சாராய வியாபாரிகள்

சாராய வியாபாரிகள்

சாராய வியாபாரிகள்

ஜனவரி 22, 2023

மக்கள் பாவம். அரசியல்வாதி ஏமாற்றி விடுகிறான். ஏமாந்து போகிற ஏழைகள் மீது பழி சொல்வது நியாயமா? படிப்பறிவு இல்லாத மக்களை குற்றம் சொல்வது சரியா?

நாட்டு நடப்புகள்

ஓட்டு, குடி, மக்களாட்சி

தோ்தல் நேரங்களில் தமிழக மக்களில் பலர் பணம் வாங்கியே ஓட்டு போடுகிறார்கள். அதனை விட்டு விடுவோம். பலரும் காலம் காலமாக திமுக அல்லது அதிமுக கட்சிக்கு ஓட்டுப் போட்டே பழகி விட்டார்கள். அதனையும் கடந்து சென்று விடுவோம். ஆனால் குடியால் சீரழிந்து நொந்து போன தங்கள் குடும்பத்தை கண் எதிரில் பார்த்தும், தந்தை, மகன், கணவன் சாவின் வலியை வாழ்வில் அனுபவித்தும் சாராயம் விற்று கவர்மெண்ட் நடத்தும் அவர்களுக்கு ஓட்டுப் போடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

சுதந்திரத்திற்கு முன்னதாக பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் ஆட்சி நடைபெற்ற போது சென்னை மகாணத்தில் முதல் முறையாக அப்போதைய முதல்வர் திரு. இராஜாஜி மது விலக்கை அமல் படுத்தினார். அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் முதல் முறையாக மீண்டும் சாராய கடைகளை திறக்க வேண்டும் என்கிற கேவலமான ஆணையைப் பிறப்பித்தது திமுக தலைவர் கருணாநிதியே தான். அந்த நாள் 30.08.1971.

திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக இந்தியாவில் இரண்டே மாநிலங்களில் தான் மதுவிலக்கு இருந்தது. ஒன்று தமிழ்நாடு, மற்றொன்று குஜராத். ஆனால் என்றைக்கு திமுக கட்சி அதிகாரத்தில் நுழைந்ததோ, அன்றைக்கு பிடித்தது தமிழகத்திற்கு வியாதி. திமுகவால் தமிழகம் சாராய வியாபாரிகளின் கூடாரமானது, அதிமுகவால் அது கார்பரேட் நிறுவனமானது. மது விலக்கு சாத்தியம் இல்லை என்று பல்லவி பாடும் விமர்சகர்கள் குஜராத்தில் இன்னமும் நடைமுறையில் இருக்கும் மது விலக்கு கொள்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

1971 லிருந்து சாராயத்தினால் சீரழிந்து அழிந்தது அரசியல் வாதியின் குடும்பமல்ல. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பங்களே. அவர்களுக்கு அதன் வலி தெரியும் தானே? கணவனை இழந்து, வறுமையில் துவண்டு, கூலி வேலை செய்யும் நிலைக்கு ஆளான ஒரு குடும்ப பெண்ணிற்கு தன் கணவனின் உயிரை சாராயம் ஊற்றி கொன்று தன் பிள்ளைகளை அனாதை ஆக்கி விட்ட திராவிட அரசுகள் மீது கோபம் வர வேண்டாமா? இனி தன் வாழ்நாளில் இந்த தீயவர்களுக்கு ஓட்டு போடவே மாட்டேன் என்கிற சபதத்தை எடுத்து அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டாமா?

இந்த சாராய கடைகளினால் ஒவ்வொரு நாளும் போகும் உயிர்கள் ஆயிரம் ஆயிரம். சாராயம் குடித்து சாகிறவன், சாராயம் குடித்து வாகனம் ஓட்டி தானும் செத்து அநியாயமாக மற்றவனையும் கொல்கிறவன் - இந்த பரிதாப நிகழ்வுகளுக்கு யார் பழியை ஏற்க வேண்டும்? கடவுளுக்கு கண் இருக்கிறதா, இல்லையா என்பதல்ல இங்கே நாம் கேட்க வேண்டிய கேள்வி. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற கண்களை எங்கே வைத்து இருக்கிறோம் என்பதே எழ வேண்டிய கேள்வி. சாராயமே சமூகத்தை கெடுக்கிறது, குடும்பத்தை அழிக்கிறது என்று தெரிந்தும் விற்கிறவனுக்கு ஓட்டுப் போட்டால் சமூக சீரழிவு பழியை கடவுள் அல்ல, வாக்காளனே சுமக்க வேண்டும்.

உணவுக்கு திருடுகிறவனுக்கு உணவுக்கான வழி கிடைத்தால் திருந்தி விடுவான். ஆனால், கொள்ளை அடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கிற இந்த அரசியல் திருடர்கள் திருந்துவார்கள் என்று எண்ணுவது நம் மடமை. ஒருமுறை தவறு செய்தால் இனி எக்காலத்திலும் மக்கள் ஓட்டே போட மாட்டார்கள் என்கிற பயம் வந்தால் ஒழிய அரசியல்வாதி திருந்த மாட்டான். எனவே திராவிட அரசியல்வாதி திருந்துவது கனவிலும் நடக்காது. திருந்த வேண்டியது மக்களே. குடியினால் பாதிப்படைந்த குடும்பங்கள், சாராயத்தினால் வாழ்க்கையைத் தொலைத்த பெண்களள், அவர்களின் உறவுகள் இந்த முடிவு எடுத்தால் திராவிட கட்சிகளுக்கு ஒரு தொகுதியில் கூட டெப்பாசிட் கிடைக்காது என்பதே உண்மை.

மக்களாட்சி முறையில் அரசியல்வாதி 5 ஆண்டு மட்டுமே ஆட முடியும். பிறகு மீண்டும் அவன் ஓட்டுப் பிச்சை கேட்டு மக்களிடமே வர வேண்டும். அது தான் மக்களாட்சியின் வலிமை. அப்படி வருகிற போது அவனை எதிர்த்து சண்டை கட்ட வேண்டியது இல்லை. ஆட்சி நடக்கிற காலத்தில் வெயிலில் உட்கார்ந்து போராடி வழக்கு வாக்க வேண்டியது இல்லை. சிறை செல்ல தேவை இல்லை. அமைதியாக இருந்து தோ்தல் நாளில் முதல் வேலையாக தன் ஓட்டை புதியவர் ஒருவருக்குப் போட்டாலே திராவிடம் செத்துப் போன எலியாக மூலையில் கிடந்து நாற வேண்டியது தான்.

வெள்ள நேரத்தில் உதவி கிடைக்க வில்லை என்றதும் பொங்கி எழுகிற கோபம் ஓட்டுப் போடுகிற நேரத்தில் ஏன் இல்லை? புளுத்துப் போன பூச்சிகள் நிறைந்த அரிசியை ரேசன் கடையில் வாங்குகிற போது எழுகிற ஆக்ரோஷம் தோ்தல் நேரத்தில் இல்லையே. ஒரு பொங்கல் சோறு பொங்கி திங்க கூட நம்மை க்யூவில் நிற்க வைத்து பிச்சை எடுக்க வைப்பதில் இவர்களின் ஆட்சி அவலம் தெரிய வில்லையா? கவர்மெண்ட் சம்பளம் கைநிறைய வாங்குகிறவனும் சாரம் கட்டிக் கொண்டு ரேசன் கடையில் 1000 ரூபாய் பொங்கல் பரிசு பெற முண்டிக் கொண்டு நிற்கிறான். நாளை அது தன் தலை மீதே வரியாக விழப் போகிறது என்று சிந்திக்கிற அறிவு கூட தமிழனுக்கு இல்லையா? இப்போதைய தமிழகத்தின் 7 இலட்சம் கோடி கடனில் இப்படி இலவசத்தைக் கொடுப்பது தமிழக பொருளாதாரத்தைச் சீரழிக்கும் என்கிற எண்ணம் கூட எழவில்லையா?

என் ஒற்றை ஓட்டினால் என்ன மாற்றம் வந்து விட போகிறது என்று எதிர் கேள்வி கேட்டே நம் மக்கள் மோசம் போய் விட்டார்கள். எவன் யாருக்கு ஓட்டு போட்டால் என்ன? என் ஓட்டை தகுதி இல்லாத ஒருவனுக்கு போடாமல் இருந்தால் அதுவே நிம்மதி தானே? வெற்றி பெறுகிறவனுக்கு போட்டு என்ன இதுவரை கிடைத்து விட்டது? வாக்கு பிரிந்து விடும், பிஜேபி வந்து விடும் என்று தோ்தல் நேரத்தில் மட்டும் அறிக்கை விட்டு விட்டு, பிரச்சனை நேரங்களில் ஒதுங்கிக் கொள்கிற ஆன்மீக தலைவர்களே கைதோ்ந்த சுயநல அரசியல்வாதிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்களது ஒரே இலக்கு தங்கள் மதத்தைக் காக்க வேண்டும், மக்களைப் பற்றி அக்கறை அவர்களுக்கு துளியும் இல்லை என்பதற்கு அவர்கள் வாழ்கிற வாழ்க்கை சாட்சி.

திமுக, அதிமுக அரசுகளுக்கு ஓட்டுப் போட்டால் இந்த சாராய சாவுகள் நம் தாத்தாவோடு தந்தையோடு முடியாது. அடுத்த தலைமுறை அதுவும் இளைய தலைமுறை குடித்தே சீரழிவதோடு தொடரும். ஏற்கெனவே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கைகளில் பீர் பாட்டில்களோடு சுற்றித் திரியும் காட்சிகள் வீடியோக்களில் வர தொடங்கி விட்டது. இதனைப் பார்த்தும் மீண்டும் மீண்டும் சாராயத்தை விற்று சமூகத்தை சீரழிக்கும் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டால் அந்த பழியை வாக்காளனே சுமக்க வேண்டும்.

மக்களாட்சி முறையில் நமக்கான முக்கியமான நாள் நம் பிறந்த நாள் அல்ல, நாம் கொண்டாடும் திருவிழாக்கள் அல்ல, திருமண நாட்கள் அல்ல. மாறாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாம் வாக்குச் செலுத்தும் அந்த ஒற்றை நாள், ஒற்றை வினாடி. நாம் செலுத்தும் வாக்கே அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் தலைவிதியை தீர்மானிக்க போகிறது, கடவுள் அல்ல. நமக்கு விதியை எழுதுவதும் கடவுள் அல்ல. மக்களாட்சியில் நமக்கு நாமே 5 ஆண்டுகளுக்கான நம் விதியை வாக்குச் சீட்டில் எழுதி போடுகிறோம்.

எங்களை வழிநடத்தும் ஆன்மீக தலைகள் திராவிடத்திற்கு ஓட்டுப் போட சொன்னார்கள், எனவே ஓட்டுப் போட்டோம் என்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது. ஒரு ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்று சிந்திக்கிற அறிவு கூட 18 வயதிற்கு பிறகு நமக்கு இல்லையா? திராவிட கட்சிகளுக்கு வாழ்நாளில் ஓட்டே போடக் கூடாது என்று சொல்வதற்கு கோடி காரணங்கள் தேவையல்ல. சாராயம் விற்று சாமான்யர்களைக் கொல்லும் இந்த ஒரு காரணம் போதும் இவர்களை காலத்திற்கும் புறக்கணிப்பதற்கு.