மழை மேலாண்மை

மழை மேலாண்மை

மழை மேலாண்மை

டிசம்பர் 23, 2023

தமிழகத்தில் மழைக் காலத்தில் மக்கள் வெள்ளத்தில் தவிக்கின்றனர். வெயில் காலத்தில் மக்கள் தண்ணீருக்காக அல்லோல் படுகின்றனர். இது நம் மனச்சாட்சியை உலுக்க வில்லையா?

நாட்டு நடப்புகள்

இயற்கை, பூமி, தண்ணீர்

கடந்த இரண்டு வாரங்களாக தலை நகரத்திலும் தமிழகத்தின் தென் பகுதியிலும் பெய்கிற மழை ஓயாது புரட்டி எடுக்கிறது. மழை பெய்வது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற செய்தி. ஆனால் மழை என்றாலே நம் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அல்லல் படுகிற நிகழ்வாக மாறி விட்டது வேதனைக்குரியது.

இந்த வருடத்திற்கு போதுமான தண்ணீரை இயற்கை அன்னை அள்ள அள்ள குறையாத அமுத மழையாய் வழங்கி இருக்கிறாள். ஆனால் அந்த தண்ணீரை சோ்த்து வைத்து இருக்கிறோமா? தெருவெங்கும் சாலை முழுவதும் வழிந்தோடுகிற தண்ணீர் கடைசியாய் வீணாய் கடலில் கலப்பது நெஞ்சையே உலுக்குகிறது.

இயற்கையைக் கண்டு ஆதி மனிதன் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டது நியாயம். அதன் பிறகு நாகரிகம் வளர்ந்த காலத்தில் வெள்ளத்தால் பல நகரங்களே மூழ்கியதை இயற்கை பேரழிவாக நாம் சொல்லலாம். ஆனால் அறிவியல், வானவியல், தட்ப வெப்பவியல் என்று அத்தனையிலும் தொழில் நுட்ப அறிவோடு விளங்குகிற நம் காலத்தில் மழை பெய்வதால் ஏற்படுகிற வெள்ள சேதாரத்திற்கு எப்படி நாம் இயற்கையின் மீது பழி போட முடியும்? மழை வருவதை சரியாக கணிக்க முடிகிற அறிவைப் பெற்றிருக்கிற நாம் இன்னமும் மழை மேலாண்மை செய்ய பழகவே இல்லை என்பதே உண்மை.

நம் முன்னோர்கள் இப்போது இருக்கிற எந்த தொழில் நுட்பமும் இல்லாமல் எப்படி அணைகளைக் கட்டி திறம்பட நீர் மேலாண்மை செய்து காட்டி சென்று இருக்கிறார்கள். அப்படி என்றால் இவ்வளவு அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கிற நம்மால் மிக சிறப்பாக மழை மேலாண்மை செய்ய முடியும் தானே! இதற்கான தீர்வுகளை நம் தொழில் நுட்ப காலத்தில் வெகு எளிதாக கண்டுபிடிக்க முடியும் தானே!

கடந்த 40 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவைகள் நடுத்தர மட்டும் சிறிய அணைகள் மட்டுமே. இதில் வேதனை கரிகாலன் கட்டிய அணை இன்னமும் இருக்கிறது, ஆனால் தொழில் நுட்ப அறிவோடு நம்மவர்கள் கட்டிய இந்த அணைகள் பெரும்பாலும் ஒரு மழையைத் தாங்க கூட வலு இல்லாது உடைந்தே போய் விட்டது.

ஓர் அரசு நினைத்தால் என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் மழையே காணாத வறண்ட நிலங்களும் இருக்கின்றன. அதிக மழை பொழியும் பகுதிகளும் இருக்கின்றன. இவற்றை இணைக்கிற வேலையைச் செய்தால் பெய்கிற மழை எவ்வளவு வரமாக அமையும்! சாலைகள் போட மரங்களை வெட்டி நிலங்களைக் கையகப் படுத்தும் வேலையில் காட்டுகிற முனைப்பை கை விட்டு விட்டு உயிர்களைக் காக்கிற இது போன்ற தமிழகத்தின் பல பகுதிகளை நீரால் இணைத்து வளமாக மாற்றும் வேலையில் ஈடுபடுட்டால் நம் எதிர்கால சந்ததி நம்மை கையெடுத்து வணங்குமே!

மழை நீர் தெருக்களில் கட்டி கிடப்பதற்கு மற்றொரு காரணம் சிமெண்ட் சாலைகள். தேவையான இடங்களில் சிமெண்ட் ரோடு போடுவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அழகு என்கிற பெயரில் மண்ணை மூடி ரோடு போடும் மூடர்கள் மற்றும் சிமெண்ட் ரோடு போட்டால் தான் பிராஜக்ட் எழுதி நாலு காசு பார்க்க முடியும் என்று ரோடு போடுகிற அரசியலே இங்கு அதிகம். மழைத் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிற அருமையான மண் வளத்தைக் கொண்டிருக்கிற பூமியின் மீது சிமெண்ட் ரோடுகளைப் போட்டால் எப்படி மழைத் தண்ணீர் கீழே இறங்கும்?

தெரு முழுவதும் சிமெண்ட் ரோடும், எங்கும் எதிலும் தார் ரோடுகளை போட்டு மண்ணையே பார்க்க முடியாத நிலையை உருவாக்கி வைத்து விட்டோமே? அடுத்த தலைமுறைக்கு மண் என்றால் என்னவென்றே தெரியாத நிலைக்கு ஆளாக்க போகிறோம் என்பதே உண்மை. தண்ணீருக்காக மட்டுமல்ல, மண்ணுக்காகவும் பல கி.மீட்டர்கள் நடக்கும் காலம் விரைவில் மலரும் என்றே சொல்ல முடியும்.

இப்போதாவது விழித்துக் கொண்டு நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டும் திட்டத்திற்கு தடை போடலாமே! மழை பெய்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வழிந்தோடுகிற ஆறுகள், பாலங்கள், படுகைகளைச் சுத்தப்படுத்தி பராமரிப்பு செய்யலாமே? இதில் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு கொடுக்கலாமே? வீடுகளில் மழை நீர் சேமிப்பு கிடங்கு கட்ட ஊக்கம் தரலாமே? இவற்றை தனி மனிதர்கள் செய்ய முடியாது, ஓர் அரசு நினைத்தால் மட்டுமே செய்ய முடியும்.

பூமி என்பது வெறும் இடம் அல்ல. அவள் ஒரு அபரிமிதமான சக்தி. எனவே தான் நம் முன்னோர்கள் அவளை தாயாக தெய்வமாக வணங்கினர். அந்த தாய் நாம் கலக்கிற கழிவுகளை உரமாக மாற்றித் தருகிறவள். தண்ணீரை உறிஞ்சி நமக்காக தன்னிலே சோ்த்து வைக்கிறவள். பூமியை தாயாக வணங்கிய நம் முன்னோர்கள் வெறும் பைத்தியக் காரர்கள் அல்ல. அவர்களே உண்மையான ஆன்மீகவாதிகள். அறிவியல் வல்லுநர்கள்.

யார் தான் அரசியலில் நல்லவர் என்று புலம்புவது எல்லாம் வீண் பேச்சு. நம் காலத்தில் மாற்றத்திற்கான விதைகளை பல போ் விதைத்து இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தோ்தல் கோட்பாடுகள் இயற்கையைப் பாதுகாக்கும் பல நல்வழிகளை, மழை நீர் மேலாண்மையைப் பேசுகிறது. வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே? இன்றைக்குப் பேசுவார்கள், நாளைக்கு மாறி விடுவார்கள் என்கிற கேள்வி எழும். வாய்ப்பே கொடுக்காமல் எப்படி பேச முடியும்? அப்படி அவர்கள் மாறினால் அடுத்த முறை மீண்டும் புதிய கட்சி ஒன்றைத் தோ்ந்தெடுக்கலாமே? புதிய கட்சிகளுக்கா தமிழகத்தில் பஞ்சம்?

தமிழகத்தில் ஆட்சி மாறினால் தான் காட்சிகள் மாற முடியும், மாற்றத்திற்கான ஒரே விதை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த 30 வினாடியில் நாம் பதிவு செய்யும் நம் ஒற்றை வாக்குச் சீட்டு மட்டுமே. அதனைத் தவிர்த்து மற்றவைகளைப் எழுதுவது என்பது அரசியல் விழிப்புணர்வு பெறுவதிலிருந்து நம் கவனத்தைத் திருப்புகிற சீரியல், திரைப்படம் போன்ற எதற்கும் பயன்படாத வெறும் பொழுது போக்கி தளமாகவே அமையும்.

துன்பம் என்பது மறைபொருள். அதனைத் தவிர்க்க முடியாது, துன்பத்தின் வழியாகவே நமக்கு மீட்பு உண்டு - இது பூமியில் நிகழ்கிற துன்ப நிகழ்வுகளுக்கு ஆன்மீக வாதிகள் வழி வழியாக பாடும் வில்லுப் பாட்டு. துன்பத்திற்கு காரணம் இயற்கை, அதனைத் தவிர்க்க முடியாது - இது அரசியல் வாதிகள் காலம் காலமாக ஒப்பிக்கும் மனப்பாட பாட்டு. ஆனால் துன்பம் என்பது தீர்வு காண முடியாத மறைபொருள் அல்ல. அதற்கு தீர்வு கடவுளும் அல்ல. அதற்கு காரணம் இயற்கையும் அல்ல. மாறாக, மக்களாட்சியில் நல்லவர் ஒருவர் ஆட்சி செய்தால் இங்கு நடக்கிற அத்தனை துன்பத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும். இது கருக்கு மட்டையின் ஆணித் தரமான நம்பிக்கை.