வெண்ணெயும் சுண்ணாம்பும்
ஜீன் 23, 2023
கருக்கு மட்டை பிஜேபியின் ஆதரவு தளமா? திராவிட எதிர்ப்பு களமா? கத்தோலிக்க மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? கருக்கு மட்டை எழுப்பும் கேள்விகளின் காரணம் என்ன?
நாட்டு நடப்புகள்
விமர்சனம், பார்வை, சாதி
கட்சிகளை விமர்சனம் செய்கிறவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மறுகண்ணில் வெண்ணெயும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள். அதனையே நாங்கள் கேள்வி கேட்கிறோம். பிஜேபி தான் குஜராத்தில் நடந்த கொடூர மத கலவரத்திற்கு காரணம் என்று சொல்லும் காங்கிரஸ் - திமுக உபிஸ் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது எத்தனை சீக்கிய குடும்பங்களை இந்த கதராடை உடுத்தி நாட்டைச் சூறையாடும் காங்கிரஸ் கயவர்கள் கொடூரமாக வன்முறை கட்டவிழ்த்து விட்டார்கள் என்பதை ஏன் மூடி மறக்கடிக்க நினைக்கிறார்கள்? அதைப்பற்றியும் பேச வேண்டும் அல்லவா?
எமர்ஜென்சி கொடுமைகளை, அதில் உயிரிழந்த அப்பாவிகளை, போடப்பட்ட பொய் வழக்குகளை மறைப்பதேன்? காங்கிரஸ் செய்தால் அது புனிதம், பிஜேபி செய்தால் பாவமா? புனிதம் என்றால் இரண்டும் புனிதம், பாவம் என்றால் இரண்டும் பாவம். பாவத்தில் என்ன மோசமான பாவம், பரவாயில்லை பாவம்? பிஜேபியை விமர்சிப்பதில் என்ன ஒரு கண்ணில் சுண்ணாம்பும், காங்கிரஸ்-திமுகவை விமர்சிப்பதில் என்ன மறுகண்ணில் வெண்ணெயும் வைத்துப் பார்க்கிற குரூர பார்வை என்பதே கருக்கு மட்டையின் கேள்வி. யதார்த்தம் பேசினாலே பிஜேபி ஆதரவு தளமா? தவறை தட்டிக் கேட்டாலே திமுக எதிரியா? நியாயமாக பேசினாலே சிறுபான்மைக்கு எதிரான மதவெறியா?
இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிய இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது அன்றைய காங்கிரசும், கூட்டணியில் இருந்த திமுகவும். காங்கிரஸ் செய்ததை எல்லாம் வெகு எளிதாய் மறந்து விட்டு கடந்து போய் விடும் இந்த திராவிட ஆதரவு குஞ்சுகள் பிஜேபி கட்சியின் ஆட்சியில் நிகழ்ந்ததாக சொல்லும் காட்சிகளை மட்டும் மறக்காமல் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் வெண்ணெய் வைத்துப் பார்க்கிற கொடூர பார்வை ஏன் என்பதே எங்களது கேள்வி.
நீட் தோ்வு, கூடங்குளம் அணு உலை, அந்நிய முதலீடு, ஜி.எஸ்.டி, கெயில் எரிவாயு, நியூட்ரோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கேஸ் விலை உயர்வு, சிறப்பு பொருளாதார மண்டலம், சீமை கருவேல மரங்கள், பெட்ரோல் விலை உயர்வு, அம்பானி ஆதரவு என்று அனைத்து நாசகார திட்டங்களையும் தொடங்கி வைத்தது காங்கிரஸ் கட்சி தான். நீட் தோ்வை திமுக ஆதரவு கொண்டு தான் காங்கிரஸ் கொண்டு வந்தது. இன்றைக்கும் காங்கிரசின் மு.அமைச்சர் சிதம்பரம் குடும்பமே அதற்கு ஆதரவு தான். கெயில் எரிவாயு குழாய் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதே அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் தான். போபால் விஷ வாயு கசிவிற்கும், காரணமான வெளிநாட்டவரை தப்ப விட்டதும் காங்கிரசின் கயமைத்தனம். இதை மழுப்புவது ஏன்?
காங்கிரசும், திமுகவும் செய்யாத ஊழல் இல்லை. சர்க்கரை ஊழலில் சர்க்கரையை எறும்பு தின்று விட்டது, சாக்குகளை கரையான் அரித்து விட்டது என்று கூசாமல் பொய் சொன்ன புண்ணியவான் தானே மு.முதல்வர் கருணாநிதி. அடுத்த முறையே காங்கிரசோடு கூட்டு சோ்ந்தார். அனைத்து வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டது. இதையும் விமர்சனம் செய்ய வேண்டும் தானே? விமர்சித்தால் இரண்டு கட்சிகளையும் ஒரே தராசில் தானே விமர்சிக்க வேண்டும். திராவிட அரசுகள் பிஜேபியோடு கூட்டணி வைக்க வில்லையா? அவர்கள் வைத்தால் பிஜேபி புனித கட்சி, வேறு யாராவது ஆதரித்தால் பாவ கட்சியா?
குஜராத்தில் நிகழ்ந்ததை திட்டமிட்ட மதக்கலவரம் என்று சொல்கிற கிறிஸ்தவ தலைகள், வரலாற்றில் எத்தனை அப்பாவிகளை இவர்கள் சொல்கிற கருத்தை ஏற்கவில்லை என்பதற்காக வெறி கொண்டு எரித்து இருக்கிறார்கள், சித்ரவதை செய்து இருக்கிறார்கள். சிலுவைப் போர் மற்றும் ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்குத் துணை நின்று எவ்வளவு கொடூரம் நிகழ இந்த வத்திக்கான் கூட்டம் துணை போயிருக்கிறது. தாய்மார்களின் கற்பை, கர்ப்பிணிப் பெண்களின் கருவை, குழந்தைகளின் உயிரை கடவுள் பெயரைச் சொல்லி காலி செய்திருக்கிறது இந்த புனித கூட்டம். இதுவும் விவாதம் தானே?
இவர்கள் செய்தால் புனித கொலைகளா? மனிதத்தைப் பற்றி, அன்பைப் பற்றி ரத்தக்கறை படிந்த இவர்கள் பேச ஏதாவது யோக்கியதை இருக்கிறதா? 1000 ஆண்டுகளுக்கும் மேல் உலகத்தின் மீது அதிகாரத்தைக் கொண்டிருந்த வத்திக்கான், அப்போது ஏன் இறையரசை கொண்டு வரவில்லை? கிறிஸ்தவ நாடுகளுக்கு மதவெறி இல்லையா? இசுலாமிய நாடுகளுக்கு மதவெறி இல்லையா? பல கடவுள்களை நம்பும் இந்திய மண்ணில் 'எங்கள் ஒரே கடவுள் தான் உண்மையான கடவுள்' என்று போதிப்பது மதவெறியின் உச்சகட்டம் ஆயிற்றே. இது இந்தியாவின் சமய சார்பற்ற தன்மைக்கு எதிராயிற்றே. பின் அடுத்தவரை மதவெறி முத்திரை குத்தி விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதே கருக்கு மட்டையின் கேள்வி.
ஸ்டெயின் என்னும் பாதிரியாரை பிஜேபி அரசு பொய் வழக்கு போட்டு கொன்று விட்டதாம். தூத்துக்குடி கிறிஸ்தவ மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் அம்மையார் கனிமொழி குற்றம் சாட்டுகிறார். சரி, இவருடைய தந்தை கருணாநிதி தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் விவி மணல் கம்பெனியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கடற்கரை நிலங்களை தாரை வார்த்ததை பல பாதிரியார்கள் எதிர்த்துப் போராடிய போது என்ன செய்தார்? அவர்களை அஞ்சு கிராமம் அருகில் உள்ள பெருமணல் என்னும் கடற்கரை ஊரில் ஜாங்கிட் என்னும் எஸ்பியை வைத்து அடித்து உதைத்து பொய் வழக்குப் போட்டு கை, கால்களை முடமாக்கினார். பொய் மூட்டையின் மொத்த வடிவத்தின் பெண் வாரிசே! பதில் சொல்லுங்கள். சாராயம் விற்று பிழைப்பு நடத்தும் உங்கள் குடும்பம் ஸ்டெயினுக்காக பேசுவது தான் உலக மகா அபத்தம்.
தாமிரபரணியின் மாஞ்சோலை எஸ்டேட்டில் இந்த முதல்வர் கருணாநிதி நிகழ்த்திய அரச பயங்கரவாதம் மறக்குமா? ஸ்டொ்லைட் தொடங்கும்போது எத்தனை பாதிரியார்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது இந்த திராவிட அரசுகள். அணு உலைக்கு எதிராக போராடிய பாதிரியார்கள் மீது, இடிந்தகரை அப்பாவி மீனவர்கள் மீது, கூடங்குளம் வியாபாரிகள் மீது தேச துரோக வழக்கு போட்ட காங்கிரஸ்-திமுக தறுதலை ஆட்சியை எப்படி மறப்பது? இதுவெல்லாம் பகுத்தறிவு மண்டைக்கு உரைக்காது, ஆனால் பிஜேபியை விமர்சிக்க மட்டும் படித்த அறிவு அத்தனையும் சோ்ந்து கொள்ளும்.
இப்போது கைது செய்யப்பட்டிருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜியை பிஜேபி அரசு தன் அதிகாரத்தின் கீழே இருக்கிற அமலாக்கத் துறையை வைத்து பயம் காட்டுகிறதாம். இந்த துறைகளை காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கிறபோது எதிர்க் கட்சிகளை மிரட்ட, கைது செய்ய பயன்படுத்தியதே இல்லையா? தன் ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்ததே இல்லையா? காங்கிரஸ் செய்வதால் அது புனிதம், பிஜேபி செய்தால் அது பாவமா? தவறு செய்தால் எல்லா கட்சியையும் விமர்சனம் செய்யுங்கள். அது என்ன ஒரு கண்ணில் வெண்ணெயும், மறுகண்ணில் சுண்ணாம்பும் வைத்து விமர்சனம் செய்வது?
செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் பேசியது இதே முதல்வர் ஸ்டாலினின் நாக்கு. இன்று அதே நாக்கு தான் அதனை அநியாயம் என்று கதை பாடுகிறது. அந்த அமைச்சர் திமுகவில் சோ்ந்ததும் புனிதராகி விட்டார். அதுவே பிஜேபியில் நடந்தால் ஒட்டு மொத்த திராவிட மணியாட்டிகளும் வரிசை கட்டி விமர்சிக்க வந்து விடுவார்கள். பழைய வழக்கை தூசு தட்டி எடுத்து பழி வாங்குகிறது என்று கூப்பாடு போடுகிறவர்களே! காங்கிரசும், திமுகவும் தூசு தட்டி எளியவர்களை, சமூக போராளிகளை, அரசியல் எதிரிகளை கைது செய்து கொடுமை செய்த உதாரணங்களை சொன்னால் உலகமே கொள்ளாது.
திமுக, அதிமுக ஆட்சியில் நள்ளிரவு கைதுகள், லாக்கப் மரணங்கள், பொய் வழக்குகள் சாமான்யருக்கு எத்தனை எத்தனை நடந்திருக்கிறது. அமலாக்கத் துறை கைது செய்தவுடன் அழுது புரண்டு துடித்து நடிக்கிறார் இந்த உலக மகா நடிக அமைச்சர். இந்த திராவிட கூட்டம் சாவர்க்கரை கேலி செய்ய என்ன அருகதை இருக்கிறது? தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே?
திராவிடத்திற்கு முட்டுக் கொடுக்கிற அறிவான படித்தவர் கூட்டத்தால், தோ்தலில் திமுக, அதிமுக பணம் கொடுக்கவே மாட்டார்கள் என்று நெஞ்சில் கை வைத்து சொல்ல முடியுமா? தோ்தலை நியாயமாக மட்டுமே அவர்கள் அணுகுகிறார்களா? கள்ள ஓட்டு,ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து புள்ளி விபரம் கொடுக்க முடியும். இவர்கள் சட்டப்படி நடக்க மாட்டார்கள், ஆனால் பிஜேபி மட்டும் சட்டப்படி நடக்க வேண்டுமாம். இவர்களுக்கு வந்தால் ரத்தம், பிஜேபிக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னியா?
கிறிஸ்தவ கல்லறைகளில் இன்றைக்கும் பாகுபாடு இருக்கிறது. சாதி அடிப்படையில் தான் வாடிகன் நிறுவனமே தமிழகத்தில் ஆயர்களை நியமிக்கிறது. போப்பாண்டவர் செய்தால் சாதி அரசியல் புனித அரசியல் ஆகி விடுமா? பெண்கள் பலி பூசை நடத்த வாடிகன் அனுமதி வழங்காதது கிறிஸ்தவ ஆணாதிக்கம் தானே! அதனைப் பற்றி பேசினாலே தண்டனை என்பது உரோமை சர்வாதிகாரம் தானே! மேலிருக்கிறவர் சொல்வதை ஏன், எதற்கு, எப்படி என்று கேளாது அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சர்வாதிகார உச்சகட்டம் தானே? உரோமை பேசினால் அதன் பிறகு மறுபேச்சு இல்லை என்பதை மட்டும் ஏன் விமர்சிக்க தயக்கம் அல்லது மறுப்பு? இந்த கூட்டம் இந்திய சனநாயகத்தை விமர்சிப்பது கேலிக் கூத்து.
தமிழகத்தில் எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கேள்விகளை பதிவு செய்வது ஒன்றே கருக்கு மட்டையின் நோக்கம். மக்கள் நலமோடு வாழ தடையாக இருக்கிறவர்கள் ஊழலின் ஊற்றான திராவிட அரசுகள் மற்றும் அவர்களோடு கைகோர்த்து திரியும் சிறுபான்மை மத வியாபாரிகள். எனவே எதிர்க்கிறோம். தமிழகத்தை புதியவர்கள் யாரும் ஆளலாம். புதியவர்கள் தவறு செய்தால் அவர்களையும் தூக்கி எறிய மக்கள் தயங்கக் கூடாது என்பதே கருக்கு மட்டையின் நிலைப்பாடு. அதுவே மக்களாட்சியின் மகத்துவ தத்துவம்.