யார் பாவிகள்?

யார் பாவிகள்?

யார் பாவிகள்?

ஏப்ரல் 16, 2022

உலகத்தின் ஒட்டு மொத்த பாவத்தையும் இயேசு சுமந்து உலகத்தை இரட்சித்தார் என்கிற பல்லவியை கிறிஸ்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டாக வில்லுப் பாட்டாக பாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்த உலக மக்களும் பாவம் செய்தவர்களா? என்ன பாவம் செய்தார்கள்? பாவத்தை மீட்டு விட்டார் என்றால் ஏன் இன்னமும் இந்த உலகில் தீமை பாய் விரித்து படுத்துக் கிடக்கிறது?

கடவுள் நம்பிக்கை

பாவிகள், இயேசு, சிலுவை, துன்பம்

இயேசு பிறந்தார், வாழ்ந்தார் என்பது வரலாறா? புராணமா? என்கிற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். அவர் வாழ்ந்தார் சரி, மக்களுக்காக வாதாடினார் சரி, ஆனால் மக்களின் பாவங்களுக்காக தான் அவர் இறந்தார் என்பதை சொன்னவர் யார்? பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் தனக்கு இருப்பதாக தானே அவரே சொன்னார்? இருந்திருந்தால் அப்போதே மக்களுக்கு மன்னிப்பு வழங்கி கடவுளுக்கும் மக்களுக்கும் சமரசம் ஏற்படுத்தி இருக்கலாமே? ஏன் செம்மறியாக பலியிடப் பட்டார்?

நான் தான் கடவுளின் மகன், இந்த உலகத்தை கடவுள் பாவத்திலிருந்து மன்னித்து விட்டார் என்று சொல்ல சொன்னார். சொல்லி விட்டேன் என்று முடிவுரை எழுதி முடித்திருக்கலாமே? இப்போதும் 2000 ஆண்டாக அங்கே சொர்க்கத்தில் வலதுபுறம் அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஏன் இந்த கண்ணா மூச்சி ஆட்டம்? மக்கள் இவ்வளவு துன்பம் படுகிறபோது இன்னமும் கடின உள்ளம் கொண்டு இருக்கிறவர் கடவுளாக இருக்க முடியாதே? அப்படியானால் இயேசு பற்றிய இந்த புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியது யார்? என்கிற கேள்வி எழும் தானே?

இயேசுவே இவைகளைச் சொன்னதாக கதை சொன்னவர்களும், அதை திரைக்கதையாக எழுதியவர்களும் தங்கள் காலத்திலேயே, அதாவது முதல் நூற்றாண்டிலேயே இறந்த இயேசு மீண்டும் வருவார் என்று தானே கிளைமேக்ஸ் சொன்னார்கள்? வந்தாரா? இரண்டாயிரம் ஆண்டு ஆகியும் இன்னமும் மாநாடு சிம்பு படம் போல ரீப்பீட்டாக ஒரே சீன் தான் வருடா வருடம் காட்சியாக நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒன்று போதாதா, இவர்கள் எப்படிப்பட்ட புளுகணிகள் என்று நிரூபிக்க? இந்த புதிய கடவுளைப் படைத்தது யார்?

அடுத்து அவருடைய சிலுவை மரணத்தில் அப்படி என்ன தான் கண்ணீர் வடிக்கிற அளவுக்கு இருக்கிறது? அதுவும் புரியவில்லை. தியேட்டரில் இந்த படத்தை பார்த்தாலே இந்த கிறிஸ்தவ பக்த கோடிகள் விடுகிற கண்ணீரில் உலகத்தில் இனி தண்ணீர் பஞ்சமே வர முடியாது போலும். தாரை தாரையாக வழிந்து ஓடுகிறது. அதிலும் இந்த முரட்டு பக்தாள்ஸ் அவரே சிலுவையில் இருந்து இறங்கி வர முயன்றாலும் விட மாட்டார்கள் போலவே!

மாசு மருவற்றவர் நமக்காக பாடுபட்டார் என்கிறார்கள். இந்த உலகத்தில் மாசுமருவற்ற மனிதர் எவருமே செத்தது கிடையாதா? நோ்மைக்காக அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவிகளை நம் ஊரில் கேட்டது இல்லையா? வாழ்க்கை முழுவதும் சிறை, போராட்டம், வழக்கு என்று மக்கள் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்து இறந்தவர் ஒருவர் கூட நாம் செய்திகளில் படித்தது இல்லையா? பின் இந்த சிலுவை சாவில் அப்படி என்ன தான் இருக்கிறது?

ஒருநாள் முழுவதும் சிலுவை மரத்தில் வேதனை அனுபவித்தார் என்பதால் அவருடைய உடல் வலி பெரிதா? இயேசு காலத்தில் வேறு எவருமே சிலுவைச் சாவை அனுபவித்தது இல்லையா? உரோமையர்கள் தீர்ப்பிட்ட அத்தனை பேருமே குற்றவாளிகள் என்று நம்புகிற அளவுக்கு பகுத்தறிவு மங்கி விட்டதா? இன்னும் பல அப்பாவிகள் அநியாய தீர்ப்பிற்கு இறந்த கதைகள் பல இருக்கிறதே? மூன்று நாட்கள் சிலுவையில் கிடந்து கழுகுகள் கண்களைக் குத்தி தின்று அழுகும் நிலை வரை பிணங்கள் கிடப்பது தானே வாடிக்கை? ஆனால் இயேசுவுக்கு அந்த கொடுமை கூட நிகழவில்லையே? மரியாதை அடக்கம் தானே கிடைத்தது? பின் எப்படி இவருடைய துன்பம் கடின துன்பம்?

ஒருவேளை காட்டிக் கொடுத்தது இவருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியா? வரலாற்றில் இதுவரை, கூட இருந்தவர்களால் காட்டிக் கொடுக்கப் பட்டு அநியாயமாக செத்தவர் இல்லையா? எந்த குற்றமும் அறியாத மழலைகள் யாரோ செய்த தவறுக்காக எய்ட்ஸ் நோயாளியாக வாழ்க்கை முழுவதும் ரணம் அனுபவிப்பது இதை விட கொடியது இல்லையா?

சர்க்கரை வியாதி வந்து குழந்தை பருவத்திலிருந்து மூன்று வேளையும் இன்சுலின் ஊசி செலுத்தும் பரிதாப நிலையில் உள்ள சிறு பிள்ளைகளின் உடல் வலியோடு கூட இந்த இயேசுவின் ஒரு நாள் பாடுகள், ஒப்பீடு செய்ய தகுதியில்லாது இருக்கிறதே? டயாலிசிசிஸ், கேன்சர் என்னும் ரண வியாதி வலியை பல ஆண்டுகளாக அனுபவிக்கிற ஒரு அப்பாவியின் கத்தலை எப்போதுமே கேட்டது கிடையாதா? அதை எல்லாம் சாதாரணமாக கடந்து செல்லும் இந்த கிறிஸ்தவ பக்த கோடிகளுக்கு இதில் கண் கலங்க என்ன தான் இருக்கிறது?

நம் பாவத்திற்காக இறந்தார் என்கிறார்கள். யார் பாவம் செய்தது? இந்தியாவில் வாழும் ஏழை, எளிய மக்கள் என்ன பாவம் செய்து விட்டார்கள்? எப்போது பாவம் செய்தார்கள்? உழைக்கிறார்கள், உண்கிறார்கள். இந்த பாரத தேசத்தின் மக்களுக்கு பாவம் செய்வதற்கு, நேரம் கூட கிடைப்பது இல்லையே? பின் எங்கிருந்து வந்தது பாவம்? ஆதாமும் ஏவாளும் புராண கதை தானே?

கானான் தேசத்து மக்களை நயவஞ்சகமாக விரட்டி அடித்து அதனையும் கடவுள் செய்ய சொன்னார் என்று கடவுள் மீதே பழி போட்டு அடுத்தவர் நாட்டை கைப்பற்றிய யூதர்களைப் போல உண்ட வீட்டிற்கு ரெண்டகமா செய்தார்கள் நம் பாரத மக்கள்? மண், பெண், பொன்னுக்காக அரக்க குணம் படைத்த அலெக்சாண்டர், நெப்போலியன் போல வம்புக்கு படையெடுத்து பல பெண்களின் தாலிகளையா அறுக்க அலைந்தார்கள்? அடுத்த நாடுகளைச் சுரண்டியா தின்றார்கள்? இந்து கடவுள்கள் மட்டும் தான் உண்மையான கடவுள் என்று அடுத்த நாட்டினரை மத மாற்றமா செய்தார்கள்?

எவனோ ஒருவன் பாவம் செய்கிறான் என்றால் அந்த கடவுள் அவனைத் தண்டிக்க வேண்டியது தானே? எதற்காக இதில் சம்பந்தமே இல்லாத இந்திய நாட்டு மக்களுக்கு பொதுப்படை பாவ பட்டம்? ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தும் ஐரோப்பாவில் போப்பாண்டவர்கள் இறையாட்சியையா கொண்டு வந்தார்கள்? ஏழைகளைச் சுரண்டி விண்ணுயர கோயில்களை மட்டுந்தானே கட்டினார்கள்? நரகம் என்கிற கற்பனை கதையை உருவாக்கி, அவர்களைப் பயமுறுத்தி பணத்தை தானே பறித்தார்கள்? அப்போதும் கடவுள் கத்தாத செம்மறியாக தானே இருந்தார்? துவம்சம் செய்திருக்க வேண்டாமா?

அதிகாரத்தின் தலையில் உட்கார்ந்து கொண்டு ஒரே ஒரு அயோக்கியனும், அவன் கூட இருக்கிறவனும் செய்கிற தவறுக்கு ஒட்டுமொத்த உலக மக்களையும் பாவிகளாக்குவது என்ன ஒரு அநியாயம்? ஒருவனைத் திருத்துவதற்காக தொண்ணூற்று ஒன்பது பேரை பலி கொடுப்பது என்ன ஒரு அதர்மம்?

அப்பாவி ஒருவன் தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக அத்தனை பாவிகளையும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி விட வழி சொன்ன காந்தியின் அஹிம்சை தத்துவம் இம்சையான அரக்க தத்துவம் தானே? இன்னமும் சட்டத்தில் அப்பாவிகளே கொடூரமாக சித்ரவதைக்கு ஆளாகி நொந்து போகிறார்கள். அனைத்து கேடிகளும் தப்பி விடுகிறார்களே?

இந்த பாரத நாட்டு மக்கள் எவரும் எக்காலத்திலும் பாவம் செய்தது கிடையாது. அவர்களை பாவிகள் என்று முத்திரை குத்த இந்த மத நிறுவன தலைவருள் ஒருவருக்கும் யோக்கியதையும் கிடையாது. அப்படியே குற்றம் செய்திருந்தாலும் ஒத்துக் கொள்கிற மனத் துணி கொண்டவர்கள் பாரத மக்கள். சட்ட ஓட்டையைப் பயன்படுத்தி தப்பிக்க நினைக்காத வெள்ளேந்திகள் இந்த எளியவர்கள். தவறு செய்தால் குற்ற உணர்வினால் தற்கொலையே செய்து கொள்ளும் வீரர்கள் இந்த நாட்டின் மக்கள்

ஒருவேளை நம் காலத்தில் இந்த இயேசுவின் பாடுகள் சாதி, மத, பதவி, பண வெறி பிடித்து மக்களை துண்டு துண்டாக்க துடிக்கும் கத்தோலிக்க மத நிறுவனங்களின் தலைகளுக்கு கச்சிதமாக பொருந்தலாம். பல தெய்வங்களை நம்புகிற மக்கள் நடுவில் இந்த நாகரீக காலத்திலும் மைக், செட் வைத்து ஒரே கடவுளை விசுவசிக்கிறேன் என்று சொல்ல கட்டாயப் படுத்தும் மத நிறுவனத்திற்கு பொருந்தலாம்.

கிறிஸ்தவ மக்களின் உள்ளத்தில் மதவெறியை ஏற்றி தோ்தல் காலத்தில் மட்டும் அரசியல் வெறி பிடித்து திரியும் மத நிறுவன தலைவர்களுக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் பொருந்தலாம். தமிழகத்தில் ஆள்கிற அதிகாரத்தில் இருந்த திராவிட தலைவர்களுக்கு பொருந்தலாம். ஏழை, எளிய இந்த மண்ணின் மக்களுக்கு எக்காலத்திற்கும் பொருந்தவே பொருந்தாது.

கடவுளுடைய மகனையே கொலை செய்ய துணிகிற மிருக குணமோ, செய்த பழியை மறைக்க அதனை புனித கொலையாக மாற்றும் அறிவுச் செருக்கோ, அதனை வைத்தே பல்லாயிரம் ஆண்டுகள் மக்களை அடிமைப் படுத்தி கொத்தடிமையாக்கி வைக்கும் சூழ்ச்சியையோ இந்த பாரத மண்ணின் மக்களால் தலை கீழாக நின்றாலும் செய்ய முடியாது. அது தான் இந்த ஆன்மீக மண்ணின் மகத்துவம். இந்திய மக்கள் பாவிகளும் அல்ல. இவர்களுக்காக கடவுள் மனமிரங்கி இறங்கி வந்து இறக்க வேண்டிய அவசியமும் இல்லை.