ஏமாற்றும் பொங்கல்

ஏமாற்றும் பொங்கல்

ஏமாற்றும் பொங்கல்

ஜனவரி 15, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர் சொல்லி இருக்கிறார்கள். அது எந்த வருட தை மாதத்தில் வழி பிறக்கும் என்பதையும் சொல்லி சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?

நாட்டு நடப்புகள்

சுயநலம், வரிப்பணம், விடுமுறை

நாட்கள் கடந்து கொண்டே செல்கின்றன. தமிழர்களின் வாழ்வியல் திருவிழாவான பொங்கல் திருவிழாவும் மாறி மாறி வந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் மக்கள் வாழ்வில் என்ன தான் மாற்றம் நடந்திருக்கிறது என்று பார்த்தால் சலிப்பே ஏற்படுகிறது. ஜனவரி மாதம் வந்தாலே ஒரு வேளை பொங்கல் பொங்கி சாப்பிட கூட ரேசனில் கையேந்திக் கொண்டு திமுக அமைச்சர்கள் மக்களை கேலி செய்கிற வார்த்தையான ஓசி அரிசி, ஓசி சக்கரை, ஓசி கரும்பு, வருமா? வராதா? என்கிற கேள்வி. அத்தோடு அந்த ஓசி 1000 ரூபாய் எல்லா ரேசன் கார்டுக்கும் கிடைக்குமா? கிடைக்காதா என ஏங்கி நிற்கிற அவலம். இதுவே இன்றைய தமிழகம்.

பொங்கல் விழா இன்றைய சுயநல தமிழகத்தை தோலுரித்துக் காட்டும் விழா என்பதே உண்மை. தமிழகத்தில் ஆண்டி முதல் அரசன் வரை அத்தனை பேரும் வரி செலுத்தியே ஒவ்வொரு பொருளையும் வாங்குகிறார்கள். ஆனால் அரசாங்க உத்யோகம் பார்க்கிற ஒருவருக்கு மட்டும் கை நிறைய மாத சம்பளம், வார விடுமுறை, மாத விடுமுறை, வருட விடுமுறை, அரசு விடுமுறை, மெடிக்கல் லீவ், மகப்பேறு லீவ், ஓய்வூதியம், சலுகைகள் ஏன்? இந்த ஏற்றத் தாழ்வோடு எப்படி சமத்துவ பொங்கல் பொங்க முடியும்?

நாங்கள் கடினப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்தோம் என்று வாதம் செய்வார்கள். படித்தால் உயர்வா? படிப்பு மட்டுமே ஒரு சமூகம் இயங்க போதுமாகி விடுமா? படிப்பது ஆபீஸ் வேலைக்கே என்று அத்தனை பேரும் படித்தால் யார் நிலத்தை உழுவது, யார் கழிவுகளை அகற்றுவது? யார் தெருக்களை தூய்மைப் படுத்துவது? யார் மரம் ஏறுவது? யார் பனை ஏறுவது? எனவே, படிப்பு என்பது தகுதியாக இருக்க முடியாது. படிப்பு உயர் சம்பளத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும் இருக்க கூடாது. அப்படி ஒரு முட்டாள்தன வேலையைத் தான் திமுக, அதிமுக அரசுகள் மாறி மாறி செய்து தமிழகத்தையே சிதைத்து சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு தாறுமாறாக சம்பளத்தை ஏற்றுவது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறைக்கு எல்லா சலுகைகளையும் தூக்கிக் கொடுப்பது. இது எதற்காக? அப்பட்டமான தோ்தல் அரசியலுக்காக. தோ்தல் நேரத்தில் அவர்களுக்கு சார்பாக நின்று அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற சுயநலத்திற்காக. ஏனென்றால் அரசு ஊழியர்கள், காவலர்கள் தானே தோ்தல் காலத்தில் வாக்குச் சாவடிகளில் தோ்தல் அதிகாரிகள். ஆக, சாமான்யர்கள் வெறும் ஓட்டுக்காக சமூகத்திற்கு தேவைப்படும் தேவையில்லாத ஆணிகளே. இதுவும் திராவிட அரசுகளின் கீழ்த்தர அரசியலில் ஒன்று

படிப்பினால், உழைப்பினால் உயர்ந்த இடத்தை அடைவதற்கு பதவி வழியாக 'மரியாதை' கொடுக்கலாம், ஆனால் 'பணத்தை' உயர்வாக கொடுப்பது சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும், பிளவையும் உண்டு பண்ணும் என்பதற்கு நம் காலமே சாட்சி. இது இந்திய அரசியல் சாசனம் சொல்லும் அடிப்படை சமத்துவத்திற்கே எதிரானது. ஐஏஎஸ் ஆகி விட்டால் இலட்ச ரூபாய் சம்பளம், ஐபிஎஸ் ஆகி விட்டால் இலட்ச ரூபாய், மருத்துவர் ஆகினால் இலட்ச ரூபாய். ஆசிரியர் ஆகி விட்டால் இலட்ச ரூபாய். ஆனால் உண்மையில் இந்த சமூக இயக்கத்திற்கு உணவு, உடல் உழைப்பை வழங்கும் உழைப்பாளிக்கு, உழவருக்கு, மீனவருக்கு, துப்புரவாளிக்கு, சமைப்பவருக்கு?

ஒரு சித்தாள் வேலை செய்யும் ஒருவரின் ஒருநாள் சம்பளம் ரூபாய் 500. மீனவருக்கு மீன்பாடு இருந்தால் ஏதாவது உண்டு, அதுவும் வெறுங்கையோடே பல நாட்கள். பகல் முழுவதும் வெயிலில் கிடக்கிறார், உடல் வலிக்க உழைக்கிறார். சமூகத்தில் மரியாதை கிடையாது. வார விடுமுறை கிடையாது, வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, மாத விடுமுறை, ஆண்டு விடுமுறை, பண்டிகை விடுமுறை எதுவும் கிடையாது. மெடிக்கல் லீவ் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது, கடைசி வரை ஓய்வும் கிடையாது. அவருக்கு உழைத்தால் தான் சம்பளம். இடையில் நோய் வந்தால், இறந்து போனால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கிடையாது. பிள்ளைகளுக்கு நடுத்தெரு தான். இப்படிப்பட்ட சமூக இழிநிலையில் வாழும் தமிழ் சமூகம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு எப்படி, எதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த துடிக்கிறது?

இன்னமும் சம்பள உயர்வு கேட்டுப் போராடுகிற அரசு ஊழியர்களுக்கு இப்படியும் ஒரு சமூகம் இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கிற மனசாவது இருக்கிறதா? எள்ளளவும் கிடையாது. அவ்வளவும் சுயநலம். ஊரில் எத்தனை போ் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, எனக்கு பண பலன் கிடைக்கனும், எனக்கு Retirement Benefit கிடைக்கனும், என் குடும்பம் பாதுகாப்பா இருக்கனும். அடுத்தவரைப் பற்றிய கவலை கடுகளவு இல்லாது சுயநலத்தோடு இறைவனுக்கு பொங்கல் வழியாக நன்றி சொல்லி அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இவர்களுக்கு மட்டும் நல்லது செய்தால் அவர் நன்றி சொல்ல ஏற்ற கடவுளா? இங்கே அரசு உத்யோகத்தில் உட்கார்ந்து அநியாய மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிற பலர் ஏழை, எளியவர்களின் உழைப்பால் பெற்ற வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொண்டு இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அவர்கள் உழைக்க வில்லை என்றால் இவர்களும் மூலையில் உட்கார்ந்து அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

'தமிழகத்தில் ஒரு குறையுமே இல்லை. தமிழகத்தை இந்த இரண்டே ஆண்டில் உயர்ந்த மாநிலமாக மாற்றி விட்டோம்' என்று புளுகி தள்ளுகிறது விடியா அரசு. இவர்கள் செய்த சாதனை தான் என்ன? தமிழகத்தில் விதவைகளுக்கு, பெண்களுக்கு மாதம் ஒருமுறை கொடுக்கும் 1000 ரூபாய் திட்டம். இந்த 1000 ரூபாயை வைத்து எப்படி ஒரு குடும்ப பெண் 30 நாட்களைக் கடத்த முடியும்? இப்படி இன்னும் பலர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்க பொங்கல் கொண்டாடி எந்த இறைவனை திருப்தி படுத்த போகிறோம்?

இதில் கிறிஸ்தவர்கள் எருசலேம் புனிதப் பயணம் செய்ய மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கீடு. இசுலாமியர்கள் மெக்கா பயணம் செய்ய மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கீடு. கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கீடு. இந்த சலுகையில் ஓசியில் வெளிநாட்டு பயணம் செய்வதும் திராவிட கட்சிகளின் மாவட்ட, வட்ட உருப்படிகள். மக்கள் அல்ல. இப்படி மக்களின் வரிப்பணத்தை அரசியலுக்காக முட்டாள் தனமாக செலவிடும் அரசியல் கோமாளிகளை நம்மை ஆள தோ்ந்தெடுத்து விட்டு பொங்கல் கொண்டாடி என்ன மகிழ்ச்சி கிடைத்து விட போகிறது? அது தேவையில்லாத ஒரு ஏமாற்று கொண்டாட்டமே.

நம் தமிழகத்தில் இன்னமும் பிச்சைக் காரர்கள் திரிகிறார்கள், வேலை இல்லாது அரவாணிகள் விபச்சாரத்தை செய்ய வேண்டிய நிர்பந்த நிலைக்கு ஆளாகிறார்கள். பல இளைஞர்கள் வேறு வழியில்லாது திருடர்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எல்லாம் துளியும் கவலைப் படாது வருடா வருடம் சாப்பிட்ட பொங்கலையே சாப்பிட்டு, வாழ்த்துச் செய்தி வெளியிட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி விட்டால் சிறப்பாக பொங்கல் கொண்டாடியதாக அர்த்தம் ஆகி விடுமா? உண்மையில் நம் கால பொங்கல் திருவிழா ஒரு தற்பெருமை திருவிழா, வீண், ஆடம்பர, பந்தா காட்ட பயன்படும் ஒரு வெத்து வேட்டு விழாவே.

இந்த விடியா அரசு முதல்வரின் ஒரே கவலை, தன் மகனை எப்படி துணை முதல்வராக்க வேண்டும் என்பது மட்டும் தான். ‘என் குடும்பத்தில் இருந்து எனக்குப் பின், ஒருவர் கூட அரசியலுக்கு வர மாட்டார் என்பதை அழுத்தம், திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஒரு பொது சபையில் பேசி விட்டு தன் மகனை முதல் இருக்கைக்கு கொண்டு வரத் துடிக்கும் இவர் போன்ற பொய்யரைத் தோ்ந்தெடுத்த மக்களை என்ன சொல்வது? ‘அரசியல் குடும்பத்தில் பிறந்தாலே அரசியலுக்கு வர வேண்டும் என்பதில்லை. நான் வர மாட்டேன்’ என்று வாய்ச் சவடால் பேசிய இந்த பொய்யருக்கு பிறந்த புளுகணியை என்ன சொல்வது?

பொங்கலும் நம் காலத்தில் ஒரு கார்பரேட் வியாபாரமே. ஒரு பக்கம் சினிமா கூத்தாடிகள் தங்கள் படங்களை வெளியிட்டு ஏழை ரசிகனிடம் பணத்தை சுரண்டி தின்னும் நாளாக பயன்படுத்திக் கொள்கிறார்கள், டிவி சேனல்கள் மக்களை நாள் முழுவதும் டி.வி பார்க்க வைத்து கல்லா பார்க்கிறார்கள். மறுபக்கம் திராவிட ஆட்சியாளர்கள் மக்களின் வரிப்பணத்தை ஏதோ தங்கள் அப்பன் வீட்டுப் பணத்தை இனாமாக வழங்குவது போல சாதனை விளம்பரங்கள் செய்யவும், மாடுகளோடு மனிதர்களை காட்டு மிராண்டித் தனமாக சண்டை போட வைத்து பழைய உரோமாபுரியில் நடந்த கொலோசிய கொடுமையை ஜல்லிக் கட்டு என்கிற பெயரில் நடத்தி ஆட்சியின் கோமாளித்தனம் மக்கள் அறியாமல் இருக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பொய்யர்களுக்கே இது திருநாள், சாமானியர்களுக்கு அல்ல.

ஆக, பொங்கலோ, ஒரு வார பொங்கல் விடுமுறையோ அரசு ஊழியர்களுக்கு, சினிமா கூத்தாடிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம், ஆனால் அன்றாட உழைப்பை நம்பி இருக்கிற சாமானிய மக்களுக்கு இது வருமானத்தைக் கெடுக்கும் வீணான நாட்களே. கருக்கு மட்டையை பொறுத்த வரையில் இந்த திராவிட அரசுகள் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு, நல்லவர்கள் ஆளும் நாளே தமிழர்களுக்கு உண்மையான நன்றியின் விழா. அதுவரை ஏமாற்றும் பொங்கலே.