கோயில்கள் தேவையா?

கோயில்கள் தேவையா?

கோயில்கள் தேவையா?

ஜீன் 29, 2022

கடவுளே தனக்கான கோயிலைக் கட்ட சொன்னார் என்று பைபிள் சொல்கிறது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்ப படுகிற கடவுளுக்கு கோடிகளைக் கொட்டி கட்டப்படும் கோயில்கள் தேவையா? பசியால் வாடும் மக்களின் நடுவில் இந்த அருவருப்பு காரியத்தை செய்ய சொல்ல ஒரு கடவுளுக்கு மனம் வருமா?

நாட்டு நடப்புகள்

இயற்கை, திருவிழா, தங்க நகை, காணிக்கை

கடவுளே தனக்கான கோயிலைக் கட்ட சொன்னார் என்று சொல்வது ஆன்மீகத்தின் பெரிய பொய். கடவுள் வரலாற்றில் பேசியதே இல்லை. பேசாத கடவுள் எப்படி தனக்கு கோயில் கட்ட கேட்க முடியும்? அடுத்தவரின் உழைப்பில் தன் வயிற்றைப் பெருக்கி வாழும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற தனி ஒருவனின் மூளையில் உதித்த உருப்படாத சிந்தனையே இந்த கோயில் பார்முலா. அதனை கடவுள் சொன்னதாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி புனித படமாக உலகத்திற்கு காட்டியது இந்த அதிகாரத்திற்கு பல்லக்கு தூக்கி பிழைப்பு நடத்தி மகிழும் மத குருமார்கள்.

ஏழைகளின் பசியையோ, வலியையோ, அடுத்த வேளை என்ன நடக்கும்? என்கிற பயத்திலேயே வாழ்வை நகர்த்தும் சாமான்யனின் ஏக்கத்தையோ உணராத இறுமாப்பு கொண்டு திரிகிற ஆள்கிறவனின் இது போன்ற பாவ சிந்தனைகளை புனிதப் படுத்துகிற கேவல வேலையைச் செய்யும் இந்த பூசாரிகளின் கதை அன்றல்ல, இன்றும் தொடர்கிறது.

கடவுளுக்கு கோயில்கள் கட்ட இதுவரை எத்தனை கோடி மரங்களை வெட்டி எறிந்து இருக்கிறார்கள், ஏழைகளின் தலையில் வரியைக் கட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள், இயற்கை சமநிலையை சிதைத்து இருக்கிறார்கள், பருவ கால சுழற்சியை உடைத்து இருக்கிறார்கள், வெப்ப மயமாதலை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவா கடவுள் பணி? இதுவா புனித பணி?

இவர்கள் உருட்டுகிற பக்தி மாலைகள், வியாபாரம் செய்யும் பக்தி படங்கள், சிலைகள், ஜொலிக்கும் ஆடைகள், புனித பாத்திரங்கள் என்று இந்த புனித சடங்குகளுக்கு பின்னால் எத்தனை இயற்கைச் சீரழிவுகள் மறைந்து இருக்கிறது. மெத்த படித்த மேதாவித்தனம் பேசும் இவர்கள் உண்மையில் இது கூட தெரியாத குருட்டு கபோதிகளே.

இவர்கள் நடத்திய திருவிழாவில் எத்தனை உயிர்கள் அநியாயமாக போயிருக்கிறது? இந்த விபத்துக்களில் எத்தனை குடும்பங்கள் கணவர், பிள்ளை, தாயின் இறப்பால் வாழ்வை இழந்திருக்கிறது? இவர்கள் நடத்தும் கோயில் திருவிழா நெரிசலில் மிதிபட்டு, மின்சார கசிவில் இறந்து போன அப்பாவி உயிர்களுக்கு யார் பொறுப்பு?

மனிதன், தான் விரும்பியதை எல்லாம் கடவுள் பெயரை வைத்து முட்டாள் தனமாக செய்வான், அதையும் கடவுளே கனவில் வந்து சொன்னதாக கதை விடுவான், கடவுளும் வந்து அதற்கு பழி ஏற்க வேண்டும், பரிகாரம் செய்ய வேண்டும். இது அபத்தமான வாதம் இல்லையா? இந்த திருவிழா விபத்துக்களில் நடக்கும் சாவுகள் இறப்பு அல்ல, கடவுள் பெயரால் அரங்கேறும் புனித கொலைகள். இதற்கு இந்த மத குருமார்களே பொறுப்பு.

பசியால், பட்டினியால், வேலை இல்லாமல், திருமணம் முடியாமல் அல்லல் படும் இலட்சக்கணக்கான மக்கள் வாழும் தமிழகத்தில் குற்ற உணர்வே இல்லாது கோயில்கள் கட்ட பணத்தை ஊதாரித்தனமாக வாரி இறைப்பது கடவுளுக்கு எதிராக செய்யப்படும் அவசங்கையே. கடவுளின் பார்வையில் கழுவ முடியாத, கழுவில் ஏற்றவும் தகுதியுள்ள பாவ காரியமே.

கடவுளை மந்திரவாதியாக நம்பும் பக்த கோடிகளின் தங்க நகை காணிக்கை காட்சிப் பொருளாக, சாட்சி என்கிற பெயரில் கூண்டுக்குள் இருப்பதை எத்தனை திருத்தலங்களில் பார்க்கிறோம். அதைப் பார்க்கிற போது திருமணம் ஆக முடியாத ஆயிரமாயிரம் கன்னி பெண்களின் அழுகை தெரிய வில்லையா? அது நம் நெஞ்சை உலுக்க வில்லையா? கடவுளுக்கு தட்டிக் கேட்க வலு இருந்தால் இந்த நேரம் வந்து இருக்க மாட்டாரா?

இந்த நகைகளை ஆலயத்தில் காணிக்கையாக உண்டியலில் போடுவதற்கு பதிலாக ஒரு ஏழை பெண்ணின் கழுத்தில் போட்டு இருந்தால் அவளின் கண்ணீர் துடைக்கப் பட்டு இருக்குமே? அந்த கணம் கடவுளின் கண்ணில் ஆனந்த கண்ணீர் பொங்கி வடிந்து இருக்குமே? இதைச் செய்கிற அறிவு கூட தமிழக முரட்டு பக்தாள்ஸ்க்கு இன்னும் வர வில்லையா? அல்லது இந்த போலி பூசாரிகள் வளர விட வில்லையா?

இந்த மத போதகர்கள் நடத்தும் தொலைக்காட்சி ஒளிபரப்பால் சுற்றுப் புறம் பாழ்பட வில்லையா? கோடிக்கணக்கில் பிரிண்ட் எடுத்து வீண் செய்யப்படும் இவர்களின் புனித நூல்கள் இயற்கையைச் சுரண்டி வெட்டப்படும் மரங்களில் இருந்து தயாராக வில்லையா? சி.டிக்களாக வெளியிடும் எலக்ட்ரானிக் பொருட்களை எங்கே புதைத்து அழிப்பார்கள்? இப்படி கடவுளா செய்ய சொன்னாரா?

பசிக்காக பிச்சை கேட்கும் ஒருவனுக்கு பத்து ரூபாய் போட ஆயிரம் முறை யோசிக்கும் நம்மூர் பக்த கோடிகள், கடவுளுக்கு கோயில் கட்ட பணம் கேட்டால் இலட்சக் கணக்கில் மறு பேச்சு இல்லாமல் கொடுக்கும் ஊதாரித்தனம் கடவுளின் பார்வையில் அருவருப்பே. அது புனிதக் கணக்கில் அல்ல, கண்டிப்பாக அவர்களின் பாவக் கணக்கிலேயே சேரும்.

உண்மையில், கடவுள் பெயரைச் சொல்லி வீதியில் உலா வரும் தங்கத் தோ்களும், சிலைகளின் கழுத்துகளில் இருக்கிற தங்க நகைகளும், தலையில் காணப்படும் தங்க கிரீடங்களும், கடவுள் பெயரில் நற்செய்தி அறிவிக்கிறோம் என்று ஊதாரித்தனமாக செலவு செய்யப் படும் கோடிக்கணக்கான பணங்களும் வெறும் அருவருப்பு மட்டுமல்ல, அது கடவுளுக்கே அவமானம். கடவுளுக்கே செய்யப்படும் அவசங்கை.

கடவுளுக்கு பலம் இருந்திருந்தால் இந்த மடையர்களை என்றைக்கோ ஒழித்துக் கட்டியிருப்பார். கடவுளுக்கு பேசும் வல்லமை இருந்திருந்தால் இவர்களை தரங் கெட்ட வார்த்தைகளாலே அர்ச்சனை செய்திருப்பார். கடவுளுக்கு கண் இருந்திருந்தால் இவர்களையே எரித்திருப்பார். கடவுளிடம் பலமும் கிடையாது, பேசும் வல்லமையும் கிடையாது, பார்வையும் கிடையாது என்பதற்கு அவரது இந்த அமைதியே சான்று.

கடவுள் பேச முடியாது செயல்படும் வெறும் சக்தியே. அது கோடிக்கணக்கான உணர்வுகளின் வலியை உணர்ந்தும் காப்பாற்ற இயலாத துன்பத்தில் உழல்கிற தாய் மனம் கொண்ட பெண் சக்தி. அந்த பெண் சக்தி, படைப்பு வரலாற்றில் மாபெரும் பிழை செய்து விட்டது, இந்த மனித மிருகங்களுக்கு ஆறறிவைக் கொடுத்து தவறிழைத்து விட்டது. ஆறாம் அறிவு பெற்றெடுத்த சவலைக் குழந்தையான பகுத்தறிவும், அத்தோடு ஒட்டிக் கொண்டு பிறந்த ஆன்மீக அறிவுமே தமிழகத்தின் இத்தனை சீரழிவுக்கும் காரணம்.

இந்த ஆற்ற முடியாத தாயின் கண்ணீர் ஆக்ரோசமாய் நிச்சயம் ஒருநாள் வெடித்து எழும், தமிழகத்தை சாதி, மதம், கட்சி, இனம் கடந்து சமத்துவமாக அது நிர்மூலம் செய்யும். அது நம் காலத்தில் நிச்சயம் நடந்தே தீரும்.