்தடிமையாய் மாட்டிக் கொண்டு தான் விழி பிதுங்கி நிற்கிறார். இதில் அவர் வந்து யாரைக் காப்பாற்ற முடியும்?

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை மரத்தில் ஏறாதே என்று தான் ஒரு தாய் சொல்ல தான் முடியும். ஆனால் அவனுடைய செவிட்டுக் காதுக்கு அது உரைக்காதே? அதே போல கீழே விழுந்து கால் உடைகிற போது வந்து தூக்க தான் முடியும், மாயா ஜால மந்திரம் போட்டு கால்களை குணப்படுத்த முடியாது. அருகிருந்து கட்டுப் போட்டு கண்ணீர் மட்டுமே வடிக்க முடியும். வலியை அந்த மகன் அனுபவித்தே ஆக வேண்டும். அதைத் தான் உக்ரைன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மக்களாட்சியில் தகுதியில்லாத தலைவனைத் தோ்ந்தெடுத்த உக்ரைன் மக்களும் இந்த கோர சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களே.

இந்த போர் வரலாற்றில் கட்டாயம் இடம்பெறும். கட்டுக் கதையான கற்பனைக் கதைகளை வரலாறாக கச்சிதமாக திரித்து எழுதுவதில் பெயர் போன இந்த மேற்கத்திய ஜாம்பவான்கள் உக்ரைன் அதிபரை வீரர், சூரர், விடா முயற்சியாளர், போராளி என்று வரலாற்றில் பதிவு செய்வார்கள். அவருடைய வாழ்வை காவியமாக வடிப்பர். தத்ரூப ஓவியங்களாக புளுகி தள்ளுவர். அவருக்கு விசுவாசத்தின் வீரர் என்கிற புனித பட்டத்தை வழங்கி போர்களின் பாதுகாவலர் என்று விரைவில் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

ஆனால் கடவுளின் பார்வையில் அவர் மன்னிக்க முடியாத குற்றவாளியே. தண்டனை தீர்ப்புக்கு தகுதியான குற்றம் புரிந்தவரே. வரலாற்றில் இந்த அதிபர் ஏற்படுத்திய ஆற்ற முடியாத காயங்களை புனித சாயம் பூசி தந்திரமாக மேற்கத்திய ஊடகங்கள் மறைக்க முயன்றாலும் கீழைக் கதிரவனின் புத்தெழுச்சியில் அந்த சாயங்கள் உலர்ந்து பெயர்ந்து விழும் காலம் கண்டிப்பாக விரைவில் மலரும் என்பதே எங்கள் கடவுள் நம்பிக்கை.