கடவுளால் என்ன செய்ய முடியும்?
மார்ச் 13, 2022
அடுத்த நிமிடம் நடப்பதை முடிவு செய்வது கடவுள் அல்ல, அதிகாரத்தில் உள்ள மனிதனே. கடவுளால் ஒரு புள்ளியை கூட அசைக்க முடியாது. இயலாதவரே கடவுள். இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுள் இல்லை என்றே சொல்லி விடலாமே? கடவுள் என்ன செய்ய முடியும் என்று சொல்ல வருகிறீர்கள்?
கடவுள் நம்பிக்கை
உடல், குழந்தை, மருத்துவம், அறிவியல்
தற்காலிக தீர்வு மற்றும் நிரந்திர தீர்வு என்பதே நாங்கள் கடவுள் நம்பிக்கைக்கு ஆதாரமாக முன்மொழிகிறோம். திருமணமான ஒரு பெண் குழந்தை உண்டாகி இருக்கிறார். குழந்தையின் உடல் வளர்ச்சி பற்றி மருத்துவ பரிசோதனை முடிவுகள் கவலையான அறிக்கையைத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் கடவுள் என்ன செய்வார்?
கடவுள் இந்த குழந்தையின் பிறப்பில் செய்வதற்கு ஒன்றுமே கிடையாது. அது அவரது கட்டுப்பாட்டிலும் கிடையாது. இரு உடலின் ஆரோக்யத்தைப் பொறுத்தே ஒரு குழந்தையின் வளர்ச்சி அமையும். வாழ்க்கைச் சூழல், உணவு, ஊட்டச் சத்து குறைபாடு, ஜீன் கோளாறு, சுற்றுப்புற மாசுபாடு என்கிற பல காரணிகள் ஓர் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
உடல் ஒரு இயற்கையான மெஷின். அது கடவுள் என்கிற விஞ்ஞானியால் அற்புதமாக உருவாக்கப் பட்டது. அதனை மனித விஞ்ஞானிகள் சீரழித்து சின்னா பின்னமாக்கி விட்டார்கள். குழந்தை இன்மை, பிறக்கிற குழந்தை வளர்ச்சியின்மை வருகிற காலங்களில் கணக்கின்றி செல்லும். இது கண்டிப்பாக நடக்கும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது மக்கள் தோ்ந்தெடுத்த ஆட்சியாளர்களே. கடவுள் அல்ல. கடவுளால் இந்த குழந்தையைத் தொடவோ, விசுவசித்தால் குணமாக்கவோ முடியாது. அப்படி முடியும் என்று யாராவது சொன்னால் அவர் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது ஏமாற்றுவதில் கைதோ்ந்த வியாபாரியாக இருக்க வேண்டும்.
கடவுளால் இந்த நெருக்கடி சூழ்நிலையில் செய்ய முடிவது இது தான்: நம் சூழ்நிலையில், நம் நெருக்கடியில் நாம் முடிவெடுக்க பல Options உருவாக்கிக் கொடுக்க முடியும். நாம் தீர்மானிக்க ஏதுவாக நம் முன்னால் இருக்கிற பல வழிகளை காட்ட மட்டுமே முடியும். வேறு எதையும் கடவுளால் செய்ய முடியாது. நிரந்தர தீர்வு ஏற்படும் வரை இந்த தற்காலிக தீர்வை மட்டுமே அவரால் நமக்கு காட்ட முடியும்.
வேலை, வீடு, வசதி, வாய்ப்பு எதற்கும் கடவுளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நாமே. உழைப்பு, திறமை, சூழ்நிலை, அதிர்ஷ்டம், திருட்டுத்தனம் போன்ற ஏதோ ஒன்று தான் ஒருவர் பொருளாதாரம் உயர உதவியிருக்கும். கடவுளோ, விசுவாசமோ, பக்தியோ, ஆன்மீகமோ கண்டிப்பாக அல்ல. கடவுள் நம்பிக்கையினால் தான் நடந்தது என்று நம்புவது தனிநபர் நம்பிக்கை. அது உண்மையல்ல.
ஒருவர் எடுக்கிற முடிவில் எது சரி? எது தவறு? என்கிற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இது நெருக்கடி நிலை. இதற்குள்ளாக சரி என்று எடுப்பதற்கான எந்த முடிவுகளும் இல்லை. அத்தனையும் தவறான முடிவுகள் தான். ஆனால் இதற்குள்ளாக தான் ஒன்றை எடுத்தாக வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலையை நம் ஆட்சியாளர்கள் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். கடவுள் அல்ல. அவரால் செய்ய முடிவதைத் தான் செய்ய முடியும்.
குழந்தையை பெற்றெடுப்பதா? வேண்டாமா? குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தை காலம் முழுவதும் வதைப்பட்டு சாக வேண்டுமா? அல்லது இப்போதே நிறுத்தி விடலாமா? அந்த குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஒவ்வொரு நிமிடமும் இருந்து பாதுகாக்க முடியுமா? பணம் செலவழிக்க முடியுமா? குணப்படுத்த முடியுமா? குழந்தையை பெற்றெடுத்து எங்காவது ஆசிரமத்தில் விட்டு விடலாமா? மாத பராமரிப்பிற்காக பணம் கொடுத்து விடலாமா? – இப்படி Options நீண்டு கொண்டே போகலாம்.
இது தான் தீர்வு என்று எதையும் யாரும் யாருக்கும் கொடுக்கவே முடியாது. மனச்சாட்சி இல்லாதவர்களால் மட்டுமே இது தான் தீர்வு என்று தைரியமாக தீர்வு கொடுக்க முடியும்.ஏனென்றால் ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறு வேறு. அது கடவுளுக்கும் அந்த தனி மனிதருக்கும் இடையே புரிந்தால் போதும். மூன்றாமவர் வந்து பாவம் பற்றி வியாக்கியானம் சொல்வதோ, ஒழுக்கவியல் பாடம் நடத்துவதோ, அறவியல் பேசி குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதோ மாபாதக குற்றப் பழியே.
எந்த உயிரையும் வதைப்பதற்கு இந்த உலகத்தில் எவருக்கும் உரிமையில்லை என்று வீம்பு பேசலாம். தனக்கு வந்தால் தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும்! தனி நபருக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவில் மூன்றாவது நபர் ஆலோசனை சொல்லலாம், ஆனால் Ethics பேசி ஏதோ இந்த சமுதாயத்தின் ஒழுக்கத்தையே இவர்கள் தான் கட்டிக் காத்து வருவது போல பாவம் என்கிற சாபத்தை மற்றவர்களுக்கு போதிப்பதற்கு எவருக்கும் கடுகளவும் அருகதை இல்லை.
ஒரு குழந்தை உருவான பிறகு எத்தனை மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் நாம் வாழ்கிற காலத்தில் தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? மற்ற உயிரினங்கள் இவை இல்லாமல் இயற்கையாக பெற்றெடுக்க வில்லையா? செயற்கை முறை கருத்தரிப்பை உருவாக்க கடவுள் அறிவைக் கொடுக்கவில்லை. நிரந்தர தீர்வு காண வக்கில்லாத மனிதர்களின் கிறுக்குப் புத்தியே அறிவியல், மருத்துவ கண்டுபிடிப்புகள்.
செயற்கை முறையை தோ்வு செய்வதும், செய்யாததும் தனி மனித சுதந்திரம். ஆனால் இதில் ஏற்படும் மோசமான விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அறிவியலை மூர்க்கமாக நம்புவதும் முட்டாள் தனமே. அதற்கு நம் காலத்திய கொரோனா ஆதாரம்.
செயற்கை முறையில் எதுவும் நடக்கலாம். குழந்தை பிறப்பதற்கு உறுதி கிடையாது. இலட்சத்தை இழக்க நேரிடலாம். ஆரோக்யத்தை இழக்க நேரிடலாம், குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் கேரண்டி கிடையாது, சாப்பிட்ட மாத்திரை, மருந்துகள் அந்த தாய்க்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எல்லா முடிவுகளையும் நாம் எடுத்து விட்டு ஒட்டு மொத்த பழியையும் கடவுள் மீது போட்டு தப்பிக்க முடியாது. கடவுள் தான் இந்த மருத்துவத்தையும் கொடுத்தார் என்று நமக்கு நாமே ஆன்மீகமும் பேசிக் கொண்டு நியாயப்படுத்த முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதே மனிதனின் குறுக்குப் புத்தி குறுக்கு வழி கண்டுபிடிப்பு. கடவுளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் துளியும் தொடர்பு கிடையாது. வியாபாரமே இதன் இலக்கு. சேவை அல்ல.
கடவுளை நம்பினால் முடிவெடுக்க அறிவோ, பகுத்தறிவோ, ஆன்மீகமோ தேவையில்லை. புத்தி இருந்தாலே போதும். அதைத் தானே நம் பெற்றோர் நம்பினர். அவர்கள் நம் போல் அறிவாளிகள் இல்லையே? ஆனால் கடவுளை நம்பி வாழ வில்லையா? நோய் நொடி நம் காலத்தில் இருந்தது போல் அப்போது இல்லையே?
நம்பிக்கையோடு மன்றாடுங்கள், கடவுள் புதுமை செய்து காப்பாற்றி விடுவார் என்று சொல்கிற அத்தனை பேருமே 420. சிரமம் எதற்கு? இப்போதே நிறுத்தி விடுங்கள் என்று பேசுவது ஏழைகளுக்கு புளுத்த அரிசி போட்டு விட்டு தங்கள் பிள்ளைகளுகுகு பிரியாணி அரிசி வழங்கும் பகுத்தறிவு பாலிசி.
நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர், உங்களால் மட்டும் தான் இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்று கடவுள் உங்களுக்கு இந்த குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று உங்களுக்கு புனிதர் பட்டம் கட்டி சாமர்த்தியமாக அரசியலை ஆன்மீகமாக செய்கிற அத்தனையுமே போலிகள்.
ஒரு உயிரை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பக்திப் படம் காட்டுவார்கள். ஆனால் வரலாற்றில் மதவெறி கொண்டு இவர்கள் நடத்திய கொலைகள் எல்லாம் இவர்களின் அறவியலுக்குள் அடங்காது. ரூல்ஸ் எல்லாம் சாமான்யர்களுக்கு தான். எதுவும் இவர்களுக்குப் பொருந்தாது.
தனிநபர் சுதந்திரத்தில் கடவுள் பெயரைச் சொல்லி மூக்கை நுழைத்து நடத்தப்படும் அறவியல், ஒழுக்கவியல் எதுவும் கடவுளிடம் இருந்து வர முடியாது. இது தனிநபர் அறிவுச் செருக்கிலிருந்தும், ஆதிக்க மூர்க்கத்தனத்திலிருந்து ஆன்மீக வறட்சியிலிருந்து வெளிப்படுவது மட்டுமே. தனி நபர் கடவுள் நம்பிக்கையோடு தன் சூழ்நிலையில் எடுக்கிற அத்தனை முடிவுமே சரியான முடிவே. திருச்சட்டம் பேசி தீர்ப்பு எழுத இங்கு எவருக்கும் யோக்கியதை இல்லை. ஆதிக்க வெறி கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கும் கறை படிந்த பாவிகள் எழுதும் அடிமை சாசனமே சட்டங்கள். கடவுள் எந்த சட்டத்தையும் கொடுக்க வில்லை. ஒவ்வொருவரின் மனச்சான்றிலும் ஒருவர் எப்படி வாழ வேண்டுமென்று இயற்கையாகவே தன் குரலைப் பதிவு செய்திருக்கிறார்.
அப்படியானால் நிரந்தர தீர்வு என்ன? அரசியல் மாற்றமே இங்குள்ள அத்தனை பிரச்சனைகளுக்குமான நிரந்தர தீர்வு. அந்த நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வர இயலுகிற ஒற்றை மனிதன் என்கிற தன்னுடைய மாலுமியை தன்னால் இயலுகிற காலத்தில், அத்தனையும் பொருந்தி வருகிற அரசியல் சூழலில், தமிழகத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறவரே நாங்கள் முன்மொழிகிற கடவுள். அது நம் காலத்தில் நடக்கும் என்பதை நடக்கிற அறிகுறிகளை வைத்து கணித்துச் சொல்வதே நாங்கள் பேசுகிற கடவுள் நம்பிக்கை.