சினிமா ஜீவிகள்

சினிமா ஜீவிகள்

சினிமா ஜீவிகள்

மே 02, 2022

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததா? நல்லவற்றை எடுத்துக் கொண்டு கெட்டவற்றை ஒதுக்கி விட்டால் வாழ்க்கை சரியாகி விடுமா? இருளிற்கு பின் ஒளி உண்டு என்றால் இருள் சாபக்கேடா? சாதனை படைக்க பல சோதனைகளைக் கடந்து தான் ஆக வேண்டுமா?

நாட்டு நடப்புகள்

ஆசைகள், கூத்தாடிகள், சினிமா, விளம்பரம்

வாழ்க்கை என்பது இன்பம் மட்டுந்தான். அதில் துன்பத்தை நுழைத்தது சில அற்ப மனிதர்களின் பேராசையே. தமிழகத்தில் இந்த பேராசையை நுழைத்த திராவிட அற்ப மனிதர்களின் நிரந்திர கைக்கூலிகளே தமிழ் சினிமா உலகின் அத்தனை பிரபலமான கூத்தாடிகளும். இவர்களும் தமிழகத்தின் அத்தனை சீர்கேட்டிற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்களே. பழி பாவ குற்றச் செயல்களின் மூலப் பத்திரங்களே.

உழைத்துச் சம்பாதிக்க வக்கற்று தங்கள் உடல் அழகையும், நடிப்பையும் காட்டி அடுத்தவர் உழைத்துச் சோ்த்த பணத்தை உருவி, அதில் உட்கார்ந்து தின்னும் இந்த பொழுது போக்கு மயக்கிகளே கோடிகளில் புரண்டு தமிழ் அரசியல் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் பலசாலிகளாக திகழ்கிறார்கள்.

திராவிட அரசுகளின் நிரந்தர கைக்கூலிகளாக தமிழக அரசியல் களத்தை சீரழிக்கும் பெரிய அவலங்களாக திரையில் தோன்றி மறையும் இந்த கூத்தாடிகளே தமிழ் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் புரையோடிப் போயிருக்கும் புற்றுநோய் செல்கள். அழிக்க முடியா வரம் பெற்ற ப(கு)த்தறிவு ராவண குல அரக்கர்கள்.

ஆசை துன்பத்திற்கு காரணமும் அல்ல, எளியவர்கள் ஆசைப்படுவது எதுவும் தவறும் அல்ல. எல்லாருக்கும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தால் இங்கு பல போ் ஆசைப்படும் வாழ்வு இயல்பாக கிடைத்து விடுமே? அப்படியே அது பேராசை என்றாலும் அந்த ஆசையை தூண்டுவது யார்? இந்த கூத்தாடிகள் தான் என்பதை யாரும் மறுக்க முடியுமோ?

டி.வி யில் வருகிற விளம்பரங்களைத் தடை செய்தாலே பொது மக்களின் ஆசைகள் அறுபட்டு விடுமே? இந்த விளம்பரம் தானே வியாபார உலகின் தந்திரம் அரசியல்? இதற்கு தானே இந்த கூத்தாடிகள் விலை போகிறார்கள்? பணம் கொடுத்தால் Product பற்றி கேள்வியே கேட்காமல் அரிதாரம் பூச அலையும் இவர்களின் பேராசை தானே மக்களுக்கு துன்பத்தைக் கொண்டு வருகிறது?

PEPSI விளம்பரத்தில் நடித்து கல்லா கட்டிய சிங்கம் தானே பாதிப்பு அடைந்த ஏழை எளியவர்களின் உடல் நல குறைபாட்டிற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்? நாலு பேரைப் படிக்க வைத்து அந்த பாவத்தைக் கரைத்து விடலாம் என்று எந்த திராவிட ஆன்மீகவாதி அட்வைஸ் கொடுத்தாரோ தெரியவில்லையே? ஆனால் பாவத்திற்கு எப்படி உருட்டினாலும், மழுப்பினாலும் மன்னிப்பு கிடையாதே?

COCO COLA உறிஞ்சி உறிஞ்சியே கோடிகளைக் கறந்தவர் இன்றைய தளபதி. கோடி ரசிக குஞ்சுகள் சுற்றி இருந்தால் கடவுள் மன்னித்து விடுவாரோ? இவர்கள் ஆசை காட்டி இருக்கவில்லை என்றால் மக்கள் எதற்கு ஆசைப்பட போகிறார்கள்? இது எளியவர்களை ஏமாற்றி காசு பார்க்கும் ஈனச் செயல் இல்லையா?

கலாச்சாரச் சீரழிவிற்கும் இந்த கூத்தாடிகள் காரணம் இல்லையா? எங்கோ மேற்கத்திய நாடுகளில் நடக்கிற Living Together இன்றைக்கு தமிழகத்தின் கிராமத்திலும் ஊடுருவ காரணமாகி, கலை என்கிற பெயரில் ஆபாசமாக நடித்து பணம் பறிப்பது யார்? மேற்கத்திய உணவுப் பழக்கங்களை படங்களில், விளம்பரங்களில் நடித்து வழிகாட்டி அத்தனை நோய், நொடிகளையும் நுழைத்ததற்கு இவர்கள் காரணம் இல்லையா?

கற்பழிப்பு, கொலை, திருட்டு, பேராசை இந்த சமூகத்தில் திமிறி எழவும் இவர்கள் தானே காரணம்? திருடர்களுக்கு கூட திருட படங்களில் புதுசா புதுசா யோசனைகள் சொல்லி தருகிறார்களே? இவர்கள் படமெடுத்து பால் மனம் மாறாத இளையோரின் உள்ளத்தில் நீல விஷத்தைக் கக்கிக் கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? இவ்வளவும் செய்து விட்டு தமிழக மக்களுக்கு ஒழுக்கப் பாடம் நடத்துவதும், விழிப்புணர்வு புகட்டுவதும் நிகழ்கால காமெடி.

சாதீயத்துக்கு எதிராக சமூக சிந்தனை கருத்துக்களை திரைப்படத்தில் பேசும் சின்ன கலைவாணர், தன் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய சாதிக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்றியது என்ன ரகமான புரட்சியோ புரியவில்லை. நம் கால தமிழ் சமூகம் சீரழிய காரணமான அந்தய்யாவையும், அந்தம்மாவையும் இந்த சமூக போதகர் புகழ்ந்து தள்ளிய போது சமூக நீதி நாண்டு கொண்டு மடிந்திருக்காதா?

இன்றைக்கு இவரின் பெயரை தமிழக சாலைகளுக்கும், தெருக்களுக்கும் சூட்ட வேண்டும் என்று உலக மகா புரட்சி செய்த மகானைப் பிள்ளையாக பெற்றது போல இவருக்குக் கொடி பிடித்து வருகிறது இந்த கூத்தாடியின் குடும்பம். மக்களுக்காக தெருவில் நின்று போராடி வழக்கு வாங்கி சிறை சென்று அநியாயமாக செத்தவன் எல்லாம் பைத்தியக்காரன், காசுக்காக கண்டதையும் பேசி கைத்தட்டு வாங்கிய இந்த சாதி வெறியர்கள் புரட்சிகர வாதிகள். அவர்களின் பெயர்கள் சாலைக்கும், தெருவிற்கும் ஒரு கேடா?

எப்படி இவர்களால் பணத்துக்காக எதையும் செய்து விட்டு, ஏழைகளின் உள்ளத்தில் ஆசைத்தீயை வளர்த்து விட்டு, இளையோரின் உள்ளத்தில் காமத் தீயை ஏற்றி விட்டு, அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்லப் பிள்ளைகளாய் இருந்து விட்டு, மனச்சான்றே இல்லாமல் மற்றவர்களுக்கு ஒழுக்கப் பாடமும், அறிநெறி பாடமும் சொல்லி வைத்தாற் போல நடத்த மனம் வருகிறது?

இவர்கள் செய்கிற இந்த இரக்கச் செயல்கள் ஏழை ரசிகனிடம் அநியாயமாக கறந்து, வருமான வரியைக் கழிக்க போடும் பகுத்தறிவு நாடகமே. இவர்கள் சம்பளத்தைக் குறைத்தால் ஏழை ரசிகனின் திரையரங்கு டிக்கெட் விலை குறையும் தானே? இதில் சமூக நீதி நிலைநாட்ட மெனக்கெடுவது தானே? முதல் ஷோவிற்கு ஆயிரத்திற்கும் மேலான டிக்கெட் விற்பனை கிடையாது என்று இந்த கூத்தாடிகளில் ஒருவர் சொல்ல முடியுமா?

தள்ளாத வயதிலும் ஆன்மீக அரசியல் ஒருபுறம் பேசித் திரிந்து மறுபுறம் கோடிகளை சம்பளமாகப் பெற்று பல தலைமுறைக்குச் சொத்து சோ்த்து வைத்துக் கொண்டு பணம், பதவி, பட்டம், இந்த உலகம் அனைத்தும் மாயை என்று உதார் விடும் ஸ்டார்கள் நிஜ வாழ்வில் இவர் பவர் ஸ்டாராக தானே இருக்க முடியும்? ஆனால் இன்னமும் இவரை சூப்பர் ஸ்டாராக பிம்படுத்தும் மாய உலகின் ரசிக குஞ்சுகளை என்ன வார்த்தை சொல்லி திட்டி தீர்ப்பது?

இப்படி சினிமாவில் கோடிகளை வாங்கி கல்லா கட்டும் காமெடி பீசுகள் எல்லாம் இன்றைக்கு நமக்கு கருத்து சொல்லும் கந்தசாமிகளாக பாடம் நடத்துவதை விட காமெடி காலம் இந்த தமிழக வரலாற்றில் வர முடியாது. ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் இவர்களால் எப்படி முண்டிக் கொண்டு சமூக நீதி பேச முடிகிறது, சமூக அக்கறை என்கிற போலி நாடகம் போட முடிகிறது என்பது புரியாத மர்மம் இல்லை, இவர்கள் தான் கைதோ்ந்த நடிகர்கள் ஆயிற்றே? மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

கடவுள் இன்பத்தை மட்டுமே படைத்தார். சாதனை படைக்க வேண்டும் என்கிற நஞ்சை விதைத்து தோல்வி பயத்தையும், வெற்றி பெறும் வெறியையும் எளியவரின் உள்ளத்தில் ஏற்றி விட்டது மற்றும் அறிவியல், சாதனை, வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் என்கிற பெயரில் அத்தனை நாசத்தையும், நாசகார திட்டங்களையும் உருவாக்கி வைத்து இருப்பது பகுத்தறிவின் உச்சமே. இதை உடைத்தெறிவது ஆன்மீகத்தால் மட்டுமே முடியும்.