தீர்வு என்ன?

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

டிசம்பர் 17, 2022

வெறுமனே திராவிட அரசுகளைக் குற்றம் சுமத்துவதால் என்ன பயன்? அரசியல் பற்றி கருக்கு மட்டை சொல்வது யதார்த்த உண்மை என்றாலும் கருக்கு மட்டையால் தீர்வு எதையும் தர முடியவில்லையே?

நாட்டு நடப்புகள்

மக்களாட்சி, திராவிடம், மரணம்

தீர்வு தர வேண்டியது கருக்கு மட்டையல்ல, மக்கள் தோ்ந்தெடுத்த அரசுகளே. கடவுளால் தீர்வு தர முடியாது என்பதையும், கடவுளால் தீர்வு தர முடிந்திருக்கும் என்றால் எப்போதோ கொடுத்திருப்பார் என்பதுமே கருக்கு மட்டையின் வாதம். எத்தனை காலம் கடந்தாலும் தீர்வு தர வேண்டிய கட்சிகளைத் தோ்ந்தெடுப்பது கடவுள் அல்ல, ஓட்டு உரிமை வைத்திருக்கிற தமிழக வாக்காளர்களே. ஆகவே மக்களாட்சி முறையில் பிரச்சனைகளுக்கான தீர்வு கடவுளின் கையில் இல்லை, வாக்காளர்களின் கையில் தான் ஓட்டாக இருக்கிறது என்று சொல்கிறோம்.

எல்லாரும் திராவிட கட்சிகளைத் தாண்டி புதிய கட்சியைத் தோ்ந்தெடுப்பது நம் காலத்தில் சாத்தியமா? இது நடக்கிற காரியமா? நடப்பது, நடக்காதது அல்ல இப்போது பிரச்சனை. ஆனால் திராவிட கட்சிகள் ஊழல் நிறைந்தது, ஒழுக்கமே இல்லாதது என்பதை அவர்களுக்கு ஓட்டுப் போடும் அத்தனை பேரும் ஒத்துக் கொண்ட பின்பும் அவர்களுக்கே ஓட்டுப் போட்டு விட்டு மாற்றம் வரும் என்று நினைப்பது மதியீனம் இல்லையா? இந்த மதி கூட இல்லாதவர்களுக்கு கடவுளால் எப்படி விதியை மாற்றி எழுத இயலும்? என்பதே கருக்கு மட்டை எழுப்பும் கேள்வி.

அதனால் மட்டுமல்ல. ஒருவர் தன் வாக்கை ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் நிறைந்த திராவிட கட்சிகளுக்குப் போடுவதால் அந்த ஆட்சியில் நடக்கிற அத்தனை பழி பாவத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டிய தார்மீக கடமையும் இருக்கிறது என்பதையே கருக்கு மட்டை நினைவு படுத்துகிறது. மக்களாட்சி முறையில் ஆளும் அரசு மட்டுமல்ல, வாக்காளர்களும் நடக்கிற அத்தனை கொடுமைகளுக்கும் பழி, பாவம் ஏற்றாக வேண்டும், கடவுளைப் பொறுப்பாக்குவது மடத்தனம் என்கிற விழிப்புணர்வையே கருக்கு மட்டை வழங்குகிறது.

யார் தான் இந்த உலகத்தில் நல்லவர் என்று பேசுபவரும், யார் வந்தாலும் இது தான் நடக்கப் போகிறது என்று திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை நியாயப்படுத்துபவருமே இந்த நிமிடத்தில் தமிழகத்தில் புற்று நோய்க்கு பலியாகும் உயிர்கள், கிட்னி பழுதடைந்து போகிற உயிர்கள், மோசமான சாலை மற்றும் அதிவேகத்தின் காரணமாக விபத்தில் போகும் உயிர்கள், தவறான சிகிச்சையில் போகும் உயிர்கள், சிகிச்சை செய்ய பணமே இல்லாது போகும் அப்பாவி உயிர்கள் மற்றும் அனுபவிக்கும் சித்ரவதை வலிகளுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆகிறார், கடவுள் அல்ல.

தருமபுரியில் உயிரோடு பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட 3 மாணவிகளின் கொடூர சாவிற்கு திமுக, அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, அவர்கள் ஆள்வதற்கு வாக்களித்த அத்தனை பேரும் குற்றவாளிகளே. மனிதாபிமானம் இல்லாத ஈவு இரக்கமற்ற அரக்க மனம் கொண்ட பெண்ணைத் தோ்ந்தெடுத்தால் இப்படி தானே நடக்க முடியும்? கொழுந்து விட்டு எரிந்த பேருந்துகளைப் பார்த்த பிறகாவது மக்கள் திருந்தினார்களா? இல்லையே? நீதிமன்றம் அவரை ஊழல் குற்றவாளி என்று தண்டித்த பிறகாவது மக்கள் மாறினார்களா? இல்லையே? பிறகு இந்த கொடூரங்கள் எப்படி நிற்கும்? தொடர தானே செய்யும்?

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை, பெண்களை, 2 வயது குழந்தையை தாமிரபரணி ஆற்றில் முக்கி கொன்ற படுகொலைக்கு தமிழக போலீசும், திமுக முதல்வரும் மட்டுமல்ல, அந்த தோ்தலில் திமுகவிற்கு வாக்களித்த, வாக்களிக்கச் சொன்ன அத்தனை பேரும் பாவச் சுமையை சுமந்தே ஆக வேண்டும். இப்படி ஈவு இரக்கமில்லாதவரைத் தானே மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்? இது பாவம் இல்லையா? விஷம் கக்கும் ஜந்துக்களை ஆட்சியில் அமர்த்தி பாலும் தேனும் வடியும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம் இல்லையா?

திராவிட அமைச்சர்களை வரவேற்க சாலையில் வைத்த பேனர் விழுந்து பலியான அத்தனை அப்பாவிகளின் மரணத்திற்கும் திராவிடத்திற்கு வாக்களித்த ஒட்டு மொத்த பேரும் கணக்கு கொடுக்க வேண்டியவர்களே. ஸ்டொ்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களைத் துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற அடிமை அதிமுக அரசு அமைய ஓட்டுப் போட்ட அத்தனை பேருக்கும் அந்த இரத்தப் பழியில் பங்கு இருக்கிறது என்கிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் கொலைக்கு இந்த அடிமைகளுக்கு வாக்களித்த அத்தனை பேரும் பொறுப்பு.

செத்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே இந்த அடிமைகளுக்கு ஓட்டு போட்டிருந்தாலும் சரி, அதனை இறந்த உயிர்களே செய்திருந்தாலும் சரி, அந்த இரத்தப் பழி அவர்களையும் விட்டு வைக்காது. அவர்கள் தவறாக செலுத்திய வாக்கிற்கு அவர்களின் பாவத்திற்கான சம்பளமாக அவர்களின் இறப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால் மக்களாட்சியில் ஓட்டுப் போடுவது என்பது உரிமை மட்டுமல்ல, தான் ஓட்டுப் போட்ட கட்சி செய்யும் அநியாயங்களுக்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டிய கடமையும் ஒரு வாக்காளனுக்கு இருக்கிறது.

இன்னும் இந்த திராவிட ஆட்சியில் நாம் அறியாத குற்றங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன. மக்களுக்காக போராடிய எத்தனையோ நல்லவர்களை அநியாய வழக்குப் போட்டு சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள், திராவிடத்திற்கு வாக்களித்தவர்களே இந்த குற்றப் பழியையும் ஏற்றாக வேண்டும். இந்த குற்றப்பழியில் பங்கில்லை என்று ஒருவர் கூட பிலாத்துவைப் போல கை கழுவி தப்பிக்க முடியாது. எனவே, குறைந்தபட்சம் நம்முடைய குற்றப்பழியிலிருந்து தப்பிக்கவாவது திராவிடம் தவிர்த்த வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாமே? என்று கேட்கிறோம். யார் சரி? யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்? என்று பேசுகிற ஒரு கட்சி சார்பு அரசியல் கருக்கு மட்டையின் நோக்கமல்ல. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் காட்டுகிற அதிகாரம் மிகுந்த ஓட்டுரிமை தான் மக்களாட்சியின் தனித்துவம், என்பதையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகிறோம்.

நாம் செய்கிற பாவத்திற்கு ஏற்ற தண்டனை இந்த உலகத்தில் கிடையாது என்பதற்கு அத்தனை அட்டூழியங்கள் செய்தும் சுக போக வாழ்க்கை வாழும் அத்தனை அரசியல்வாதிகளும், ஆன்மீக மத குருமார்களும் அப்பட்டமான சாட்சிகள். நம்முடைய குற்றங்களுக்கும் நம்முடைய இப்போதை வாழ்க்கைக்கும் சம்பந்தமே கிடையாது என்பதே இவர்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம். எப்போதோ எழுதப்பட்ட மத நூல்களில் நம் கால பிரச்சனைக்கு தீர்வு தேடாமல், வாழ்க்கை யதார்த்த அனுபவத்திலிருந்து நம் காலத்திற்கான "கடவுள் நம்பிக்கையை" கட்டி எழுப்புவோம். கடவுள் ஒரு மந்திரவாதி என்று கற்றுத் தரும் அத்தனையும் வெறும் புருடா கதைகள் என்பதை புரிந்து கொள்வோம்.

இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறதா? தெரியாது. ஆனால் வாழ்ந்த வாழ்க்கைக்கு இறந்த பிறகு ஒருவன் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பதே கருக்கு மட்டையின் நம்பிக்கை. அதுவும் மக்களாட்சியில் வாழ்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிற ஒரு வாக்காளன், தான் வாக்களித்த ஒவ்வொரு ஓட்டிற்கும் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும். ஏனென்றால் ஆண்டவன் அல்ல, அரசியல் அதிகாரமே இங்கு நடக்கிற ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. இங்கு நடக்கிற அத்தனை அநீதிகளுக்கும் அஸ்திவாரம் போடுகிறது. அதனை மக்களாட்சியில் தீர்மானிப்பது வாக்காளன் செலுத்தும் வாக்குச் சீட்டே. கடவுள் அல்ல.

நோ்மையான பலர் தோ்தல் அரசியலுக்கு வந்த பிறகும் அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள், ஊழலில் உருண்டு புரளும் திராவிட கட்சிகளுக்கே வாக்களியுங்கள் என்று கடவுளின் பெயரால் தப்பறை கொள்கையைப் போதித்து தங்களின் மதவெறி அரசியலுக்கு எளிய மக்களைக் காவு கொடுக்கும் அத்தனை மதகுருமார்களும் பாவத்தைக் கட்டிக் கொள்கிறவர்களே. கடவுள் நம்பிக்கை இருக்கிற எந்த மதகுருவும் திராவிட கட்சிகளுக்கு ஒருபோதும் ஆதரவு தர முடியாது. திராவிட ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் ஒரு மத குருவுக்கு கடவுள் நம்பிக்கையும் இருக்க முடியாது.

தன் குடும்பத்தில் இருந்து தனக்குப் பிறகு எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று அழுத்தம் திருத்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பதிவு செய்த தற்போதைய முதல்வர், தன் பிள்ளைக்கு இப்போது அமைச்சர் பதவியையும் கொடுத்து விட்டார். அடுத்து மன்னராட்சி வாரிசு போன்று முதல்வர் பதவியையும் கொடுத்து விட்டு மெரினாவில் கோட்டா கேட்பார். இது தான் இவர்களது அழுத்தமும், திருத்தமும். இது ஒன்று போதாதா தமிழர்கள் தலையில் எளிதாக எவரும் எப்படியும் மிளகாய் அரைக்கலாம் என்பதற்கு உதாரணம் காட்ட. கேட்டால் இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா என்று திராவிட வாக்கு வங்கி சொங்கிக் கூட்டம் முட்டுக் கொடுக்க முன்வரும். சரி தானே?