தமிழக வெற்றி கழகம்

தமிழக வெற்றி கழகம்

தமிழக வெற்றி கழகம்

பிப்ரவரி 04, 2024

நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்குவது, தமிழக அரசியலுக்கு ஆபத்தானதா? ஆரோக்யமானதா? நடிகர் விஜயின் அரசியல் பயணம் யாருக்கு இலாபம்?

நாட்டு நடப்புகள்

அரசியல், விஜய், கட்சி

நடிகரோ, விளையாட்டு வீரரோ, சினிமா இயக்குநரோ, வேற்று மொழியினரோ எவராக இருந்தாலும் இந்திய குடிமகனாக இருக்கிற எவரும் எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சி துவங்க முழு உரிமை இருக்கிறது. அதற்கு இந்திய அரசியலமைப்பு உரிமை வழங்கி இருக்கிறது. எனவே ஓர் இந்திய குடிமகனாக அரசியலில் களமிறங்க தயாராகும் நடிகர் விஜயை விமர்சிக்க எவருக்கும் இங்கு உரிமை இல்லை.

ஊழல் செய்து தமிழகத்தைச் சுரண்டி தின்னும் திராவிட கூட்டத்தை வேரறுக்க எவர் வந்தாலும் அது மகிழ்ச்சியே. அந்த விதத்தில் விஜயின் புதிய கட்சி அறிவிப்பு தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமே. கூடுதலாக, அரசியல் என்றால் சாக்கடை என்கிற வதந்திகளைப் பரப்பியே வேறு எவரையும் அரசியல் பக்கம் வரவிடாமல் மக்களின் வரிப்பணத்தை உண்டு திரியும் திராவிட ஊழல் சாம்ராஜ்யத்திற்கு நடிகர் விஜய்யின் வரவு நிச்சயம் பேரிடியே. எனினும், திரைப்பட வெளிச்சத்தைப் பயன்படுத்தி நடிகர் ஒருவர் அரசியலுக்குள் வருவது தவறாகாதா?

திரை வெளிச்சத்தை அரசியலுக்கு பயன்படுத்தி இலாபம் காண முடியும் என்கிற தந்திர கணக்கை தமிழக அரசியலில் முதலில் தொடங்கியதே இந்த திராவிட மாடல் தான். திரையில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரை தங்களது தோ்தல் பிரச்சார வேலைக்கு நன்றாக பயன்படுத்திக் கொண்டவர்கள் அண்ணாவும், கருணாவும். பிற்காலத்தில் எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து அதிமுக தொடங்கிய போது கருணாநிதி தன் மகன் முத்துவையும், ஸ்டாலினையும் திரையுலகில் நடிகர்களாக அறிமுகப் படுத்தி தோல்வி கண்டார். அந்த தந்திர திராவிட திரைப்பட மாடலின் நீட்சியே ஸ்டாலினின் மகன் உதயநிதியின் நடிகர் அவதாரம்.

வருவேன் வருவேன் என்று கடைசி வரை வராமற் போய் கிழ வயதிலும் இள நடிகையரோடு டூயட் பாடி கோடிகளில் புரளும் ஆன்மீக போலி ஸ்டார்களுக்கு நடுவில், பிக்பாஸ் என்கிற கேவலத்தை கூசாமல் நடத்தி கோடிகளைச் சம்பாதித்து அரசியல் செய்யும் சப்பாணிகளின் காலத்தில், மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிற ஒருவர், அதுவும் 100 கோடியை சம்பளமாக பெறும் ஒருவர், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கேப்டனின் அரசியல் சறுக்கலைப் பார்த்த பிறகும், துணிந்து அரசியலுக்குள் நுழைந்தால் அவருடைய உறுதியான முடிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தன் மீது எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டும் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணமே அவருடைய அறிக்கையில் நாம் பார்க்க முடிகிறது. இது வெறும் வார்த்தை அல்ல என்பதற்கு அவருடைய மக்கள் இயக்க அமைப்பு வழியாக இதுவரை செய்து வருகிற உதவிகள், ஒரு சில சமூக பிரச்சனையில் அவர் துணிவோடு பேசிய நிலைப்பாடு, ஸ்டொ்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்த்து சொன்ன ஆறுதல் சிறந்த உதாரணங்கள். எனினும் அவர் களத்தில் சந்திக்கும் திமுக ரவுடி கும்பலை வீழ்த்துவது சாதாரணமான காரியம் அல்ல.

அவருடைய அரசியல் பயணம் எப்படி இருக்க போகிறது என்பதை விட அவர் இந்த திராவிட கூடாரத்தின் தில்லு முல்லுகளை எப்படி கடக்கப் போகிறார் என்பதே முதலில் நாம் எழுப்ப வேண்டிய முதல் கேள்வி. இதுவரை சன் குழுமத்தின் சினிமா பட வியாபார செல்லப் பிள்ளையாக இருந்து வந்த நடிகர் விஜய் இனிமேல் தான் சன் டிவி கும்பலின் சுய ரூபத்தை அரசியல் களத்தில் பார்க்க இருக்கிறார்.

முதலில் அவருக்கு சவாலாக இருக்க போவது இந்த கோபால புரத்து புரோக்கர் ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள். நடிகர் விஜயின் அரசியல் ஆர்வத்தை ஏற்கெனவே அறிந்த இவர்கள் இந்நேரத்திற்கு அவரைப் பற்றிய அவதூறு வீடியோக்களை நிச்சயம் தயார் செய்து வைத்து இருப்பார்கள். உதாரணமாக, விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு நடித்த வெளிநாட்டு குளிர்பான விளம்பரத்தை தோ்தல் நேரத்தில் பரப்பி விடும் தில்லு முல்லுவை நிச்சயம் செய்வார்கள். தில்லு முல்லு செய்வது ஒன்றும் திமுகவிற்கு புதிது அல்ல. அந்த கட்சியின் ஆணிவோ் அரசியலே தில்லு முல்லு தான்.

இன்றைக்கு பேரறிஞராக, கலைஞராக புகழப்படும் இந்த திமுக தலைகள் 1960, 70களில் செய்த தில்லாலங்கடி அரசியல் வேலைகள் நா கூசும் அருவருப்புகள். இவர்களின் அன்றைய மேடைப் பேச்சுகள் அச்சில் ஏற்ற முடியாத கேவலங்கள். அன்றைக்கு பிரதான கட்சியான இருந்த காங்கிரஸ் கட்சியின் அரசியல் கூட்டங்கள் நடந்த போது இந்த திமுக குண்டர்கள், கூட்டத்தைக் கலைக்க பாம்மை விடுவார்கள், மாடுகளை அவிழ்த்து முட்ட செய்வார்கள், கல் எறிவார்கள். இவை எல்லாம் சர்வ சாதாரணம். ரவுடியிசமே இந்த கூடாரத்தின் பலம்.

பண்டாரம், பரதேசி, சூர்ப்பனகை, ஓடுகாலி, புறம்போக்கு, குடிகாரன்...இன்னும் இது போன்ற அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள், தங்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்க கருணாவும், அண்ணாவும் பயன்படுத்திய புனித வார்த்தைகளே. இதுவே இந்த பெருந் தகைகளின் உண்மையான சுய ரூபங்கள். இவை இன்னும் நின்று போய் விடவில்லை என்பதற்கு, கள்ளத் தொடர்பு, பஜாரி, குறைப் பிரசவம் என்று ஆர். ராசா பயன்படுத்தும் வார்த்தைகளே உதாரணங்கள். இதனை எதிர்கொள்ள விஜய் மனதளவில் தயாராக இருப்பாரா என்பது மிகப் பெரிய கேள்வி. அது ஏற்படுத்தும் உடல், மன ரீதியான விளைவுகள் ஒரு மனிதனின் நிம்மதியை எளிதில் கெடுத்து விடும்.

பொய்களையும், வசவுகளையும் கூச்சமே இல்லாமல் அடுத்தவர் மீது ஏவி விடுவது திமுகவின் பிறப்பு தொழில். விஜய காந்தின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் உடலளவில் நொடிந்து போனதற்கும், மனதளவில் உடைந்து போனதற்கும் இந்த திராவிட அவதூறு கும்பலே முதற் காரணம். விஜய காந்தின் திருமண மண்டபத்தை இடித்ததில் தொடங்கி வடிவேலு என்னும் காமெடி பீசை வைத்து அவருக்கு குடிகாரன் பட்டம் கட்டியது இதே அருவருப்பு கூடாரத்தின் வேலை தான். இன்றைக்கு அவர் இறந்த பிறகு நீலிக் கண்ணீர் வடித்து பிலிம் காட்டுகிறது இந்த நாடக கும்பல்.

சமூக வலை தளங்களில் இவர்கள் வீசி எறியும் 200 ரூபாய் + சப்பி போட்ட எலும்புக்காக எதையும் செய்ய தயாராக காத்துக் கிடங்கும் உபிஎஸ்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இதை எதிர்த்து நிற்கிற பலம் சினிமாவில் விஜய்க்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் அது சாதாரணமானது அல்ல. ஆட்சி, அதிகாரம் கையை விட்டுப் போக எந்த எல்லைக்கும், ஏன் அரசியல் கொலை செய்வதற்கும் அஞ்சாத ரவுடி கூட்டம், வன்மம் நிறைந்த இந்த கூட்டம் என்பது நடிகர் விஜய்க்கு போக போக தெரியும்.

இதுவரை திரைப்படங்களில் அவர் பேசிய வசனங்கள், அவருடை கதாபாத்திரத்தை வைத்து மக்கள் போலியாக நடிகர் விஜய்யைப் பற்றி ஒரு பிம்பத்தை தங்கள் எண்ணத்தில் உருவாக்கி வைத்து இருப்பார்கள். இப்போது அவர் நேரில் பேசுகிற போது, பார்க்கிற போது கோபால புரத்து புரோக்கர் ஊடகங்களால் அவர் கோமாளியாக சித்திரிக்கப் படுகிற போது அந்த திரைப்பட பிம்பம் உடைந்து நொறுங்கி உண்மையான விஜய் யார் என்பது தெரிய போகிறது. அதனை அவர் எப்படி எதிர் கொள்ள போகிறார், மக்களின் நம்பிக்கையைப் பெற போகிறார் என்பதே அவருடைய அடுத்த சவால்.

அநியாயம் செய்யும் திராவிட அரசியலை வீழ்த்த எத்தனை அநியாய அரசியல் செய்தாலும் அது தவறில்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் நோ்மையாக, நியாயமாக இருந்தால் போதுமே தவிர, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற, அதிலும் இந்த திராவிட (அ)திமுகவை முட்டுச் சந்தில் தூக்கி எறிய எப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலை செய்தாலும் அது எந்த விதத்திலும் குற்றமல்ல. அதனை நடிகர் விஜய் செய்வாரா? ஊழல் திமுகவை செய்து முடிப்பாரா? காலம் பதில் சொல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.