கருக்கும், கடவுளும்

கருக்கும், கடவுளும்

கருக்கும், கடவுளும்

நவம்பர் 19, 2022

கருக்கு மட்டை கடவுள் மறுப்பு பேசுகிற தளமா? அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிற அத்தனையும் தீர்மானிக்கிறது, கடவுள் அல்ல என்கிற நிலைப்பாடு கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதா?

ஆன்மீக அரசியல்

கலிலேயோ, மதங்கள், பைபிள்

கருக்கு மட்டை கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது அல்ல. மாறாக பாரம்பரிய மதங்கள் கடவுளைப் பற்றி 'நாங்கள் சொல்வது மட்டுந்தான் உண்மை' என்று சொல்ல துணிகிற ஆதிக்க போதனைக்கு எதிரானது. இது தான் கடவுள், இப்படி இயங்குகிறவர் தான் கடவுள் என்று அறிவியலும் அறிவும் வளராத காலத்தில் தோன்றிய சிந்தனைகளை தவறு என்று நம் கால அறிவியல் நிரூபித்தும் இன்னமும் விசுவாசம் என்கிற பெயரில் அந்த கதைகளை நம்ப கட்டாயப்படுத்தும் ஆதிக்க மூர்க்கத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.

கடவுள் அல்ல, அரசியலே தமிழகத்தில் அத்தனையையும் தீர்மானிக்கிறது என்பதே இன்னமும் எங்களது உறுதியான நிலைப்பாடு. இதை கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதாக நாங்கள் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்புவது மூட நம்பிக்கை. எல்லாவற்றையும் மனிதர்களே பார்த்துக் கொள்ள முடியும் என்று பேசுவது மூர்க்கமான நம்பிக்கை. கடவுள் இயங்கிட மனிதன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே கடவுள் பற்றிய சரியான நம்பிக்கை. அதனால், மந்திரவாத கடவுளை மக்களுக்கு போதிக்கிற பிழைப்பு வாத மதங்களை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தின் முட்டுக்கட்டைகளாக பார்க்கிறோம். நாங்கள் விமர்சிப்பது மதங்களை அல்ல, அவற்றின் பின்னால் மறைந்திருந்து எளிய மக்களை ஆட்டிப் படைத்து இயக்கும் தந்திரமிக்க சுயநலம் கொண்ட தலைவர்களை.

தற்கால தமிழக மக்கள், திராவிட கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் திருடர்கள் என்று அறிந்தும், அவர்களது கேவலமான வாழ்வைத் தெரிந்தும் காசு வாங்கி மிக்சி, டி.வி, ஸ்கூட்டி, செல்போன், அரசு வேலை என்கிற சுயநலத்திற்காக ஓட்டுப் போட்டு விட்டு, மறுபுறம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கடவுள் முன்னால் முட்டுப் போட்டு அழுதால் அதிசயம் நடந்து விடும் என்று நினைப்பது கடவுளையே கேலி செய்வதாகும் என்பதே எங்களது போதனை. மந்திரம் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய இலக்கிய மொழி மட்டுமே. அது உண்மை அல்ல. மந்திரம் என்பதே அறிவியல் விதிகளுக்கு எதிரானது. அது நடக்கவே முடியாது, எக்காலத்திலும் நடந்ததும் கிடையாது.

கடவுள் எந்த மதத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல என்பதே கருக்கு மட்டையின் கடவுள் நம்பிக்கை. எந்த மதத்தையும் கடவுள் உருவாக்கவில்லை. அத்தனை பாரம்பரிய மதங்களின் மூலப்பத்திரமும் அரசியல் சுயநலமே. மதங்கள் கற்றுத் தருவது போல கடவுள் மந்திரவாதி அல்ல, வெறும் இயலாமையின் கடவுள் என்பதே கடவுளைப் பற்றி நாங்கள் பார்க்கும் பார்வை. கடவுளுக்கு மந்திர சக்தி இருந்திருந்தால் இங்கு அநியாயமாக ஆட்சி செய்யும் திராவிட ஆட்சியாளர்களை என்றைக்கோ அழித்தொழித்து நல்லவர்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியிருப்பார் என்பதே எங்களது கூர்மையான வாதம். கடவுளால் யாரையும் இயக்க முடியாது, இயங்கவும் முடியாது என்பதற்கு இது உதாரணம். நடக்கிற மோசமான சூழ்நிலையை கடவுளால் தடுத்து நிறுத்த முடியாது. அவரால் இருக்கிற சூழ்நிலையில் வழிகாட்ட மட்டுமே முடியும். அந்த வழிகாட்டுதலை ஏற்பதும், ஏற்க மறுப்பதும் தனி மனித சுதந்திரம்.

கண் முன்னால் நடக்கிற அநியாயங்களை பவர் இருந்தும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிற சேடிஸ்டாக கடவுள் இருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம். சக்தியே இல்லாதவர் கடவுளாக இருக்க முடியுமா? கடவுளின் சக்தி மந்திர சக்தி அல்ல. மாறாக, மனிதன் இணைந்து செயல்படுகிற போது கிடைக்கிற ஞானமே கடவுளின் சக்தி. கற்பூரம் தானாக பற்றிக் கொள்ளாது. அது போல கடவுள் இயங்க வேண்டுமென்றால் மனிதன் கடவுளின் கருவியாக இருந்து செயல்பட வேண்டும்.

அவனின்றி அணுவும் அசையாது என்பது மட்டுமல்ல, மனிதனின் துணையின்றி கடவுளும் இந்த உலகத்தில் ஒரு புள்ளியைக் கூட நகர்த்த முடியாது என்பதையே நாங்கள் நம்புகிறோம். அப்படி மனிதனின் துணையின்றி அவரால் நிகழ்த்த முடியுமென்றால் அதனை எப்போதோ நிகழ்த்தி காட்டியிருப்பார் என்பதே எங்களது வாதம். மனிதனின் துணையோடு அதனை நிகழ்த்திக் காட்டுகிற வல்லமையே கடவுளின் ஞானம் என்கிறோம். அது சாத்தியம் என்கிறோம். அதையே மக்களின் எழுச்சி என்றும், கடவுளின் அவதார காலம் என்றும் மனித குல வரலாற்றில் படிக்கிறோம்.

சூரியன் அல்ல, பூமி தான் உலகைச் சுற்றி வருகிறது என்கிற அறிவியல் உண்மையைச் சொன்ன கலிலேயோ கத்தோலிக்க மத தலைவர்களால் சித்ரவதை செய்யப்பட்டார். ஏனென்றால் பைபிளில் சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று எழுதப்பட்டு இருந்தது. உலகம் தட்டையானது என்றும் சொல்லப்பட்டு இருந்தது. கடவுளால் எழுதப்பட்ட பைபிள் எப்படி தவறாக இருக்க முடியும்? என்பதே கத்தோலிக்க மத தலைவர்களின் வாதம்.

பைபிள் என்பது வானத்திலிருந்து விழுந்தது அல்ல, கடவுள் என்பவர் பைபிளுக்கு கட்டுப்பட்டவரும் அல்ல, பைபிள் என்பது கடவுளால் எழுதப்பட்ட நூலும் அல்ல, எனவே பைபிளை ஆதாரமாக வைத்து கடவுளுக்கு கண், காது, வாய், மூக்கு என்று கண்டதை உருவாக்காதீர்கள் என்பதே கலிலேயாவின் நிலைப்பாடாக இருந்தது. ஆக, கலிலேயோ கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. மாறாக, கத்தோலிக்க மதம் கடவுளைப் பற்றி, பைபிளை ஆதாரமாக வைத்து உருவாக்கி வைத்திருந்த பல்லாண்டு கால நம்பிக்கையை, அறிவியல் உண்மைக்கு முரணானது என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். இன்றைக்கு அதையே ஒட்டு மொத்த உலகமும் ஒத்துக் கொள்கிறது. ஏன், கத்தோலிக்க மதமும் ஏற்றுக் கொள்கிறது.

கலிலேயோ இந்த மத தலைவர்களுக்கு பயந்து வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தால் இந்த உண்மை வெளிவந்திருக்குமா? இன்னமும் உலகம் தட்டை, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற அறியாமையில் தானே இருந்திருப்போம்? அப்படி என்றால், சித்ரவதை செய்யப்பட்டு கொடுமையான தண்டனை அனுபவித்த கலிலேயோவிற்கு நீதி வழங்க எந்த கடவுள் வருவார்? இந்த உலகில் இரண்டு கடவுள்கள். ஒன்று மனிதர்களே உருவாக்கிய கற்பனையான கடவுள். இரண்டாவது உண்மையான கடவுள். மனிதர்கள் உருவாக்கிய போலி கடவுள் மந்திரவாதி கடவுள், வியாபாரத்திற்கு பயன்படுகிற கடவுள், மக்களை அடிமைப்படுத்தி வைக்க அதிகாரம் வர்க்கம் கண்டுபிடித்த கடவுள். உண்மையான கடவுளை இன்னமும் முழுமையாக எவரும் அறிந்தது இல்லை. மனித அறிவினால் அறிய முடியாதவரே இந்த உண்மையான கடவுள்.

அறிவும், அறிவியலும் வளராத காலத்தில் கடவுளைப் பற்றி சிந்தித்து எழுதிய சிந்தனைகளின் தொகுப்பான மத நூல்களை எக்காலத்திற்குமான கடவுள் நம்பிக்கை நூல் என்று சொல்வது அறிவியல் அறிவிற்கு முரணானதே. அறிவியல் கடவுள் நம்பிக்கையின் எதிரியல்ல. மதங்களின் பெயரால் பொய் மூட்டைகளைக் கட்டி வைத்திருக்கும் பாரம்பரிய மதங்களுக்கு எதிரானது. அறிவியலைப் பார்த்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பயப்பட தேவையில்லை, மதத்தின் பெயரால் பொய் கூட்டங்கள் நடத்துகிறவர்களே பயப்பட வேண்டும். ஏனென்றால், இத்தனை ஆண்டு கட்டி வைத்திருக்கிற தங்கள் கோட்டையை அறிவியல் உண்மைகள் தவிடு பொடியாக்கி விடும் என்று அவர்கள் அஞ்சுவது நியாயம் தானே.

மத தலைவர்கள் எல்லாருமே தாங்கள் தான் இன்றளவும் கடவுளையே காப்பாற்றி வருகிற பரமார்த்த சிஷ்யர்கள் போல நினைத்துக் கொள்கிற மனநோய் கொண்டவர்களாகவே தொிகிறார்கள். கடவுளே வந்து சொன்னாலும் இவர்கள் தங்கள் விசுவாச கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. இவர்களுக்கு ஏழை, எளிய மக்களின் வாழ்வை உயர்த்துவதை விட தங்களின் பாரம்பரிய நம்பிக்கையை, தங்களின் மத நிறுவனங்களைக் காப்பாற்றுவதே முதன்மையான இலக்கு.

கடவுளை எந்த மகானும் கூட பார்த்திருக்க முடியாது. அது இயேசு என்றாலும் சரி, முகம்மது நபி என்றாலும் சரி. பார்ப்பதும் எவருக்கும் முடியாதது. பார்த்தேன் என்று சொல்கிறவர் பொய்யன். பார்க்க முடியாத ஞானமே கடவுள் என்பதே கருக்கு மட்டையின் வாதம். ஆனால் இந்த மதங்களின் தலைவர்களோ கடவுளைப் பார்க்க முடியும் என்றும், கடவுளுக்கு கண், காது, மூக்கு, வாய் இருக்கிறது, அவருக்கு விண்ணகத்தில் கோட்டை இருக்கிறது என்றும் கதை கட்டிப் பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

தமிழகத்தில் நல்லவர்கள் எவரும் ஆட்சிப்பீடத்திற்கு திராவிடத்தைத் தாண்டி வர முடியாது. வந்தாலும் அவர்களும் மாறி விடுவார்கள் என்பதே மாற்றத்தை விரும்பும் பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் நல்லவர் ஒருவர் வந்து அவரும் மாறினாலும் வேறு நல்லவரே புதிதாக தோ்ந்தெடுக்க தமிழகத்தில் இல்லையா? என்பதே கருக்கு மட்டையின் கேள்வி. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க முடிவது தானே மக்களாட்சியின் மகத்துவம் என்பதும் நாங்கள் எழுப்பும் வினா. இதைச் செய்யாமல் கடவுளைக் கேள்வி கேட்பதால் ஒன்றும் ஆகாது என்பதே எங்களின் பதில்.

இதில் தீர்வு என்று தர ஒன்றுமே இல்லை. கடவுள் மந்திரவாதி அல்ல என்று சொன்ன பிறகு இதில் தீர்வு சொல்ல என்ன இருக்கிறது? திராவிடத்திற்கு மீண்டும் மீண்டும் ஓட்டுப் போட்டால் கடவுள் நினைத்தாலும் தீமைகள் நிகழ்வதை தடுக்க முடியாது என்பதே எங்களது ஆதங்கம். பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை, விபத்து, அகோர மரணங்கள், லஞ்சம், ஊழல் எதையும் திராவிட ஆட்சியில் நிறுத்த முடியாது. கடவுள் இவற்றைத் தடுக்க நினைத்தாலும் அவரால் முடியாது. ஏனென்றால், அதிகாரம் அவரது கையில் இல்லை, திராவிடத்தின் கையிலே தானே இருக்கிறது?

கடவுள் தன்னை வெளிப்படுத்துகிற காலம் கடவுளின் கையில் அல்ல, மனிதர்களாகிய நம் கையில் தான் வாக்குச் சீட்டாக இருக்கிறது. அதுவும் தோ்தல் நடக்கிற நேரத்தில் மட்டுமே மக்களாட்சி முறை நடக்கிற நாடுகளில் இருக்கிறது. எனவே, கடவுள் செயல்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வதும் வாக்காளர்கள் மட்டுமே, கடவுள் அல்ல. கடவுளால் யாரையும் இயக்கவும் முடியாது, தனியாக இயங்கவும் முடியாது. அப்படி முடிந்திருக்கும் என்றால் எப்போதோ பலரை இயக்கியிருப்பார், அவரும் தானாகவே இயங்கியிருப்பார்.

தமிழகத்தில் 'முதல்வர்' என்கிற ஒரே ஒரு மனிதனே இங்கு நடக்கிற அத்தனை சீர்கேட்டிற்கும் காரணமாகிறான். அதே 'முதல்வர்' பதவியை வைத்து தனி மனிதன் ஒருவனால் தமிழகத்தில் சீர்திருத்தங்களையும் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். எனவே, மக்களாட்சியில் இப்போது தமிழகத்தில் நடக்கிற கோமாளித்தன ஆட்சிக்கு பொறுப்பு திராவிட வாக்கு வங்கி வாக்காளர்களே, கடவுள் அல்ல. மக்கள் மனம்மாறி புதிய கட்சிகளை ஆட்சி செய்ய தோ்ந்தெடுக்காவிட்டால் தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாமலே இருக்கும்.