அஹிம்சையும் இம்சையும்
மார்ச் 16, 2022
உயிரோடு எரித்தாலும் சிங்கத்திற்கு இரையானாலும் அத்தனை வலியையும் ஏற்றுக் கொண்ட வேத சாட்சிகள் கிறிஸ்தவ அஸ்திவாரம் இல்லையா? இதனை மறுக்க முடியுமா? அவர்கள் என்ன கடவுள் அனுபவம் இல்லாமலா விசுவாசத்திற்காக உயிரைக் கூட விட துணிந்தார்கள்?
கடவுள் நம்பிக்கை
சாமான்யர், சைக்கோ கடவுள், போராட்டங்கள், அஹிம்சை
அப்பாவி சாமான்யர்கள் உயிர் விட்டார்கள் சரி, தூண்டி விட்ட உலக மகா சாட்சிகள் அந்த நேரத்தில் எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டார்கள்? போதிக்கிறவன் தானே முன்னே சென்று உயிரை இழந்திருக்க வேண்டும்? அப்பாவிகளை களமிறக்கி அவர்கள் தப்பி விட்ட மர்மம் என்னவோ? மற்றவர்கள் மட்டும் விண்ணகம் சென்றால் போதுமென்கிற பெருந்தன்மையா?
அவர்களும் உயிர் விட்டார்களே? என்று பல முரட்டு பக்தாள்ஸ் முட்டு கொடுக்கலாம். தப்ப வழியே இல்லாத சந்தர்ப்பத்தில் தான் கட்டி வைத்து கொல்லப் பட்டார்களே தவிர, அப்பாவிகளை போல வலிய வந்து மாட்டி கொண்டு தன்னார்வமாக சாகவில்லையே? வழி இல்லாமல் தானே சான்று பகர்ந்தார்கள்? தப்பிக்க வாய்ப்பு இருந்த அத்தனை சந்தர்ப்பத்தையும் முழுவதும் பயன்படுத்தி அதுவரை பிடிபடாமல் தப்பித்துக் கொண்டே தானே இருந்தார்கள்?
சிறையில் அடைக்கப் பட்ட இந்த விசுவாச குஞ்சுகளுக்கு மட்டும் வானதூதரே பறந்து வந்து கதவுகளைத் திறந்து விடுகிற மாயா ஜாலம் ஏன் நடந்தது? அவர்களுக்கு சிறைக்கதவு திறந்து விடுகிற ஏவல் செய்கிற வானதூதர் ஏன் சாமான்யன் உயிரோடு கொளுத்தப் பட்ட போது காப்பாற்ற வரவில்லை? அப்போது தூதருக்கு என்ன நரம்பு தளர்ச்சியா? கொள்ளைக்கார வெள்ளையனிடம் தப்பிக்க சாவர்க்கர் கடிதம் எழுதினால் கோழை, ஆனால் இவர்கள் சிறையில் இருந்து தப்பித்தால் அது கடவுளின் அளப்பரிய கிருபையா?
அடை காக்கும் தன் முட்டையை காக்க எதிரில் சீறுவது கருநாகமே என்றாலும் ஒரு கோழியே நகராத போது கடவுள் மட்டும் இந்த புனிதர்களை காப்பாற்ற வானதூதரை அனுப்பி விட்டு அப்பாவிகள் செத்து மடிவதை வேடிக்கை பார்த்தாரா? இப்படி இரத்தம் சிந்தி கடவுள் தான் சாக சொன்னாரா? சாமான்யனின் உயிரை வதம் செய்து தன்னுடைய மத நிறுவனத்தை கட்டுகிற அளவுக்கு பலவீனரா இந்த கடவுள்?
தன் கண் முன்னால் தான் படைத்த மக்கள் விசுவாசம் என்கிற பெயரில் உயிரோடு எரிந்து உயிர் விடுவதை விரும்புகிற கடவுள் எப்படி தந்தை கடவுளாக இருக்க முடியும்? அவர் சைக்கோ கடவுளாக தானே இருக்க முடியும்? கடவுள் சைக்கோவாக இருக்க முடியாது. அப்படி என்றால் அநியாயமாக வாழ்வு முடிந்து போன ஒருத்தருக்காக, வாழ வேண்டிய அப்பாவி பலரை புலிகள் கடித்து குதறி தின்ன, விசுவாசம் என்கிற பெயரில் பலியிட தூண்டி விட்ட இந்த பைத்தியங்கள் தானே சைக்கோவாக இருக்க முடியும்?
அஹிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி, ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி, விசுவாச புரட்சியாக இருந்தாலும் சரி, ஏன் கடவுள் பெயரைச் சொல்லி பல உயிர்கள் காவு வாங்கப்பட்ட சிலுவைப் போராக இருந்தாலும் சரி, அத்தனையிலும் சாமான்யர்களை முன் வரிசையில் நிற்க விட்டு காவு கொடுத்து பத்திரமாய் பதுங்கி நின்று குற்ற உணர்வு இல்லாமல் சாவதை வேடிக்கை பார்க்கிற கோழைகளே பெரிய தலைகள்.
சாமான்யனை காவு கொடுத்து விட்டு தன் உயிரை மட்டும் பத்திரமாக பாதுகாக்கிற ஏமாற்றுக் கார புரட்சி தலைவர்கள் அன்றல்ல, இன்றும் உண்டு என்பதை நிரூபிக்க கூடன்குளம், பெருமணல் போராட்டம், ஈழப்போர், ஸ்டொ்லைட், மாஞ்சோலை போன்ற நம் காலத்திய போராட்டங்கள் போதுமே?
உணர்ச்சி பொங்க பேசி சாமான்யனை மயக்கும் வித்தை தெரிந்த இந்த தலைகளை நம்பி போராட்டக் களம் சென்ற அப்பாவிகளே தப்பி ஓடாது சிறை சென்றனர். வழக்குகள் பெற்றனர். கடவுள் தந்த துன்பம் என்று பெருமை கொண்டனர். கடவுள் காப்பாற்றுவார் என்று காத்து நின்றனர். ஏமாற்றமே மிஞ்சியது என்றாலும் விண்ணக பரிசு காத்திருக்கிறது என்கிற மகிழ்வோடு வலிகளோடு மாண்டு போயினர்.
அஹிம்சையின் தந்தை காந்தியாம். உண்ணா நோன்பு காந்தி மட்டுந்தான் இருந்தாரா? அவரோடு இருந்து சொற்ப ஆயுளில் உயிர் விட்ட சாமான்யர் ஏன் நம் நினைவுக்கு வரவில்லை? இது தான் அஹிம்சை சமத்துவமா? அடுத்தவரை சித்ரவதை செய்து உயிரோடு வதைத்து கொன்று உலகளாவிய பெருமை கொண்ட தர்ம பிரபுவுக்கு பெயர் தான் மகாத்மாவா? தேச பிதா என்கிற பட்டத்தை சூட்டியது யார்? கடவுளா? அரசியலா?
அறவழிப் போராட்டத்திற்கு ஈடு இணையில்லை என்று புளுகுகிற போலி போராளிகள் ஜாலியான் வாலாபாக் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சாமான்ய உயிர்களுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார்கள்? அற வழிப் போராட்டத்தில் வலியில்லையா? உயிரிழப்பு இல்லையா? உடலை வதைத்தே சாகடிக்கும் கொடூர வேதனை இல்லையா? ஆனால் மகாத்மா உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் இங்கில்லையே?
எத்தனை மாசில்லாத இரத்தம் இந்த அஹிம்சை என்கிற இம்சையினால் சிதைக்கப்பட்டு வாழ்வை இழந்து இருக்கிறது? வெள்ளைக்கார பூட்ஸ் காலுக்கு இரையாகி இருக்கிறது? கண், காது, வாய், உதடு கிழிந்து முடமாகி இருக்கிறது? அவர்களின் பெயர்கள் ஏன் வரலாற்று புத்தகத்தில் வரவில்லை? வந்தால் அத்தனை பெயரும் வர வேண்டும். இல்லை என்றால் ஒரு பெயரும் வரக்கூடாது. அது தானே மக்களாட்சி சமத்துவம்?
கூடன்குளம் போராட்ட தலைகள் ஒருமுறை கூட சிறை சென்றதில்லை. ஆனால் அவர்களை நம்பி போராட்டத்தில் இறங்கிய சாமான்யர்கள்? பொய் வழக்குகள் புனையப்பட்டு பிணை மறுக்கப்பட்டு நிம்மதி இழந்து சிறையில் கிடந்து உடல் நலம் சிதைந்து நாதியற்று தானே இறந்தார்கள்? அது வலி இல்லையா?
ஸ்டொ்லைட் போராட்ட தலைவர்கள் அத்தனை பேரும் போராட்டம் தொடங்கும் முன்பே காவல் துறையில் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டார்கள். இவர்களை நம்பி குழந்தை குட்டிகளோடு போன சாமான்யரோ ஐஏஎஸ், ஐபிஎஸ் நோ்மைகளின் கண்காணிப்பில் காக்கா குருவிகள் போல சுட்டுத் தள்ளப் பட்டார்களே? அப்பாவிகளை நம் காலத்திலும் பலி கடா ஆக்கி வீர வணக்கம் பாடும் ஏமாற்று வேலை நடக்கவில்லையா?
இந்த அப்பாவிகளை தூண்டி விட்டு பலிகடா ஆக்கி விட்டு கலவரம் முடித்து வைத்த கையோடு அரசு அழைத்த சமாதான பேச்சு வார்த்தையில் மிச்சரும் காபியும் குடித்து விட்டு சமானதான தூதர்களாய் ஆலயத்தில் மன்னிப்பு பாடம் நடத்தும் புரட்சி பூசாரிகளை தூத்துக்குடியில் பார்க்க வில்லையா?
எதிர்த்து நிற்க தெம்பில்லாத கோழைகளே வாழ்வில் தனக்கு எதிராக குற்றம் செய்தவரை மன்னிப்பர். கடவுள் பெயர் கொண்டு ஏமாற்ற நினைக்கும் கயவர்களே மன்னிப்பு பற்றி பாடம் நடத்துவர். கடவுள் மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார். காத்திருந்து கருவருப்பவளே இந்த பாரத மண்ணின் கடவுள்.
தவறு செய்தவன் கீழை நாட்டு சாமான்யனாக இருந்தாலும் சரி, மேலை நாட்டு அதி மேதாவியாக இருந்தாலும் சரி,நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வழிமொழிந்த நக்கீரனின் வரிகளே இந்த பாரத மண்ணின் வாழ்வியல். எனவே மன்னிப்பு தமிழில் மட்டுமல்ல, தரணியிலும் தகுதியில்லா வார்த்தை.