குற்ற உணர்வு

குற்ற உணர்வு

குற்ற உணர்வு

ஜீன் 14, 2022

தவறு செய்கிற குற்ற உணர்வு மக்களிடம் இருக்கிறதா? குற்ற உணர்வே இல்லாத சமூகம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது என்கிறார்கள். அது சரியா ?

நாட்டு நடப்புகள்

தவறு, ஓட்டு, மக்களாட்சி

தவறு செய்தால் செய்தது தவறு என்று இயல்பாக எழுகிற உணர்வே குற்ற உணர்வு. நாம் தவறு செய்கிறபோது நமக்குள்ளாக இருக்கிற மனச்சான்று நம்மைத் தட்டி எழுப்புகிறது. நம் உணர்வுக்குள்ளாக புகுந்து நம்மை உறுத்துகிறது. அதற்கான பிராயிச்சித்தமாக தவறை ஒப்புக்கொள்ள தூண்டுகிறது. மனச்சான்று நம்மை உலுக்கினாலும் அதனை உதாசீனப்படுத்துவதும், ஏற்றுக் கொள்வதும் தனி மனித சுதந்திரம். நம் மனச்சான்றால் அதற்கு மேல் நம்மை கட்டுப்படுத்த முடியாது, கடவுள் நம்மைத் தொட முடியாதது போல.

ஒரு சிலர் குற்ற உணர்வை ஏற்று தவறுக்கான தண்டனையை பெற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். பலர் குற்ற உணர்வை ஏற்கிறார்கள். ஆனால் யார் தான் இந்த உலகத்தில் தவறு செய்யவில்லை? என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்து கொண்டு குற்ற உணர்வை மழுங்கடித்து விடுகிறார்கள். இன்னும் பலர் குற்ற உணர்வைப் பொருட்படுத்தாது அதனைக் கடந்த கோர மனநிலைக்குச் சென்று விடுகிறார்கள். இவர்களே தீவிரவாதிகள், அரசியல்வியாதிகள், ஆன்மீக துர்மாதிரிகள்.

முதல் முறையாக பணத்திற்காக கொலை செய்ய போகும் ஒருவனுக்கு அவனுடைய மனச்சான்று அது தவறு என்று உணர்த்தாமலா இருக்கும்? களவு செய்கிறவனுக்கு அது தவறு என்பது தெரியாமலா இருக்கும்? ஆனால் இரண்டாம் முறை, மூன்றாம் முறை அதே தவறை செய்கிற போது மனச்சான்றிற்கு அவனுடைய உள்ளத்தில் கல்லறை கட்டப்பட்டு அது சீல் வைக்கப்படுகிறது. அயோக்கித்தனம் நிறைந்த உள்ளமாக உருப்பெருகிறது. குற்ற உணர்வு கடவுளின் குரல். எங்கே குற்ற உணர்வு இருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். எங்கே குற்ற உணர்விற்கு இடமில்லையோ அங்கே கடவுளுக்கும் இடமில்லை.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ் சமூகத்தில் குற்ற உணர்வு துளியும் இருக்கிறதா? இல்லை. தவறுகளை குற்ற உணர்வே இல்லாமல் செய்ய பழகிக் கொண்டவர்களே இன்றைய தமிழக மக்கள். குற்ற உணர்வு, மக்களாட்சி முறையில் இல்லாமல் இருப்பது சமூகத்திற்கே ஆபத்தானதும் கூட என்பதற்கு தமிழகம் சிறந்த எடுத்துக்காட்டு. லாக்கப் டெத், பேனர் இறப்பு, மது சாவு, கற்பழிப்பு, இலஞ்சம், ஊழல், பசி, பட்டினி, வேலையின்மை, வாரிசு அரசியல், விளம்பர மோகம் தமிழகத்தில் நிறைந்து இருந்தும் மக்களிடம் இந்த தவறுகளுக்கு நாம் வாக்களித்த ஓட்டே காரணம் என்கிற குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை.

கடந்த மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன உயிர்களுக்கு கடவுள் காரணமல்ல, சாராயத்தை விற்று காசு சம்பாதிக்க துடிக்கும் அயோக்கிய திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்கச் சொன்ன கத்தோலிக்க ஆயர் பெருமகன்களும் ஒரு காரணம். ஆனால் அந்த கோரமான சம்பவத்தைப் பற்றிய பாதிப்போ, அதற்கு தாங்களும் உடந்தை என்கிற குற்ற உணர்வோ அவர்களுக்குத் துளியும் இல்லை. இப்போதைக்கு கடவுளால் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்றாலும், அவர்களின் வாழ்க்கை முடிவிற்குப் பிறகு அதற்கான தண்டனையை அவர்கள் அறுவடை செய்தே தீருவார்கள் என்பதே கருக்கு மட்டையின் கடவுள் நம்பிக்கை.

தோ்தல் நேரத்தில் பணம் வாங்கி ஓட்டுப் போடுவதும், பிடித்த கட்சி என்று வாக்களிப்பதும் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் எவ்வளவு பெரிய பாதகத்தை ஏற்படுத்த போகிறது என்கிற குற்ற உணர்வு தமிழக மக்களுக்கு அறவே இல்லை. ஆனால் ஆட்சி நடக்கிற ஐந்து ஆண்டுகளில் நடக்கிற அப்பாவி உயிர்களுக்கு ஆட்சியில் அமர வைக்க வாக்களித்த ஒவ்வொரு வாக்கே பதில் சொல்ல வேண்டும், கடவுள் அல்ல. எல்லாவற்றிற்கும் கடவுள் மேல் பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கும் இந்த குற்ற உணர்வில்லாத குற்றவாளிகள் அனைவரும் இறப்பிற்கு பின்னால் கடவுளின் முன்னால் தண்டனைக் கைதிகளே.

மக்களிடம் தங்களுக்கு இருக்கும் மோகத்தைக் கச்சிதமாக பணம் சம்பாதிக்கும் சினிமா கூத்தாடிகள் மக்களுக்கு கேடு விளைவிக்கும் மோசமான தயாரிப்புகளுக்கு, குளிர்பான, நகை விளம்பரங்களுக்கு, இளைஞர்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் மோசமான திரைப்படங்களுக்கு பணத்திற்காக விலை போகிறார்கள். தோ்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் எவருக்கும் ஆதரவாக பேசுவேன் என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. குற்ற உணர்வு துளியும் இல்லாத கேவலமான இந்த கூத்தாடிகள் தங்களுக்கான தண்டனைத் தீர்ப்பை அவர்களே எழுதிக் கொள்ளுகிறார்கள்.

தமிழகத்தின் இயற்கைச் சீரழிவு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள், பசி, பட்டினி, இலஞ்சம், ஊழல் – அத்தனைக்கும் காரணம் கடவுள் அல்ல, இந்த கொடியவர்களுக்கு வாக்களிக்கும் தமிழக மக்கள், இந்த நயவஞ்சகர்களுக்கு ஆதரவு கோரும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் சினிமா கூத்தாடி தறுதலைகள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. மக்களாட்சியில் வாழும் எவரும் கடவுள் மேல் பழிபோட்டு பிரச்சனைகளுக்கு கடவுளைக் காரணமாக சொல்ல முடியாது.

கடவுளால் இங்கு நடக்கிற எந்த விபத்தையோ அசாம்பவத்தையோ தடுக்க முடியாது. தவறு செய்கிறவர்களை நிறுத்த முடியாது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதியிலிருந்து காப்பாற்ற முடியாது. இறப்பைத் தவிர்க்க முடியாதவரே கடவுள். ஆனால் இங்கிருக்கிற ஆட்சி செய்கிறவர் நினைத்தால் விபத்தைத் தடுக்க முடியும், தவறுகளை நிறுத்த முடியும், புற்றுநோய் போன்ற கொடிய வியாதியை விரட்ட முடியும். இறப்பைத் தவிர்க்க முடியாது என்றாலும் ஆரோக்யமான மூப்பை வழங்க முடியும். கடவுள் இயலாமையின் கடவுளே. ஆட்சி, அதிகாரத்தால் மட்டுமே இயலாதது ஒன்றுமில்லை.

கடவுள் நம்பிக்கை உள்ள தமிழகத்தில் மக்கள் குற்ற உணர்வு இல்லாமல் இருப்பது பரிதாபம். கடவுளை இன்னமும் அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரம். ஆனால் ஐயோ குற்ற உணர்வு இல்லாதவர்களுக்கு கேடு! ஏனென்றால் அவர்கள் வாக்களித்த மற்றும் ஆதரித்துப் பேசிய கட்சியின் அத்தனை அட்டூழியங்களுக்கும் அவர்கள் வாழ்நாட்களுக்குப் பின் இயற்கைச் சக்தியின் முன் கணக்குக் கொடுத்தே ஆக வேண்டும்.

ஊழல் ராஜா கருணாநிதிக்கும் ஊழல் ராணி ஜெயாவுக்கும் தமிழகத்தில் பொற்கல்லறைகள் கட்டியிருக்கலாம். அவர்களை கோடிக்கணக்கான ரசிக கூமுட்டை குஞ்சுகள் உச்சி முகர்ந்து போற்றிப் புகழலாம். ஆனால் கடவுள் முன்னிலையில் இரண்டு பேரும் ஆயுட்கால தண்டனைக் கைதிகளே. அவர்கள் செய்த ஒவ்வொரு அரக்கத்தன செயலுக்கும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற காலமே அவர்களின் இப்போதைய இறந்த காலம்.

இந்திய நீதிமன்றங்களில் பணம் கொடுத்து தவறு செய்கிறவர்கள் சிறையிலிருந்து தப்பிக்கலாம். சிறையில் அடைக்கப்பட்டாலும் பணம் இருந்தால் உல்லாச வாழ்க்கையைத் தொடரலாம். இந்த உலகத்தில் ஒருவன் வாழ்வது வரை எந்த இயற்கைச் சக்தியும் தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது. அதே வேளையில் இறந்த பிறகு கடவுளாலும் தவறு செய்தவனை காப்பாற்ற முடியாது. இதனை உணராதவர் நிலை பாவத்திலும் பரிதாபம்.

செய்த தவறுகளுக்கு பிராயிசித்தம் உண்டு என்பதே ஆன்மீகத்தின் மிகப்பெரிய பிராடுத்தனம். நாம் செய்த தவறுகளை கடவுள் மன்னிப்பார் என்பதை விட பொய்யான போதனை இந்த உலகத்தில் யாரும் போதிக்க முடியாது. தவறுகளை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கே கிடையாது என்பதே கருக்கு மட்டையின் ஆழமான நம்பிக்கை. இதனை மக்கள் உணர்ந்து வாக்களித்தாலே சரியானவரை ஆட்சியில் அமர வைக்க முடியும். மக்களாட்சியில் நமக்கான தீர்வுகளைத் தர முடிகிறவர் கடவுள் அல்ல, நாம் தான், நாமே தான், நாம் அளிக்கும் வாக்கு தான்.

தவறு செய்தவர்கள் திருந்தினாலும் மன்னிப்பு கிடையாதா? திருந்துகிறவன் எவனும் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டானே? குற்ற உணர்வில் தான் செய்தது தவறு என்று நினைக்கிறவன் ஒன்று தன் உயிரை மாய்த்துக் கொள்வான் அல்லது வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருப்பான் அல்லது அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான். அவனே உண்மையான மனமாற்றத்திற்கு சொந்தக்காரன். மற்றவை எல்லாம் போலித்தனமே.

என் ஒரு வாக்கை திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து மற்றொரு கட்சிக்கு போடுவதால் அரசியலில் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது என்று கேட்பவர்களுக்கு: இந்த பழிபாவத்தில் எனக்குப் பங்கில்லை என்று கைகழுவி நீங்கள் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சரி தானே?