இரக்கம் என்னும் அரக்கன்

இரக்கம் என்னும் அரக்கன்

இரக்கம் என்னும் அரக்கன்

ஜூலை 15, 2022

ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கே கடன் கொடுக்கிறான் என்று சொல்வது சரியா? செய்கிற தர்மம் தலைமுறை காக்க உதவுமா? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியுமா? இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்கிற சொல்லாடல் சரியான வாதமா?

நாட்டு நடப்புகள்

தர்மம், உதவி, உணர்வு, அரசு

உதவி செய்கிற கூட்டங்களில் பல வகைகள் உண்டு. தாங்கள் சம்பாதிக்கிற கோடி ரூபாய் வருமானத்திற்கு கட்ட வேண்டிய வரி பாக்கியைக் குறைக்க தர்மம் செய்வது முதல் வகை. செய்கிற அத்தனை பழிபாவத்தில் இருந்தும் தப்பித்து புண்ணியம் தேடிக் கொள்ள உதவி செய்வது மறு வகை. தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும், கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று தர்மம் செய்கிற கூட்டம் பக்தாள்ஸ் வகை.

பணம் இருக்கிற காலத்தில் மற்றவருக்கு உதவி செய்தால் பிற்காலத்தில் தன்னுடைய வம்சத்திற்கு தர்மத்தின் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்கிற கூட்டம் மற்றொரு வகை. அடுத்தவர் படுகிற வேதனையைக் கண்டு மனம் பொறுக்காமல் எதையும் எதிர்பாராது செய்கிற கூட்டம் இன்னொரு வகை. இதில் எவருடைய தர்மம் சிறந்தது? என்கிற விவாதம் நடத்த அல்ல இந்த பதிவு. இவர்கள் அத்தனை பேருமே ஒட்டு மொத்தமாக இரக்கம் என்னும் அரக்கனை தமிழகத்தில் நுழைத்து எப்படி காலத்திற்கும் மக்களை சீரழிக்கிறார்கள் என்று சொல்வதே கட்டுரையின் அடிநாதம்.

இந்த கோணங்களில் தர்மத்தைப் பற்றி பேசுகிற போது, தர்ம காரியங்கள் முட்டாள் தனம் மட்டுமல்ல, அயோக்கிய தனம், அப்பட்டமான சுயநலம். அது ஒரு பாவச் செயல். புண்ணியம், தர்மம், அறியாமை மற்றும் எதிர்பார்ப்போடு இப்படி செய்கிற சுயநலத்தின் கோர விளைவுகளே தமிழகத்தில் ஏழைகள் என்றைக்கும் ஏழைகளாக இருப்பதற்கும், ஏற்றத் தாழ்வுகள் மறையாது சமூக அநீதி தேங்கி நிற்பதற்கும் காரணம் ஆகும்.

ஓர் அரசாங்கம் செய்யவில்லை, எனவே நாங்கள் செய்கிறோம், இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று ஒருவர் வாதம் செய்யலாம். உதவி செய்வது எப்படி தவறாக முடியும்? என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் இது பகுத்தறிவு அல்ல விவாதம் செய்து நிரூபிக்க. இது ஆன்மீகம், தனி நபராக தோ்ந்து தெளிவதே அடிப்படை.

அரசாங்கத்திற்கு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது, செய்வதற்கான அத்தனை பொருளாதார வசதியும், கட்டமைப்பும் இருக்கிறது, ஏன் அந்த அரசாங்கம் செய்ய மறுக்கிறது என்கிற கேள்வியே எழாது பலரது புத்தி மழுங்கிப் போவதற்கு இப்படி முட்டுக் கொடுத்து செய்யப் படும் தர்ம காரியங்களே காரணம் என்பதை உண்மை அறிந்த ஆன்மீகவாதிகள் உணர்வார்கள்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் தாங்கள் வரியாக செலுத்துகிற பணத்தைக் கொள்ளையடித்து தங்களை இந்த இழிநிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் என்கிற உணர்வே இல்லாமல் போக செய்து, அது மக்களுக்குள் வலியை ஏற்படுத்தாதற்கு இந்த தர்ம காரியங்களே காரணம். தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்காமல், தான் ஏன் அடுத்தவரிடம் பிச்சை கேட்டே பிழைக்க வேண்டும்? என்கிற வெட்கமே இல்லாது மழுங்கட்டையாக பாமர மக்கள் தேங்கி நிற்பதற்கும் இந்த தர்ம காரியங்களே காரணம்.

நல்லோர் அறியாமையில் செய்கிற இது போன்ற நல்ல உதவிகளே பல வல்லூறுகள் பருத்து இந்த சமூகம் ஏற்றத் தாழ்வுகளை தக்க வைப்பதற்கு காரணமாகி விடுகிறது. ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களே அடுத்தவருக்கு உதவி செய்வார்கள். அமைச்சர் ஒருவர் ஏழைகள் படிக்க தன்னுடைய தொண்டு நிறுவனத்தை அணுக கூச்சமே இல்லாமல் விளம்பரம் செய்கிறார். பின்பு எதற்காக இவர் அமைச்சராக இருக்கிறார்? இத்தனை ஆண்டுகள் இருந்து என்ன தான் கிழித்தார்?

இப்படி எதற்கும் கையேந்தும் ஒரு கூட்டம் காலத்திற்கும் இருந்தால் தான், தங்களைப் போன்றவர் சுகபோகமாக வாழ முடியும் என்பதால் தானே இது போன்ற கல்விக்கு உதவி செய்வதாக கூறும் தொண்டு நிறுவனம் நடத்தப் படுகிறது. உண்மையில், இப்படி உதவி செய்கிற தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்தின் அத்தனை தகிடு தத்தங்களையும் மறைக்கிற மறைமுக வேலையையே செய்கின்றன. நடிகர்கள் செய்கிற கல்விப் பணிகள் அத்தனையும் இதற்குள்ளே அடக்கம்.

வெள்ளம், புயல், இயற்கைச் சீற்றங்களில் செய்கிற மனித நேய உதவிகளே அரசாங்கத்தின் சாக்கடை ஊழல்களையும், சாலை போட்டு கொள்ளை அடிக்கிற அநியாயத்தையும் மக்கள் உணராமல் செய்து விடுகிறது. மடை திறந்த வெள்ளமாய் மக்களின் உணர்வுகள் பொங்கி எழாமல் தேக்கி விடுகிறது. அரசாங்க விழாக்கள், வெட்டி விளம்பரங்கள், செத்தவருக்கு நூறு கோடியில் கல்லறை, பொய் வழக்குகள், வீணான உச்ச நீதி மன்ற முறையீடுகள் என்று தமிழக அரசு செய்கிற வீண் செலவுகள் நாம் உழைத்து வரியாக கொடுக்கிற பணத்தில் இருந்து வீணடிக்கப் படுகிறது என்கிற குற்ற உணர்வே எழாத மௌனிகளாய் மக்களை வைத்து இருக்க உதவுவதும் இந்த தர்ம காரியங்கள் தான்.

இந்த மண்ணில் சமூக மாற்றம் மலர, அனைவரும் சமம் என்கிற நிலை வளர, எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு வர தடைக்கல்லாய் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல, இந்த புண்ணியம் செய்கிற பாவிகளும், அப்பாவிகளுமே. இவர்கள் புண்ணியம் என்று செய்கிற அத்தனையும் உண்மையில் பாவ காரியங்களே. இதற்கு பலன் கிடைக்காது, பாவமே இவர்களது கணக்கில் சேரும். கடவுள் செயல்பட தடையாக இருப்பவர்களும் இவர்களே.

உணர்வுகளின் வலியை வழியாக கொண்டு செயல்படுகிறவரே கடவுள். உணர்வுகளின் வழியாக பேசுகிறவரே கடவுள். அதனை அறிவியல் போல நிரூபிக்க முடியாது, ஆன்மீக அறிவு கொண்டு உணர மட்டுமே முடியும். அந்த அத்து மீறி எழும் உணர்வுகளை பெட்டிப் பாம்பாய் அடக்கி வைக்கும் பாவ காரியத்தை செய்ய துணை போகிறவர்களே இந்த தர்ம கர்த்தாக்கள். இதற்கு பரிகாரம், வெள்ளமும் இயற்கைச் சீற்றமும் வருகிற போது நல்லவர்களால் மனமுவந்து செய்யப்படுகிற இரக்க உதவிகள் நிறுத்த பட வேண்டும்.

இது நிறுத்தப் பட்டால் தான் அரசிடம் இருந்து கிடைக்காத பட்சத்தில் எழும் கோப உணர்வுகள் மக்களுக்கு வலியை உண்டாக்க முடியும், கடவுள் பேச வழி ஏற்படுத்த முடியும். திராவிட அரசின் முகத்திரையை கிழிக்க முடியும். அந்த வலியிலிருந்து பொங்கி எழும் ஆக்ரோச கோப உணர்வுகளே அரசியல் புரட்சிக்கான முதல் சுழியாகும். ஆனால் அந்தோ பரிதாபம், இரக்கம் என்கிற பரிதாபத்தில் செய்யப் படும் தர்ம காரியம் அந்த உணர்வை முட்டுப் போட்டு தடுத்து விடுகிறது.

நடக்க எழுகிற குழந்தை கீழே விழுகிற போது அதனை தூக்குகிற ஒரு தாய் அந்த குழந்தையை முடக்குவாத குழந்தையாக மாற்றி விடுகிறாள். குழந்தை அந்த குழந்தை நடக்க வேண்டுமென்றால் தாய் அந்த வேதனையை தாங்கியே ஆக வேண்டும். அது போல தான் இதுவும். மருத்துவ உதவி கிடைக்காது நடக்கும் இறப்பிற்கு தனி மனிதன் காரணம் அல்ல, ஆட்சி செய்கிற கேடு கெட்டவனையே பழி பாவம் சேரும்.

அயலாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று மதங்கள் கூறுகிறதே? என்று முரட்டு பக்தர்கள் முன் வந்து அணை போடலாம். இது கடவுள் சொன்னது அல்ல, தங்கள் பிழைப்பு நன்றாக நடக்க போலி மத குருமார்கள் கடவுள் பெயரை வைத்துச் சொன்னது. உண்மையில் கடவுள் இதுவரை பேசியதும் இல்லை, எப்போதும் பேச போவதும் இல்லை.

உதவிகளே செய்யக் கூடாதா? செய்யலாம். நாங்கள் சொல்வது எதுவுமே Absolute Truth அல்ல, இது வெறுமனே Relative மட்டுமே. மனநலம் குன்றியோர் வாழும் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. வயதாகியதால் கைவிடப் பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவரை பராமரிக்க தன்னலமின்றி செயல்படும் அமைப்புகள் இருக்கின்றன. அவர்களுக்குச் செய்ய தடை ஒன்றும் இல்லையே?

தோ்தல் நேரத்தில் சத்தியம் வாங்கிக் கொண்டு தானே அரசியல் வாதிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்? மக்களும் தாங்கள் செய்வது தவறு என்கிற குற்ற உணர்ச்சியே இல்லாமல் அதன் மோசமான விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் பணம் வாங்கி ஓட்டு போடுகிறார்கள்? நாம் உதவி செய்ய வேண்டும், அவர்கள் உதவியை வாங்கி விட்டு சொரணையே இல்லாது திராவிட கட்ச்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள்? இதற்காகவா நல்லவர்கள் உதவி செய்ய வேண்டும்?

அரசியல் அதிகாரமே தமிழகத்தில் அத்தனையும் தீர்மானிக்கிறது, கடவுள் அல்ல. ஓர் அரசு நினைத்தால் ஐந்தே ஆண்டுகளில் தன் குடிகள் அனைவருக்கும் அடிப்படை தேவை மற்றும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும். அதற்கான அறிவும், ஆற்றலும், வளங்களும் தமிழகத்தில் இருக்கிறது. யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது தனி மனித உரிமை. ஆனால், இந்த திராவிட கட்ச்சிகளுக்கு மீண்டும் ஓட்டுப் போடுவது நமக்கு நாமே வாய்க்கரிசி போடுவதற்கு சமம். அது விடியலில் அல்ல, பேரிடியாகவே நம் தலையில் மீண்டும் மீண்டும் விழும். அதனை உணர வைக்க, அந்த வலியைப் புரிய வைக்க, நல்லவர்கள் செபம், தவம், தர்மம் செய்வதை நிறுத்தியே ஆக வேண்டும்.