திருடர் மு. கழகம்

திருடர் மு. கழகம்

திருடர் மு. கழகம்

ஜனவரி 24, 2023

பொய் தரவுகளை புள்ளி விபர விளம்பரமாக வெளியிட்டு உண்மையை மூடி மறைப்பதில் கைதோ்ந்த திமுக கூடாரம் தன் பொருளாளர் வழியாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அலசுவோமா?

நாட்டு நடப்புகள்

திராவிடம், தமிழகம், ஒப்பீடு

வர்ணாசிரம காலத்துக்கு பிஜேபி கட்சி அழைத்துச் செல்வதாக குற்றம் சுமத்துகிறார் அதன் பொருளாளர். பின் எதற்காக இந்த வர்ணாஸ்ரம தர்மம் பேசும் பிஜேபி கட்சியோடு முன்பு தோ்தலில் கூட்டணி வைத்தார்களாம்? சரி, இவர்கள் சொல்வது போல மறப்போம், மன்னிப்போமென்றே வைத்துக் கொள்வோம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்கிற புளுகலையும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்கிற ராஜ தந்திர சமாளிப்பையும் ஒத்துக் கொள்வோம். ஆனால், இந்த திமுக கூடாரத்தில் நடக்கும் அரசியலுக்கு பெயர் வர்ணாஸ்ரம தர்மம் இல்லையா? இந்த மஞ்சள் துண்டு அரசியலை என்னவென்று விமர்சிப்பது?

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமே முதல்வர் ஆக முடியும், அந்த குடும்பத்திற்கு கூஜா தூக்கும் கொத்தடிமைகள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியும், இணைவி, துணைவி வழியில் பிறந்தவர்கள் மட்டுமே மத்தியில் அமைச்சர்களாக முடியும் என்றால் இது தானே உண்மையில் இவர்கள் குற்றம் சொல்லும் வர்ணாஸ்ரம தர்மம்? கண்முன்னால் நம் காலத்தில் நடக்கும் இந்த வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி இந்த புள்ளி விபர அறிக்கை ஏன் கேள்வி கேட்கவில்லை? இவர்கள் பேசும் பகுத்தறிவு இதற்கு மட்டும் ஏன் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது?

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்திர பிரதேசமும், தமிழகமும் இன்று எப்படி இருக்கிறது? என்று அந்த பொருளாளர் கேள்வி எழுப்புகிறார். அது இருக்கட்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இரயிலில் பயணச்சீட்டு எடுக்க பணம் இல்லாமல் திருட்டு ரயில் ஏறி வந்த இந்த திமுக தலைவரின் குடும்ப வருமானம், எப்படி இந்த 50 ஆண்டுகளில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்திருக்கிறது? ஆனால் இவர்களுக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்களின் பொருளாதாரம் மட்டும் அன்று போல இன்றும் தமிழர் திருவிழாவாம் பொங்கல் கொண்டாட கூட, இவர்கள் போடும் பிச்சை 1000 ரூபாய்க்காக இன்னமும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது? பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்து வேலை செய்கிற எவரும், வேறு எந்த மாநிலத்திலும் இந்த அசுர வேகத்தில் வளரவில்லையே? இதையும் புள்ளி விபரமாக அறிக்கையில் சொல்ல வேண்டியது தானே?

ஒப்பிடுவதில் கூட என்ன ஒரு கள்ளத்தனம்? குஜராத்தில் மது ஒழிப்பு இருக்கிறது, ஆனால் இங்கே சாராயக் கடைகளை இந்த திமுக அரசு தானே கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒப்பீடு என்றால் அனைத்தையும் தானே ஒப்பிட வேண்டும்? எந்த மாநிலத்திலாவது இளைஞர்கள் தமிழகத்தைப் போல சினிமா பைத்தியம் பிடித்து அலைகிறார்களா? வாரிசையும், துணிவையும் ஒரு சேர ஓடவிட்டு இளையோரின் வாழ்வைச் சீரழித்து சின்னா பின்னமாக்குவது இந்த விஞ்ஞான ஊழல் குடும்பம் தானே? எந்த மாநில முதல்வரின் மகனாவது சினிமாத் துறை, தியேட்டர்களை வைத்து ஒரு சமூகத்தைச் சீரழிக்கிற அவலத்தைச் செய்கிறானா? இல்லையே. அதையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட வேண்டும் தானே?

ஸ்டொ்லைட் ஆலையை மற்ற மாநில அரசுகள் விரட்டி அடித்த போது அதற்கு சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தது இந்த திராவிட நாடக கம்பெனி தானே? மணல் கம்பெனிகளை கடற்கரைகளில் நுழைத்து இயற்கையைச் சீரழித்தது இந்த பச்சோந்திகள் தானே? கூடங்குளம் அணு உலையை எத்தனை இடத்தில் மற்ற மாநில அரசுகள் விரட்டி அடித்தன, ஆனால் இங்கு ஆண்ட இந்த யோக்கிய சிகாமணிகள் தானே பணத்திற்காக மக்களின் வாழ்வாதாரத்தை பலியாக்கினர்? இந்த புள்ளி விபரங்களை ஏன் அறிக்கையில் சுட்டிக் காட்டவில்லை? திமுகவின் இந்த கீழ்த்தர எண்ணத்தையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட வேண்டும் அல்லவா?

பட்ட பகலிலும், நட்ட நடு இரவிலும் லாரிகளில் ஆற்று மணலை அள்ளி சுரண்டி தின்னுகிற அவலம் திராவிட மாடல் தவிர்த்த எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழகத்தில் இலஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல இந்தியாவில் வேறு எங்கேனும் நடக்கிறதா? இதையும் புள்ளி விபர ஒப்பீடாக வெளியிட வேண்டுமல்லவா? அது மட்டும் புள்ளி விபர பட்டியலில் ஏன் இடம் பெறவில்லை?

சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு கொண்டு வர காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களித்த இந்த கூட்டத்தின் அநியாய அரசியல் ஏன் இந்த புள்ளி விபர பட்டியலில் இடம்பெறவில்லை? எந்த மாநிலத்திலாவது மக்கள் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கையில் செத்தவர்களுக்கு 400 கோடியில் கல்லறை கட்டுகிற அயோக்கியத்தனம் நடக்கிறதா? இல்லையே. வாக்காளர்களுக்கு பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்து தங்களுக்கு ஓட்டுப் போட ஏமாற்றும் அவலங்கள் அரங்கேறுகிறதா? இல்லையே? அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிற முறை எத்தனையோ மாநிலங்களில் இருக்கிறது. பின் ஏன் அது இங்கில்லை? இந்த புள்ளி விபரம் எங்கே?

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு, ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு என்று புள்ளிவிபர பொய்மூட்டைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வளவும் உண்மை என்றால் தமிழகத்தில் ஏன் இன்னமும் வறுமை நிலவுகிறது? மக்கள் எதற்காக பொங்கல் பிச்சைக்காக கையேந்தி நிற்கிறார்கள்? சினிமாத்துறை, ஜவுளித்துறை, கட்டுமானத்துறை, தொலைத் தொடர்புத் துறை, சாராயத் துறை, ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் அனைத்தின் அதிபதிகளும் இவர்கள் தானே? ஏழைகள் ஏழையாகிக் கொண்டே போவதும், திமுக பண முதலைகள் கொழுத்துக் கொண்டே போவதையும் பார்க்காதவர் தமிழகத்தில் யாரேனும் உண்டோ?

இந்த பொய் விபர பட்டியலின் மிகப்பெரிய பொய்: இப்போதைய முதல்வரின் தலைமையில் தமிழகம் வளர்ந்துள்ளதாம்! தமிழகத்தின் சாலைகளில் காணப்படும் குண்டு, குழிகளை பார்க்காத குருடர்களா இந்த திராவிட மாடல் அமைச்சர்கள்? தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக போராடும் இளையோரின் புலம்பலை கேளாத செவிடர்களாக இந்த ஊழல் மந்திரிகள்? குறைந்த பட்சம் தோ்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றியிருந்தால் ஆசிரியர்களும், செவிலியர்களும் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்களாம்? கூச்சமே இல்லாமல் எத்தனை பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்?

சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்துவது ஆரியமாம். சரி, எத்தனை பெண்களுக்கு சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் போட்டியிட இந்த திராவிடம் சீட் கொடுத்தது? எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள்? புள்ளி விபரம் காட்டவா? அத்திப் பூத்தாற் போல ஒன்றிரண்டு பெண்கள், அதுவும் இவர்களின் குடும்ப பெண்கள் மட்டுமே. வேறு எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது. அதை விட ஸ்பெஷல், சென்னை பெண் மேயரை வண்டியில் செக்கு மாடு போல தொங்க வைத்து அழைத்துச் சென்ற காட்சியை யாராவது மறக்க முடியுமா?

கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகமாம். பின் எதற்கு இத்தனை ஆங்கில வழி கல்வி நிறுவனங்களை காசு பிடுங்க இந்த அமைச்சர்கள் தங்கள் சொந்த கட்டிடங்களாக கட்டி வைத்திருக்கிறார்கள்? 70 ஆண்டு கழக ஆட்சியில் இலவசமாக தரமான கல்வியைக் கொடுப்பதற்கு கூட வக்கில்லையே? அரசியல் அதிகாரம் என்ன இவர்களின் குடும்ப சொத்தா? உலகத் தரத்தில் மருத்துவமனைகளை வைத்திருக்கிறோம் என்று சொல்கிறவர்கள் தங்களுக்கு நோக்காடு என்றால் மட்டும் தனியார் மருத்துமனையிலும், வெளிநாட்டு மருத்துவமனையையும் நாடுவதே ஏன்? இது ஒன்று போதாதா இவர்கள் எவ்வளவு புளுகு மூட்டைகள் என்பதை நிரூபிக்க?

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் பிறந்த தனி மனிதனுக்கு மருத்துவ பராமரிப்பு இல்லையே? தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் இல்லையே? ஆனால் ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் இவர்களுக்கு மட்டும் ஆயுட்காலம் முழுவதும் பென்சன். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது தமிழக சட்டமன்ற உறுப்பினர் மூன்று மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார்கள். அப்படி என்ன பொதுவாழ்க்கைக்காக அர்ப்பணித்து வேலை செய்கிறார்கள்? இதனைப் பற்றிய ஒரு புள்ளி விபரம் கூட இல்லையே? இவர்களுக்கு சார்பானதை மட்டும் பேசுவது. மற்றவற்றை அப்படியே மறைத்து விடுவது. இது தான் திராவிட மாடல்.

உண்மையில் தமிழகம் வளரவில்லை. இந்த திராவிட கூடாரத்தில் இருக்கும் அமைச்சர் குடும்பங்கள் மட்டும் பணம், காசால் கொழுத்திருக்கிறது. அதனையே தமிழகத்தின் வளர்ச்சியாக திரித்து பொய் விபரம் வெளியிடுகிறார்கள். உழைக்கிறவன் இன்னும் தமிழகத்தில் மாடு போல உழைத்து வாழ்க்கையே வெறுத்து விரக்தியில் தான் இன்னமும் இருக்கிறான். இந்த திராவிட கட்சிகளின் அமைச்சர்களின் சொத்து, வருமானம் மட்டுமே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

அறிவும் அறிவியலும் வளராத காலக்கட்டத்தில் இந்த பகுத்தறிவு கொத்தடிமைகள் ஏமாற்றிப் பிழைப்பது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலக்கட்டத்தில் இந்த கொத்தடிமைகளுக்கு கூஜா தூக்கும் அத்தனை பேரும், கொத்தடிமையாக வாக்குச் செலுத்தும் ஒவ்வொரு முட்டாள் வாக்காளனும் சிதறி ஓடுகிற காலம் விரைவில் மலர வேண்டும் என்பதே இந்த மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவரின் மனக்குமுறலாக இருக்க முடியும்.