ஆன்மீக போதை

ஆன்மீக போதை

ஆன்மீக போதை

ஜனவரி 04, 2024

மதம் என்பது ஒரு போதை என்பார் பொது உடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ். இது உண்மையா? மதங்கள் மக்களை நல் வழிப்படுத்துவது தானே?

நாட்டு நடப்புகள்

தீர்வு, வாக்கு, அரசியல்

வாழ்வில் நமது வறுமைக்குத் தீர்வு கடவுள், நோய்க்குத் தீர்வு கடவுள், வேலை வாய்ப்பிற்கு தீர்வு கடவுள், குடும்ப சமாதானத்திற்கு தீர்வு கடவுள் என்று அத்தனைக்கும் தீர்வு கடவுளே என்கிற மாபெரும் பொய்யில் தொடங்குகிற மயக்கத்தை ஏற்றி விடுவதே இந்த ஆன்மீக போதை. கடவுளை நம்முடைய ஆன்மாவின் தேடலுக்கான தீர்வாக தவிர நம்முடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைக்கான தீர்வாக நம்முடைய முன்னோர் முன் மொழிய வில்லை. அதனை போதையாக மாற்றியது போலி ஆன்மீகம்.

வாழ்க்கையில் நமது வறுமைக்கான தீர்வு கடவுள் அல்ல, நம்மை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் அரசியல் வியாதிகளை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறிவது. நம் வாக்குகளை புதியவர்களுக்கு செலுத்துவது அல்லது நாமே மாற்றாய் களம் இறங்கிப் போராடிப் பார்ப்பது. மக்களின் வரிப் பணத்தை சுரண்டி தின்பவனுக்கு ஓட்டு போட்டு விட்டு சிலையாக உட்கார்ந்து இருக்கிற கடவுளிடம் தீர்வு தேடுவதே முரட்டு மூட நம்பிக்கை.

நம் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க நாம் போக வேண்டியது கோயில், குளம் அல்ல, மாறாக, நம் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு வேலை கூட தராமல் அப்படி என்ன தான் இந்த அரசியல் வாதிகள் கிழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற கேள்வியை ஓட்டு கேட்டு வரும் ஆட்சி செய்த கட்சிகளின் வேட்பாளர்களிடம் கேட்பது. இனி இவர்களுக்கு எக்காலமும் வாக்கு இல்லை என்கிற தெளிந்த முடிவு எடுப்பது.

திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து “மற்ற கட்சிகளுக்கு” ஓட்டு போட்டால் பிஜேபி வந்து விடும் என்று பரப்புரை செய்யும் சிறுபான்மை மத தலைவர்களே முதலில் மதவெறி பிடித்தவர்கள். திராவிட கட்சிகளின் ஊழலை விட, சாராயத்தால் போகிற உயிர்களை விட, வறுமையில் வாடும் மக்கள் இலட்சக் கணக்கில் இருந்தும் மக்களின் வரிப்பணத்தை செத்தவருக்கு சிலைகள் செய்யவும், வெற்று விளம்பரம் செய்யவும் பயன்படுத்தும் அரசியல்வாதிகளை விட மதமே வாக்கை நிர்ணயிக்கும் அளவுகோல் என்று மதத்தை மையமாக வைத்து ஓட்டுப் போடும் இந்த சிறுபான்மை வாக்காளர்களே உண்மையில் மத வியாதி பிடித்து அலைகிறவர்கள். தங்கள் மத தலைவர்கள் சொன்னார்கள் என்பதற்காக மத அடிப்படையில் ஓட்டுப் போடும் இதுவும் மத அரசியல் தானே? மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாக்கும் சதிக்கு துணை போவது தானே?

நம் இறப்பையும் நமது வாழ்வு தரத்தையும் முடிவு செய்வது கடவுள் அல்ல. நாமே, நாம் வாழும் சூழ்நிலையே, நம்மை ஆளும் ஆட்சியாளர்களே. மக்களாட்சியில் பசியால் ஒருவன் செத்துப் போனால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியது கடவுள் அல்ல, ஆட்சியாளன். மக்களாட்சியில் வைத்தியத்திற்கு பணம் இல்லாமல் ஒருவன் இறந்து போனால் அதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியது கடவுள் அல்ல, ஆட்சியாளனே. வரி கட்டுகிற அத்தனை பேரும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு பெறும் அதிகாரம் பெற்றவன் தானே? பின் கட்டிய வரிக்கு என்ன பலன்? இது தானே கேள்வியாக எழ வேண்டும்? மதம் ஏன் முன் வருகிறது?

மக்களாட்சியில் சாராயம் குடித்தே ஒருவன் தன் குடும்பத்தையும் கெடுத்து, தானும் கெட்டு தன் மனைவியை விதவை ஆக்கி, பிள்ளைகளை அனாதை ஆக்கி இறந்து போனால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியது கடவுள் அல்ல, அந்த சாராயத்தை வியாபாரமாக நடத்தி காசு பார்க்கும் ஆட்சியாளனே. அத்தோடு இவர்கள் சாராயம் விற்கிறவர்கள் என தெரிந்தும் எத்தனை குடும்பங்கள் செத்தாலும் பரவாயில்லை, நான் சாராய வியாபாரிக்கே ஓட்டு போடுவேன், இல்லை என்றால் பிஜேபி வந்து விடும் என்று மதவெறி பிடித்து அலையும் ஒவ்வொரு சிறுபான்மை வாக்காளனும் இந்த சமூக சீரழிவுக்கு பொறுப்பு. கடவுள் அல்ல.

இங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பது கடவுளின் வேலை அல்ல. கடவுளால் அது செய்ய முடிவது சாத்தியமும் அல்ல. கடவுளால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதெல்லாம் ஆன்மீக போதையில் எவனோ ஒருவன் எழுதிய வெறும் ஆன்மீக உளறலே தவிர, உண்மை அல்ல. கடவுளால் எதையும் செய்ய முடியாது என்பதற்கு கடவுளின் திருவடி தேடி பாத யாத்திரையில் பலியான ஒவ்வொரு பக்தனும் சாட்சி. வாழுவதற்காக பிறந்து கணப் பொழுதில் இறந்து போன மாசு மருவற்ற ஒவ்வொரு குழந்தையும் சாட்சி.

செபித்தால் நாம் வேண்டுவது எல்லாம் கிடைத்து விடும் என்று போதிக்கிற ஆன்மீகவாதியை விட மிகப்பெரிய பொய்யை ஒரு அரசியல்வாதி கூட சொல்ல முடியாது. நான் கடவுளிடம் வேண்டியது எனக்கு கிடைத்தது என்று ஒருவன் சாட்சி சொன்னால், நான் கடவுளிடம் வேண்டியது எதுவும் கிடைக்க வில்லை என்று சாட்சி சொல்லும் ஒரு கோடி பக்த கோடிகள் இங்கு உண்டு. வாசிக்கிற நீங்கள் சொல்லுங்கள்: நீங்கள் கேட்டது அனைத்தையும் கொடுத்து விட்டாரா?

இன்றைக்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பணம் கொழிக்கும் தொழில் ஆன்மீகமே. மதங்களைக் கடந்து அவர்கள் சாமியார்களாக இருந்தாலும், சரி பாஸ்டர்கள் ஆனாலும் சரி, இவர்கள் தனித்தனியாக ஆன்மீகத்தின் பெயரால் நடத்துகிற ஒவ்வொரு நிறுவனத்தின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு 1000 கோடி.

அரசியல் வாதிக்கு கொஞ்சமும் சளைக்காது சொத்து சோ்ப்பதில் கில்லாடிகள் இந்த ஆன்மீக வாதிகள் என்பதே மேற்காணும் புள்ளி விபரம் சொல்லித் தருகிறது. அரசியல் வாதி பொது மக்களின் வரிப்பணித்தை சுரண்டி தின்பதில் கில்லாடி என்றால் இந்த ஆன்மீக சாமியார்கள் ஏழை மக்களை ஏமாற்றி காசு பார்க்க தெரிந்த பலே போ்வழிகள்.

இன்றைய நவீன சமூக தகவல் தொடர்பு சாதனங்களான சேட்டிலைட் டி.வி, அலைபேசி, வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், டெலிகிராம் என்று கிடைக்கிற வாய்ப்புக்களில் எல்லாம் நாங்கள் ஆன்மீக செய்தியைப் பரப்புகிறோம் என்று சொல்கிற இந்த ஆன்மீக வாதிகள் உண்மையில் பரப்புவது ஆன்மீகம் அல்ல, காற்றின் மின் காந்த அலைகளால் உமிழப்படும் கதிரியக்கம் மூலம் பல கொடூர வியாதியையே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பூமியைப் பாதுகாப்பது பற்றியும் புளுகுகிறார்கள். சிட்டுக் குருவி அழிவில் இவர்களுக்கும் நிச்சயம் பங்கு உண்டு.

நம் காலத்தில் மார்க்ஸ் சொல்வது போல மதம் என்பது வெறும் போதையே. சாதாரண மக்களுக்கு இந்த ஆன்மீக போதனையை ஊற்றி அவர்களை சிந்தனை குருடர்களாக, அறிவு செவிடர்களாக வைத்திருப்பதே இந்த ஆன்மீகவாதிகளின் முதன்மைப் பணி. ஏனென்றால் ஆன்மீக மயக்க நிலையில் இருக்கும் இந்த மக்கள் தெளிந்து விட்டால் அரசியல் விழிப்புணர்வு பெற்று விட்டால் இவர்களுக்கு வியாபாரம் நடக்காதே? இந்த புதிய ஆண்டில் மக்களவை தோ்தலுக்காக தயாரித்துக் கொண்டு இருக்கும் நாம் தெளிந்த அறிவோடு கட்சிகளைத் தோ்வு செய்வோம்.