கூடன்குளமும், கடவுளும்
மே 15, 2022
கூடன்குளம் போராட்டம் எளிய மக்களின் போராட்டம். கடவுள் துணையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் இடிந்தகரை என்னும் கடற்கரை வாழ் மக்கள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது ஏன்? பலரது வாழ்வை நரகமாக்கியது ஏன்? தன்னை நம்பி களத்தில் இறங்கிய அந்த மக்களை கடவுள் ஏன் கைவிட்டார்? கடவுள் எங்கே சென்றார்?
ஆன்மீக அரசியல்
அணு உலை, இடிந்தகரை, போராட்டம், உண்ணா விரதம்
கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் போராட்டம். கடலின் அலை இயல்பாக எழும் காற்றினால் உருவாவது போல அணு உலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் கோர கொடூரத்தை ஒரு நொடிப் பொழுதில் உணர்ந்த மக்கள் இயல்பாக பொங்கி எழுந்து தொடங்கிய போராட்டம். ஐந்தே நாட்களில் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன் இந்திய பிரதமர் அலுவலகத்தின் அதிகார கதவுகளையே உடைத்தெறிந்த போராட்டமாக உருவெடுத்தது.
தென்கோடியில் ஏதோ ஒரு மூலையில் படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் இந்த போராட்டம் நூறு கோடி மக்களின் தலைவரான பிரதமரையே தூங்க விடாமல் செய்தது எப்படி? தனி நபர் தூண்டுதல் இல்லை, மத நிறுவனம் மூட்டி விடவில்லை, எந்த அரசியல் கட்சியும் வழிநடத்தவில்லை. ஆனால் எப்படி காலமும், நேரமும் ஒரு சேர கூடி வந்து காங்கிரஸ்-திமுக மத்திய கூட்டணியை, அதிமுக மாநில கூட்டணியை தூக்கம் இல்லாமல் பதினோரு நாட்கள் கதி கலங்க வைத்தது?
எந்த போராட்டமாக இருந்தாலும் ஒற்றை மணி நேரத்தில் காவல் துறையை வைத்து போட்டுத் தள்ள தயங்காத அதிகாரத் திமிர் கொண்ட ஊழல் ராணியையே புரட்டி எடுத்த போராட்டம் அல்லவா அது? அயன் லேடி என்று தனக்குத் தானே பிதற்றி கொண்டு திரிந்த அவரையே "உங்களுள் ஒருத்தியாக இருப்பேன்" என்று இறங்கி வரச் செய்து வெறும் தகர டப்பாவாக மாற்றிக் காட்டிய புரட்சி அல்லவா அது?
உளவாளிகளைக் கொண்டு கலைக்க மேற்கொண்ட அத்தனை சதிகளும் தவிடு பொடியாக வில்லையா? மக்களின் எழுச்சி கட்டுக்குள் அடங்காது சீறி எழும் சுனாமியாக சீற்றம் கொள்ளவில்லையா? எப்படி அது நடந்தது? இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என்று அத்தனை மக்களையும் ஒருசேர போராட்டக் களத்திற்கு அத்தனை நாட்களும் இயல்பாக கட்டி இழுத்து வந்தது எது? அத்தனை நெருக்கடிகளையும் தகர்த்தெறிந்து முன்னேறச் செய்தது எது?
ஏதோ ஒரு சக்தி தான் இந்த போராட்டத்தை அற்புதமாக வழிநடத்தியது என்பதை மறுக்க முடியுமா? இது கடவுள் இருக்கிறார் என்பதற்கான நம் கால ஆதாரம் இல்லையா? கடவுள் வரலாற்றோடு முடங்கிப் போனவர் அல்ல, நிகழ் காலத்தில் நம்மோடு பயணிக்கிறவர் என்பதற்கான சான்று இது இல்லையா? கடவுள் என்னும் சக்தி செயல்பட்டது என்றால் இடிந்தகரை விடுதலை பயண போராட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
ஒட்டுமொத்த மக்களின் கடவுள் நம்பிக்கையால் பொங்கி எழுந்த அந்த உணர்வு போராட்டம் ஒற்றை மனிதனின் தலைக்கணத்தால் தனி மனித கர்வத்தால் அடங்கிப் போனது என்பதே உண்மை. நானே ராஜா, நானே மந்திரி, நானே முடிவு எடுப்பேன், நான் மட்டுமே முடிவெடுப்பேன் என்கிற அந்த தனி மனித சர்வாதிகார மூர்க்கமே அனலாக கழன்று எரிந்து கொண்டிருந்த அந்த போராட்டத்தை நீர்த்துப் போக செய்தது.
ஊழல் லேடியின் "மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலையை திறக்க கூடாது" என்கிற கேடித்தனமான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளலலாமா? வேண்டாமா? என்று போராட்ட பந்தலில் மக்களிடம் கருத்து கேட்டபோது ஒட்டு மொத்த மக்கள் திரளும் ‘வேண்டாம்’என்று பதில் தந்தனரே? ஆனால் அந்த மக்களின் உணர்வை மதிக்காது ‘வேண்டும்’என்ற தன் ஒரு நபர் முடிவை சர்வாதிகாரமாக நிர்பந்தித்து பணிய வைத்தாரே? மறுத்தால் தலைவராக இருக்க மாட்டேன் என்று படம் காட்டி பணிய வைத்தார்.
மக்களின் குரலை மகேசனின் குரலாக ஏற்று கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநிய அரசுக்கு பாடம் நடத்தியவர் நடத்திய பாடத்தை தானே நடந்து காட்ட வில்லையே? எதற்கும் துணிந்தவன் எதற்கு கடைசியில் குள்ள நரி ஆட்டம் ஆட முடிவு செய்கிறான்? துணிந்து நின்று ஒரே மூச்சில் போராடி பார்ப்பவன் தானே தலைவன்? காலத்திற்கும் போராட வைத்து வழக்குகளில் சிக்க வைத்து எளியவரை இம்சிப்பவனா தலைவன்?
தன் குடும்பத்தை பத்திரமாக பாதுகாத்து தன்னை நம்பிய மக்களைக் காவு கொடுத்தல் தான் அமொிக்காவில் கற்றுத் தோ்ந்த பட்டறிவோ? காவல்துறை அடிக்கும் என்று தெரியாமலா மக்கள் போராட வந்தனர்? வழக்குகள் போடாமல் அரசு வேடிக்கை பார்க்கும் என்று நம்பியா களத்தில் குதித்தனர்? எதற்கும் துணிந்து தானே போராட்டம்? எதிர்த்து போராட தயாராகினால் பின் ஏன் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையை கிள்ளி விடுகிற ஏமாற்று பிழைப்பு?
ஏன் இப்போது துப்பாக்கிச் சூடு நடக்க வில்லையா? மக்கள் மீது வழக்குகள் பாயவில்லையா? உயிரிழப்பு ஏற்பட வில்லையா? உண்ணா விரதம் இருந்த பல போ் நோயால் நொடியால் அலைக்கழிக்கப்பட்டு இறக்க வில்லையா? இந்த இழப்புகளுக்கு மட்டும் இவர் பொறுப்பு இல்லையா?
கூடன்குளம் போராட்டத்தில் கடவுள் இருந்தார். மக்களோடு போராடினார். ஆனால் அந்த ஒற்றை மனிதனின் செருக்கு, தற்பெருமை, தான் என்கிற அகந்தை கடவுளை செயல்பட விடாமல் முடக்கியது. அந்த மக்களைக் காப்பாற்ற இயலாமல் போக செய்தது. விளைவு, அந்த கடற்கரை மணல் போராட்டத்தில் கடவுளும் புதைந்து போனார்.
கடவுளால் மந்திரம் போட்டு காப்பாற்ற முடியாது, தன் வானதூதர்களை அழைத்து வந்து போலீசோடு சண்டை போட முடியாது, எவரையும் தன் சக்தியால் தூண்ட முடியாது, தனி நபரின் மனத்தை மாற்றவும் முடியாது, மனிதர்களை மிஞ்சி அவரால் எதுவும் செய்யவும் முடியாது, செயல்படவும் முடியாது. அவரை நம்பி துணிந்து எடுக்கிற நோ்மையான முடிவுகள் வழியே மட்டுமே கடவுள் செயல்பட முடியும். அது தானே கடவுள் நம்பிக்கை? ஆனால் அதற்கு இந்த சர்வாதிகாரி வாய்ப்பு வழங்க மறுத்து விட்டாரே?
உண்மையில் இடிந்தகரை மக்களை கடவுள் கைவிட வில்லை. அந்த மக்களே கடவுளை கைவிட்டனர். தொடக்கத்தில் கடவுள் நம்பிக்கையோடு தொடங்கிய போராட்டத்தை காலப்போக்கில் கடவுளை விட தங்களை வழிநடத்திய தலைவர் மீது நம்பிக்கையை மாற்றினர். கடவுள் செயல்பட முடியாமல் முடங்கிப் போக செய்தனர். கடவுள் மீது வைத்த நம்பிக்கை குறைந்து போய் இந்த திராவிட கைக்கூலியின் குள்ள நரியின் சர்வாதிகாரத்தை நம்பியதால் கிடைத்த தோல்வியே இது.
அணு உலையை எதிர்த்து போராடிய மற்ற இயக்கங்களை எதிரிகளாக நினைத்து எதிர்த்தனர். எதிராக தந்திர அரசியல் செய்தனர். போராட்டத்தின் வெற்றி அல்ல, மற்றவரால் அந்த வெற்றி கிடைத்து விடக்கூடாது என்பதே இந்த தலைவரின் தலைக்கனமாக எழுந்தது. காலப் போக்கில் அதுவே குழுமத்தில் யார் பெரியவர்? என்கிற போட்டியாக உருவானது. சாதீய பிளவாக வெடித்தது. இந்த தருணத்திற்காகவே காத்திருந்த அரசு கச்சிதமாக பயன்படுத்தி அணு உலையைத் திறந்தது.
இவ்வளவு நடந்த பிறகும் அதே காங்கிரஸ்-திராவிட கட்சிகளுக்கு வாக்குச் செலுத்தும் ஒவ்வொரு கூடன்குளம் பகுதி மக்களும் குற்றவாளிகளே. கடவுளைக் கேள்வி கேட்க அருகதை இழந்தவர்களே. ஒருபுறம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் திருட்டு திராவிட சொங்கிகளுக்கு வாக்களிப்பது என்ன புரட்சி நம்பிக்கையோ, புரியவில்லை. அடிபட்டு, மிதிபட்டு, வழக்குகள் பட்ட இவர்களே மீண்டும் மீண்டும் திராவிட மாடல் சாக்கடைகளுக்கு வாக்களிக்கிற போது கடவுள் என்ன செய்வார்? எப்படி செயல்படுவார்? மற்ற மக்களை என்ன சொல்வது?
கடவுளின் கருவியாக இருந்து செயல்படும் ஒருத்தன் அரசியலில் கிடைக்கும் வரை தமிழகத்தில் கடவுள் செயல்படாத கடவுளாக தான் கிடப்பார், சிறைப்பட்ட கைதியாக தான் இருப்பார், இயலாமையின் கடவுளாக தான் தெரிவார். தன் பெயரால் நடக்கும் அத்தனை அயோக்கிய ஆன்மீக அரசியலையும் வேதனையோடு வேடிக்கைப் பார்த்து வெறுமனே அழுது புலம்புகிறவராகவே இருப்பார்.