முடக்குவாத மார்க்கங்கள்

முடக்குவாத மார்க்கங்கள்

முடக்குவாத மார்க்கங்கள்

ஏப்ரல் 26, 2022

அறிவியல் வளராத மூட நம்பிக்கை நிறைந்த உலகில் ஒருவர் கற்பித்த சிந்தனைகளை, போதித்த மார்க்கங்களை அறிவியல் வளர்ந்திருக்கிற நம் காலத்திற்கான இலட்சிய சிந்தனைகளாக (Ideals) ஏற்றுக் கொள்ள முடியுமா? இது சிந்தனை முடக்குவாதம் இல்லையா? இவைகள் நம் அறிவியல் காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகள் இல்லையா? நவீன காலத்துக்கு இந்த பழைய தோற்பைகள் எதற்கு?

நாட்டு நடப்புகள்

ஆசை, புத்தர், இயேசு, நபி, போதனை

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று போதித்த புத்தரின் அறிவை நம் காலத்தில் எப்படி மெச்சுவது என்கிற கேள்வி நியாயம் தானே? ஆசை எப்படி துன்பத்திற்கு காரணமாக முடியும்? அரசாள்கிற ராஜாவுக்கும் குடிசையில் வாழ்கிற ஏழைக்கும் ஒரே ஆசையா இருக்க போகிறது? ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் தனிப்பட்ட அனுபவம். இதனை உலக பொது மொழியாக போதிக்கும் மூர்க்கத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தன் மக்களுக்கான உணவு, உடை, இருப்பிடம் கிடைத்து நோயின்றி வாழ வேண்டும் என்று ஓர் அரசராக புத்தர் ஆசைப் பட்டிருந்தால் இவருடைய ஆட்சியில் அத்தனை மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பார்களே? அந்த ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று சொல்ல வருகிறாரா? அந்த நல்லாசை கூட படாது சுயநல துறவறம் மேற்கொண்ட இவரை எப்படி நம் காலத்தில் ஒரு மகானாக ஏற்றுக் கொள்ள முடியும்?

தங்களை அரசராக ஆள முழு தகுதி உள்ளவராக இருக்கிறார் என்று மக்களே முடிவு செய்து அரசராக்க முயன்றாலும் அவர்களிடம் இருந்து விலகி தப்பி ஓடி என்னுடைய அரசு இந்த உலக அரசு போன்றது அல்ல என்று புறக்கணித்து, இல்லாத மாய உலக விண்ணக கதையைச் சொன்ன கிறிஸ்தவர்களின் தலைவராம் இயேசு சொல்வது அத்தனையும் அகில உலக சித்தாந்தம் என்று போதிப்பது கேலியாக தெரிய வில்லையா? பின் கடவுள் இந்த உலகத்தை எதற்காகப் படைத்தார் என்ற கேள்விக்கு இந்த இயேசு என்ன பதில் சொல்ல போகிறார்?

இந்த உலகம் நிலை இல்லாதது, மேலே உள்ள சொர்க்கமே நிரந்தர உலகம் என்று போதிக்கிற சிந்தனை அகோரமான சிந்தனை தானே? இது எளியவர்களை அதிகாரம் மூலம் அடிமைப் படுத்தி மகிழும் அதிகார வர்க்கத்திற்கு முட்டுக் கொடுக்கும் சிந்தனை அல்லவா இது? இது தான் விதி, இதை தான் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று இவர் கற்பித்தது மூட நம்பிக்கை சிந்தனை தானே? இருக்கிற உலகத்தில் வாழ வழி கேட்டால் இல்லாத ஊருக்கு குறி சொல்வது என்ன ஞானமோ, புரியவில்லை.

விண்ணக பரிசு பெற மண்ணக வாழ்வை தியாகம் செய்வோம் என்பது கொடூரமான போதனை இல்லையா? இந்த மகான்களின் வரிசையில் உதித்து புதிய மார்க்கத்திற்கு வழி சொன்ன முகம்மது நபியின் போதனைகள் இன்னமும் இந்த சமூகத்தில் எவ்வளவு அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன என்பதை அறியாத தலைமுறையா நாம்?

இவர்களின் சிந்தனைக் குறைபாடுகளை சுட்டிக் காட்ட கூடாதா? இவர்களின் போதனையில் தவறே இருக்க முடியாதா? இவர்களைக் கடந்து சிந்திக்க கூடாதா? நம் காலத்திற்கான மாற்றுச் சிந்தனையை, மாற்றுப் பார்வையைக் கொடுக்க முனைந்தாலே அது தப்பறைக் கொள்கையா? உடனே அது கடவுள் மறுப்புக் கொள்கை ஆகி விடுமா? இவர்களின் கொள்கைகளில் இருக்கிற முரண்பாட்டைச் சுட்டிக் காட்டினாலே கடவுள் மறுப்பு பேசுவதான அர்த்தமா? பாமரர்களின் வலியை உணர்ந்து கேள்விகள் கேட்டாலே அது சூன்யக்கார போதனையா? மக்களை ஏழையாக வருத்தி உயிரோடு 20 நூற்றாண்டு காலமாக சாகடிப்பது தான் இவர்களின் புனித போதனையா?

ஒன்று புத்தரும், இயேசுவும், நபியும் தவறாக சிந்தித்திருக்க வேண்டும். அல்லது இவர்களது பெயர்களை வைத்து இவர்களின் காலத்திற்கு பிறகு மற்றவர்கள் அரசியல் செய்திருக்க வேண்டும். இது நியாயமான கேள்வி இல்லையா? எது நடந்திருந்தாலும் இவர்களின் போதனை நம் காலத்திற்கானது அல்ல என்பதும், அது அவர்களது காலத்தோடு முடிந்து விட்டது என்பதும் புரிய வில்லையா? இவர்களின் போதனை ஒட்டு மொத்த உலக மொழி அல்ல என்பதும் இன்னமும் தெளிவாக வில்லையா? இவர்கள் விட்டுச் சென்ற மார்க்கங்கள் நிகழ்த்திய கோர கொலைகளுக்கு, இவர்களை நம்பி உயிரை மாய்த்துக் கொண்ட அப்பாவி உயிர்களுக்கு இன்னமும் முட்டுக் கொடுக்கும் சிஷ்ய கோடிகள் பொறுப்பு ஏற்க முன் வருவார்களா?

இந்த மார்க்கங்களை வைத்து எத்தனை உயிர்கள் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கின்றன? சிலுவைப்போர், காலனி வெறி, பௌத்த துறவியரின் வெறியாட்டம் – இந்த சித்ரவதை, கொடிய மரணத்திற்கு இந்த மகான்கள் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? சட்டப்படி இவர்கள் குற்றவாளி இல்லை, ஆனால் தர்ம தேவதை முன்னால் இவர்களும் குற்றவாளிகள் அல்லவா? உண்மையில், இவர்கள் உலகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்ற மகான்கள் அல்ல. மார்க்கங்கள் என்ற பெயரில் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப் பட வழி சொன்னவர்கள் என்று குற்றம் சுமத்துவதில் உண்மை இல்லாமல் இல்லையே?

இப்படி ஆளாளுக்கு பரப்பிச் சென்ற இது போன்ற மார்க்கங்களே இன்றைக்கு காலைச் சுற்றிய நச்சுப் பாம்பாக நாம் வாழும் உலகில் கோடி உயிர்களை சாகடித்துக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஏதோ ஒரு சிந்தனை பிண்ணனி கொண்ட உலகத்தில் பிறந்த இவர்களின் போதனையை உலக பொதுமறை நூலாகவும் ஒட்டு மொத்த அறவியல் நூலாகவும் அண்ட சராசரிக்கும் ஒரே ஆன்மீக நூலாகவும் நிர்பந்திக்கும் மத நிறுவன அரசியல் கொடூரத்தின் உச்சகட்டம் இல்லையா?

இந்த மார்க்கத்திற்கு அச்சாணி இட்டவர்களின் போதனையை இவர்களின் சிஷ்ய கோடிகளே புரிந்து கொள்ள வில்லை என்பதற்கான சான்றுகளே இவர்களோடு முரண்பட்ட மற்றவர்களை சபித்ததும், எதிர்த்தவர்களை எரித்ததும், ஏற்றுக் கொள்ளாதவர்களை கொலை செய்ததும். இவர்களுக்கு முட்டுக் கொடுக்க துணிகிற அத்தனை பேருக்கும் இதில் பழிபாவம் இல்லை என்று அவ்வளவு எளிதாக கை கழுவி விட முடியாதே? கறை படிந்த இரத்த குற்றப் பழியில் பங்கு இல்லாமல் போய் விடுமா?

வரலாற்றை விடுவோம், இப்போதாவது திருந்தி விட்டார்களா? இவர்களின் முட்டாள்தனமும் மூர்க்கத்தனமும் முடிந்து விட்டதா? இல்லையே? நம் காலத்திலும் இந்த கொடூர நாடகத்தை சீரியலாக நடத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்? நம் காலத்தில் நடந்த அத்தனை போர்களிலும் மௌன ராகம் பாடி விட்டு உக்ரைனுக்கு தம்பட்டம் அடிப்பதிலும், ரஷ்ய எதிர்ப்பு நிலையிலும் அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல மேல்வர்க்க ராஜ தந்திரிகளுடனும் கைகோர்த்து திரிவது நம் ஊடக கண்களுக்கு தெரிய வில்லையா?

இலங்கையில் தமிழர்களை அழிக்க ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஆயுதம் வழங்கியபோது இந்த இறைவாக்கினர்கள் குறட்டை விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனரா? இப்போதும் ரஷ்ய – உக்ரைன் போரில் உலக நாடுகளின் ஆயுதம் வழங்கலுக்கு ஒரு எதிர்ப்பும் பதிவாகவில்லையே? போரை முடிவுக்கு கொண்டு வர இவர்கள் விரும்ப வில்லை என்பதும், இந்த போரே இவர்கள் நடத்தும் நாடகம் என்பதும் இப்போதும் புரியவில்லையா?

போரே மனித குல எதிரி என்கிறோம். அதையும் நீதிப் போர் (Just War), ஜிகாத் புனிதப் போர், அஹிம்சை போர் என்று எளியவர்களை உயிரோடு வதம் செய்து இம்சித்துக் கொல்லும் போர்களை நியாயப்படுத்த இவர்களின் Great புனிதர்கள் புத்தகமாக எழுதி தள்ளியிருக்க வில்லையா? அதாவது இவர்கள் எதைச் செய்தாலும் அது நீதிக்கான போர், அடுத்தவர் எதைச் செய்தாலும் அது அநியாய போர். இது தான் இவர்களின் எளிய சட்ட வரையறை.

எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லுங்கள், வழிகாட்டுங்கள் என்று சில வாசகர்கள் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே வழிகாட்டுகிறோம், புதிய மார்க்கத்தைக் காட்டுகிறோம் என்று சொன்னவர்களை வைத்து தான் தான் வரலாறே இரண்டாகப் பிளந்து கேவலமாக காட்சி தருகிறது. இது போதாது என்று நாங்களும் சமூக சீர்திருத்தவாதி, சமய சீர்திருத்தவாதி என்று சொல்லி மக்களை சிரச்சேதம் செய்து கொல்ல விரும்ப வில்லை. எங்களைப் பின்பற்றி அவர்கள் படும் துயரத்திற்கு பொறுப்பு ஏற்கும் தைரியமும் எங்களுக்கு இல்லை. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் சுதந்திரம்.

இருந்தாலும் சொல்கிறோம்: உங்கள் மனச்சான்றே உங்களின் வழிகாட்டி. ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் தனித்துவம் மிக்கது. எந்த குழுவோடும் இணைந்து அடிமையாக மாறாதீர்கள். தாமரை மலர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருங்கள். காலம் வருகிற போது காலை சுற்றியிருக்கிற இந்த நச்சுப் பாம்புகளை துணிந்து வெட்டி எறியுங்கள். அதுவரை பொறுமையாக இருங்கள். இது தான் நாங்கள் பேசுகிற ஆன்மீக அரசியல். அதற்கான வாய்ப்பு நம் காலத்தில் கிடைக்கும் என்பதே நாங்கள் முன் மொழிகிற கடவுள் நம்பிக்கை. அது மாயா ஜாலமாக நடக்காது, இயல்பாக நடக்கும், இயற்கையாக நடக்கும். நீங்கள் ஆச்சரியப் பட்டு வியந்து பார்க்கிறபடி நடக்கும். இது ஆரூடம் அல்ல, ஆன்மீகம். நடப்பதற்கு முன்னால் பதிவாக செய்யப் படும் ஆதாரம்.

சாதி, மதம், இனம், மொழி, மார்க்கம், கட்சி, நாடு, கண்டம், யூனியன் என்று குழுக்களை உருவாக்குவதே ஆதிக்க வெறி பிடித்த மனித மூளையில் உதிக்கும் மிகப்பெரிய அரசியல் சதி, அடிமைத் தனத்தின் பிறப்பிடம், கொத்தடிமைகளின் கூடாரம். சுதந்திர பறவையாய் இருங்கள். உங்கள் மனச் சான்றிற்கு மட்டும் அடிமையாக இருங்கள். நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்விற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும். எந்த மார்க்கமும் உங்களுக்கு உதவ முடியாது. சிந்தனைவாதி, சமூக ஆர்வலர், Motivation பேச்சாளர், Inspirational எழுத்தாளர், கூத்தாடியர், திராவிட அரசியல்வாதி, ஆன்மீகவாதி, விளையாட்டு வீரர் – அத்தனை பேரின் குறிக்கோள் பதவி, பணம், அதிகாரம் மற்றும் சுயநலனே.

ஒழுக்க கேடான வாழ்க்கை வாழ்ந்து ஓய்வு காலத்தில் ஒழுக்க போதனை போதிக்கிறவர்களே வரலாற்றில் அதிகம். அது தான் நிகழ் காலத்திலும் தொடர்கிறது. அறிவுரை கூறும் அத்தனை பேரும் வாழ்வில் செய்யாத அநியாயங்கள் இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவனுக்கு ஒரு நீதி கற்பிக்கிற வகையறாக்கள். உங்களைச் சுற்றிலும் கேட்கிற அத்தனை குரலையும் கேளுங்கள். முடிவை உங்கள் மனச்சான்று சொல்கிறபடி உங்கள் சூழ்நிலையில், பாம்பைப் போல விவேகம் உள்ளவர்களாக, புறாவைப் போல கபடற்றவர்களாக துணிந்து எடுங்கள். அதுவே நம் பாரத நாட்டு ஆன்மீகத்தின் ஆயிரங்கால தர்ம போதனை.