கடவுள் கையாலாகாதவரா?

கடவுள் கையாலாகாதவரா?

கடவுள் கையாலாகாதவரா?

ஆகஸ்ட் 17, 2022

அநீதி, அக்கிரமம், அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் நடக்கும் நம் தமிழகத்தில் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்க்கும் கடவுள் வெறும் கையாலாகாதவரா?

ஆன்மீக அரசியல்

மத குருமார்கள், மந்திரம், மத நூல்

நம் தமிழகத்தில் நடக்கிற அநியாயத்தை கடவுள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்று கடவுளை கேள்வி கேட்கிற அத்தனை பேரும் சுயமாக கடவுளைப் பற்றி சிந்தித்து இந்த கேள்வியை எழுப்புவது இல்லை. மாறாக, கடவுளைப் பற்றி அவர்களுடைய மதங்கள் கற்றுக் கொடுத்த “கடவுள் மந்திரவாதி” என்கிற தவறான புரிதலோடே இது போன்று கேள்வி கேட்கிறார்கள். அடிப்படையில், கடவுள் ஒரு மந்திரவாதி என்பது முழுக்க பொய் மற்றும் கடவுளைப் பற்றிய தவறான புரிதல். இது மத குருமார்களின் மூளைச் சலவை.

கடவுளைப் புரிந்து கொள்ள முதலில் ஒருவர் இந்த மந்திர, தந்திர மாய கடவுள் என்கிற கட்டிலிருந்து வெளியில் வந்தே ஆக வேண்டும். மந்திரம் செய்ய முடியாதவர் என்றால் அவர் கடவுளாக இருக்க முடியாதே என்கிற கேள்வியே மாய, மந்திரம் என்கிற வார்த்தையை கடவுளோடு எவ்வளவு இறுக்கமாக மத குருமார்கள் கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம். ஞானம் தான் கடவுளே தவிர கடவுள் மந்திரவாதி அல்ல. நினைத்த உடன் வேண்டியதை தர முடிகிறவரும், விரும்பியபடி மாற்றி எழுதும் வல்லமை படைத்தவரும், ஒன்றும் இல்லாமையில் இருந்து உலகத்தை உருவாக்கியவரும் நிச்சயம் கடவுள் அல்ல.அது கட்டுக்கதை.

ஞானத்தை யாராவது பார்க்க முடியுமா? மூளையைப் பார்க்கலாம், ஆனால் அறிவைப் பார்த்தவர் எவரும் இங்குண்டோ? பின் உடல், உருவம் இல்லாத கடவுளை எப்படி பார்க்க முடியும்? எனவே கடவுளே மந்திரம் சொன்னாலும் அது பலிக்காது, காரணம் மந்திரம் என்பதே வெளிநாட்டு மத குருமார்கள் எழுதிய கட்டுக் கதையே. இந்த அடிப்படை புரிதல் கூட கடவுளைப் பற்றி இப்போதும் இல்லை என்றால் அப்பாவிகளின் துன்பத்திற்கு யார் காரணம்? நல்லவர்கள் ஏன் கஸ்டப்படுகிறார்கள்? என்கிற கேள்வியை எப்போதும் கேட்டு மண்டையை உடைத்துக் கொள்கிற முட்டாளாக தான் என்றும் நாம் இருக்க போகிறோம்.

தமிழகத்தில் கடவுளைப் பற்றி பகுத்தறிவு நய்யாண்டி செய்கிற நிலையை உருவாக்கிய பெருந்தகையர் கிறிஸ்தவ மத குருமார்களே. அவர்களோடு கை கோர்த்து இப்போது மத வெறி அரசியல் செய்கிறவர்களும் இதே கிறிஸ்தவ மத குருமார்களே. மேலை நாட்டவர் சொல்வது அத்தனையும் உண்மை, அவை தான் உண்மையான வரலாறு என்று நம்புகிற ஒரு முட்டாளின் கண் மூடித்தனமான நம்பிக்கையே விசுவாசம். இந்த மனநிலை தான் இந்திய மதத்தை புராணம் என்று கேலி பேசவும், வெளிநாட்டு மதம் என்றாலே வரலாற்று மதம் என்று திராவிட பகுத்தறிவு முட்டுக் கொடுக்கவும் வழிவகுத்தது.

கடவுள் தன்னை என்றைக்குமே மந்திரவாதியாக காட்டியதில்லை. யாருக்கும் தோன்றியதும் இல்லை. இந்திய மத நூல்களும் கடவுள் அனுபவத்தை புராணமாகவே மக்களுக்குத் தந்தது, மந்திர மொழியாக வெளிப்படுத்தியது. எப்போதும் கடவுளை மந்திரவாதியாக காட்டியது இல்லை. ஆனால், வெளிநாட்டு குருமார்கள் கூட்டம் மக்களை கூட்டமாக சோ்க்க கடவுளை மந்திரவாதி என கதை கட்டி விட்டது. மத நூலை வரலாற்று நூல் என்று பொய் சொன்னது. புகழ்ந்தால் அள்ளிக் கொடுப்பார் என்று புருடா விட்டது. நம்பவில்லை என்றால் சாபம் போடுவார் என்று புளுகி தள்ளியது.

எத்தனை எத்தனை கதைகளை கடவுள் பெயரால் அதிகாரம் செய்கிற குருமார்கள் பரப்பி விட்டு இருக்கிறார்கள்! அப்பம் மனித சதையாக மாறியதாம், திராட்சை மது மனித ரத்தமாக மாறியதாம், செத்தவர் உயிர்த்தாராம், இறந்தவருக்கு கடவுள் உயிர் கொடுத்தாராம்… - இவை எல்லாம் வரலாறாம். அவர்கள் சொன்னால் எதையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட வேண்டுமாம், நம்பாதவர் சபிக்கப் பட்டவராம். இந்த முட்டாள் தன, மூட நம்பிக்கை சர்வாதிகாரத்திற்கு கட்டுப்பட்ட கிறிஸ்தவ மத குருமார்கள் இந்தியாவில் மக்களாட்சியை கேள்வி கேட்பது எவ்வளவு கேடித்தனம்?

தமிழகத்தில் குடி கொண்டிருக்கிற வெளிநாட்டு மதங்கள் பிறப்பிலேயே இங்குள்ள குழந்தையை மூளைச் சலவை செய்து விடுகிறது. உலகம் முழுவதிற்கும் ஒரே கடவுள், அவரே உண்மை கடவுள், அவரே வரலாற்று கடவுள் என்கிற கட்டுக் கதையை குழந்தை பருவத்திலேயே திணித்து அவர்களின் சிந்தனையைச் சிறை செய்து விடுகிறது, குதிரைக் கடிவாளம் போல. அதனைக் கடந்து சிந்திக்க தடை போடுகிறது. பாவம், சாபம் என்று பயமுறுத்துகிறது.மோட்சம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் என்பதெல்லாம் யாரும் எங்கேயும் பார்த்தது கிடையாது. அவை எல்லாமே ஆன்மீக போதை அதிகமான சில முட்டாள் பக்தாள்ஸ் கண்டுபிடித்த கற்பனை உலகமே.

கடவுளைப் பற்றிய மக்களின் மந்திரவாத பார்வையை மாற்றுவது எளிது அல்ல. அந்த மத போதையிலே இத்தனை காலம் மக்கள் ஊறி ருசி கண்டு விட்டதால் அந்த போதையை தெளிய வைப்பது கடினமானதே. மேலும் மத குருமார்களும் அதனை அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள். மக்களை மத போதையில் வைத்திருந்தால் தானே அவர்களும் வெளிநாட்டு கரன்சி பார்க்க முடியும், பிழைப்பு அல்லவா! சாராய போதைக்கு அடிமையான ஒருவன் அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு சிரமமோ அது போலத்தான் கடவுள் மந்திரவாதி என்று மத குருமார்கள் ஊற்றிக் கொடுக்கும் போதையை தெளிய வைப்பதும்.

கடவுளை நாம் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோமே தவிர, தவறு கடவுள் மீது அல்ல. கடவுள் என்று ஒருவர் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் போடுகிற கணக்கே தவறாக இருக்கிற போது, விடை மட்டும் எப்படி சரியாக வரும்? இதில் கடவுளை கையாலாகாதவர் என்று எப்படி சொல்ல முடியும்? கடவுளை தவறாக கற்பித்த மத குருமார்களிடம் கேள்வி கேட்க திராணியில்லாது கடவுளை வெறுமனே கேள்வி கேட்பது என்ன அறிவு?

கடவுள் நாம் நினைப்பது போல இயங்குகிறவரும் அல்ல. யாரையும் இயக்க முடிகிறவரும் அல்ல. உணர்வுகளின் வழியில் நம்மோடு உறவாட முயல்கிறவரே கடவுள். அவர் எந்த சக்தியும் இல்லாதவர். எனவே, நல்லவரை ஆள வைக்கிற சக்தியை கையில் ஓட்டாக வைத்துக் கொண்டு தோ்தலில் திராவிட திருடர்களுக்கு அதனை கூறு கெட்டு போட்டு விட்டு நடக்கிற அநியாயங்களுக்கு மட்டும் கடவுளை கேள்வி கேட்கிற முட்டாள் பக்தாள்ஸ் அத்தனை பேருடைய பார்வையில் மட்டுமே கடவுள் கையாலாகாதவர்.

ஆனால் அந்த கையாலாகாத ஞானம் தான் இவ்வளவு பெரிய உலகத்தை மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து மெல்ல மெல்ல ஞானமாக படைத்து இருக்கிறது. ஓருயிரில் தொடங்கி ஆறறிவாக மனிதன் உயிர் பெறும் வரை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறது. திருட்டு திராவிடத்தை மக்கள் மூளையில்லாது மீண்டும் மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தாலும் இருக்கிற சூழ்நிலையில் எத்தனை பேரை காப்பாற்றி கரை சோ்க்க முடியுமோ அதனையும் செய்து வருகிறது. அந்த கையாலாகாத ஞானம் தான் இன்னமும் தமிழகத்தில் பல கோடி மக்களின் ஒரே ஆறுதலாக கடைசி நம்பிக்கையுமாக இருக்கிறது.

அன்பாக பொறுத்துப் போகிற தாயாக பெண் சக்தி இருப்பது தான் அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்? என்று திராவிட கொடுக்குகளின் வாரிசுகள் இறுமாப்பு கொண்டு திரிய காரணமாகி விடுகிறது. ஆனாலும், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். அதுவும் நம் காலத்திலேயே நடக்கும் என்பதே நாங்கள் போதிக்கிற கடவுள் நம்பிக்கை. அது தான் கடவுளின் ஞானத்திற்கும் மனித அறிவிற்கும் இடையே உள்ள எட்ட முடியாத தூரம்.