உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா

அக்டோபர் 05, 2022

மத வழிபாடுகள் தேவையா? அவை மூட நம்பிக்கையா? மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருவதா? மதம் இந்த சமூகத்தில் மனிதனை மிருகமாக மாற்றுவதா? சடங்கு, சம்பிரதாயம், மத வழிபாடுகள் எதற்காக?

ஆன்மீக அரசியல்

சடங்கு, வழிபாடு, சம்பிரதாயம்

சடங்கு, சம்பிரதாயம் மற்றும் வழிபாடு தேவையா, இல்லையா? வேண்டுமா, வேண்டாமா? என்கிற கேள்வியே நாம் வாழ்கிற காலத்தின் தவறான கேள்வி. காரணம், அது ஏற்கெனவே வாழ்வியலோடு கலந்து விட்ட ஒன்று. அதை எதிர்ப்பதும், விவாதிப்பதும் மத வெறுப்பு வளரவும், கடவுள் பெயரால் இன்னும் பல புனித கொலைகள் அரங்கேறவும், இன்னும் ஆயிரம் புதிய மதங்கள் பிறக்கவுமே வழி வகுக்குமே தவிர வேறு எதற்கும் உதவாது. எனவே, சடங்கு, சம்பிரதாயம் பற்றி நாம் கொண்டிருக்க வேண்டிய பார்வையே நம் காலத்திய தேவை.

சடங்குகளும் வழிபாடுகளும் கடவுளிடமிருந்து பணமோ, பதவியோ, உயர்ந்த அந்தஸ்தோ பெறுவதற்காக ஏற்படுத்தப் பட்டது அல்ல. மாறாக, அது வெறும் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் அடையாளமாக மட்டுமே நம் முன்னோர்களால் அறிமுகம் செய்யப் பட்டது. காலப்போக்கில் அதனை வியாபாரமாக பார்க்கும் பார்வையைக் கொடுத்தது ஒரு சிலரின் சுய நலமும், அதனையே உண்மை என்று நம்பிய பலரின் அறியாமையுமே.

மனிதன் என்பவன் உடல், உள்ளம், ஆன்மா என்கிற மூன்று கூறுகளால் பிறந்தவன். இந்த மூன்றின் தேவையும் நிறைவு பெறுகிற போதே ஒரு மனிதன் தன் பிறவிப் பயனை அடைகிறான். உடலின் தேவை உணவும் உறவும். அதே போல நமக்கு பிடித்ததைச் செய்கிற போது உள்ளமும் நிறைவடைகிறது. இறுதியாக, இறைவனை நாடுகிற போது ஆன்மா மகிழ்வடைகிறது. இவைகளை பூர்த்தி செய்வது யாரால் முடியும்? இங்கே எத்தனை போ் பிறவிப் பயனை அடைந்து இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு உண்ண உணவு கிடைக்கிறது? எத்தனை பேருக்கு தங்களுக்கு பிடித்தவற்றைச் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது? கோயிலுக்கு வெறுமனே ஆன்ம தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் செல்கிறவர்கள் எத்தனை போ்?

முதல் இரண்டான உடல், உள்ள தேவையைப் பூர்த்தி செய்கிற பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற அரசியல்வாதி உடையது. உணவுக்கு வழி சொல்வதும், பிடித்ததைச் செய்ய வழிகாட்டுகிற பொறுப்பும் அவர்களுடையது. ஆன்மாவின் தேவையை நிறைவு செய்வது ஆன்மீகவாதியின் கடமை. ஆனால் அரசியல்வாதி தன் தேவையை மட்டுமே கவனிக்கிறான். ஆன்மீகவாதியோ ஆன்மீகத்தால் மனிதனின் உடல், உள்ள தேவைகளையும் நிறைவேற்ற முடியும் என்று பொய் சொல்லி சடங்கு, சம்பிரதாயத்தை வியாபாரம் செய்கிறான். இதுவே இங்கே நிலவுகிற குழப்பத்திற்கு மூல காரணம். அத்தனை பேரும் வாழ்க்கையை ஏனோ தானோ என்று வாழ்வதற்கான அச்சாரம்.

சடங்கு, சம்பிரதாயம், மத வழிபாடுகள் எதுவுமே எப்போதும் எந்த காலத்திலும் நம் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியாது என்கிற யதார்த்த உண்மையை மக்கள் புரிந்து கொள்கிற காலமே தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுகிற காலமாக இருக்கும். ஒருவர் செய்கிற பிராத்தனை, செய்கிற சடங்குகள் நம் உடலின் நோயையோ, ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவாக முடியாத கோளாறையோ, தனி மனித பொருளாதார தேவையையோ, அன்றாட வாழ்வின் பிரச்சனையையோ சரி செய்ய முடியாது.

ஆன்மீகம் என்பது வெறுமனே ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே. ஆன்மீகத்தால் நம் ஆத்மாவின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எனவே சடங்கும், சம்பிரதாயமும், வழிபாடுகளும் ஆன்மாவின் தேவைக்கானது மட்டுமே. பண தேவையை பூர்த்தி செய்ய அல்ல. ஆக தமிழகத்தில் வாழும் தனி மனிதனின் பொருளாதார தேவையை கடவுள் அல்ல, ஆட்சி செய்கிற அதிகாரம் பெற்றிருக்கிற முதல்வர் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதிகாரம், ஆட்சியை கீழே உள்ள முதல்வரிடம் கொடுத்து விட்டு, மேலே இருக்கிற கடவுள் மேஜிக் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் இல்லையா?

பிறப்பு, இறப்பு, திருமணம், புதிய வீடு, புதிய தொழில் என அத்தனைக்கும் சடங்கு, சம்பிரதாயம் வழியாக நாம் கடவுளை நாடுவது நமக்கு தேவையானது எல்லாம் அந்த நிமிடமே கிடைத்து விடும் என்பதற்காக அல்ல. அது நம் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஓர் தருணம். அவ்வளவே. அப்படிச் செய்தால் நாம் நினைத்தது நடந்து விடும், தேவைப்படுகிற எல்லாமே கிடைத்து விடும் என்று பக்தன் நம்பினால் அவன் இன்னமும் கடவுளையும், கடவுள் நம்பிக்கையையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே அர்த்தம். அப்படி ஒரு நம்பிக்கையை சடங்கு செய்கிறவர் கொடுத்தால் அவரும் ஒரு ஏமாற்றுகிறவரே. இதுவரை சாஸ்திர சம்பிரதாயம், சடங்கு செய்து கட்டிய எந்த கட்டிடமும், கோயிலும் இடிந்து விழுந்தது இல்லையா?

சடங்கும், செபங்களும் மந்திரமோ மேஜிக்கோ அல்ல சொன்ன உடனே நடந்து விடுவதற்கு. அவை கடவுள் நம்பிக்கையை அங்கீகரிக்கும் வெறும் வார்த்தைகள் மட்டுமே. அதற்கு எந்த மந்திர சக்தியும் கிடையாது. எந்த மேஜிக் வலிமையும் கிடையாது. கடவுள் பெயரால் மக்களை ஒருங்கிணைக்கும் ஆன்மீக வலிமை மட்டுமே அதற்கு உண்டு. தனி மனித வாழ்வைப் புரட்டிப் போடும் எந்த மேஜிக்கையும் அது செய்யாது.

தற்காலத்திய 99 விழுக்காடு மத குருமார்கள் தாங்கள் செய்கிற சடங்கு, சம்பிரதாயத்தை மேஜிக் போல நினைத்துச் செய்கிறார்கள். அதையே உண்மையான கடவுள் நம்பிக்கையாக ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் மீதும் திணிக்கிறார்கள். அவர்கள் நடத்தும் சடங்குகளை கடவுள் நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க பயன்படுத்த வில்லை. மாறாக கடவுளை மேஜிக் மன்னனாக ஜோடித்து காட்டவே பயன் படுத்துகிறார்கள். இதை செய்தால் அது கிடைக்கும், அதை செய்தால் இது கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளைக் காட்டி வழிபாடுகளின் அர்த்தத்தையே கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள். வழிபாடுகளின் எண்ணிக்கையையும் கூட்டி விட்டார்கள். அதைப் பிடித்துக் கொண்டு தான் திராவிடம் ஆன்மீகத்தை கேலி பேசியது, ஆட்சிப் பீடத்தை தன் வசப்படுத்த தந்திரமாக பயன்படுத்திக் கொண்டது.

அதற்காக சடங்கும், சம்பிரதாயமும் வெறும் மூட நம்பிக்கையும் அல்ல. அது கடவுள் நம்பிக்கையின் ஆணி வோ் மற்றும் ஆன்மீக வாழ்வின் அடிநாதம். கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கையை தொடக்கத்தில் இருந்தே மனிதன் அங்கீகரித்து வந்திருக்கிறான் என்பதற்கான ஆதாரமே இந்த வழிபாடுகள் தான். அதை மூட நம்பிக்கையாக மாற்றிக் காட்டுவது பல முட்டாள் குருக்களின் மடமையே. ஆக சடங்கு, சம்பிரதாயம் குற்றவாளி அல்ல. அதனை தவறாக கற்பிக்கும் முட்டாள்களே குற்றவாளி.

உண்மையில் வழிபாடு என்பது சிதறிக் கிடக்கிற மக்களை ஒரே குடும்பமாக இணைக்கிற நிகழ்வு, ஏற்றத் தாழ்வுகள் மறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற நிகழ்வு, சாதி, பேத உணர்வின்றி உறவாடுகிற நிகழ்வு, ஒரே தாயின் பிள்ளைகளாக ஒன்றாக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்கிற நிகழ்வு. அது எந்த மதமாக இருந்தாலும் சரி, எத்தனை கடவுள்கள் மீது நம்பிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் மூலப்பத்திரமே. மேஜிக் விளம்பரங்கள் அல்ல. அது யதார்த்த வாழ்வில் நடக்கிறதா, இல்லையா என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதன் நோக்கமும் அர்த்தமும் இது தான் என்பதே பக்தன் பார்க்க வேண்டிய பார்வை.

நம் கால சூழலில் திராவிட மாடல் ஆட்சியில் மூச்சுத் திணறி சிக்கி தவிக்கும் கோடிக் கணக்கான தாய்மார்களின் ஒரே ஆறுதல் இந்த கடவுள் நம்பிக்கை தான். இவைகள் தான் கேவலமான திராவிட ஆட்சியிலும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்து ஆறுதல் தந்து கொண்டிருக்கிறது. மக்கள் உயிரோடு வாழ வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த வழிபாடுகள் மட்டும் தமிழகத்தில் இல்லாவிட்டால் பல மனிதர்கள் மன நோயாளிகளாகவே மாறி இருப்பார்கள் என்பதே நாம் மறுக்க முடியாத உண்மை.