பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

நவம்பர் 12, 2023

பேய்கள் உண்மையா? செத்தவர் ஆவியாக அலைவது நிஜமா? பேய்கள் மனித உடலில் புகுவது சாத்தியமா? கடவுள் இருக்கிறார் என்றால் பேய்களும் உண்மை தானே?

கடவுள் நம்பிக்கை

நம்பிக்கை, கதை, புதுமை,

மூட நம்பிக்கையை வளர்த்ததில் மதங்களின் பங்கு எவ்வளவோ அதே அளவு பங்கு பேய் நம்பிக்கையை விதைத்ததிலும் மதங்களுக்கு உண்டு. இந்த உலகம் முழுவதும் பரந்து கிடக்கிற கடவுள் என்கிற சக்திக்கு, மனிதருக்கு உதவி செய்யும் ஆற்றலோ, மனித மனதை மாற்றுகிற சக்தியோ எப்படி இல்லையோ அதே போல பேய்களுக்கும் மனிதருக்கு உபத்திரம் செய்யும் ஆற்றலோ, மனிதருக்குள் புகுகிற பலமோ, வாட்டி வதைக்கிற சக்தியோ இல்லை. ஏனென்றால் பேய் என்பதே மதங்கள் உருவாக்கி வைத்திருக்கிற பொய்யான கட்டுக் கதையே. அது கதைகளுக்கும், கற்பனைகளுக்கும் மட்டுமே எழுதப்பட்ட வெறும் கதாபாத்திரமே தவிர நிஜமல்ல.

அப்படி பேய் என்று இருப்பது உண்மையானால் இந்த உலகில் எத்தனை போ் அநியாயமாக கொலை செய்ய பட்டு இருக்கிறார்கள். தன்னை கொலை செய்த ஒருவரை கூட அந்த பேய் கொன்றது கிடையாதே? குறைந்த பட்சம் காயப்படுத்தியது கூட கிடையாதே. ஏன்? கொலை கார கூலிப்படைகள் எத்தனை கொலைகளை அசாதரணமாக செய்து விட்டு ஜாலியாக அடுத்த கொலையை செய்ய தயாராகிறார்கள். இது ஒன்றே பேய்கள் கிடையாது என்பதற்கு சான்றாகாதா? பேய் என்பது வெறும் மனப்பயமே தவிர உண்மையல்ல.

நாடுகளுக்கு இடையே வரலாற்றில் நடந்த போர்களில் எத்தனை வீரர்கள் அநியாயமாக இறந்து போனார்கள். அவர்கள் வீரர்கள் தானே? அவர்களாவது பேயாக வந்து தங்கள் எதிரிகளை சூறையாடி இருக்கலாமே? ஏன் வரவில்லை? காரணம், பேய் என்பது மத போதகர்கள் தங்கள் சூனிய வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக எழுதிய கட்டுக் கதை மட்டுமே.

பேய் பிடித்தவர்கள் என்று சொல்லப்படும் நபர்களின் மனநிலையைப் பார்த்தால் அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் நபர்களாக அல்லது தங்களை அதிகமாக தனிமைப் படுத்துகிறவர்களாக அல்லது உடலில் வேதியியல் சமமின்மை உள்ளவர்களாக அல்லது எளிதில் பயம் கொள்கிற உணர்வு கொண்டவராக அல்லது கற்பனை உலகில் வாழ்கிறவராக இருப்பர். அந்த மனநிலை கொண்டவரையே பேய்கள் அதிகமாக பிடிக்கிறது என்றால், இது உளவியல் சிக்கலே தவிர உண்மையான பேய் அல்ல என்பதை நாம் அறிய முடியும்.

இயேசு பைபிளில் பேய்களை ஓட்டினார் என்று போட்டிருக்கிறதே? அப்படி என்றால் அது உண்மை தானே? பைபிளே சொல்கிறது என்றால் அது பொய்யாக இருக்க முடியாதே? என்று கிறிஸ்தவ பக்த கோடிகள் பலர் கேட்கலாம். பைபிள் என்பது வானத்தில் இருந்து கடவுள் எழுதி பூமியில் விழுந்த நூல் அல்ல, அது மனிதர் எழுதிய வரலாற்று நூலும் அல்ல. அது ஒரு மத நூல். அதுவும் குறிப்பிட்ட இன மக்களின் நம்பிக்கையைத் தழுவி எழுதப்பட்ட நூல். எல்லா மத நூல்களைப் போன்று கதைகள் வழியாக நம்பிக்கை கருத்து சொல்லும் ஒரு நூல். அது மூட நம்பிக்கை நிரம்பி வழிந்த காலக் கட்ட பிண்ணனியில், சிந்தனையில் எழுதப்பட்ட நூல்.

பைபிளில் இயேசு செய்ததாக சொல்லப்படும் புதுமைகள், புதுமை நிகழ்வுகள் அல்ல (Not Miracle Events). அவை வெறுமனே புதுமை கதைகள் (Miracle Stories) மட்டுமே. புதுமை நிகழ்வுகள் என்றால் கடந்த காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பது. ஆனால், இயேசு கடல் மீது நடந்தார் என்று பைபிளில் வாசிப்பது வரலாற்றில் நடந்த நிகழ்வு அல்ல. மாறாக அது ஒரு புதுமை கதை. புதுமை கதைகளின் நோக்கம் என்ன? சாதாரண மனிதரை கடவுளுடைய மனிதராக உயர்த்த உருவாக்கப் படும் நம்பிக்கைக் கதைகள். இயேசு கடவுளின் மகன் என்று நம்ப உருவாக்கப் பட்ட கதைகளே பைபிளில் நாம் வாசிக்கும் புதுமை கதைகள்.

இது போன்ற புதுமை கதைகள் என்பது சமய நூல்களில் புதிது அல்ல. கிரேக்க, உரோமை, யூத மதவழிபாட்டு நூல்களில் இதே சாயலில் ஏராளமாக காணப்படுகிறது. புத்தர், மகாவீரர், குருநானக், வைகுண்டர் போன்ற ஆன்மீக வாதிகளின் வாழ்க்கையை வாசித்துப் பார்த்தால் இதே பாணியிலான ஏராளமான புதுமைக் கதைகளை நாம் அறியலாம். ஓர் ஆன்மீகத் தலைவரின் மறைவிற்குப் பிறகு அவருடைய போதனைகளைப் பரப்பும் அவருடைய சீடர்களே இந்த கதைகளுக்கு ஆசிரியர்கள். உண்மையில், இந்த ஆன்மீகவாதிகள் அத்தனை பேரும் மதங்களுக்கு அப்பாற் பட்டு, சில நேரங்களில் மதங்களை எதிர்த்துப் பேசியவர்கள். ஆனால் இவர்களின் மறைவிற்குப் பிறகு இவர்களே ஒரு புதிய மதம் உருவாக காரண கர்த்தா ஆகிவிட்டார்கள். இந்த பிண்ணனியில் எழுதப்பட்ட கதைகளை வைத்து, இயேசு பேயை ஓட்டினார், அதனால் பேய் இருக்கிறது என்கிற வாதம் அடிப்படை இல்லாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது.

தண்ணீரில் நடப்பது என்பது அறிவியல் விதிகளுக்கு முரணானது. அப்படி யாராலும் நடக்க முடியாது. அப்படி இதுவரை யாரும் நடந்ததும் கிடையாது. நடப்பதும் முடியாது. அறிவியல் விதிப்படி ஒருவர் இறந்து போனால் அவர் மீண்டும் உயிர் பெற்று எழ முடியாது. ஒன்றுமே இல்லாமல் அப்பமும், மீன்களும் மக்கள் வயிறார சாப்பிட்டு மிஞ்சும் அளவுக்கு கொண்டு வர முடியாது. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு எவராலும் ஒரு நொடிப் பொழுதில் பார்வையைக் கொடுக்க முடியாது. அறிவியல் விதிகளை எவராலும் ஏன் கடவுளாலும் மாற்றி எழுத முடியாது. பின் ஏன் பைபிளின் புதுமை கதைகளில் இயேசு தீய ஆவிகளை ஓட்டுவதாக எழுதப் பட்டு இருக்கிறது?

யூத சமூகத்தில் காய்ச்சல், உடல் நோய்கள் அத்தனையும் தீய ஆவிகளின் தாக்குதலால் நேரிடுகிறது என்று நம்பினார்கள். அது அவர்கள் காலத்து பார்வை. அந்த பார்வை உண்மையல்ல. அறிவியல் வளராத அவர்கள் காலத்து நம்பிக்கை. இந்த பிண்ணனியின் அடிப்படையிலேயே பைபிள் ஆசிரியர் இயேசுவை, தீய ஆவிகளை ஓட்டுகிற வல்லமையை நிரம்ப பெற்றவராக வெளிப்படுத்த இந்த புதுமை கதைகளை எழுதினார். அப்போது தான் மக்கள் உண்மையிலேயே கடவுளின் மகன் என்று நம்புவர் என்பது அவருடைய எண்ணம். ஆனால் இன்றைக்கு உடல் நோய்களுக்கு காரணம் தீய ஆவிகள் அல்ல, கிருமிகள் என்று சொல்லி அறிவியல் அதனை நிரூபித்தும் காட்டி இருக்கிறது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை நம் கண்ணால் பார்க்க கூடிய கருவிகளும் நம்மிடம் இருக்கிறது. எனவே மன நோய்களையே அன்றைய மக்கள் பேய் பிடித்திருப்பதாக நம்பினார்கள், அதையே புதுமைக் கதைகளை எழுதியவர்களும் நம்பினார்கள் என்பதை இதிலிருந்து தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அறிவியல் சம்பந்தப்பட்ட விவாதங்களுக்கோ, வரலாறு தொடர்பான ஆதாரங்களுக்கோ பைபிளைப் பயன்படுத்த முடியாது. காரணம் அது அறிவியல் நூலோ, வரலாற்று நூலோ அல்ல. மாறாக, எல்லா மத நூல்களைப் போன்று அதுவும் ஒரு குறிப்பிட்ட இன மக்களின் ஆன்மீக நூல். அதனை ஆவணமாக, ஆதாரமாக அறிவியல் உலகத்தில் பயன்படுத்த முடியாது. பேய் இருக்கிறது என்பதற்கு அடிப்படையாக இதனைக் குறித்துக் காட்ட முடியாது.

பைபிளை எழுதியவர்கள் அதனை 2023 ல் உள்ளவர்களுக்கு எழுத வில்லை. முதல் நூற்றாண்டு மக்களுக்கு எழுதினார்கள். அவர்கள் பொய்யை எழுதவில்லை. அவர்கள் நம்பிய உண்மையை எழுதினார்கள். இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஆன்மீக குருக்கள் பைபிளை அறிவியல் நூல் போன்று, வரலாற்று நூல் போன்று நினைத்து வாசித்ததாலேயே இந்த பிரச்சனை எழுந்தது. அதை எழுதியவர்களின் பார்வை, கலாச்சாரம், இலக்கிய புரிதல், நம்பிக்கை பற்றி தெரியாததே இந்த பிரச்சனைக்குக் காரணம். இன்றைக்கு அறிவியல் அதனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தெளிவு படுத்திக் கொண்டு இருக்கிறது.

செத்தவர்கள் எவரும் பேயாக வருவதில்லை. வாழும் மனிதர்களே பேயாக அலைகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் பேய்கள், அதிகாரத்தைக் கைப்பற்ற ஏங்கும் பேய்கள் நம் உலகில் அதிகம். தமிழகத்தில் மக்கள் தங்களை வழிநடத்த ஐந்து ஆண்டுகளுக்கு கொடுக்கும் அதிகாரத்தை வெறுமனே ஆட்சியை தக்க வைக்கவும், காசு பார்க்கவும், சுயநலத்திற்காகவும் வெகு சன மக்களை வெட்ட வெளியில் சுட்டுக் கொல்லவும் பயன்படுத்திய நம் காலத்து முதல்வர்கள் நம் கண்முன்னால் வாழ்ந்த, வாழும் பேய்களே.

பேய்கள் கருமையாக இரண்டு கொம்பு வைத்து வருவது வெறுமனே கதைகளில் மட்டுமே. அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, நயமான தமிழில் பேசிக் கொண்டு ஏழைகளிடம், எளியவர்களிடம் இரத்தத்தின் இரத்தங்களே, உடன்பிறப்புக்களே என்று நயமாக பேசி ஏமாற்றும் வித்தை தெரிந்தவர்களே நிஜப் பேய்கள். அவைகளை அடையாளம் கண்டு விளக்கு மாற்றால் ஓட ஓட விரட்டி அடிக்கும் அளவுக்கு தமிழ் சமூகம் இன்னமும் வளரவில்லை. எனவே தான் தமிழகத்தில் தீமை தலைவிரித்து ஆடுகிறது. அனுதினமும் அநியாய மரணங்கள் சம்பவித்துக் கொண்டே இருக்கின்றன. பேய்கள் ஜாக்கிரதை.