இரவின் நிழல்

இரவின் நிழல்

இரவின் நிழல்

ஜூலை 23, 2022

பார்க்கிறவரின் உணர்வுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உண்மையின் வலியை உணர்த்தும் அற்புத கலையே திரைப்படங்கள். ஆனால், இளையோரின் உணர்ச்சிகளைத் தூண்டி கலை என்கிற ஏமாற்றுப் போர்வையில் காசு பார்க்க துடிக்கும் வக்கிரப் புத்தி கொண்ட ஓர் இயக்குநரின் பைத்தியக் கார படைப்பே சமீபத்தில் வெளியான இரவின் நிழல் என்கிற திரைப்படம்.

நாட்டு நடப்புகள்

புதுமை, திரைப்படம், நிர்வாணம், சினிமா

புதுமை என்கிற பெயரில் பெண்களை போகப் பொருளாக்கி வக்கிரப்படுத்தி லாபம் சம்பாதிப்பது மட்டுமே இவருடைய குறிக்கோள் என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த இந்த படம் மற்றுமொரு ஆதாரம். திரைப்படங்களை கலையாக பார்க்க வேண்டுமாம், வன்மத்தையும், வக்கிரத்தையும் காட்டி விட்டு கலை என்கிற பெயரில் காமத்தை கர்மமாக காட்டும் இவரின் படங்களை கலைக் கண்ணோடு பார்க்க முடியாதவர்கள் காமக் கொடூரர்களாம், சாபம் போடுகிறார்கள் இவரின் ரசிக குஞ்சுகள்.

கெட்ட வார்த்தைகளும், நிர்வாண காட்சிகளும் முகம் சுளிக்கும் விதத்தில் இருக்கிறதே? என்கிற கேள்விக்கு இந்த படத்தின் அரை வேக்காடு அறிவுள்ள நாயகி ஏதோ வரலாற்று ஆய்வாளர் போல எல்லாருக்கும் அறவியல் பாடம் நடத்துகிறார். கதைக்களம் நடக்கும் சேரியில் இவை எல்லாம் சர்வ சாதாரணம் என்று பதில் சொல்கிறார். பணம் வாங்கி நாம் நடிப்பது பல இளையோரின் கண்களை பாவக் கறையாக்கும் என்கிற உறுத்தல் கடுகளவும் இல்லை. ஏதோ உலக மகா சாதனையை செய்தவர் போல பீலா விடுகிறார். ஆய்வுகள் நடத்தி முனைவர் பட்டம் பெற்றவர் போல அளந்து விடுகிறார்.

அறிவே இல்லாது இப்படி இந்த திரைப்பட நாயகி பேசியதற்கு இந்த அரைக் கிறுக்கு இயக்குநர் நியாயம் கற்பிக்கிறார்: 1980 களில் சேரிகளில் இப்படித்தான் பேசுவார்களாம். இப்போது மாறிவிட்டதாம். இவர் எத்தனை சேரிகளுக்கு சென்று எத்தனை நாட்கள் புள்ளி விபரம் சேகரித்தார்? போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக கண்டதையும் பேசித் திரிவது தான் புது முயற்சியா? சரி, இப்போது அப்படி இல்லையே? பின் எதற்காக இந்த ஆறிய புண்ணை மீண்டும் கிளறி விடுகிற வேலையைச் செய்கிற பைத்திய காரத்தனம்? படமெடுக்க வேறு கதைக் களங்களே இல்லையா?

இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய நிகழ்வுகள் எவ்வளவோ இருக்கிறதே? கண்முன்னால் சொந்த மக்களை வெட்ட வெளியில் ஸ்டொ்லைட் தனியார் நிறுவன ஆலைக்காக அதிமுக அரசு செய்த மாபாதக படுகொலையை தத்ரூபமாக எடுக்கலாமே? இது பிற்கால சந்ததிக்கு தெரிய வேண்டிய வரலாறு அல்லவா? தாமிரபரணியில் பத்து ரூபாய் கூலி உயர்வு கேட்டு போராடிய தலித்துக்களை வெறி பிடிக்க சுட்டுத்தள்ளி ஆற்றிலே முக்கி கொலை செய்த திமுவின் மிருகத்தனத்தை திரைப்படமாக பதிவு செய்யலாமே? செய்ய மாட்டார், ஏனென்றால் பிழைக்க தெரிந்தவர் ஆயிற்றே?

மேடைக்கு மேடை திராவிட தலைகளை மூச்சு விடாமல் அடுக்கு மொழியில் புகழ்ந்து பேசுகிற இவர் 24/24 ஓட்டை வாய்க்கு சொந்தக் காரர். புளுகி தள்ளுவதில் கைதோ்ந்தவர். வார்த்தைகளால் வர்ண ஜாலங்கள் செய்து புல்லரிக்க வைத்து விடுகிற சித்து வேலை அறிந்தவர். தன்னுடைய குருநாதர் பாக்யாவிடம் கற்றுக் கொண்ட அத்தனை பெண் பித்து வேலைகளையும் இப்போது கிழடு தட்டிய வயதில் கையில் சிக்கும் அப்பாவி பெண்களிடம் காட்டிக் கொண்டு திரிகிறார்.

தன் வீட்டுப் பிள்ளைகளின் உடல் இம்புட்டு அளவு கூட தெரியாமல் போர்த்தி போர்த்தி நடிக்க வைக்க மெனக்கெடும் இவர், ஊரார் விட்டுப் பிள்ளைகளை மட்டும் கலை என்கிற பேரில் நயமாக பேசி அம்புட்டு துணியையும் உருவாமல் விட மாட்டார். முதலில், வேசியாக்கினார், பின் உதடு கடித்தார், அப்புறம், தொப்புள் சுற்றி கேமராவை வலம் வர வைத்தார். இப்போது கடைசியில் நிர்வாணமே படுத்தி விட்டார். அடுத்து, புதுமை என்கிற பெயரில் என்ன விபரீதம் வைத்திருக்கிறதோ இந்த பித்துக்குளி, தெரியவில்லை.

இந்த டைரக்டர் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல மெனக் கெடுகிறாராம். படத்தில் நிர்வாண காட்சிகளை வெட்கமே இல்லாது வைப்பதும், கெட்ட வார்த்தைகளைச் சகட்டு மேனிக்கு பேசுவதும் தான் உலக தர சினிமாவா? இப்படி அம்மணமாக பெண்ணை காட்டி தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியுமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இன்றைய காலத்திலும் எப்படி பட்ட அழுக்கு மூட்டைகளை இந்த இயக்குநர் தன்னுடைய உள்ளத்தில் வைத்து இருக்கிறார்!

இது போன்ற படங்கள் இளையோரை தவறான பாதையில் கொண்டு போகாதா? குடும்பத்தோடு ஒருவர் இந்த அருவருப்பை பார்க்க முடியுமா? கலை என்று பிரித்துப் பார்க்கிற அளவுக்கு தமிழகத்தில் இருக்கிற அத்தனை பேரும் தெய்வ சமாதி அடைந்து விட்ட யோகியாக மாறி விட்டார்களா? எப்படி எல்லாம் பொய்களைப் பேசி அருவருப்பை, அசிங்கங்களை நியாயப் படுத்துகிறார்கள்! தமிழன் எடுத்தால் பிட்டு படத்தையும் மாலை போட்டு கொண்டாடி விட வேண்டும். இதுவே தமிழகத்தில் புதிய டிரெண்ட்.

பணம் வாங்கிக் கொண்டு இப்படி பெரிய திரையில் நடித்தால் அது கலை என்று கை தட்டிப் பாராட்டு, விருது, பல பட வாய்ப்புகள், கோடிகளில் பணம். ஆனால், சோற்றுக்காக ஊரடங்கு காலத்தில் எந்த வேலைக்கும் வழி இல்லாத சூழ்நிலை கைதியான ஒரு பெண் ஏதாவது செய்து காசு சம்பாதிக்க நடித்தால் விபச்சாரி என்று குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டு ஜாமீனில் வெளியே வராதபடிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், குடும்ப விளக்குகள் என அத்தனை பேரும் ஒன்று சோ்ந்து அவரை ஜெயிலில் பிடித்து போடுவது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. இதில் உலகத்தில் பிறந்த முதல் குரங்கு தமிழ் குரங்கு என்கிற பீத்தல் வேறு.

மேற்கத்திய அருவருப்புக்களை நாகரீகமாக இந்திய மண்ணில் புகுத்தி இந்த சமூகத்தில் பல பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள் நடப்பதற்கு இது போன்ற சினிமாக் காரர்களே முதற்காரணம். பள்ளிகளில் பாலியல் வக்கிரம் நிரம்பி வழிய இவர்கள் எடுக்கிற பள்ளி காதல் காட்சிகளே காரணம். கொலையும், கொள்ளையும் சர்வ சாதாரணமாக நடக்க திரைப்படங்களில் காட்டும் வன்முறை காட்சிகளே காரணம்.

எந்த சேரி பெண் எப்போது இவர்களைப் போல உடம்பைக் காட்டி நடித்தாள்? உடம்பை காட்டி பெரிய திரைகளில் நடிப்பது என்பதே பணக்கார தொழில் தானே? அதிகார வர்க்கத்தின் துணையோடு நடக்கிற தொழில் தானே? தன் பிள்ளையின் பசியைத் தீர்க்க தன் உடலை ஒரு ஏழைப்பெண் விற்பாளே ஒழிய, பணம் சம்பாதிக்க கலை என்கிற பெயரில் சாமான்ய பெண் தன் உடலை எப்போதும் காட்டவே மாட்டாள்.

இதற்குள் இன்னொரு சாதீய வன்மமும் ஒழிந்திருக்கிறது. சேரி என்று பேசியதற்கு இவ்வளவு கொந்தளிக்கிற திராவிட கருஞ்சட்டைகள் காலம் பூராவும் அக்ரஹாரத்தையும், பிராமணர்களையும் வசை பேசி திரிவது மட்டும் என்ன பல்லிளிக்கிற பகுத்தறிவோ புரியவில்லை. சேரியில் மாறிய காலம் அக்ரஹாரத்திற்கு மட்டும் மாறாத மர்மம் என்ன வென்பதும் அறிய முடியவில்லை.

இவர்கள் திரைப்படங்களில் நிர்வாணத்தைக் காட்டுவது உணர்வுகளின் வலியை வெளிப்படுத்த அல்ல, உணர்ச்சிகளைத் தூண்டி லாபம் சம்பாதிக்கவே. இப்போது நிர்வாணத்தின் வலியைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படி என்ன உயிர் போகிற கதையா இது? நிர்வாணம், கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் எந்த படமும் தமிழில் வெற்றி பெற்றது இல்லையா? கண்ட கேவலத்தையும் படமாக எடுப்பதா தரமான சினிமா? இதுவா புதுமையான முயற்சி?

விமான நிலையத்தில் பெண்களைச் சோதனை செய்கிற போது கூட மறைவாக அழைத்துச் சென்று பெண்மையின் கண்ணியம் காக்கிற பாரத மண்ணில் இது போன்று கலை என்கிற பெயரில் நீலப்படம் போட்டு காசு சம்பாதிக்கும் இது போன்ற தொழில் ரீதியான பாலியல் இயக்குநர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்து ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

படத்தில் களிமண்மையும், தூசியையும் பூசி நடித்து விட்டு யதார்த்த வாழ்வில் தூசி நுழைய முடியாத பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் வாழ்க்கை நடத்துகிறவர்களே இந்த கூத்துப் பட்டறைகள். இவர்களுக்கு ஏழைகளின் வலியை நடித்து காசு சம்பாதிக்கவே தெரியுமே தவிர, ஏழைகளின் வாழ்க்கை வலியை உணர்த்தவே முடியாது. உழைப்பாளியின் பணத்தை விளம்பர ஆசை காட்டி கட்டிய கோவணத்தைக் கூட உரிந்து விட தயங்காத கொடூர வஞ்சக எண்ணம் கொண்டவர்களே இவர் போன்ற கொடிய சினிமா கூத்தாடி இயக்குநர்கள்.

நிர்வாணம் பாவத்தின் விளைவு என்று ஒரு பக்கம் மதம் கற்பித்து ஆடை கொடுக்கிறது. மறுபக்கம் இந்த கூத்தாடும் கேவலத்தைச் செய்து கோடி லாபம் பார்க்கும் சினிமா துறை, பெண்களின் ஆடைகளை உரிந்து அம்மணமாக்கி பணம் பார்க்கிறது. புதுமையாக இருக்க ஏன் இந்த டைரக்டரே அடுத்த படத்தில் அம்மணமாக தோன்றி ஆண் நிர்வாணத்தின் வலி என்று ஒரு போஸ்டர் போட கூடாது?