சினிமாவும், கிரிக்கெட்டும்

சினிமாவும், கிரிக்கெட்டும்

சினிமாவும், கிரிக்கெட்டும்

நவம்பர் 20, 2023

ஒரு தனி மனிதனின் வாழ்வை, வாழ்வின் தரத்தை எதைக் கொண்டு அளவிட முடியும்? இந்த சமூகத்தில் போற்றுதற்கு உரியவர் யாராக இருக்க முடியும்?

நாட்டு நடப்புகள்

விளையாட்டு, சமூகம், விளம்பரம்

இன்றைக்கு நம் காலத்தில் இந்திய சமூகத்தில் மேன் மக்களாக, மக்களால் எதிர்பார்ப்பு இன்றி நேசிக்கப்படும் மனிதர்களாக பார்க்கப் படுகிறவர்கள் இரண்டு போ். ஒன்று கிரிக்கெட் வீரர்கள், இன்னொன்று சினிமா காரர்கள். சினிமாவும், கிரிக்கெட்டும் நம் சமூகத்திற்கு ஆற்றிய நன்மைகள் என்ன? ஒட்டு மொத்த சமூக மேம்பாட்டிற்கு ஆற்றிய கடமைகள் என்ன? ஆய்வு செய்து பார்ப்போம்.

இளையோரின் உள்ளத்தில் தேவையற்ற பாலுணர்வையும், வன்முறையையும், கேவலமான மேற்கத்திய கலாச்சாரத்தையும் சினிமா பதித்தது என்றால், இளையோரின் பொன்னான நேரத்தைப் பறித்து அவர்களின் எதிர்கால வாழ்வைச் சிதைத்து ஒரு போதை வஸ்துகளாக மாற்றி வைத்திருப்பதில் கிரிக்கெட் பெரும் பங்கு வகிக்கிறது. ஆக சினிமாவும், கிரிக்கெட்டும் தனி மனிதனையும், ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் கோரமாக சிதைத்திருக்கிறது என்பதே உண்மை.

சீரழிவு மட்டுமே இவர்கள் இந்திய சமூகத்திற்கு ஆற்றிய பங்கு. இவர்கள் எத்தனை கருணை இல்லங்களுக்கு உதவுகிறார்கள், ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் என்று வாதம் செய்யலாம். உண்மையில் தங்கள் வருமான வரிக் கணக்கில் கூட்டல், கழித்தல் ஏற்படுத்த சில தர்ம காரியங்களை மீடியா முன்னிலையில் செய்து படம் காட்டிக் கொள்கிறார்களே தவிர, இந்த சமூகத்தில் வாழும் இளையோர், பெரியோர் என பலருடைய வாழ்வைச் சீரழித்ததே இவர்களின் அளப்பரிய சாதனை.

திரைப்படங்களில் சமூக புரட்சி செய்யும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்களில் எத்தனை போ் நம் சமூக வாழ்வில் ஊழல் வாதிகளை எதிர்க்கிறார்கள்? மாறாக, ஊழலில் ஊறித் திளைத்தவர்களின் பிள்ளைகள் எடுக்கும் படத்தில் நடித்து தான் தங்கள் கல்லாவையே கட்டுகிறார்கள். ஆனால் திரைப்பட வசனங்களில் மட்டும் வீராப்பு. இவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி வாழ்ந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பாவக் கணக்கு. அதில் நமக்கு அக்கறை இல்லை. ஆனால் இந்த சமூகத்தைச் சீரழிக்கும் பாவத்திற்கு நாம் இவர்களை விமர்சனம் செய்தே ஆக வேண்டிய கட்டாய கடமை இருக்கிறது.

விளையாட்டு நாடுகளிடையே நட்புறவை வளர்க்க உதவும் கருவி என்று பாடம் எடுக்கிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கசப்பு உறவில் இன்னமும் வெறுப்பு உணர்வை விதைத்ததில் கிரிக்கெட்டும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாதே. ஒரு சாதாரண விளையாட்டை இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டை போல திரித்துக் காட்டுவதை நம் தலைமுறையில் எத்தனை போட்டிகளில் பார்த்திருப்போம். இங்கே விளையாட்டு, உறவை வளர்க்க வில்லையே! பகையைத் தானே வளர்த்து இருக்கிறது!

ஒரு கிரிக்கெட் போட்டி விளையாட எவ்வளவு மின்சாரம் செலவழிக்கப் படுகிறது? கூடன்குளம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை அடமானம் வைத்து தயாரிக்கப் படும் மின்சாரம் ஒரு பொழுது போக்கிற்கு பயன்படவா? மின்சாரம் இன்றி இன்னமும் கிராமங்கள் இருக்க, மின்சாரம் உற்பத்தில் செய்வதில் இன்னமும் நாம் பின் தங்கி இருக்க, வீணாய்ப் போன இந்த கிரிக்கெட்டிற்கு ஏன் வீண் மின்சாரம்? குடிக்க தண்ணீர் கிடைக்க நடையாய் நடக்கும் நம் நாட்டில் மைதானத்தில் புற்களை வளர்க்க எவ்வளவு தண்ணீர் வீணாகிறது? எத்தனை ஏக்கர் விளைநிலம் கையகப் படுத்தப் படுகிறது? மழை பெய்தால் மைதானத்தை உலர்த்த எப்படி எல்லாம் டீசலும், பெட்ரோலும் ஹெலிகாப்டர், ட்ரை மிஷின்களுக்காக கொட்டப் படுகிறது? இவை எல்லாம் அறிவு கெட்ட மேலை நாட்டவர் செய்யும் வேலை அல்லவா? அது நமக்கெதற்கு?

மாணவர்களின் நலனைப் பற்றி எல்லாம் அக்கறை கொள்ளாமல் ஆண்டு முழுவதும் நடத்தப் படும் கிரிக்கெட் போட்டிகள், தோ்வு காலங்களில் அதுவும் மின்சாரத்திற்கு அல்லல்படும் கோடை காலத்தில் நடத்தப்படும் ஐபிஎல் மேட்சுகள், கல்லூரி நடக்கும் நாட்களிலும் பகல் காட்சிகளாக, பண்டிகைக் காலங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கே முதல் காட்சியாக வெளிவரும் சினிமா படங்கள் பல கோடி இந்திய மாணவ, இளையோரின் வாழ்வைச் சீரழித்தது என்பதே உண்மை. கிரிக்கெட் பார்த்து, படிக்க வேண்டிய காலத்தில் கட் அடித்து சினிமா பார்த்த எத்தனை மாணவ செல்வங்கள் தங்கள் பொதுத் தோ்வுகளில் பெயிலாகி எதிர்கால வாழ்க்கையைத் தொலைத்து இருக்கிறார்கள்? இதுவும் ஒரு போதையாக தானே அவர்களின் உள்ளத்தில் ஏறி இருக்கிறது?

இந்தியாவில் விளையாட்டை வெறும் பொழுது போக்காக பார்க்கும் மனநிலை நிச்சயம் இல்லை. மாணவர்களை வெறி கொண்டு அலைகிறவர்களாக தான் மாற்றி இருக்கிறது. அவர்களின் உணர்வோடு கலந்து விட்ட ஒன்றாக, இந்தியா ஒரு போட்டியில் தோற்றால் தங்கள் உயிரையே மாய்க்கும் அளவுக்கு பைத்தியக்காரர்களாக கிரிக்கெட் மாற்றி வைத்திருக்கிறது என்பதே உண்மை. எத்தனை உயிர்கள் இந்த வீணாய்ப் போன விளையாட்டிற்காக போயிருக்கின்றன. தங்களின் ஹீரோக்களுக்களுக்கு கட் அவுட் வைப்பதில் சண்டை வந்து அடி, உதை, கொலை, வெட்டு, குத்து என்று எத்தனை போ் தங்கள் குடும்பத்தை நிர்கதியாய் விட்டு செத்து போயிருக்கிறார்கள். இந்த பாவக் கணக்குகளை யார் கணக்கில் எழுத முடியும்? சினிமா மற்றும் கிரிக்கெட் வீரர்களின் குடும்ப கணக்கில் தானே?

வாழ்விற்கு தேவை பணம். அந்த பணத்தைச் சம்பாதிக்க தொழில் முறையாக கிரிக்கெட் ஆடுவதில், சினிமாவில் நடிப்பதில் தவறில்லை. ஆனால் பணத்திற்காக இந்த சமூகத்தைச் சீரழிக்கும் விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? எத்தனை கோடி தான் இவர்களின் பேராசைக்கு எல்லை? இவர்களிடம் தனித்தனியாக குவிந்திருக்கும் ஆடம்பர கார்கள் எத்தனை? பைக்குகள் எத்தனை? எத்தனை வீடுகள்? ரசிகர்களால் தான் நாங்களே இருக்கிறோம் என்று மேடைக்கு மேடை மைக் பிடித்து முழங்கும் இவர்கள் இந்த ரசிகர்களின் வாழ்க்கைத் தரம் உயர பங்களிப்பு எதுவும் செய்ய வேண்டாம், குவித்து வைத்திருக்கும் பணத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டாம். ஆனால், உடலுக்கு மற்றும் சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் கார்பரேட் தயாரிப்புகளின் விளம்பர தாரராக இருக்க மறுக்கலாம் தானே.

எனக்கு திறமை இருக்கிறது, நான் விளையாடும் விளையாட்டிற்கு நல்ல வணிக இலாபம் இருக்கிறது, எனக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது, எனவே என்னால் எவ்வளவு கல்லா கட்ட முடியுமோ அவ்வளவுக்கு நான் கல்லா கட்டுவேன், இதில் மற்றவரின் வாழ்வைப் பற்றியோ, சமூக அக்கறை பற்றியோ எனக்குக் கவலையில்லை என்று பணத்திற்காக அலையும் இந்த வீரர்கள் மற்றும் நடிக, நடிகையர் மக்களின் மனதில் உயரமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அத்தனை பேரும் கடவுளுக்கு தங்கள் பேராசை பண கணக்கிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

குளிர் பான விளம்பரங்கள், எளிய மக்களின் ஆசையைத் தூண்டும் ஆடை, ஆபரணங்கள், உடலைக் கெடுக்கும் உணவுப் பண்டங்கள், ஏழைகளின் வாழ்வையே சீரழிக்கும் சாராய, சிகரெட்கள், ஆன்லைன் ரம்மி ஆட்டங்கள், ஊழலில் புரையோடிப் போன அரசியல் தலைகளோடு காட்டும் நெருக்கங்கள் – இவை எல்லாம் அறவியல் பார்வையிலும், அரசியல் பார்வையிலும் ஏற்படுத்தும் கேடுகளை பட்டியலிட்டு போட்டுக் காட்டினால், செய்யும் பாவங்கள் நிச்சயம் பாதாளமே அதிரும் அளவு கணக்கில் வரும். இவை அனைத்தும் தண்டனைக்கு உரிய பாவ மூட்டைகளே.

ஒரு மனிதனின் வாழ்வைத் தீர்மானிப்பது அவனது திறமைகளோ, சாதனைகளோ அல்ல. மாறாக அவன் தனக்கு இயல்பாக இயற்கையாய் வாய்த்திருக்கிற திறமையைக் கொண்டு இந்த சமூகத்திற்கு ஆற்றிய நன்மைகள், இந்த சமூகத்தை உயர்த்த உழைத்த நொடிகள், தன் வாழ்வியல் சூழலில் தன் வாழ்நாட்களில் ஒட்டு மொத்த சமூக மேம்பாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய செயல்கள். குறைந்த பட்சம் இந்த சமூகத்திற்கு தன்னால் தீங்கு ஏற்படுத்தாத வாழ்க்கை. இவைகளே. இப்படிப் பட்ட மனிதர்கள் இன்னமும் இந்த சமூகத்தில் இருக்கிறார்களா?

கோபிசந்த் என்கிற இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீரர் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று புகழின் உயரத்தில் இருந்த போது கோடி ரூபாய் கண்முன்னே காட்டப் பட்டாலும் மற்றவர் உடல் நலத்தைக் கெடுக்கும் குளிர்பானங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னது நம் காலத்தில் தான். அவர் சினிமா, கிரிக்கெட் வீரர்கள் போல மக்களால் அறியப் படாத ஒருவராக இருக்கலாம். ஆனால் அவரே இந்த சமூகத்தின் போற்றுதற்கு உரியவர். கோடிகளை அள்ளிக் கொட்டினாலும் சமூகத்தையும், சமூக மக்களையும் நேசிக்கிற உன்னதமான ஆத்மா. அவரே ஒட்டு மொத்த விளையாட்டின் உண்மையான அம்பாசிடர். சினிமாவும், கிரிக்கெட்டும் அவரிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும். தங்கள் பாவக் கணக்கை ஏறாமல் வைத்துக் கொள்ள அது ஒன்றே உதவும்.

வாழ்வில் நடக்கிற அத்தனை பிரச்சனைகளுக்கும் கடவுளிடம் தீர்வைத் கேட்கும் நமக்கு, நம் வாழ்வில் நடக்கிற அத்தனை பிரச்சனைகளுக்கும் நாமே காரணம் என்பதும், நமக்கான தீர்வுகளும் நம் கையில் தான் இருக்கிறது என்பதும் புரிய முடியாததே அறியாமையின் உச்சம். அதைத் தான் நம் கால படித்த மற்றும் படிக்காத மக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். கடவுளால் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தர முடியாது. நம் பிரச்சனைகளுக்கான தீர்வு நம் கையில் தான். கடவுளைப் பற்றிய சரியான பார்வையும், அரசியல் பற்றிய தெளிவான புரிதலும், சரியான நபருக்கு வாக்குச் செலுத்தும் பட்டறிவுமே நம் காலத்திய தேவை.