காட்சிகள் உண்மையா?
மார்ச் 25, 2022
உலகத்தில் கடவுள் இதுவரை தோன்றியதும் கிடையாது. காட்சி கொடுத்ததும் கிடையாதுன்னு சொல்றீங்க. ஆனா எத்தனையோ இடங்களில் ஐரோப்பாவில் பெண் ஒருவர் காட்சி கொடுத்து இருக்காங்களே? சீக்ரெட் சொல்லி இருக்காங்களே?
கடவுள் நம்பிக்கை
உளவியல், இயற்கை விதி, பாத்திமா
கத்தோலிக்க மத நிறுவனம் இந்த பெண் தோன்றியதான எந்த காட்சியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. Worthy of Belief – என்கிற வார்த்தையை தான் இதற்கு பயன்படுத்துகிறார்கள். அதாவது காட்சி வந்ததாக சொன்னவர்களிடம் இருந்து “கேட்டு ஆராய்ந்து அறிந்து பார்க்கிற போது அது நம்பும் படியாக இருக்கிறது” என்றே சான்று தருகிறார்கள். நம்புகிறோம் என்று சொல்ல வில்லையே?
நம் மக்கள் காட்சி என்று சொன்ன உடனே அது ஏதோ படத்தில் பார்ப்பது போல திரை இல்லாமல் கடவுள் கண்ணுக்கு தெரிவார், சட்டை அணிந்து இருப்பார், சேலை கட்டி இருப்பார், நகைகள் இருக்கும், கை, கால் இருக்கும், எல்லா மொழியும் பேசுவார் என்று மாயக் கட்டுக்குள் மயங்கி கிடக்கிறார்கள்.
இயற்கை விதிகளுக்கு முரணாக இந்த உலகத்தில் இப்படி எதுவும் நடக்கவே முடியாது. கடவுள் மேலே வானத்தில் ஒரு கோட்டை கட்டி அவ்வப்போது பூமிய சுத்தி வர்ற பறக்கும் தட்டு கதை எல்லாம் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் வியாபார உக்தியே.
காட்சி என்பது Hallucination. அந்த காட்சியை பார்க்கிறவர் உளவியலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இதுவரை காட்சி கண்டவர்களின் பிண்ணனியை ஆராய்ச்சி செய்தவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். காட்சி என்பது அவர்களின் கற்பனை. மன அழுத்தம், மன உளைச்சலில் உதிக்கிற உளவியல் தொடர்பு கொண்டது.
ஏன் பெண்கள், குழந்தைகளுக்கு மட்டுமே காட்சி வருகிறது? ஏன் ஐரோப்பாவில் மட்டுமே காட்சி வருகிறது? நம் கிராமங்களில் யாராவது சாமியாடினால் மூட நம்பிக்கை, ஆனால் வெளிநாட்டில் யாராவது இப்படி நாடகமாடினால் அறிவியல் உண்மையா? கடவுளுக்கு தமிழ்நாடு கண்ணுக்குத் தெரியாதா? தமிழகத்தில் நடந்த எந்த காட்சியும் இப்படி கூட அங்கீகரிக்கப் பட்டது இல்லை என்பது கூட பல முரட்டு பக்தாள்ஸக்கு தெரியாதா?
நம் காலத்தில் கடைசியாக போர்ச்சுகல் நாடு, பாத்திமா நகரில் 1917, அக்டோபர் 13 ம் நாள் எல்லாருக்கும் காட்சி தருவதாக பெண் ஒருவர் சொன்னார் என்று மூன்று சிறுவர்கள் சொன்னதை நம்பி கிட்டத்தட்ட 70,000 பேர் ஒரு இடத்தில் கூடினார்கள். பத்திரிக்கை புகைப்பட நிபுணர்களும் இதில் அடக்கம். ஆனால் கடைசி வரை சிறுவர்களைத் தவிர அந்த பெண் யாருடைய கண்களுக்கும் தெரியவில்லை.
சிறு குழந்தைகளுக்கு காட்சி தருவதற்கு பதிலாக ஒரே ஒருமுறை ஒட்டு மொத்த உலகத்திற்கும் காட்சி தந்தால் இங்குள்ள அத்தனை பேரும் ஒற்றை நிமிடத்தில் நம்பி திருந்தி வாழ ஆரம்பித்து விடுவார்களே? ஏன் இந்த கண்ணா மூச்சி ஆட்டம் ஆட வேண்டும்? இது பொய் என்பதற்கு இந்த ஒற்றை ஆதாரம் போதாதா?
அந்த தொடர் காட்சியில் ஒரு குழந்தையை தவிர மற்ற இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலேயே இறந்து போவார்கள் என்று அந்த பெண் சொன்னாராம். குழந்தைகள் இறந்து போவார்கள் என்று சொல்ல தெரிந்த அந்த பெண் கடவுளுக்கு அந்த குழந்தையை காப்பாற்றவே பவர் இல்லாதபோது கோடி பக்தர்கள் விரும்பியதைக் கேட்டால் கொடுப்பார் என்பதை எப்படி நம்ப முடியும்?
அறிவியல் வளராத காலத்தில் அனுதினமும் வந்த காட்சிகள் இப்போது வறட்டு கவுரத்திற்காக கூட வரவில்லையே? அறிவியலை, பகுத்தறிவைப் பார்த்து கடவுளுக்கும் பயமா? அல்லது உளவியல் நோயைத் தீர்க்க ஏராளமான சைக்காலஜிஸ்ட் தோன்றி விட்ட தெளிவா?
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே தெரிய முடியாதே? அப்படி தெரிந்தால் மனிர்களுக்கு எங்கே சுதந்திரம் இருக்க முடியும்? கடவுள் இயக்கும் பொம்மைகளாக தானே இருக்க முடியும்? நடப்பதற்கு மனிதர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுமே?
காட்சி வந்த இடங்கள் பிரபலம் ஆனதால் ஒவ்வொரு திருவிழாவிலும் கூட்ட நெரிசலால் நசுங்கி இறக்கும் விபத்து காட்சிகளுக்கு எந்த கடவுள் வந்து பொறுப்பு ஏற்க போகிறார்? பாத யாத்திரை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்த குடும்பங்களுக்கு இந்த காட்சி கொடுத்த கடவுள் என்ன ஆறுதல் சொல்ல போகிறார்?
காட்சி என்பது வெறும் உளவியல் சார்ந்த பிரச்சனையே. அது மூட நம்பிக்கையே. அது வியாபாரத்திற்காக, அரசியலுக்காக ஊக்கம் தரப்படுகிறது. அதன் மூலம் டாலர்களையும், தண்ணீரையும் விற்று வருவாயை பெருக்க நல்ல வாய்ப்பு இருப்பதால் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
காட்சியை நம்பி புளங்காகிதம் அடைகிற இந்த பக்த கோடிகள் யதார்த்த வாழ்வில் பசியால், பட்டினியால் மடியும் ஏழைகளின் கோர காட்சிகளைக் கண்டு கடுகளவும் மனம் இறங்குவதில்லை என்பதே இவர்கள் எவ்வளவு பெரிய விசுவாச புளுகர்கள் என்பதற்கு சாட்சி.