ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

ஸ்ரீமதியும் திராவிட கல்வியும்

ஆகஸ்ட் 1, 2022

கள்ளக்குறிச்சி அருகே விடுதியில் +2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தால் சொல்லப் பட்ட பிரச்சனையில் எழுந்த கலவரம் மாணவியின் அடக்கத்திற்கு பிறகு அடங்கி இருக்கிறது.

நாட்டு நடப்புகள்

திராவிட மாடல், பலியாடுகள், மரணங்கள்

அநியாய மரணத்திற்கு யார் காரணம்? கடவுளா? ஆட்சியாளர்களா? என்கிற பட்டிமன்றத்தில் அதிமுக, திமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் இருக்கிற வரை இது போன்ற கொடூர மரணங்கள் தோன்றி மறைகிற காட்சிகளுக்கு முடிவே இராது என்பதற்கான மற்றொரு வலுவான ஆதாரமே இந்த மாணவியின் மரணம். இது திராவிட ஆட்சிக் காலத்தில் முதலும் அல்ல, இத்தோடு இது போன்ற அப்பாவி மரணங்கள் முடிய போவதும் அல்ல. திராவிட ஆட்சியில் நீண்டு கொண்டு போகும் சீரியல் கில்லர் தொடரின் ஒரு பகுதியே இது. இன்று யாருக்கோ நடப்பது நாளைக்கு நம் வீட்டிலும் நடக்கலாம்.

இது போன்ற மரணங்கள் நடந்து மக்கள் பொங்கி எழுகிற போது அவர்கள் எப்போது அடங்குவார்கள்? எப்படி அடங்குவார்கள்? என்ன சொன்னால் அடங்குவார்கள்? என்கிற அத்தனை ராஜ தந்திரமும் சாணக்கியத்தனமும் அறிந்தவர்கள் இந்த திராவிடர்கள். இவர்கள் ஆட்சிக்காலத்தில் பார்த்திராத கொடூர மரணங்களா? மூடி மறைக்காத கொலைகளா? மாற்றி எழுதாத விசாரணை அறிக்கைகளா? திராவிட அரசுகளின் கண் அசைவிற்கு படமெடுத்து ஆடும் Snake பாபுக்கள் இருக்கையில் என்ன கவலை? திராவிடம் போடும் ட்யூனுக்கு ஏற்ப குத்தாட்டம் வேறு சிறப்பாக கும்மென்று போடுகிறாரே?

அப்பாவிகளை அடித்து துவைப்பார்கள், வழக்கு போட்டு மிரட்டுவார்கள். மக்கள் கூட்டம் கட்டுக்குள் அடங்கவில்லை என்றால் அதிகாரிகளை ஒப்புக்கு டிரான்ஸ்பர் செய்து மக்களை ஏமாற்றுவார்கள். சிபிசிஐடி – க்கு வழக்கு மாற்றம் என்கிற பிரேக்கிங் நீயூஸ் போடுவார்கள். கட்டு மர சூரியன் இருக்கிறானே விடிய விடிய விடியல் அரசுக்கு முட்டுக் கொடுக்க. மேலும் திராவிட ஆட்சிக்கு சொம்பு தூக்கும் ராஜீவ் காந்தி போன்ற பதவி கிடைத்திட கூவும் சொங்கிகளை சமூக ஊடகங்களில் பேச வைத்து அரசின் இந்த நடவடிக்கையை ஆஹா, ஓஹோ என்று புகழ வைப்பார்கள், ஒரே நாளில் மக்கள் இவற்றில் மயங்கி அத்தனையையும் ஒரே நாளில் மறந்து போவார்கள். ரிப்பீட்டு...

கடைசியில் காலம் முழுவதும் வழக்கு என்று சிறைக்கும், கோர்ட்டுக்கும் படியேறி வாழ்வை தொலைக்க இருக்கிறவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்கிற உணர்வில் பொங்கி எழுந்து, நடக்கிற அரசியல் தெரியாமல் தலையைக் கொடுக்கும் அப்பாவி மக்களே. பிள்ளையை இழந்த பெற்றோருக்கு வேலையோ, விருதோ, புரட்சி தாய் என்கிற பட்டமோ கொடுத்து மேடையேற்றி அவர்கள் வாயாலேயே தங்களை புகழ வைத்து எடுத்த போட்டோ, வீடியோவை பரப்பி, அதுவும் பத்தவில்லை என்றால் கவிதை நடையில் கரிமுத்துவை விட்டு புளுகி தள்ளி சாந்தப் படுத்தி விடுவார்கள். ஆனால், போராட்டத்தைத் தூண்டி விட்ட ஒரு அரசியல்வாதி, லோக்கல் ரவுடி மேல் கூட இந்த திராவிட அரசும், காவல் துறையும் வழக்குப் பதிவு செய்யாது. பலியாடுகள் எப்போதும் சாமான்யர்களே.

கடந்த 70 ஆண்டுகளாக திராவிட ஆட்சி முறையில் நடந்த ஒவ்வொரு அப்பாவி பெண் மரணத்திலும் பொது மக்கள் வழக்கமாக பாடுகிற வில்லுப் பாட்டு இது தான்: ‘நீதி, நியாயத்திற்கே காலம் இல்லாது போய் விட்டது’, ‘இந்த கேவலமான உலகத்திலிருந்து பிரிந்து இந்த பெண்ணாவது நிம்மதியாக உறங்கட்டும்’, சட்டம் என்பதே இருட்டறை, பணம் இருப்பவர்களுக்கே அது வேலை செய்யும்’, நீதி புதைக்கப் பட வில்லை, விதைக்கப் பட்டுள்ளது’…. கொஞ்ச காலம் பாடுவார்கள். அப்புறம் இதே கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள். மீண்டும் கொலை காட்சிகள் அரங்கேறும். ஒரே பல்லவி, சரணம் - ரிப்பீட்டு...

ஒவ்வொரு முறை திராவிட ஆட்சிக்காலத்தில் நடக்கிற அப்பாவிகளின் மர்ம சாவில் எடுக்கப்படுகிற நடவடிக்கையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ஒரே ரிப்பீட்டு காட்சி தான். அதே திராவிட மாடல் ஆட்சி தான். எப்போதும் போல ஒரு வழக்கு எப்படி மர்மமாக பொது மக்களின் நினைவிலிருந்து மறந்து போகிறதோ, மறைந்து போகிறதோ, மறைக்கப் படுகிறதோ அது தான் இந்த மாணவியின் மரணத்திலும் இனி நடக்கும். இந்த திராவிட ஏமாற்று போ்வழிகள் ஆட்சி நடத்தும் எந்த காலத்திலும் எந்த வழக்கிலும் ஏழைகள் யாருக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை. இதுவே பட்டவர்த்தமான எக்கால(ள)உண்மை.

படிப்பினால் படிப்படியாக உண்டான மன அழுத்தமே இந்த தற்கொலைக்கு தூண்டிய மரணம் என்கிறார்கள். அது உண்மையானால் அதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியது இவ்வளவுக்கு மன அழுத்தத்தை உருவாக்கிய இந்த திராவிட மாடல் அரசுகளின் கல்வி முறை தானே? நாங்கள் தான் படிக்க வைத்தோம் என்று இவர்கள் தானே கூசாமல் மணிக் கொரு முறை கூவிக் கொண்டு திரிகிறார்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வார்கள், பாவம். உண்மையில் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அப்பாவிகளே. பலியாடுகளே.

பெற்றோர் ஒன்றும் இந்த பள்ளியில் சும்மா சோ்க்கவில்லை, தங்கள் மகள் இந்த பள்ளியில் படித்தால் அவளை எப்படியும் நல்ல மார்க் வாங்க வைத்து விடுவார்கள் என்கிற பேராசையிலே சோ்த்தார்கள். இது தற்கொலை என்றால் அவர்களுக்கும் இந்த சாவில் பங்கு இல்லையா? நம்பிக்கை என்பதே பிள்ளைகள் மீது திணிக்கிற மன அழுத்தம் தானே? தன் வாழ்வில் தான் நினைத்தபடி வாழ கூட சுதந்திரம் கொடுக்காமல் புத்தக பொதி மூட்டைகளாய் நம் தமிழகத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பலியாடுகள் தானே? ஒட்டு மொத்த பழியையும் ஆசிரியர்கள் மீது போட்டு அவர்களைக் குற்றப்படுத்துவதும், பலியாடுகளாக மாற்றுவதும் என்ன நியாயம்? கல்வி முறைக்கு காரணம் ஆசிரியர் அல்லவே, திராவிட ஆட்சி முறை தானே?

நாளைக்கு தங்கள் மகள் குறைந்த மதிப்பெண் வாங்கினால் அந்த பெற்றோர் ஆசிரியரிடம் சண்டை போட மாட்டார்களா? தங்களிடம் படிக்கும் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுகிற முயற்சியா? தங்கள் நிர்வாகத்திற்கு, பள்ளிக்கு நல்ல ரிசல்ட் கொடுக்க வேண்டும் என்கிற மன அழுத்தம் ஆசிரியர்களுக்கு இல்லையா? மார்க் அடிப்படையில் தரம் பிரிக்கும் தரங்கெட்ட கல்வி முறையைக் கொண்டு வந்து ஊக்குவிப்பது திராவிட மாடல் அரசுகள் தானே? இவர்களுக்கு ஓட்டுப் போட்டு ஆள்கிற இடத்தில் வைத்த பொது மக்கள் குற்றவாளிகள் இல்லையா? இந்த வாதத்தில் வாக்காளனும் குற்றவாளி தானே? தாங்கள் செய்கிற தவறுக்கு அடுத்தவர் மீது குற்றப்பழி போட்டு கை கழுவுவது இன்று நேற்றல்ல, ஆதாம், ஏவாள் புராண காலத்திலிருந்து இருக்கிறது.

இனி என்ன? இந்த குற்றப் பழியிலிருந்து தப்பித்துக் கொள்ள 99 அம்ச பரிந்துரையை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிலீம் காட்டுவார்கள், போஸ் கொடுப்பார்கள், அத்தோடு அவர்களது விளம்பர படம் முடிந்தது. முதலில் இந்த திராவிட மாடல் அரசுகளைப் புகழ்ந்து காசு வாங்கி விளம்பரத்தில் நடிக்கும் அத்தனை பேரையும் விளக்குமாற்றால் அடித்து விரட்ட வேண்டும். இதில் ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தான் தாராரு என்கிற பந்தா பாடல் வேறு. போனது ஒத்த உசுரு தானே, இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நன்னெறி பாடம் நடத்துகிறார் தூக்கத்தின் புதல்வனான கல்வி அமைச்சர். அவருக்கு முந்தைய நாள் பார்ட்டியில் சின்னவரோடு சஃபாரி அணிந்து கும்மாளம் கூட உருப்படியாக போட முடியாத கோபம்.

தான் உயிரோடு இருக்கிற போதே தன் உதிரத்தில் பிறந்த பிள்ளை இறக்கிற வலியை ஒரு தாய் அனுபவிக்கிற காலமே கலிகாலம். அதற்கு முற்றிலும் நம் காலத்தில் பொறுப்பேற்க வேண்டியது திராவிட மாடல் அரசுகளே. பலரைக் குடிக்க வைத்தும், இப்படி மாணவியரை மன அழுத்தம் கொடுத்து படிக்க வைத்தும் தற்கொலைக்கு தூண்டுகிற கூட்டங்களே இந்த திராவிட ஆட்சியாளர்கள். காட்சிகள் மாறாத அதே ஆட்சி முறை ஒரு தலைமுறையாக.

செத்த பிறகு மறுவாழ்வு உண்டா? இல்லையா? - அது செத்தவர்களுக்கே தெரியும். ஆனால் கண்டிப்பாக ஒருவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு தர்ம தேவதைக்கு கணக்கு கொடுக்க வேண்டும், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது எங்களது நம்பிக்கை. இதிலும் கருணாவும், ஜெயாவும் பகுத்தறிவு வாதம் செய்து தப்பி விடுவார்கள் என்பதே எங்களது கணிப்பு. தர்ம தேவதையிடம் தர்ம அடி வாங்கி, மிதிபட்டு, காலத்திற்கும் நொந்து வெந்து அழுது புலம்புவது பட்டாலும், சுட்டாலும், பொய் வழக்குகள் போட்டாலும் மீண்டும் மீண்டும் இந்த திராவிட கூட்டங்களுக்கே தவறாது ஓட்டுப் போடும் மூத்தக்குடி தறுதலைகளும் ஓட்டும் போடாது, போடுவதையும் நோட்டாவுக்கு போட்டு வம்பு பேசி வீணடித்து திரியும் இளையகுடி வெற்றுச் சவடால் கூட்டங்களுமே.

கடவுள் அல்ல, அரசியலே தமிழகத்தில் அத்தனையையும் தீர்மானிக்கிறது. கடவுள் அறிவுரை சொல்ல முடியும், வழிகாட்ட முடியும், கேட்பதும், கேட்காததும், பார்ப்பதும், பார்க்க மறுப்பதும் தனி நபர் சுதந்திரம். இதில் கடவுள் என்னும் தாய் வேடிக்கைப் பார்ப்பதை தவிர என்ன செய்ய முடியும்? ஆன்மீகம் கண்டித்தால் தான் பகுத்தறிவு பேசி புளுத்த அரிசி போடுவதைப் பாராட்டும் திராவிட மணியர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே?