மருத்துவ காப்பீடு
டிசம்பர் 29, 2023
ஓர் அரசு நினைத்தால் மருத்துவ வசதியில் தன் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் மருத்துவ காப்பீடு சாத்தியமா? இலவச மருத்துவம் என்பது வெறும் கனவு திட்டமா?
நாட்டு நடப்புகள்
வைத்தியம், இன்சூரன்ஸ், நோய்
ஓர் அரசு நினைத்தால் தமிழக குடும்ப பெண்களின் பெருங் கவலையை ஒற்றை கையெழுத்தில், ஒற்றை நிமிடத்தில் தீர்க்க முடியும் என்பது கருக்கு மட்டையின் ஆணித்தரமான வாதம். தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வேதனைகளுள் ஒன்று வைத்தியம் பார்க்க செலவு செய்யும் பணம். நோய் என்பது நாம் நினைக்காத பொழுது, நினையாத வடிவத்தில் வருவது. அப்படி வருகிற நோய் கொடூரமான வியாதி, காலத்திற்கும் தூக்கி சுமக்கிற வியாதி என்றால் அதனாலேயே நைந்து போன குடும்பங்கள், மனிதர்கள் இங்கு அதிகம்.
இன்றைக்கு நம்மை விட மக்கள் எண்ணிக்கையில் குறைவான மேலை நாடுகள் மருத்துவ காப்பீட்டை சிறப்பாக செய்து அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்து இருக்கிறது. காப்பீட்டைப் பொறுத்த வரையில் அதிக மக்கள் இருப்பது பாதகம் அல்ல, சாதகமே. ஓர் அரசு நினைத்தால் நிஜத்தில் ஒற்றை நிமிடத்தில் அதனை செயல்படுத்த முடியும். அதற்கான ஆதாரங்கள், நிதி வசதிகள், கட்டமைப்புகள் தமிழகத்தில் நிச்சயம் இருக்கிறது. அதனைக் கொண்டு நோ்த்தியாக செயல்படுத்த முடியும்.
அத்தனை பேருக்கும் இலவச வைத்தியம் சாத்தியமா? நிச்சயம் சாத்தியம். சரியான திட்டமிடலும், செயல்படுத்தலும் இருந்தால் வெளிநாடுகளில் சாத்தியமாகி இருப்பது இங்கும் சாத்தியமே. இது வெறும் கனவு திட்டம் அல்ல. ஏற்கெனவே பல நாடுகளில் நடைமுறையில் உள்ளதே. உண்மையில் சனநாயக ஆட்சி முறையில் குடிமக்கள் பெறுவது எதுவும் ஓசி அல்ல. மக்கள் அனைவரும் வரி செலுத்தி எல்லா பயனும் பெற தகுதியாளர்களே.
ஓர் அரசின் வருமானம் அத்தனையும் நாம் தீப்பட்டி முதற்கொண்டு வாங்கும் பொருள் வழியாக கிடைக்கும் மக்களின் வரிப் பணமே. பொதுவாக 1 ரூபாய் கொடுத்து நாம் வாங்கும் தீப்பட்டியில் 36 காசுகளை வரிப்பணமாக செலுத்துகிறோம். அதில் 18 பைசா மத்திய அரசுக்கும், 18 பைசா மாநில அரசுக்கும் கொடுக்கிறோம். இதில் மக்களுக்கு மருத்துவ வசதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குரியது. அதற்கே வரி செலுத்துகிறோம்.
படிப்பறிவு வளர்ந்து இருக்கிற நம் காலத்தில் கூட நாம் எப்போது அரசுக்கு வரி செலுத்துகிறோம் என்பதே பலருக்கு எழும் கேள்வி. சொத்து வரி, வீட்டு வரி மட்டுமல்ல, தான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மறைமுகமாக அரசுக்கு வரி செலுத்துகிறோம் என்பதே பலருக்கு தெரியாதது வேதனை. தமிழக மக்கள் அத்தனை பேரையும் மருத்துவ காப்பீட்டின் கீழ் கொண்டு வர ஓர் அரசு நினைத்தால் நிச்சயம் முடியும். இது அரசுக்கு எந்த ஒரு உபரி செலவும் அல்ல. அது ஒரு சேவையே.
மருத்துவ காப்பீடு என்றால் என்ன? உதாரணமாக, நாம் ஒரு கார் அல்லது பைக் வைத்திருக்கிறோம். அதற்கு ஆண்டு தோறும் ஒரு சிறிய தொகையை இன்சூரன்ஸ் (காப்பீடு) என்கிற பெயரில் கட்டுகிறோம். விபத்து நடந்தால் வாகனத்தை சரி செய்ய இழப்பீடு கிடைக்கிறது. இதுவே வாகன இன்சூரன்ஸ் திட்டம் செயல்படும் முறை. நாம் கொடுக்கிற சிறிய தொகையில் எப்படி இவ்வளவு இழப்பீடு பெற முடிகிறது?
எல்லா வாகனங்களும் எப்போதும் விபத்து ஆவதில்லை. 1000 வாகனங்களில் வசூலிக்கப்படும் தொகையில் அத்தனை வாகனமும் விபத்துக்கு உள்ளாவதில்லை. ஒரு சில வாகனங்கள் அல்லது விபத்து நடக்காமலேயே கூட இருக்கும். இவை அனைத்துமே காப்பீட்டில் மூலதனம் மற்றும் வருமானம். ஆக, வாகன இன்சூரன்ஸ் என்பது ஒருவருக்கு பெரும் செலவு தொகையல்ல. அது ஒரு பாதுகாப்பு தொகை. அதே வேளையில் விபத்து நடந்தால் அது பெரிதும் கை கொடுக்கும் தொகை. இது தான் மருத்துவ காப்பீட்டின் அடிப்படையும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப ஒரு சிறிய தொகையை அரசு மாதா மாதம் எடுத்துக் கொள்ளும். நமக்கு நோய் வந்தால் அது எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் நாம் அதற்காக பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை. அரசே நமக்கான செலவை மருத்துவ காப்பீட்டின் வழியாக செலுத்தி விடும். இது வியாபாரத்திற்காக செய்யப்படும் தனியார் இன்சூரன்ஸ் திட்டம் அல்ல. அரசே செயல்படுத்தும் ஒரு பொது நல சேவை. அதனை ஓர் அரசு நினைத்தால் மட்டுமே செய்ய முடியும். தகுதியான ஒருவரை ஆள தோ்ந்தெடுத்தால் மட்டுமே செய்ய முடியும்.
நம் காலத்தில் குடும்ப பெண்களின் மிகப்பெரும் வேதனையும், மன உளைச்சலும் இந்த மருத்துவ செலவுகள் தான். வைத்திய செலவுக்காக கடன் வாங்கி வாழ்க்கையை இழந்தவர்கள் நம்மில் பலர். வைத்தியம் செய்ய பணம் இல்லாமல் தங்கள் அன்புக்குரிய நபர்களை இழந்தவர்களும் பலர். இப்படி ஒரு காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தினாலே இங்கு இருக்கிற குடும்ப பெண்களின் பாதி நோய்கள் தீர்ந்து விடும். இதற்கு கடவுள் தேவை இல்லை. செபம் தேவை இல்லை. எந்த பாவ பரிகார பூஜைகளும் தேவை இல்லை. ஓர் அரசன் நினைத்தாலே செய்ய முடியும்.
நாளைக்கு என்ன நடக்கும்? நாளைக்கு பிள்ளைக்கு ஏதாவது வியாதி வந்து விட்டால் என்ன செய்வது? எப்படி பணம் புரட்டுவது? எப்படி வைத்தியம் பார்ப்பது? என்கிற வேதனை, வலியோடே பல குடும்ப பெண்கள் பயத்தோடு நாட்களைக் கடத்துகிறார்கள், நடை பிணமாக மாறி இருக்கிறார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இது வெளிநாடுகளில் சாத்தியம் என்றால் இங்கும் சாத்தியம் தானே? அதனை ஏன் இதுவரை ஆட்சியாளர்கள் செய்ய வில்லை என்பதை தனி நபர் வெறுப்பாக, வெறும் குற்றப் படுத்தும் கேள்வியாக எப்படி பார்க்க முடியும்? நியாயமான கேள்வி தானே?
இன்றைக்கும் தமிழகத்தில் தரம் வாய்ந்த மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆனால் அவை ‘அரசு மருத்துவமனைகள்’ அல்ல. தனியார் மருத்துவ மனைகள். அவைகள் சேவைக்காக தொடங்கப் பட்டது அல்ல. முழுக்க முழுக்க வியாபாரத்திற்காக ஆரம்பிக்கப் பட்டவை. இவற்றில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல கிறிஸ்தவ மருத்துவ மனைகளும் அடக்கம். கிறிஸ்தவ மருத்துவ மனையில் சென்று ஒருநாள் தங்கி பாருங்கள். உங்களுக்கு வரும் பில்லில் உங்களின் இதய துடிப்பு நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. இவர்களின் மருத்துவ மனையில் ஓர் ஏழை ஒருநாள் இரவு கூட தங்கி வைத்தியம் பார்க்க முடியாத அளவு பில் கட்டணம். இதுவே யதார்த்தம்.
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள் உலகத்தரத்தில் இருக்கின்றன என்பது ஒட்டு மொத்த திராவிட ஆட்சியாளர்களின் கூவல். ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொள்வோமே. இப்படி உலகத் தரத்தில்(?) அமைக்கப் பட்டிருக்கிற இந்த அரசு மருத்துமனைகளில் ஏன் ஒரு முதலமைச்சர், ஒரு எம்எல்ஏ, ஒரு கவுன்சிலர், ஒரு வார்டு உறுப்பினர் கூட சிகிச்சை பெறாது தனியார் மருத்துமனைக்கு ஓடுகிறார்கள்? அதற்கு பதில் சொல்லட்டும். ஏற்றுக் கொள்வோம்.
ஊழல் ராஜாவான கட்டுமரம் கடைசியில் கரை ஒதுங்கியது கூட காவிரி என்கிற தனியார் மருத்துமனை. அவருடைய பிள்ளை இன்னமும் போவது லண்டனில் உள்ள மருத்துவமனை. தமிழக ஊழல் ராணியின் கடைசி மூச்சு பிரிந்தது சென்னை அப்போலோ. இதுவரை ஒரு அமைச்சர் கூட, ஏன் சுகாதார துறை அமைச்சர் கூட காய்ச்சலுக்கும் அரசு மருத்துமனை பக்கம் ஒதுங்கியதில்லை. உண்மையிலேயே இவர்கள் சொல்வது போல தரமான சிகிச்சை அரசு மருத்துவ மனைகளில் கொடுக்கப்படுகிறது என்றால் அவர்கள் ஏன் நோய் வந்ததும் தனியார் மருத்துவ மனைக்கு ஓடுகிறார்கள்?