சென்னை மழை
டிசம்பர் 11, 2023
சென்னை நகரை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றவே முடியாதா? ஆண்டு தோறும் நடக்கும் இந்த களேபரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது யார்? வெள்ளம் சொல்லும் பாடம் என்ன?
நாட்டு நடப்புகள்
வெள்ளம், அழிவு, எச்சரிக்கை
சென்னை நகர வெள்ளம் வியப்பையோ, நகர வாசிகளின் புலம்பல்கள் கண்ணீரையோ, சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி நடத்தும் கேவலமான ஒரு சார்பு விவாதங்கள் அருவருப்பையோ, 2 ரூபாய், 4 ரூபாய்க்கு பதிவு போடும் திராவிட சொம்புகளின் விமர்சன பதிவுகள் கோபத்தையோ வர வழைக்க வில்லை. காரணம் மீண்டும் மீண்டும் பல வருடங்களாக இதையே பார்த்து பார்த்து புளித்துப் போனதால் ஏற்பட்ட சலிப்பு.
மழைக்கு இயற்கை பொறுப்பு ஏற்கலாம். ஆனால் மழை வெள்ளத்திற்கு மக்களாட்சியில் சென்னை நகர வாசிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். ஆட்சி செய்வதற்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத திமுக, அதிமுக என்கிற திராவிட கட்சிகளை வெறும் 1000 ரூபாய் பணத்திற்காக ஓட்டு போட்டு ஆள வைத்தால் என்ன நடக்குமோ அதுவே நடந்திருக்கிறது. ஆட்சிகள் மாறாமல் இந்த காட்சிகள் எதுவுமே மாறப் போவதில்லை என்பதையே இது மீண்டும் உணர்த்தி இருக்கிறது. எனவே ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தேறி இருக்கிறது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது’ என்றே சொல்ல வேண்டும். இதில் என்ன ஆச்சரியம், இதில் என்ன வியப்பு, இதில் என்ன வேதனை!
கடந்த தோ்தலில் சென்னை நகர மக்கள் திமுகவுக்கு நகரின் அத்தனை 16 தொகுதிகளையும் வாரி வழங்கி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய இரண்டு தோ்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க தங்கள் ஓட்டுக்களை தாரை வார்த்தார்கள். இவர்கள் வாக்களித்த புண்ணியவான்கள் செய்த மக்கள் பணி என்ன? ஊழல், திருட்டு, புரட்டு. வெள்ள நேரத்தில் இவர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பது யார்? யாரை எல்லாம் தோ்தலில் இவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் அந்த உதவியையும் ஓடி வந்து பெறுவதற்கு ஒரு தைரியம் நகர வாசிகளுக்கு இருக்கிறது தான்.
8 கோடி மக்களை வழிநடத்தும் ஒரு முதலமைச்சர் பதவி என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு. அதனை அறிவிலோ, நோ்மையிலோ, பதவியிலோ, பண்பிலோ, பணிவிலோ எந்த விதத்திலும் சிறிதளவும் தகுதியே இல்லாத ஒருவருக்கு அதுவும் ஊழல் ஒன்றையே குலத்தொழிலாக செய்து வந்து இலங்கையில் தமிழினத்தை கருவருக்க துணை போன ஒரு துரோகியின் குடும்பத்தில் உள்ளவருக்கு கொடுக்கும் மலிவான அரசியலுக்கு சென்னை நகர மக்கள் கடன் பட்டு தானே ஆக வேண்டும்.
ஜனநாயகத்தின் மூலைக் கல்லான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரையும் எவ்வளவு பொறுப்போடு தோ்ந்தெடுக்க வேண்டும். அப்படி இருக்கிற ஒருவரையாவது மக்கள் தோ்ந்தெடுத்து இருக்கிறார்களா? ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, சாதீய வெறியர்கள், குறுக்கு வழி பணக்காரர்கள், சாராய வியாபாரிகள், சிறுபான்மை துரோகிகள், சினிமா நடிகர்கள் வந்து ஆதரவு சொன்னவர்கள் – இவர்களுக்குத் தானே மக்கள் தங்கள் வாக்கை தற்பெருமை கொண்டு போட்டார்கள். அந்த செருக்கை சுக்கு நூறாக உடைத்துத் தள்ளியிருக்கிறது இந்த பெரு வெள்ள மழை. இதில் பாவம் பார்க்க என்ன இருக்கிறது?
இந்த வெள்ளம் நகரத்தில் கரை புரண்டோட காரணம் இயற்கை அல்ல. வெள்ளத்திற்கான காரணம் எவரும் கண்டுபிடிக்க முடியாத ரகசியமும் அல்ல. ஆற்றை உடைத்து வீடுகளைக் கட்ட திட்ட போட்டுக் கொடுத்தது இந்த திராவிட ஆட்சியின் பொதுப்பணித் துறை. அதிலிருந்து ஆற்று மணலை அள்ளி திருடி விற்றதும் இதே கயவர்கள். பின் வெள்ளம் வராமல் என்ன வரும்? சரி, அது முடிந்த கதை. விடுவோம். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை வெள்ள மேலாண்மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய 4000 கோடி எங்கே போனது? சொல்லவா? அது அடுத்த தோ்தலில் மக்களுக்குப் பணம் கொடுத்து ஆட்சியை மீண்டும் பிடிக்க திமுக கரை வேட்டிகளின் கூடாரங்களில் காணாமற் போனது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
வருகிற வெள்ளத்தில் இருந்து இந்த உலகத்தில் எந்த கடவுளோ சக்தியோ மக்களைக் காப்பாற்றியது கிடையாது. காப்பாற்றவும் செய்யாது. அழுதாலும், புரண்டாலும், அங்க பிரதட்சனை செய்தாலும், அலகு குத்திகாவடி எடுத்தாலும், முழந்தாற் படியிட்டு மன்றாடினாலும், மெக்காவுக்கே புனித பயணம் செய்தாலும் எந்த கடவுளுக்கும் காதும் கேட்காது. கேட்டாலும் எந்த கடவுளும் வந்து உதவியும் செய்யாது. இது தான் உலக தொடக்கத்தில் இருந்தே நடந்தேறி இருக்கிறது. இனியும் இதுவே நடக்கும். இப்படியே வழி வழியாக தொடரும். எனவே கடவுள் வருவார், அவர் வந்து காப்பாற்றுவார் என்பதெல்லாம் ஆன்மீக உளறல்களே. வெறும் மூட நம்பிக்கை நம்பிக்கையே.
இந்த திராவிட ஆட்சியில் மூன்று வருட வெள்ள கோரம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு வருட வெள்ள காட்சி, கோமணத்தை உருவ காத்திருக்கும் இந்த கொள்ளையர்களின் ஆட்சி பாக்கி இருக்கிறது. எனவே நகர வாசிகளே! அடுத்த வருட வெள்ளத்திற்காக காத்திருங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்த வருடம் இந்த திராவிட திருடர்கள் 8000 கோடி வெள்ளத்தைத் தடுக்க என்று சட்ட மன்றத்தில் ஒதுக்கி விளம்பர படம் போட்டு அதனையும் சுவாகா செய்யும் கனவு திட்டத்தோடு காத்திருப்பார்கள். ஆக, அந்த சுவாகாவும் நன்றாகவே நடக்கும்.
சென்னை நகர மக்களே! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதல் வாரத்தில் கண்டிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும். கரண்ட் இல்லாமல் போகும். ஒருவேளை சோற்றுக்கு பிச்சை எடுக்கிற நிலை தொடரும். உயிர் பலிகள் நீடிக்கும். ஏமாளி சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் போர்வைகள், உணவு பொட்டலங்கள் தலைநகரத்தில் குவியும். அதில் தங்கள் தலைவர்களின் ஸ்டிக்கர் ஒட்டும் தத்தி ஆட்டமும் நடக்கும். ஆனால் எச்சரிக்கை! ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தோடு மழை ஓய்ந்து விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சில நேரங்களில் அது சுனாமியாகவும் மாறலாம். ஏனென்றால் வரலாற்றில் மட்டுமல்ல, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல நகரங்களை இது போன்ற பெரும் வெள்ளங்களே தாக்கி நகர்களை இல்லாமல் போக செய்திருக்கிறது.
இப்போதைய வெள்ளம் ஓர் எச்சரிக்கையே. அது பெரு வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறியே. சென்னை நகரமே உலக வரைபடத்தில் இருந்து காணாமற் போகிற ஆபத்து இருக்கிற ஓர் அறைகூவலே. இயற்கையால் பேச முடியாது. ஆனால் அருங்குறிகளால் உணர்த்த முடியும். அதுவே கடவுளுடைய குரலாகவும் இருக்கலாம். உணர்வுகள் வழியாக உணர்த்த முடிகிறவரே கடவுள். இந்த அறிகுறியை உணர்ந்து ஆட்சியில் இருப்பவரிடம் துணிந்து சொல்லும் ஆன்மீகவாதிகள் இப்போது இல்லை. சிறுபான்மை சிங்கிகளே அதிகம். குறைந்த பட்சம் ஆட்சி செய்கிறவர் அறிவாளிகளைக் கூட்டி தகுந்த திட்டமாவது தீட்ட வேண்டும். அறிவும் இந்த கூடாரத்தில் இல்லை. ஏனெனில் சொங்கிகள் நிரம்பியதே திராவிட கூடாரம்.
லெமூரிய கண்டம் என்று வரலாற்றில் அறியப்பட்ட நீண்ட பரப்பளவு கொண்ட பகுதியை குமரியையும் இலங்கையையும் பிரித்து அழித்தது வரலாற்றில் நடந்த இது போன்ற பெரு வெள்ளமே. இயற்கை ஆயிரம் மடங்கு யானை பலம் கொண்டது. அதன் ஒரு பகுதியையே சுனாமியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் காட்டி இருக்கிறது. அதையே தாங்காது சென்னை சுருண்டு மடிந்தது. அது மீண்டும் முழு பலம் கொண்டு ஒருநாள் சென்னையைத் தாக்கும். சென்னைக்கு கண்டிப்பாக அப்படி ஒரு துர்பாக்கிய நாள் நிச்சயம் அமையும். இது சாபம் அல்ல. நடக்க இருப்பதை முன்பே கணிக்க முடிக்கிற சாதுர்யம். அப்படி நடக்கவிருக்கிற பேரழிவிற்கான எச்சரிக்கை சமிக்ஞையே ஒவ்வொரு ஆண்டும் திருப்பித் திருப்பி அடிக்கும் இந்த வெள்ளம். அப்படி ஒருநாள் வெகு விரைவில் வந்து சென்னையை நிர்மூலமாக்க மீண்டும் மீண்டும் வாக்களியுங்கள் திமுக, அதிமுக தலைகளுக்கு.
ஆனால் அதிலும் நல்லது இருக்கிறது. இருக்கும் போதும் ஊழலில் உருண்டு புரண்டு, இறந்தும் கடற்கரையில் ஹாயாக உறங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை இன்னமும் நினைவகம், சிலைகள் என்கிற பெயரில் கோடி கோடியாக ஏப்பம் விட்டு விழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில சவக்கிடங்கு வரலாறுகள் காணாமற் போகும் வாய்ப்பு சென்னையின் அழிவில் இருக்கிறது. எந்த ஒரு அழிவிலும் நல்லது ஒன்று இருப்பது இயற்கை தானே! அது சென்னையின் அழிவில் தான் இருக்கிறது என்றால் அதனை மாற்றி எழுத யாரால் முடியும்?