பணத்தோ்தல்கள்

பணத்தோ்தல்கள்

பணத்தோ்தல்கள்

மார்ச் 16, 2023

ஆட்சி முறைகளில் சிறந்த ஆட்சி முறை மக்களாட்சியா? மன்னராட்சியா? சர்வாதிகார ஆட்சியா? கம்ப்யூனிச ஆட்சியா? இராணுவ ஆட்சியா?

நாட்டு நடப்புகள்

மக்களாட்சி, தோ்தல், ஆட்சி

ஆட்சி முறைகளில் சிறந்த ஆட்சி முறை என்று எதுவுமே கிடையாது. அதிகாரத்தில் இருந்து ஆட்சி நடத்தும் அந்த ஒற்றை மனிதனே அதனைத் தீர்மானிக்கிறான். மக்களாட்சி என்பதால் அது சிறந்த ஆட்சியாக தான் இருக்கும் என்பதோ, சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, கம்ப்யூனிச ஆட்சி, மன்னராட்சி என்றாலே அது கொடுங்கோல் ஆட்சியாக தான் இருக்கும் என்பதோ உண்மை அல்ல. சர்வாதிகார ஆட்சியிலும் மற்ற ஆட்சி முறைகளிலும் தலைசிறந்த ஆட்சி நடைபெற்ற வரலாறு உண்டு.

மக்களாட்சியின் மகத்துவம் ஆட்சி முறையில் அல்ல, மாறாக அது தோ்ந்தெடுக்கப்படும் முறையில் தான் இருக்கிறது என்பதே இங்கு நாம் அறிய வேண்டிய உண்மை. மற்ற ஆட்சி முறைகளில் எதுவும் மக்கள் கைகளில் இல்லை. மக்களாட்சி முறையில் மட்டும் தான் தங்களை ஆளுகிறவர்களை தோ்ந்தெடுக்கும் உரிமை மக்களிடமே உள்ளது. அது மட்டுமல்ல, மற்ற ஆட்சி முறைகளில் ஆட்சிக்கு கால வரைமுறை இல்லை. ஆட்சியாளன் மோசமானவன் என்றால் அவனது இறப்பு வரை அந்த மக்கள் சகித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். மக்களாட்சியிலோ எப்படிப்பட்ட ஆட்சி என்றாலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரம் பிடுங்கப்பட்டு மீண்டும் ஆட்சியில் அமர்த்துகிற உரிமை மக்களிடத்தில் கொடுக்கப்படுகிறது. இது தான் மக்களாட்சியின் மகத்துவம்.

எல்லா ஆட்சி முறையிலும் இருண்ட பக்கங்களும் உண்டு. அது மக்களாட்சி முறையிலும் உண்டு. சுய புத்தியோ, தெளிந்த சிந்தனையோ இல்லாத படித்தவர்களும், பாமரர்களும் நிறைந்த தமிழகத்தில் மக்களாட்சியின் மோசமான குரூரம் வெளிப்படுவதை கண்கூடாக ஒவ்வொரு தோ்தலிலும், அவர்கள் வாக்களிக்கும் ஊழலில் பெருத்து திரியும் திராவிட தலைவர்களிலும் பார்க்க முடியும்.

ஆண்டவர் அல்ல, அரசியலே இங்கு அத்தனையையும் தீர்மானம் செய்கிறது, ஆள்கிறவர்களே வரம் தரும் நிலையில் இருக்கிற கடவுள் என்கிற அடிப்படை அறிவே இல்லாத மக்களின் கையில் அதிகாரம் கொடுத்து வாக்களிக்கச் சொன்னால் அது குரங்கு கையில் கொடுத்த பூமாலைக்குச் சமம் என்பதை தமிழக மக்கள் சமீபத்தில் நிரூபணம் செய்திருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்.

ஈரோடு இடைத்தோ்தலில் நடந்த முறைகேடுகளை எத்தனை செய்தி சேனல்கள் படம் போட்டுக் காட்டின. மக்கள் வெளிப்படையாகவே கட்சிகளால் வழங்கப்பட்ட பணத்தை, பொருட்களை பட்டியல் போட்டு காட்டினர். இப்படிப்பட்ட கேவலமான தோ்தலை வளர்ந்த நாடுகளில் பார்க்க முடியுமா? இவைகளுக்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. அரசியல் அறிவே இல்லாத தமிழக வாக்காள பெருங்குடிகளே காரணம்.

முட்டி போட்டு, முழங்கால் போட்டு, மாலை போட்டு இறை வழிபாட்டுத் தலங்களுக்கு உச்சி வெயிலில் பாத யாத்திரையாக இறைவனை தரிசிக்க பயணம் போய் விட்டு வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாது அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்திற்கும், பொருட்களுக்கும் முண்டியடித்து முதல் வரிசையில் நிற்கும் இந்த தமிழர்களை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? ஓட்டுக்குப் பணம், மூக்குத்தி, புடவை, வேட்டி, மளிகைப் பொருட்கள் என அதனையும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டையும் குத்த செல்லும் இந்த குற்றவாளி மக்களை எந்த கடவுள் தான் திருத்த முடியும்?

இடைத் தோ்தலை ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கை எதிர் கொள்ள திராணி இல்லாது ஒப்புக்கு நடத்தும் ஆணையம், ஆளுங்கட்சியின் அத்தனை தில்லு முல்லு பணப் பட்டு வாடாக்களையும் மூடி மறைக்க துணைபோகும் ஏவல் துறை, ஒத்து ஊதும் திராவிட சார்பு செய்தி ஊடகங்கள் – இவர்கள் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மாண்பை தமிழகத்தில் தூக்கிப் பிடிக்கும் இலட்சியவாதிகள்.

அப்படியே சில வெளிச்சமில்லாத ஊடக நிரூபர்கள் படம் போட்டு இந்த திராவிட சொங்கிகள் செய்யும் கேவலமான சட்டத்திற்கு விரோதமான வேலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினால் அவர்களை இந்த திராவிட மாடல் பூட்ஸ் கால்களை விட்டு அடித்து உதைத்து லாக்கப்பில் கட்டி விடுவார்கள். தப்பு செய்கிற ஊழல் வியாதிகளை கைது செய்ய துப்பில்லாத இந்த ஸ்காட்லாந்து ஏவல் படை, தப்பை கண்டுபிடித்து வெளியில் சொல்கிறவனை பொய் கேசு போட்டு உள்ளே தள்ளுவதே திராவிட கால ஆட்சியின் வரலாறு.

இந்த யோக்கிய திராவிட சிகாமணிகளுக்குத் தான் புனித மதம் என்று பிராடுத்தனம் செய்து கொண்டிருக்கிற நிறுவனங்களில் தலைகள் ஏவல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர் ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தான் இவர்கள் இறைவாக்குப் பணி செய்கிற இலட்சணம். வேறு எந்த மாநிலத்திலாவது இந்த கேவல திராவிட மாடல் இடைத் தோ்தல் முறை உண்டா? இப்படி ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் வாங்கி ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அறிவில்லாத மக்கள் வட மாநிலத்தில் கூட கிடையாதே?

இவர்களைக் கடவுள் எப்படி காப்பாற்ற முடியும்? எந்த யோக்கியத்தில் இவர்கள் கடவுளை நோக்கி கடவுளே எங்களைக் காப்பாற்று என்று கதறி அழ முடியும்? இந்த சமூகத்தைச் சீரழித்துச் சின்னா பின்னமாக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு இன்று வரை பயணிக்கிற ஒரே கூட்டமான திராவிட கூட்டத்தோடு சோ்ந்து கொண்டு ஜனநாயகத்தைச் சீரழிக்க மக்கள் துணை போனால் எத்தனை அவதாரங்கள் எடுத்து தான் கடவுளும் இவர்களைக் காப்பாற்ற முடியும்?

தேசபக்தி பற்றி நமக்குப் பாடம் எடுத்து இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் சென்ற கதராடை கட்சியின் பப்புக் குட்டிக்கு குறைந்த பட்சம் தன் கட்சியினர் தமிழகத்தில் பணம், சேலை, மூக்குத்தி கொடுத்து மக்களின் ஓட்டை திருடும் தகிடு தத்தங்களாவது தெரியுமா? திருடுவதை மட்டுமே குலத்தொழிலாக கொண்டுள்ள திராவிட மாடலுக்கு மல்லுக் கட்டி ஆதரவு தரும் திராவிட கூடாரத்தின் பகுத்தறிவு எங்கு போனது இடைத்தோ்தலில்?

எங்கு பகுத்தறிவு இருக்கிறதோ அங்கே கடவுளின் ஞானம் செயல்பட முடியாது. எங்கே கடவுளின் ஞானம் இருக்கிறதோ அங்கே பகுத்தறிவுக்கு இடமேயில்லை. நயவஞ்சக பகுத்தறிவை விதைத்து கடவுளின் ஞானத்தை புறந்தள்ளியதே தமிழகத்தில் திராவிட மாடல் செய்த சாதனை, அதுவே தமிழக மக்களின் வேதனையாக அவர்களின் வாழ்க்கை இன்னமும் விடியாது இருக்க காரணமாகவும் இருக்கிறது.

இத்தனை கோடிகளை வாரி இறைக்கும் இந்த திராவிடர் கூட்டம் எவ்வளவு கொள்ளை அடித்து வைத்திருக்கிறது என்பதையும், இன்னமும் எவ்வளவு சுருட்டப் போகிறது என்பதைப் பற்றியும் அறியாத இந்த தமிழ்க்குடிகள் மக்கு குடிகள் தானே? மக்களின் ஏழ்மை, வறுமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிற சாக்குப் போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், இவர்கள் காலத்திற்கும் ஏழையாக, வறுமை நிலையில் இருப்பதற்கு காரணமே இப்படி அல்பத்தன காசு, பண, பொருளுக்காக அலைவதால் தான்.

நீதிமன்றத்தால் ஊழல் ராணி என்று முத்திரை குத்தப்பட்டவருக்கு ஓட்டுக் குத்தி ஆட்சியில் அமர வைத்தால் பிரச்சனை மக்களாட்சி முறையில் அல்ல, வாக்குச் செலுத்தும் மக்களிடமே உள்ளது. விஞ்ஞான ஊழல் ராஜா என்று கேலி செய்யப்படும் கட்சியின் தலைவரை, விடியலின் தந்தை என்று இன்னமும் நம்பி வாக்குச் செலுத்தினால் மாற்ற வேண்டியது ஓட்டு மெஷின்களை அல்ல. தமிழக வாக்காளர்களையே.

வரலாற்றின் கேவலமான பக்கங்களாக பார்க்கப்படும் இந்த திராவிட தலைமைகளின் ஒழுக்கமற்ற, நோ்மையற்ற, உண்மையற்ற, சுயநல அவலங்களை பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள் வெட்ட வெளிச்சமாக போட்டுக் காட்டியும் தோ்தல் என்றாலே காலையில் முதல் ஆளாக சென்று இந்த கட்சிகளுக்கு வாக்குச் செலுத்தும் இந்த வாக்கு வங்கி மக்கு மக்களுக்கு எதற்காக ஓட்டுரிமை வழங்க வேண்டும்? ஓட்டு என்றால் என்ன? எதற்காக ஓட்டுப் போடுகிறோம்? யாருக்குப் போடுகிறோம்? என்கிற அடிப்படை அறிவே இல்லாதவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன?

தமிழகத்தில் நடப்பது ஜனநாயம் அல்ல, பணநாயகம். இந்த பணநாயகத்தில் தோ்தல் நேரத்தில் மட்டும் விருந்தும், உபசரிப்பும் நடைபெறும். மக்கள் ஏமாளிகள். அரசியல்வாதிகள் ஏமாற்றுப் போ்வழிகள், ஆன்மீக வாதிகள் இந்த ஏமாற்றுப் போ்வழிகளின் ஊது குழல்கள். தமிழக மக்களும் ஜனநாயக ஆட்சி முறையில் வாழ்வதற்கு தகுதி அற்ற கேவலமானவர்களே. இப்போதைய தமிழக மக்களுக்கு தேவை ஒரு சர்வாதிகாரியே.